

கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்க மக்களின் முதன்மை பாதுகாப்பு கருவியாக இருப்பது முகக் கவசங்கள்தாம். ஆனால், பல மணிநேரம் முகக் கவசத்தை அணிந்துகொண்டு இருப்பதால் சரும பாதிப்புகள் ஏற்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவரிடமிருந்து இருமல், தும்மல் போன்றவற்றிலிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் மற்றும் நுண் துளிகளால் ஆறு அடி சுற்றளவில் உள்ள மற்றவர்களுக்கு கரோனா வைரஸ் காற்று வழியாகப் பரவுகிறது. இவ்வாறு காற்று வழியாகப் பரவும் கரோனா வைரஸைத் தடுக்க வீட்டிற்கு வெளியே செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாகும்.
முகத்தில் கட்டி, ஒவ்வாமை
கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையில் முன்னணியில் உள்ள மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் மட்டுமல்லாது தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் குறைவான ஊழியர்களுடன் நிறுவனங்களும் செயல்படத் தொடங்கிவிட்டன. இதன் காரணமாக வேலைக்குச் செல்லக்கூடிய அனைத்துத் தரப்பட்ட மக்களும் பல மணிநேரம் முகக் கவசத்தை அணிந்துகொண்டு வேலை செய்யவேண்டியுள்ளது. அதுவும் இந்த வெயில் காலத்தில் சில மணிநேரம் முகக் கவசம் அணிந்துகொண்டிருப்பதே அசௌகரியமான விஷயம் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
இந்நிலையில் முகக் கவசத்தை பலமணிநேரம் தொடர்ந்து அணிந்துகொண்டிருப்பதால் முகத்தில் கட்டி, ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக சிலர் கூறுகிறார்கள். குறிப்பாக சென்சிடிவ் சருமம் உள்ள பலர் இந்தவகை பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முகக் கவசம் அணிவதிலிருந்து சருமப் பிரச்சினைகள் வராமல் தடுப்பது குறித்து சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் தோல் நோய் மருத்துவர் பெரிய ஆண்டவர் கூறுகையில், “கரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் இருக்கும்வரை வீட்டைவிட்டு வெளியே செல்பவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணியவேண்டும். முகக் கவசத்தைத் தொடர்ச்சியாக அணிவதால் முகக் கவசத்தில் உள்ள எலாஸ்டிக் முகத்தில் அச்சாகப் பதிந்துவிடும். இதனால் முகக் கவசம் அணிந்திருந்த பகுதி சற்று வீக்கமாக இருக்கலாம். ஆனால், இதுபோன்ற பாதிப்பு மருத்துவத் துறையில் பணியாற்றுவோருக்குத்தான் அதிகம். மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ள காரணத்தால் மருத்துவப் பணியாளர்கள், மருத்துவர்கள்தான் தற்காப்பிற்காக சர்ஜிக்கல் முகக் கவசம், என்95 போன்ற முகக் கவசங்களை அணிந்துகொண்டு இருப்பார்கள். ஆனால், முகக் கவசத்தால் ஏற்படக்கூடிய பாதிப்பு வெறும் தற்காலிக பாதிப்பு மட்டுமே.
தண்ணீரே சிறந்த மருந்து
மருத்துவப் பணியைத் தவிர்த்து மற்ற துறைகளில் வேலைக்குச் செல்வோர் துணியால் செய்யப்பட்ட முகக் கவசம், சர்ஜிக்கல் முகக் கவசம், என்95 போன்ற ஏதோவொரு முகக் கவசத்தை அணிந்தால் போதுமானது. பொதுவாக முகக் கவசத்தை அணிவதால் சருமப் பிரச்சினைகள் வருவது குறைவுதான். சென்சிடிவ் சருமம் உள்ளவர்களுக்கு வேண்டுமானால் ஒவ்வாமை போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் அதற்காக கரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ள இந்த சூழ்நிலையில் முகக் கவசம் அணியால் இருப்பது நல்லதல்ல. முகக் கவசம் அணிவதால் மட்டுமல்லாமல் வெயிலின் தாக்கமும் சருமப் பாதிப்பு ஏற்பட ஒரு முக்கியக் காரணமாகும். வெயிலுடன் சேர்த்து முகக் கவசம் அணிவதால் வரக்கூடிய பிரச்சினைகளைத் தடுக்க அதிக அளவு தண்ணீர் குடிப்பது சிறந்த தீர்வாகும். தண்ணீரை அதிகமாக எடுத்துக்கொள்வதே உடல் உறுப்புகளுக்கும் சருமத்திற்கும் சிறந்த மருந்து. அதேபோல் அதிக அளவு பழங்களை எடுத்துக்கொள்வதும் நல்லது.
தொடர்ந்து முகக் கவசம் அணிந்து கொண்டிருப்பவர்கள் குளிர்ந்த நீரால் முகத்தை அடிக்கடி கழுவுவது முகத்திற்குப் புத்துணர்ச்சி அளிக்கும். முகக் கவசத்தை அணியும்போது எலாஸ்டிக் இறுக்கமாக அணியாமல் சற்று தளர்வாக அணிந்துகொள்ளலாம் அல்லது எலாஸ்டிக் இல்லாத துணியால் செய்யப்பட்ட முகக் கவசம், சர்ஜிக்கல் முகக் கவசம் போன்ற விலை குறைவான முகக் கவசத்தை ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று என பயன்படுத்தலாம். வேலைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பியதும் முகக் கவசத்தை முறையாக அப்புறப்படுத்திவிட்டு முகத்தை நன்றாகக் கழுவி பின்னர் தூங்கச் செல்வதற்கு முன்பு தரமான ஃபேஸ் க்ரீம்களைப் பயன்படுத்தி மசாஜ் செய்வதால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து சருமப் பிரச்சினைகள் வராமல் தடுக்கமுடியும்” என்கிறார் மருத்துவர் பெரிய ஆண்டவர்.