Published : 27 Apr 2024 06:42 PM
Last Updated : 27 Apr 2024 06:42 PM

செங்கோட்டை முழக்கங்கள் 73 - ‘இந்த முறை இன்னும் வேகம்!’ | 2019

இந்தியப் பிரதமர்களில் நரேந்திர மோடி - ஒரு தனி ரகம். அடுத்தடுத்து வரிசையாய் புதுப்புதுத் திட்டங்கள்; ஒவ்வொரு திட்டத்தையும் முழுதாய் நிறைவேற்ற குறிப்பிட்ட கால நிர்ணயம்; அதற்கேற்ற வகையில் செயல்பாடுகள் அரசுத் துறைகள் முடுக்கி விடப்படுகின்றன; அரசு அலுவலர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்; அரசுப் பணி ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுகிறது. கடைக்கோடி நபருக்கும் அரசுத்திட்டங்களின் பயன்கள் விரைவாய் முழுதாய் சென்று சேர வேண்டும் என்பதில் பிரதமர் மோடி காட்டும் அக்கறை அவரது பேச்சில் தெளிவாய் வெளிப்படுகிறது.

பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்ற பின், 2019 ஆகஸ்ட் 15 அன்று, ஆறாவது முறையாக டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி ஆற்றிய உரை இதோ: அன்பார்ந்த நாட்டு மக்களே, இந்த புனிதமான சுதந்திர தினத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

இன்று ரக்க்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நூற்றாண்டு கால பாரம்பரியம், சகோதரன் - சகோதரி இடையிலான அன்பை வெளிப்படுத்துகிறது. நாட்டு மக்கள் அனைவருக்கும், அனைத்து சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் ரக்க்ஷா பந்தன் புனிதத் திருநாளில் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாசத்தால் நிரம்பிய இந்தத் திருவிழா, நம்முடைய எல்லா சகோதரர்கள், சகோதரிகளின் நம்பிக்கைகள் ஆசைகள் கனவுகளை நிறைவேற்றி அவர்களின் வாழ்க்கையில் பாசத்தை வளர்க்கட்டும்!

இன்று சுதந்திர தினத்தை நாடு கொண்டாடும் போது, நாட்டின் பல பகுதிகளில் மக்கள் கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக இன்னல்கள் அனுபவித்து வருகின்றனர். பலர் தமக்கு அன்பானவர்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு எனது அனுதாபங்கள். மத்திய அரசு மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்புகள் சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவர இரவு பகலும் கடுமையாக உழைக்கின்றனர்.
இன்று நாம் சுதந்திரத்தைக் கொண்டாடும் போது, நாட்டின் விடுதலைக்காக இன்னுயிரை ஈந்த, தமது இளமைக் காலத்தைச் சிறையில் கழித்த, தூக்கு மேடையைத் தழுவிய, சத்யாகிரகம் மூலம் அகிம்சையைப் பரப்பிய அனைவருக்கும் எனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாபு காந்திஜியின் தலைமையில் நாடு சுதந்திரம் பெற்றது. இதே போல, சுதந்திரம் பெற்றதில் இருந்து, நாட்டின் அமைதி, வளம், பாதுகாப்புக்காக எண்ணற்ற மக்கள் பங்களித்துள்ளார்கள். சுதந்திர இந்தியாவின் அமைதி வளமை வளர்ச்சி, மக்களின் நம்பிக்கைகள் மற்றும் ஆசைகள் நிறைவேற பங்களித்த அனைத்து மக்களுக்கும் எனது வணக்கங்கள்.

புதிய அரசு அமைந்த பிறகு உங்களுடன் மீண்டும் கலந்து உரையாடுகிற வாய்ப்பு பெற்று இருக்கிறேன். புதிய அரசு அமைந்து இன்னும் பத்து வாரங்கள் ஆகவில்லை. ஆனாலும் இந்த குறுகிய பத்து வார காலத்தில் எல்லாத் துறைகளிலும் ஒவ்வொரு திசையிலும் புதிய பரிமாணங்களைச் சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமக்கு சேவை செய்ய வேண்டி மக்கள் எங்களுக்குப் பொறுப்பு தந்துள்ளார்கள். அதன் மூலம் அவர்களால் தமது நம்பிக்கைகள் எதிர்பார்ப்புகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். ஒரு கணம் கூட வீணாக்காமல் முழு அர்ப்பணிப்பு உணர்வுடன் உங்களுக்கு சேவை செய்ய எங்களை அர்ப்பணிக்கிறோம்.

சர்தார் வல்லபாய் படேலின் கனவை நிறைவேற்றும் வகையில், பத்து வாரங்களுக்குள்ளாக, சாசனம் பிரிவு 370 மற்றும் 35ஏ நீக்கப்படுதல் மிகவும் குறிப்பிடத்தக்க நடவடிக்கை. பத்து வாரங்களில், பல பெரிய முடிவுகள் எடுத்துள்ளோம் - முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்க முத்தலாக் தடைச் சட்டம், பயங்கரவாதத்தை எதிர்க்க, மேலும் கடுமையாக சட்டங்களில் செய்யப்பட்ட முக்கிய திருத்தங்கள், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் பயனாளிகளான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு சுமார் 90,000 கோடி ரூபாய் மாற்றல்.. பல முக்கிய முடிவுகள் எடுத்துள்ளோம்.

வேளாண் சமூகத்தில் இருந்து நமது சகோதரர்கள் சகோதரிகள், நமது சிறு முதலாளிகள், தாம் எப்போதும் ஓய்வூதிய திட்டத்தைப் பெறுவோம்; 60 வயதுக்குப் பிறகு உடல் பலவீனமாய் இருக்கும்போது, ஏதேனும் ஆதரவு தேவைப்படும்போது, ஒரு கண்ணியமான வாழ்க்கை வாழ்வோம் என்று நம்பியதே இல்லை. இவர்களின் இந்தத் தேவைகளை நிறைவேற்ற ஓய்வூதியத் திட்டம் ஒன்றை அமல்படுத்தி இருக்கிறோம்.

இப்போதெல்லாம் தண்ணீர் நெருக்கடி மிகப்பெரிய கவலையாய் இருக்கிறது. மிகப்பெரும் தண்ணீர் நெருக்கடியைத் தவிர்க்க இயலாது என்று கணிக்கப்படுகிறது. இத்தகைய சூழலைக் கணக்கிட்டு, புதிதாக இதற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஜல் சக்தி அமைச்சகம் அமைத்துள்ளோம். மத்திய மாநில அரசுகள் இணைந்து, தண்ணீர் பிரச்சினையை சமாளிக்க, திட்டங்களை கொள்கைகளை வடிவமைக்கும்.

நமது நாட்டுக்கு, நல்ல சுகாதார வசதிகளுடன், பெரும் எண்ணிக்கையில் மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தத் தேவையை நிறைவேற்ற நமக்கு புதிய சட்டங்கள், மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு, புதிய சிந்தனை, மருத்துவப் பணியை மேற்கொள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் வேண்டும். இந்த நோக்கில், சட்டங்களை வடிவமைத்துள்ளோம்; மருத்துவக் கல்வியில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வர முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இப்போதெல்லாம் உலகம் முழுதும் குழந்தைகள் உரிமை மறுப்பு சம்பவங்கள் பார்க்கிறோம்; தனது குழந்தைகளை இந்தியா ஆபத்தில் இருக்க விடாது. குழந்தைகளில் உரிமைகளை பாதுகாக்க மிகக் கடுமையான சட்டம் தேவை; அப்படி ஒன்றை நிறைவேற்றி உள்ளோம்.

சகோதரர்களே சகோதரிகளே, 2014 முதல் 2019 வரை ஐந்து ஆண்டுகளுக்கு உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு அளித்தீர்கள். அடிப்படை வசதிகளை பெறுவதில் சாமானியன் எதிர்கொண்ட போராட்டங்களை கவனத்தில் கொண்டோம். கடந்த ஐந்து ஆண்டுகளில், சாமானியனின் அன்றாட தேவைகளை நிறைவேற்றும் வசதிகளை வழங்குவதற்கு நமது அரசாங்கம் முயற்சித்துள்ளது. ஏழைகள் விளிம்பு நிலை மக்கள் பாதிக்கப்பட்டோர் சுரண்டப்பட்டோர் மறுக்கப்பட்டோர் ஆதிவாசிகள் மற்றும் கிராமங்களில் வசிப்போருக்கு வசதிகளை ஏற்படுத்தி தர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காலங்கள் மாறுகின்றன. 2014 -19 காலம், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக என்றால், 2019லிருந்து இனிவரும் ஆண்டுகள், உங்களின் விருப்பங்களை, கனவுகளை நிறைவேற்றும்.

21 ஆம் நூற்றாண்டு இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும்? எவ்வளவு விரைவாக முன்னேற வேண்டும்? எவ்வளவு விரிவாகச் செயலாற்ற வேண்டும்? எத்தனை உயரத்தை எட்ட வேண்டும்? எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு அடுத்த ஐந்தாண்டுகளுக்கான செயல்திட்டத்தை வகுப்பதன் மூலம் ஒவ்வொரு நடவடிக்கையாக எடுத்து வருகிறோம். 2014 எனக்கு புதிய தொடக்கமாக இருந்தது. 2013-14 தேர்தலுக்கு முன்னதாக, நாடு முழுவதும் பயணம் செய்தேன்; நம் நாட்டு மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சித்தேன். ஒவ்வொருவர் முகத்திலும் ஏமாற்றம்; ஒவ்வொருவருக்கு உள்ளும் ஏதோ அச்சம். இந்த நாடு என்றைக்காவது மாறுமா என்று மக்கள் வியந்தார்கள். அரசு மாறுவதால் நாடு மாறிவிடுமா? சாமானியனின் மனதில் ஒருவித நம்பிக்கையின்மை படர்ந்து இருந்தது. நீண்ட கால அனுபவத்தின் விளைவு இது. நம்பிக்கைகள் நீண்ட காலம் நீடிக்க வில்லை; வெகு விரைவிலேயே துயரங்களின் அடியில் மூழ்கிப் போயின.

ஆனால் 2019 இல், ஐந்தாண்டு கால கடின உழைப்புக்குப் பிறகு, சாமானிய மக்களுக்கான அர்ப்பணிப்பு உணர்வுடன் மட்டும், என் இதயத்தில் நமது நாடு மட்டும், எனது நெஞ்சில் பல லட்சக்கணக்கான நமது நாட்டு மக்கள் மட்டும்.. இந்த உணர்வுடன் ஒவ்வொரு தருணத்தையும் அதற்காகவே அர்ப்பணித்து முன்னேறினோம். நான் வியந்து போனேன். நாட்டின் மனநிலை மாறிவிட்டது. துயரம் - நம்பிக்கையாக மாறியது; கனவுகள் - மனவுறுதியுடன் இணைந்து கொண்டது. பணி நிறைவேற்றம் கண் எதிரில் தெரிந்தது. இந்த நாட்டை மாற்ற முடியும் என்கிற வைராக்கியம் மட்டுமே சாமானியனுக்கு இருந்தது. நம்மாலும் நாட்டை மாற்ற முடியும்; நாம் பின்தங்கி இருக்க முடியாது என்கிற உணர்வே எங்கும் இருந்தது.

130 கோடி மக்களின் இந்த உணர்வு, உணர்ச்சிகளின் எதிரொலி, நமக்கு புதிய நம்பிக்கையை, புதிய வலிமையைத் தந்தது. 'சப்கா சாத், சப்கா விகாஸ்' 'அனைவரோடும் சேர்ந்து.. அனைவருக்கும் முன்னேற்றம்' என்கிற முழக்கத்துடன் தொடங்கினோம். ஐந்து ஆண்டுகளுக்குள்ளாக, நாட்டு மக்கள் நாட்டின் ஒட்டுமொத்த மனநிலை மீது 'சப்கா விகாஸ்' அனைவருக்கும் முன்னேற்றம் என்கிற வண்ணம் தீட்டி விட்டார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் மீது ஒவ்வொருவரும் வைத்த நம்பிக்கை, மேலும் வீரியத்துடன் நாட்டுக்கு சேவை செய்ய எங்களுக்கு உத்வேகம் அளிக்கும்.

சமீபத்தில் தேர்தல்களில் பார்த்தேன், நானும் அப்போது உணர்ந்தேன் - இந்தத் தேர்தலில் எந்த அரசியல்வாதியும் போட்டியிடவில்லை; எந்த அரசியல் கட்சியும் போட்டியிடவில்லை; மோடியோ மோடியின் நண்பர்களோ போட்டியிடவில்லை. தேர்தலில் போட்டியிட்டது - இந்திய மக்கள். நாட்டின் 130 கோடி மக்களும் தேர்தலில் போட்டியிட்டார்கள். அவர்கள் தமது சொந்த கனவுகளுக்காகப் போட்டியிட்டார்கள். ஜனநாயகத்தின் உண்மைத் தன்மையை இந்தத் தேர்தலில் பார்க்க முடிந்தது.

எனது அன்பார்ந்த நாட்டு மக்களே, நமது கனவுகள் விடாமுயற்சி மற்றும் நிறைவேற்றுதல் உடன் பிரச்சினைகளுக்கான தீர்வுகளுக்காகவும் இப்போது நாம் இணைந்து நடக்க வேண்டும். பிரச்சினைகள் தீரும் போது சுயசார்பு உணர்வு வளரும். சுயசார்பு ஏற்படும்போது, தானாகவே சுய கவுரவம் வளர்கிறது; சுய கவுரவம் மிகவும் வலுவான திறன் கொண்டது. சுயமரியாதை வேறு எதை விடவும் மகத்தானது. தீர்வு, மனவுறுதி, திறன், சுயமரியாதை இருந்து விட்டால், பிறகு, வெற்றியின் குறுக்கே எதுவும் வர முடியாது.

இன்று அந்த சுயமரியாதையுடன், வெற்றியின் புதிய உயரங்களைத் தொட, தொடர்ந்து முன்னேற நாம் வைராக்கியம் கொண்டுள்ளோம். பிரச்சினைகளைத் தீர்க்க முயலும் போது நாம், தனித்தனியே யோசிக்க கூடாது. இன்னல்கள் இருக்கும். கைதட்டலுக்காக மேற்கொள்ளப்படும் அரை மனது முயற்சிகள் நாட்டின் கனவை நிறைவேற்றுவதற்கு உதவாது. பிரச்சினைகளை வேரோடு நீக்கப் போராட வேண்டும்.

நமது முஸ்லிம் புதல்விகளும் சகோதரிகளும் தமது தலையின் மேல் முத்தலாக் என்னும் கத்தி தொங்குகிற போது எவ்வாறு அச்சத்துடன் வாழ்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் முத்தலாக்கினால் பாதிக்கப் படாதவர்களாய் இருந்தாலும், எந்த நேரத்திலும் அதற்கு ஆட்படலாம் என்று நிலையாக அச்சத்துக்கு உட்பட்டனர். நீண்ட காலத்துக்கு முன்னரே இந்தத் தீய வழக்கத்தைப் பல இஸ்லாமிய நாடுகள் தடை செய்து விட்டன. ஆனால் சில காரணங்களுக்காக நமது முஸ்லிம் அன்னையர், சகோதரிகளுக்கு அவர்களுக்கு உரித்தான உரிமைகளை வழங்க நாம் தயங்கினோம். உடன்கட்டை ஏறுதலை நம்மால் தடை செய்ய முடிந்தால், பெண் சிசுக் கொலையை முடிவுக்குக் கொண்டு வர நம்மால் சட்டம் இயற்ற முடிந்தால், குழந்தைத் திருமணத்துக்கு எதிராக நம்மால் குரல் எழுப்ப முடிந்தால், நாட்டில் வரதட்சணை அமைப்புக்கு எதிராக நம்மால் கடுமையான நடவடிக்கை எடுக்க முடிந்தால், பிறகு முத்தலாக் முறைக்கு எதிராக ஏன் குரல் எழுப்ப முடியாது?

இந்தியாவின் ஜனநாயக உணர்வுடன் சாசன உணர்வுடன் பாபா சாகேப் அம்பேத்கர் சிந்தனையை மதிக்கும் வகையில் இந்த முக்கியமான முடிவை எடுத்திருக்கிறோம். இதனால் நமது முஸ்லிம் சகோதரிகள் சமஉரிமை பெறுகிறார்கள்; அவர்களுக்குள் புதிய நம்பிக்கை உருவாகிறது; இந்தியாவில் வளர்ச்சிப் பயணத்தில் அவர்களும் முக்கிய பங்காளர்கள் ஆகிறார்கள். இத்தகைய முடிவுகள் அரசியல் ஆதாயங்களுக்காக எடுக்கப் படுவன அல்ல. இவை நமது அன்னையருக்கும் சகோதரிகளுக்கும் நிரந்தரப் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

இதேபோன்று, மற்றோர் உதாரணமும் சொல்வேன். சாசனத்தின் பிரிவு 370 மற்றும் 35ஏ நீக்கப்பட்டதன் காரணம் என்ன? இது நமது அரசின் அடையாளம். பிரச்சினைகளை நாம் உதாசீனப்படுத்தவோ வளர்க்கவோ விரும்பவில்லை. பிரச்சினைகளை தாமதப்படுத்தவோ உதாசீனப்படுத்தவோ நமக்கு நேரம் இல்லை. 70 ஆண்டுகளாக செய்யப்படாத காரியம் இந்த புதிய அரசு பதவிக்கு வந்து 70 நாட்களுக்கு உள்ளாக செய்து முடிக்கப் பட்டுள்ளது. பிரிவு 370 மற்றும் 35ஏ நீக்கம், மக்களவையிலும் மாநிலங்களவையிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. அதாவது எல்லாருமே இந்த முடிவை விரும்பினார்கள். ஆனால் யாரேனும் ஒருவர் இதை முன்னெடுத்துச் செய்ய வேண்டும் என்று காத்திருந்தார்கள். எனது நாட்டு மக்கள் எனக்குத் தந்த பணியை நிறைவேற்றவே நான் வந்திருக்கிறேன். நான் தன்னலமற்று பணிபுரிகிறேன்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை மறு நிர்வாகம் செய்து முன்னேறுகிறோம். எழுபது ஆண்டுகளாக ஒவ்வோர் அரசும் ஏதேனும் செய்ய முயற்சித்து இருக்கிறது. ஆனால் எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்கவில்லை. எதிர்பார்த்த விளைவுகள் கிடைக்காத போது புதிதாக சிந்தித்து புதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் லடாக் மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவது நமது பொறுப்பாகும். அவர்களின் கனவுகளுக்கு புதிய இறகுகள் தருவது நமது கூட்டுப் பொறுப்பாகும். இந்தப் பொறுப்பை நாம் 130 கோடி மக்களும் தோளில் சுமக்க வேண்டும். இந்த உறுதி மொழியை நிறைவேற்ற வழியில் உள்ள தடைகளை நீக்க நாம் முயற்சித்து இருக்கிறோம்.

கடந்த 70 ஆண்டுகளாக நிலவி வந்த அமைப்பு முறை பிரிவினைவாதத்தை அதிகப்படுத்தியது; பயங்கரவாதம் பிறக்கச் செய்தது. பரம்பரை அரசியலை ஊக்கப்படுத்தியது. ஒரு வகையில் ஊழல், பாகுபாட்டின் அடித்தளத்தை வலுப்படுத்தியது. ஜம்மு காஷ்மீர் லடாக் பெண்கள் உரிமை பெற நாம் முயற்சி எடுக்க வேண்டும். அங்குள்ள எனது தலித் சகோதர சகோதரிகளுக்கு இதுவரை மறுக்கப்பட்ட உரிமைகள் இனி கிடைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். இந்தியாவின் ஆதிவாசி மக்கள் அனுபவிக்கும் உரிமைகளை ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதிகளில் வசிக்கும் ஆதிவாசி சகோதர சகோதரிகளும் பெற வேண்டும். பல சமூகம் இருக்கின்றன - குஜ்ஜார், பக்கர்வால், கட்டி (Gaddi) சிப்பீஸ், பால்டீஸ் - இந்தச் சமூகங்கள் அனைத்தும் அரசியல் உரிமைகள் பெற வேண்டும். ஜம்மு காஷ்மீரில் சபாய் கரம்சாரி Safai Karamchari சகோதர சகோதரிகளுக்கு சட்டத் தடைகள் இருக்கின்றன என்பது வியப்பாக இருக்கிறது. அவர்களின் கனவுகள் சிதைக்கப் பட்டன. விலங்கிடப்பட்ட அவர்கள் இப்போது விடுதலை பெற்று இருக்கிறார்கள்.

இந்தியா பிரிக்கப்பட்டபோது, தாம் செய்யாத தவறுக்காக, தமது மூதாதையரின் இல்லங்களை விட்டு வர வேண்டி இருந்தது. ஜம்மு காஷ்மீரில் வசித்தவர்களுக்கு மனித உரிமைகளும் கிடைக்கவில்லை; குடியுரிமை தொடர்பான உரிமைகளும் கிடைக்கவில்லை. ஜம்மு காஷ்மீரில் மலைப்பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இருந்தார்கள். இவர்களின் நலங்களுக்காகவும் நடவடிக்கைகள் எடுக்க விரும்புகிறோம்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, ஜம்மு காஷ்மீர் லடாக் பகுதியில் அமைதி மற்றும் வளமை, இந்தியாவுக்கு உத்வேகம் தரும். இப்பகுதிகள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்கு அளிக்க முடியும். அவர்களின் மகத்தான கடந்த காலத்தை மீட்டுக் கொண்டு வர முயற்சி மேற்கொள்ள வேண்டும். சமீபத்திய நடவடிக்கைக்கு பிறகு நாம் கொண்டு வந்துள்ள புதிய அமைப்பு முறை, அந்த மாநில மக்களுக்கு நேரடியாகப் பயன்தரும் வசதிகளை உருவாக்கும். இப்போது, ஜம்மு காஷ்மீரில் உள்ள எவரும், பிற இந்தியர்களைப் போலவே, டெல்லியில் உள்ள அரசாங்கத்தை அணுக முடியும். இடையில் எந்தத் தடைகளும் இருக்காது. அத்தகைய அமைப்பு முறையை வைத்துள்ளோம்.

சமீபத்தில் சாசனப் பிரிவு 370 மற்றும் 35ஏ நீக்கப்பட்ட நடவடிக்கையை, விதிவிலக்கு இன்றி, நாடு மொத்தமும் வரவேற்றுள்ளது. சிலர் நேரடியாக ஆதரிக்கிறார்கள்; வேறு சிலர் மறைமுக ஆதரவு தருகிறார்கள். ஆனால் அதிகாரத்தளாங்களில் உள்ள சிலர், வாக்கு வங்கி அரசியலின் பலனைப் பெறுவதற்காக, பிரிவு 370-க்கு ஆதரவாகப் பேசுகிறார்கள். பிரிவு 370 அல்லது 35ஏ - அத்தனை முக்கியமானதா? பிரிவு 370-க்கு ஆதரவாகப் பேசுவோர், இதற்கு விடை அளிக்க வேண்டும் என்று நாடு கோருகிறது.

உண்மையில் பிரிவு 370 அத்தனை முக்கியம் எனில், பெரும்பான்மை இருந்தும் கடந்த 70 ஆண்டுகளில் ஆளும் கட்சிகள் ஏன் அதனை நிரந்தரம் ஆக்கவில்லை? ஏன் அது தற்காலிகமாகவே வைக்கப்பட்டது? அந்த அளவுக்கு உறுதி இருந்திருந்தால், அதனை நிரந்தரம் ஆக்கி இருக்க வேண்டும். இதற்கு என்ன பொருள்? எடுக்கப்பட்ட முடிவு சரியானது அல்ல என்பது அவர்களுக்கே தெரியும். ஆனால் அதனைச் சரி செய்வதற்கான துணிவும் மன உறுதியும் அவர்களுக்கு இல்லை. இத்துடன் தமது அரசியல் எதிர்காலம் குறித்த கவலைகளும் எழுந்தன. என்னைப் பொருத்தவரை, நாட்டின் எதிர்காலம் தான் எல்லாமே; அரசியல் எதிர்காலம் என்பதற்கு அர்த்தம் இல்லை.

தேச ஒருமைப்பாடு மற்றும் அரசியல் ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு சாசனம் படித்தவர்களும் சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற மகத்தான ஆளுமைகளும் இன்னல் சூழ்ந்த நேரத்திலும் இத்தகைய துணிச்சலான முக்கிய முடிவுகளை எடுத்தனர். தேசிய ஒருமைப்பாடு நோக்கிய முயற்சி வெற்றிகரமாய் அமைந்தது. ஆனாலும், பிரிவு 370 மற்றும் 35ஏ காரணமாக, சில இன்னல்களைச் சந்திக்க வேண்டி இருந்தது.

இன்று நான் செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களுடன் உரையாற்றும் போது, பெருமையுடன் கூறுகிறேன் - இன்று ஒவ்வோர் இந்தியரும் 'ஒரு தேசம் + ஒரு சாசனம்' என்று கூற முடியும். சர்தார் பட்டேல் கண்ட கனவான 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' கனவை நிறைவேற்ற முயன்று வருகிறோம். நாட்டு ஒற்றுமையை வலுப்படுத்தி இணைப்பு சக்தியாக செயல்படும் அமைப்புகளை நாம் வளர்க்க வேண்டும். இந்தச் செயல்பாடு தொடர்ந்து நடைபெற வேண்டும். இது ஓர் இடைக்கால ஏற்பாடாக இல்லாமல் தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.

ஜிஎஸ்டி மூலமாக, 'ஒரே நாடு ஒரே வரி' கனவை நிறைவேற்றி உள்ளோம். இதேபோன்று சமீபத்தில் ஆற்றல் துறையிலும் (energy sector) 'ஒரு தேசம் ஒரு க்ரிட் (Grid)' கனவை வெற்றிகரமாக சாதித்து விட்டோம். இதுபோலவே, ஒரு தேசம் ஒரு 'மொபிலிட்டி கார்டு' அமைப்பை மேம்படுத்தி உள்ளோம். தற்போது நாடு முழுதும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேசிய அளவில் விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த விவாதம் ஜனநாயக முறையில் நடைபெற வேண்டும். ஒரே பாரதம் உன்னத பாரதம் கனவை நனவாக்க இத்தகைய புதிய சிந்தனைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, புதிய உயரங்களை எட்ட வேண்டும்; உலக அளவில் நம் நாடு சாதனைகள் புரிய வேண்டும். இதற்கு நாம் வறுமை ஒழிப்பு தொடர்பான நமது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இதை அவர்களுக்குத் தரும் சலுகையாகக் கருதக் கூடாது; நமது நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கான கடமைசார் பங்களிப்பு என்று கொள்ள வேண்டும். என்ன விலை கொடுத்தேனும் வறுமையில் பிடியிலிருந்து நம்மை விடுவித்துக் கொண்டாக வேண்டும். வறுமை ஒழிப்புக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் வெற்றிகரமாக பல முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. முன் எப்போதையும் விட அதிக வெற்றியை அதிக விரைவுடன் சாதித்து இருக்கிறோம்.

ஏழைகளுக்குத் தரப்படும் ஆதரவும் மரியாதையும் அவர்களின் சுய கவுரவத்தை உயர்த்தும்; அரசின் உதவி இல்லாமலே வறுமையின் பிடியில் இருந்து அவர்களை வெளிக் கொண்டு வரும். தனது சொந்த வலிமையிலேயே அவர் வறுமையைத் தோற்கடிக்க முடியும். இந்த ஏழைச் சகோதரர், எந்த இடையூறுக்கு எதிராகவும் போராடும் வல்லமை கொண்டவர். இவர் கடும் குளிருக்கு எதிராகப் போராடுகிறார். இடையூறுகளை எதிர்கொள்ளும் உள்ளார்ந்த வல்லமை கொண்ட இவருக்கு நாம் தலை வணங்குகிறோம். அன்றாட வாழ்வில் இவர் சந்திக்கும் சவால்களை நீக்குவதில் அவருக்கு உதவுவோம்.

ஏழைகளின் வீட்டில் ஏன் கழிவறைகள் இல்லை? ஏன் மின் இணைப்பு இல்லை? வாழ்வதற்கு ஏன் வீடு இல்லை? ஏன் தண்ணீர் சப்ளை இல்லை? ஏன் வங்கிக் கணக்கு இல்லை? அவர் ஏன் அடமானம் வைத்துக் கடன் பெற வட்டிக் காரரிடம் செல்கிறார்? வாருங்கள், ஏழைகளின் சுயமரியாதை தன்னம்பிக்கை மற்றும் சுய கெளரவத்தை ஊக்குவிக்க முயற்சிகள் எடுப்போம்.

சகோதரர்களே சகோதரிகளே சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. எல்லா அரசுகளுமே தத்தம் வழியில் நிறைய பணிகள் செய்துள்ளன. எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒவ்வொரு அரசும், மத்திய அரசாக அல்லது மாநில அரசாக இருந்தாலும் அதன் வழியில் முயன்றுள்ளது. ஆனாலும் இந்தியாவில் இன்னமும் சரி பாதி வீடுகளில் குடிதண்ணீர் இல்லை. குடிதண்ணீர் பெற மக்கள் போராட வேண்டி இருக்கிறது. அன்னையரும் சகோதரிகளும் 2, 3, 5 கி.மீ. சென்று தலையில் தண்ணீரை சுமந்து வர வேண்டி இருக்கிறது. இவர்களின் வாழ்வில் பெரும் பகுதி தண்ணீருக்கு போராடுவதிலேயே போய் விடுகிறது. ஆகவே ஒரு முக்கிய திட்டத்தில் அரசு கவனம் செலுத்த இருக்கிறது - ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வது எப்படி? ஒவ்வொரு வீடும் எப்படி தூய குடிநீர் பெறும்? செங்கோட்டையில் இருந்து இன்று நான் அறிவிக்கிறேன் - வரும் நாட்களில் 'ஜல் ஜீவன்' இயக்கத்தை நாம் முன்னெடுப்போம்.

மத்திய அரசு மாநில அரசுகளும் இணைந்து ஜல் ஜீவன் இயக்கத்தில் செயலாற்றும். வரும் ஆண்டுகளில் இந்த இயக்கத்துக்காக ரூ.3.5 லட்சம் கோடிக்கு மேல் செலவு செய்வதாய் உறுதி கூறியுள்ளோம். தண்ணீர் சேமிப்பு, நீர்ப்பாசனம், மழைநீர் சேகரிப்பு, கடல் நீர் அல்லது கழிவுநீர் சுத்திகரிப்பு, விவசாயிகளுக்கான 'ஒரு துளிக்கும் கூடுதல் பயிர் நுண்ணிய பாசனம்' (Per Drop, More Crop Micro Irrigation) ஆகியவற்றின் மீது பணிகள் நடைபெற வேண்டும். தண்ணீர் சிக்கனம் குறித்த பிரச்சாரங்கள் தொடங்கப்பட வேண்டும், தண்ணீர் குறித்து சாமானியர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், தண்ணீரின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும், குழந்தைகளுக்கும் அவர்களது குழந்தைப் பருவக் கல்வியில் தண்ணீர் சிக்கனம் குறித்து சொல்லித் தரப்பட வேண்டும்.

தண்ணீர் சிக்கனம் மற்றும் தண்ணீருக்கான மூலங்களை உயிர்ப்பித்தலில் கடந்த 70 ஆண்டுகளில் செய்ததைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக வரும் ஐந்தாண்டுகளில் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்துடன் முன்னேற வேண்டும். இனியும் நாம் காத்திருக்க முடியாது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீரின் முக்கியத்துவம் அல்லது தண்ணீரின் நெருக்கடி குறித்து யாரும் சிந்தித்து இராத போதே மாபெரும் துறவி திருவள்ளுவர் போதித்தார் - "நீரின்றி அமையாது உலகு". தண்ணீர் மறைந்து விட்டால் இயற்கை வளங்கள் பாதிக்கப் படும்; முடிந்து போகும். முழுமையான பேரழிவுக்கு வழி வகுத்து விடும்.

நான் குஜராத்தில் பிறந்தேன். வட குஜராத்தில் ஜைனர்களின் யாத்திரை நகரம் மஹுதி இருக்கிறது. சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்த ஜைன முனிவர் இருந்தார். அவர் வயல்களில் பணிபுரிந்தார் ஆனால் ஜெயின் இசத்தின் தாக்கத்தில் இருந்தார். பிறகு இவர், 'பூதி சாகர் ஜி மகராஜ்' என்று அழைக்கப்பட்டார். நூறாண்டுகளுக்கு முன்பு வேத நூல்கள் சிலவற்றை அவர் விட்டுச் சென்றார். பலசரக்குக் கடைகளில் தண்ணீர் விற்கப்படுகிற காலம் வரும் என்று அதில் இருந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு துறவி கூறிய சொற்கள் இப்போது மெய்யாகி இருப்பதை உங்களால் நம்ப முடிகிறதா? நூறு ஆண்டுகளுக்கு முன்பு முன்னர் கணிக்கப்பட்டது இன்று உண்மையாகியுள்ளது. இன்று நாம் எல்லாரும் உண்மையில் பலசரக்குக் கடையில் இருந்து தண்ணீர் வாங்குகிறோம்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, முன்னேறிச் செல்லும் முயற்சிகளில் நாம் தயங்க மாட்டோம்; தளர மாட்டோம்; நின்று விட மாட்டோம். சவால்களை நேருக்கு நேர் சந்திக்கும் நேரம் வந்து விட்டது. சில சமயங்களில் அரசியல் ஆதாயங்களைக் கருத்தில் கொண்டு முடிவுகள் எடுக்கப் படுகின்றன; ஆனால் அவற்றுக்கு, நம் நாட்டின் வருங்காலத் தலைமுறையின் வளர்ச்சியை விலையாகத் தர வேண்டி உள்ளது. இன்று செங்கோட்டை தளத்தில் இருந்து ஒரு நாட்டின் மக்கள் தொகைப் பெருக்கம் குறித்து விளக்க விரும்புகிறேன். வேகமாக பெருகும் மக்கள் தொகை நமக்கும் எதிர்காலத் தலைமுறைகளுக்கும் புதிய சவால்களை எழுப்புகின்றன.

நமது சமுதாயத்தில், கட்டுப்படுத்தப்படாத மக்கள் தொகைப் பெருக்கத்தின் பாதிப்புகளை நன்கு அறிந்த ஒரு பிரிவு இருக்கிறது. அவர்கள் அனைவரும் மதிக்கப்பட, பாராட்டப்படத் தகுதியானவர்கள். அவர்கள் இந்த தேசத்தின் மீது வைத்திருக்கும் நேசத்தின் வெளிப்பாடு இது. குழந்தையின் தேவைகளை அவர்களால் நிறைவேற்ற முடியுமா என்றும், குழந்தையின் கனவுகள் நிறைவேறப் பொறுப்புள்ள பெற்றோராக தமது பங்கு குறித்தும் யோசித்து, ஒரு குழந்தை பெறும் முன், அவர்கள் நன்கு பரிசீலித்து முடிவெடுக்கிறார்கள். இந்த அளவுகோல்களை மனதில் கொண்டு, பொறுப்பான குடிமக்களாகிய இந்த சிறிய பிரிவுகள், தமது குடும்பங்களை சிறிதாக வைத்துக் கொண்டு, தமக்குத் தாமே உத்வேகம் பெறுகிறார்கள். இவர்கள் தங்களின் குடும்ப நல்வாழ்வுக்கு மட்டுமே பங்களிக்கவில்லை; நாட்டின் நலத்துக்கும் பங்களிக்கிறார்கள்.

இவர்கள் தேசபக்தியை வெளிப்படுத்துகிறார்கள். இவர்களின் வாழ்க்கையை சமுதாயத்தின் அத்தனை மக்களும் நெருக்கமாகப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். குடும்பத்தின் அளவை வரையறைக்குள் வைத்து தமது குடும்பங்களுக்கு அவர்கள் எவ்வாறு சேவை செய்கிறார்கள் என்று பாருங்கள். இந்தக் குடும்பம் ஓரிரு தலைமுறையில் எவ்வாறு முன்னேறி இருக்கிறது.. இவர்களை குழந்தைகள் எவ்வாறு கல்வி பெற்று உள்ளார்கள்.. எவ்வாறு இந்தக் குடும்பம் நோயில்லாமல் இருக்கிறது.. அவர்களின் அடிப்படைத் தேவைகளை இந்த குடும்பம் எவ்வாறு நிறைவேற்றிக் கொள்கிறது என்று பாருங்கள்.

இவர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நமது குடும்பத்தில் ஒரு குழந்தை வருவதற்கு முன்பாக நாம் சிந்திக்க வேண்டும் - குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேனா? அல்லது அந்தக் குழந்தை, இந்த சமுதாயத்தைச் சார்ந்து இருக்க விடப் போகிறேனா? அந்தக் குழந்தையை ஊட்டச்சத்து இல்லாமல் விடப் போகிறேனா? இந்த வகையான வாழ்க்கையை க் குழந்தை மீது திணிப்பதாக பெற்றோர்கள் தொடர்ந்து குழந்தை பெற்றுக் கொள்ளக் கூடாது. ஆகவே சமூக விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

நாட்டுக்கு மிகப்பெரும் பங்காற்றிய இந்த மக்கள் சிறப்பிக்கப் பட வேண்டும்; இவர்களை முன்மாதிரியாகக் கொண்டு, இன்னமும் இவ்வாறு சிந்திக்காத சமுதாயப் பிரிவுகளுக்கு வழி காட்ட வேண்டும். அரசும் பல்வேறு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். மத்திய அரசும், மாநில அரசர்களும் - இந்தப் பொறுப்பைத் தம் தோள்களில் சேர்ந்து சுமக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும். ஆரோக்கியமற்ற சமுதாயத்தை நம்மால் நினைத்துப் பார்க்க முடியவில்லை; கல்வியறிவற்ற சமுதாயத்தை நம்மால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

21 ஆம் நூற்றாண்டு இந்தியாவில், கனவுகளை நிறைவேற்றும் திறன், தனிநபரிடமிருந்து, குடும்பத்தில் இருந்து தொடங்குகிறது. மக்கள் தொகை, கல்வி ஆரோக்கியம் அற்றதாக இருந்தால் குடும்பமோ நாடோ மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மக்கள் தொகை கல்வி, அதிகாரம், திறன் கொண்டதாக இருந்தால், தமது விருப்பங்களை தேர்வுகளை நிறைவேற்றும் சரியான சூழலைத் தருவதற்குப் போதுமான வருமானம் இருக்குமானால், பிறகு இந்த நாடும் இவற்றை நிறைவேற்றும்.

எனது அன்பான நாட்டு மக்களே, நீங்கள் அறிவீர்கள் - ஊழலும் பாரபட்சமும், கற்பனை செய்யக்கூட முடியாத அளவுக்கு நமது நாட்டை சேதப்படுத்தி உள்ளது; நமது வாழ்க்கையில் கரையான் போல நுழைந்து விட்டது. இவற்றை ஒழிக்க நாம் தொடர்ந்து முயற்சிக்கிறோம். சில வெற்றிகள் இருக்கக் கூடும்; ஆனால் நோய் ஆழமாகப் பரவி இருக்கிறது. எந்த அளவுக்குப் பரவி இருக்கிறது என்றால், அரசு மட்டத்தில் மட்டும் அல்ல; ஒவ்வொரு மட்டத்திலும் நாம் மேலும் அதிகமாய் முயற்சி செய்ய வேண்டும். இதனை நாம் இடையறாது தொடர்ந்து செய்தாக வேண்டும்.

எல்லா பணிகளையும் ஒரே சமயத்தில் செய்து விட முடியாது. தீய வழக்கங்கள் - நீண்ட நாள் நோய் போன்றது. சில சமயங்களில் அது குணமாகி விடுகிறது. சில, மீண்டும் திரும்பி வந்து விடுகின்றன. ஊழலும் ஒரு நோய்தான். இதனை ஒழிக்க தொடர் தொழில்நுட்பப் பயன்பாடு உள்ளிட்ட பல வழிகளில் முயற்சிக்கிறோம். எல்லா நிலைகளிலும் நேர்மையும் வெளிப்படை தன்மையும் வலுப்பட எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறோம்.

நீங்கள் கண்டு இருப்பீர்கள் - இந்த அரசு பதவி ஏற்ற உடன், மற்றும், கடந்த ஐந்து ஆண்டுகளில், உயர்மட்ட அலுவலர்கள் பலரை அரசு பதவியில் இருந்து நீக்கி உள்ளது. தடைகளாக இருந்த இவர்களின் சேவை நாட்டுக்குத் தேவையில்லை என்பதால் இவர்கள் நீக்கப் பட்டார்கள். நமது அமைப்பு முறையில் மாற்றம் வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயத்தில் சமுதாயத்திலும் மாற்ற வேண்டும். சமூக மாற்றத்துடன், அமைப்பு முறையில் நிர்வாகிக்கும் மக்களின் நம்பிக்கைகளில் மனநிலையிலும் மாற்றம் ஏற்படுதல் அவசியம். அப்போதுதான் நாம் விரும்பும் விளைவுகளை சாதிக்க முடியும்.

சகோதரர்களே சகோதரிகளே, சுதந்திரம் பெற்று பல ஆண்டுகளுக்குப் பிறகு நமது நாடு ஒரு வகையில் பக்குவப்பட்டு இருக்கிறது. 75 ஆவது சுதந்திர தின நாளைக் கொண்டாட இருக்கிறோம். நமது இனம் சார்ந்த விழுமியங்கள் மனப்போக்குகள் மற்றும் உணர்வுகள் போன்று இந்த விடுதலையும் விலைமதிப்பு அற்றது. அதிகாரிகளுடன் நான் சந்திப்பு நிகழ்த்தும் போதெல்லாம் குறிப்பிடுகிறேன் - பொதுவெளியில் நான் இதை பேசுவதில்லை ஆனால் இன்று சொல்ல விரும்புகிறேன் - சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் சிவப்பு நாடா முறையை நாம் குறைக்க முடியாதா.. சாமானிய மனிதனின் அன்றாட வாழ்க்கையில் அரசின் குறுக்கீடைக் குறைக்க முடியாதா..?

என்னைப் பொருத்தவரை சுதந்திர இந்தியா என்பதன் பொருள் - மக்களின் வாழ்க்கையில் அரசின் தலையீடு படிப்படியாக குறைந்து வருகிற ஓர் அமைப்பு முறையை உருவாக்குவது தான். தமது விதியை தானே முடிவு செய்து கொள்கிற உரிமையை இது மக்களுக்கு வழங்கும். தமது கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள, தமது குடும்பங்களை உயர்த்த, தேசநலனை மேம்படுத்த எந்த திசையில் செல்வது என்பதை அவர்களே தெரிவு செய்ய வேண்டும்.

குடிமக்கள் உணர்கிற அளவுக்கு அரசின் அழுத்தம் இருக்கக் கூடாது. அதே சமயம் நெருக்கடி சமயங்களில் அரசுப் பணிகளில் குறை இருக்கக் கூடாது. அரசு, அழுத்தம் தரவும் கூடாது; குறைபாடு உள்ளதாகவும் இருக்கக் கூடாது. நாம் எல்லோரும் நமது கனவுகளுடன் முன்னேறுவோம். ஒரு தோழனாக அரசாங்கம் நம்முடன் இருக்க வேண்டும். தேவை ஏற்படும்போது ஆதரவு அளிக்க அரசாங்கம் எப்போதும் தயாராக இருக்கிறது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

காலத்தால் வழக்கொழிந்து போன அவசியமற்ற சட்டங்கள் விதிகள் பலவற்றை நாம் நீக்கி உள்ளோம். கடந்த ஐந்து ஆண்டுகளில் அனேகமாக ஒவ்வொரு நாளும், நடைமுறையில் தேவையற்ற ஏதேனும் ஒரு விதியை நீக்கி உள்ளோம். சாமானியனுக்கு இது தெரியாமல் இருக்கலாம். ஒரு நாளுக்கு ஒரு சட்ட நீக்கம் என்றால்.. 1450 சட்டங்களை நீக்கி உள்ளோம். இது சாமானிய மனிதனின் வாழ்க்கையில் கணிசமாக சுமையைக் குறைக்கும் நோக்கம் கொண்டது. இந்த புதிய அரசு 10 வாரங்களைத் தான் கடந்துள்ளது. அதற்குள்ளாகவே 60 சட்டங்களை ரத்து செய்து விட்டோம். 'வாழ்வை எளிதாக்குதல்' - அவசியம் ஆகும். இதில் நாம் கவனம் செலுத்துகிறோம்; தொடர்ந்து முன்னெடுக்க விரும்புகிறோம்.

வணிகத்தை எளிதாக்குதல் தொடர்பாகவும் நாம் அதிக முன்னேற்றம் கண்டுள்ளோம். உலகத் தர வரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் வர விரும்புகிறோம். இதற்கு இன்னும் பல சீர்திருத்தங்கள் தேவைப் படுகின்றன. சிறிய வணிகம் அல்லது தொழிற்சாலை அமைக்க ஒருவர் விரும்பினால், பல்வேறு படிவங்களை நிரப்புவது முதல், சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சென்று வருதல், அப்படியும் வேண்டிய அனுமதி கிடைக்காமை போன்ற, சிறிதும் பெரிதுமாக பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டி உள்ளது. சிக்கலான இந்த வலையை நீக்கும் முயற்சியில் மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து, அடுத்தடுத்து பல சீர்திருத்தங்களளை மேற்கொண்டு வருகிறது. இது விஷயத்தில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளோம்.

இந்தியா போன்ற மிகப்பெரிய வளரும் தேசம், பெரிய கனவுகளுடன் பெரிதாக முன்னேறலாம் என்று உலகம் முழுதும் யதார்த்தமான எதிர்பார்ப்பு இருக்கிறது. வணிக முறையை எளிதாக்குதல், ஒரு மைல்கல் மட்டுமே. இதனை நிறைவேற்றுவது எனது குறிக்கோள். அரசின் ஒப்புதல் பெற சாமானியன் சிரமப்பட வேண்டியது இல்லை. தனக்கு உரித்தான உரிமைகளை எளிதில் பெற வேண்டும். இந்த திசையில் நாம் முன்னேற வேண்டிய தேவை இருக்கிறது.

அன்பார்ந்த நாட்டு மக்களே, நமது நாடு முன்னேறி நடைபோட வேண்டும். நாடு சிறிது சிறிதாக வளர்ச்சி அடைய நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. பெரிதாகத் தாவ வேண்டும். நமது சிந்தனை மாற வேண்டும். உலகத்தடத்துக்கு இந்தியாவை மாற்ற நாம் நவீன கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

சாமானிய மக்கள் எப்போதும் நல்ல அமைப்பு முறைக்கே கனவு காண்கிறார்கள். அவர்கள் நல்லனவற்றை விரும்புகிறார்கள். இந்தச் சுவையை அவர்கள் விரும்புகிறார்கள். ஆகவே நவீன கட்டமைப்புக்காக ரூ. 100 லட்சம் கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம். இது வேலை வாய்ப்புகளை உருவாக்கும். புதிய அமைப்புமுறைகளை உருவாக்கும். வெவ்வேறு விருப்பங்களும் நிறைவேறும். சாகர்மாலா திட்டம், பாரத்மாலா திட்டம், நவீன ரயில், பேருந்து, விமான நிலையங்கள், நவீன மருத்துவமனைகள், உலகத்தர கல்வி நிலையங்கள்... என்று எதுவாக இருந்தாலும், ஒட்டுமொத்த உட்கட்டமைப்பையும் மேம்படுத்த இருக்கிறோம். நமது நாட்டுக்குத் துறைமுகங்களும் தேவைப்படுகின்றன. சாதாரண மக்கள் மாறிவிட்டார்கள். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு முன்னர் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு ரயில்வே நிலையம் கட்டுவதற்காக ஒரு தாளில் முடிவெடுக்கப் பட்டால், ஏதோ ஒரு நாளில் ரயில் நிலையம் வந்து சேரும் என்று, பல ஆண்டுகளுக்கு நேர்மறையான உணர்வு இருக்கும். இப்போது காலம் மாறிவிட்டது. இப்போது சாதாரண மக்கள் ஒரு ரயில்வே நிலையத்துடன் திருப்தி அடைவதில்லை. அவர்கள் உடனடியாகக் கேட்பார்கள் - 'எங்கள் பகுதிக்கு வந்தே பாரத் விரைவு ரயில் எப்போது வரும்?' அவர்களின் சிந்தனை மாறிவிட்டது. ஒரு நல்ல பேருந்து நிலையம் அல்லது ஐந்து நட்சத்திர ரயில் நிலையம் கட்டினால், 'வெல்டன்' என்று சொல்ல மாட்டார்கள். ஆனால் உடனடியாகக் கேட்பார்கள் - 'விமான நிலையம் எப்போது தயாராகும்?' தங்கள் ஊரில் ரயில் நின்றாலே மகிழ்ச்சி அடைந்த மக்கள் இப்போது கேட்கிறார்கள் - 'இதெல்லாம் சரி.. இங்கே எப்போது விமான நிலையம் திறக்கப் போகிறீர்கள்..?'

முன்பெல்லாம் மக்கள் கேட்டார்கள் - 'எங்கள் ஊருக்கு எப்போது தார் ரோடு போடுவீர்கள்.?' இப்போது மக்கள் கேட்கிறார்கள் - 'வர இருப்பது நான்கு வழிச்சாலையா? ஆறு வழிச் சாலையா?' தார்ச் சாலைகளுடன் அவர்கள் இப்போது திருப்தி அடைவதில்லை. கனவு காணும் இந்தியாவின் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாக இதை நான் எண்ணுகிறேன்.

முன்பெல்லாம் தரையில் மின்சாரக் கம்பங்கள் சாய்த்து வைக்கப் பட்டாலே, மின் இணைப்பு வந்தவிட்டதாய்க் கருதி மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஆனால் இப்போது ட்ரான்ஸ்மிஷன் ஒயர்களும் மின்சார மீட்டர்களும் பொருத்திய பிறகும் கூட மக்கள் கேட்கிறார்கள் - 'எங்களுக்கு எப்போது 24 மணி நேரமும் மின் சப்ளை கிடைக்கும்?' கம்பங்களையும் வயர்களையும் மட்டுமே பார்த்து மகிழ்ச்சி அடைவதாக இல்லை.

முன்பெல்லாம், மொபைல் போன் பயன்பாட்டுக்கு வந்த புதிதில், மொபைல் போன் வந்து சேர்ந்து விட்டது என்பதில் மகிழ்ச்சி கொண்டார்கள். ஆனால் இப்போது 'டேட்டா ஸ்பீடு' குறித்து விவாதிக்கிறார்கள். மாறிவரும் காலம் மற்றும் உளவியல் மாற்றம் குறித்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். நவீன கட்டமைப்பு, தூய எனர்ஜி, எரிவாயு பொருளாதாரம், வாயு 'க்ரிட்', 'இ-மொபிலிடி' உள்ளிட்ட பல துறைகளில் நாம் முன்னேறியாக வேண்டும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, பொதுவாக நமது நாட்டு அரசுகள், குறிப்பிட்ட சாதி அல்லது குறிப்பிட்ட பகுதிக்கு என்ன செய்தது என்பதை வைத்துத்தான் அடையாளம் காணப்படுகிறது. ஓர் அரசு எவ்வளவு தந்திருக்கிறது யாருக்கு தந்திருக்கிறது என்கிற அளவுகோலை கொண்டு தான் அரசை மக்கள் பார்த்தார்கள். அதுவே காலத்தின் தேவை அல்லது கட்டாயமாக இருந்தது.

கடந்த காலத்தில் எதை எவ்வாறு எப்போது யார் பெற்றார்கள் என்பதைவிட, ஒரு தேசமாக நாம் நிறைவேற்ற வேண்டிய கனவுகள் என்ன என்று ஒரு தேசமாக நாம் ஒன்றாய் சிந்திக்க வேண்டும். நமது கனவுகளை நிறைவேற்ற நாம் ஒற்றுமையாய்ப் பாடுபட வேண்டும் என்று காலம் கோருகிறது. இதனை கருத்தில் கொண்டு ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கட்டமைக்கும் இலாக்கு வைத்துள்ளோம். 130 கோடி மக்கள், சிறு பங்களித்தாலும் நாம் முன்னேற முடியும். ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் என்கிற இலக்கு சிலருக்குக் கடினமானதாகத் தோன்றலாம். தவறில்லை. ஆனால் கடினமான பணிகளை நிறைவேற்றாமல் ஒரு நாடு எவ்வாறு முன்னேறும்? கடினமான சவால்களை மேற்கொண்டால் அன்றி முன்னேறுவதற்கான மனநிலை நமக்கு எவ்வாறு தோன்றும்?.

உளவியல் ரீதியாகவும் நாம் இலக்கை மிக உயர்வாக வைத்துக்கொள்ள வேண்டும். அதைத்தான் நாம் செய்துள்ளோம். இது ஏதோ காற்றில் எழுதப்பட்டது அல்ல. சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகள் கழித்து முன்னேற்றப் பாதையில் 70 ஆண்டுகள் பயணித்து இரண்டு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை சாதித்தோம். ஆனால் 2014-19 ஐந்து ஆண்டுகளில், ஒரு ட்ரில்லியன் டாலர் அதிகரித்து, மூன்று ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைந்தோம். ஐந்தாண்டுகளில் நாம் இத்தனை பெரிய தாவலை சாதிக்க முடிந்தது என்றால், அடுத்த ஐந்தாண்டுகளில் நாம், ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர முடியும். இதுவே ஒவ்வோர் இந்தியரின் கனவாக இருக்க வேண்டும்.

பொருளாதாரம் வளர்கிற போது, மக்களுக்கு மேம்பட்ட வாழ்க்கை தரத்தைக் கொண்டு வருகிறது. அடிமட்டத்தில் உள்ள மக்களின் கனவுகள் நிறைவேறவும் வாய்ப்புகள் உருவாகும். இந்த வாய்ப்புகளை உருவாக்க, நாட்டின் பொருளாதாரம் குறித்த மனநிலையை வளர்க்க வேண்டும். நமது விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக எண்ணும் போது, சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கழித்து ஏழையிலும் ஏழை உட்பட ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்று கனவு இருக்கும் போது, ஒவ்வொரு வீட்டுக்கும் மின் இணைப்பு இருக்க வேண்டும் என்று கனவு காணும் போது, ஒவ்வொரு கிராமத்துக்கும் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க், இணைய சேவை, தொலைதூரக் கல்வி வசதி இருக்க வேண்டும் என்று கனவு காணும் போது, இவையெல்லாம் வெறும் கனவுகளாகவே இருந்து விடாது.

கடல் வளத்தைப் பெருக்கி நீலப் பொருளாதாரத்தைப் பெருக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். நமது மீனவ சமுதாயம் (நிதி) அதிகாரம் பெற வேண்டும். நமக்கு உணவு வழங்கும் விவசாயிகள், ஆற்றல் (energy) தருபவராயும் இருக்கலாம். அவர்கள் ஏன் ஏற்றுமதியாளர் ஆகக் கூடாது..? அவர்களின் விளைபொருட்கள் ஏன் சர்வதேச சந்தையை ஆக்கிரமிக்கக் கூடாது..? நாம் இந்தக் கனவுகளோடு முன்னேற வேண்டும். நமது நாட்டின் ஏற்றுமதி அதிகரிக்க வேண்டும். உலகச் சந்தையைச் சென்றடைய எல்லா முயற்சிகளும் எடுப்போம்.

நமது நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு நாட்டுக்கான திறன் பெற்றுள்ளது. உலகின் சிறிய நாடுகளுக்கு இணையாக ஒவ்வொரு மாவட்டமும் திறன் கொண்டுள்ளது. இதை நாம் புரிந்து கொண்டு இந்தத் திறனை முறைப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாவட்டமும் ஏற்றுமதி முனையமாக மாற ஏன் சிந்திக்கக் கூடாது..? ஒவ்வொரு மாவட்டமும் தனக்கே உரிய கைத்தொழில்கள், தனித்தன்மை வாய்ந்த சிறப்புகள் கொண்டுள்ளது. ஒரு மாவட்டம் வாசனை திரவியத்துக்குப் பெயர் பெற்றது என்றால், வேறொரு மாவட்டத்தில் சமையல் பாத்திரங்கள், மற்றொன்றில் புடவைகள், வேறொன்றில் இனிப்புகள்... பிரபலமாக இருக்கலாம். நம் நாட்டின் ஒவ்வொரு மாவட்டமும் மாறுபட்ட அடையாளம் மற்றும் உலக சந்தைக்கான திறன் பெற்றுள்ளது.

உலகச் சந்தைக்கான தயாரிப்பில், பழுது அற்றது பின்விளைவு அற்றது (zero defect zero effect) என்கிற கொள்கையை முயற்சித்தால், இந்தப் பன்மை குறித்து உலக சந்தையை அறிய வைத்து ஏற்றுமதியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தினால், உலகச் சந்தையை கைப்பற்றுவதற்காக உழைத்தால், இந்த நாட்டின் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது நம்முடைய சிறு குறு தொழில்களுக்கு பெரும் வல்லமை தரும்.

நமது நாடு உலகத்துக்கு ஆர்வம் மிக்க சுற்றுலா தளமாக இருக்க முடியும். ஆனால் சில காரணங்களால் நாம் விரும்பும் வேகத்தில் இதைச் செய்ய முடியவில்லை. வாருங்கள், நாட்டு மக்கள் அனைவரும் சேர்ந்து சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க முடிவெடுப்போம். சுற்றுலாத் துறை வளரும் போது , முதலீடு பெருகி வேலை வாய்ப்புகள் பெருகும். நாட்டின் பொருளாதாரம் மேம்படும். உலகெங்கும் உள்ள மக்கள் இந்தியாவை இன்று ஒரு புதிய வழியில் பார்க்கத் தயாராக இருக்கிறார்கள். உலகெங்கும் உள்ள சுற்றுலாப் பயணிகளை எவ்வாறு ஈர்ப்பது, சுற்றுலாத் துறையை எவ்வாறு வலுப்படுத்துவது, சுற்றுலாத் தளங்களில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யலாம் என்று சிந்திப்போம்.

சாதாரணக் குடிமக்களின் வருமானத்தைப் பெருக்குதல், அவர்களுக்கு இன்னமும் மேம்பட்ட கல்வி வழங்குதல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் குறித்தெல்லாம் பேச வேண்டும். நடுத்தர வர்க்கத்தினர் மேலே எழுவதற்கான தளம் அமைக்கப் பட வேண்டும். இதனால் அவர்களின் கனவுகள் மெய்யாகும். நமது விஞ்ஞானிகளுக்கு மிகச் சிறந்த வளங்களும் வசதிகளும் இருக்க வேண்டும். நமது படையினர் மிகச் சிறந்த ஆயுதங்களும் கருவிகளும் கொண்டிருக்க வேண்டும். அதுவும் உள்நாட்டில் தயாரிக்கப் பட்டதாய் இருக்க வேண்டும். ஐந்து பில்லியன் டாலர் பொருளாதாரமாக வளர்வதற்குத் தேவையான புதிய வல்லமையை இந்தியாவுக்கு வழங்க, பல துறைகள் உள்ளன என்று நம்புகிறேன்.

அன்பார்ந்த சகோதரர்களே சகோதரிகளே, பொருளாதார வெற்றியை சாதிக்க, மிக சாதகமான சூழல் நிலவுகிறது. ஒரு நிலையான அரசு இருக்கும் போது, கொள்கைகள் கணிக்கக் கூடியதாய் இருக்கும்; அமைப்புகள் நிலையாய் இருக்கும்; உலகமும் உங்கள் மீது நம்பிக்கை வைக்கும். இந்திய மக்கள் இதனைக் காண்பித்து உள்ளனர். உலகமும் இந்தியாவின் அரசியல் நிலைத்தன்மையை மிகுந்த பெருமையுடன் மரியாதையுடன் கண்காணிக்கிறது. நாம் இந்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது.

நம்முடன் வணிகம் செய்ய உலகம் ஆவலுடன் இருக்கிறது. அது நம்முடன் தொடர்பில் இருக்க விரும்புகிறது. பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி, வளர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, முக்கிய சமன்பாட்டுடன் முன்னேறுகிறோம் என்பது பெருமைக்குரிய விஷயம் ஆகும். சில சமயம் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கலாம்; பணவீக்கம் கட்டுக்குள் இல்லாது போகலாம். சில சமயம் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கலாம்; ஆனால் வளர்ச்சி விகீதம் பாதிக்கப் படலாம். ஆனால் நமது அரசு பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்ல; வளர்ச்சி விகிதத்தையும் அதிகரித்தது.

நமது பொருளாதாரத்தின் அடித்தளங்கள் வலுவாக உள்ளன. இந்த வலிமையே நாம் முன்னேறிச் செல்ல நம்பிக்கை தருகிறது. இதே வழியில், ஜிஎஸ்டி போன்ற அமைப்பு முறையை வளர்ப்பதன் மூலம், இன்சால்வென்சி (திவால்) சட்டம் (Insolvency and Bankruptcy Code) போன்ற சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததன் மூலம், நம்பிக்கை மிகுந்த சூழலை வளர்க்க விரும்புகிறோம். நமது நாட்டில் உற்பத்தி அதிகரிக்க வேண்டும். இயற்கை வளங்களைப் பதனிடுதல், மதிப்புக் கூட்டல், மதிப்பு கூட்டிய பொருட்களை உலகத்துக்கு ஏற்றுமதி செய்தல் ஆகியவை அதிகரிக்க வேண்டும்.

உலகத்தில் இருக்கிற ஒவ்வொரு நாடும் ஏதேனும் ஒரு இந்தியப் பொருளை இறக்குமதி செய்ய வேண்டும்; இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாவட்டமும் ஏதேனும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று நாம் ஏன் கனவு காணக் கூடாது? இந்த இரண்டையும் பரிசீலித்தால், நம்மால் வருமானத்தையும் உயர்த்த முடியும். நமது நிறுவனங்களும் தொழில் முனைவோரும் கூட உலக சந்தைக்குச் செல்லும் கனவு கொண்டுள்ளனர். உலகச் சந்தைக்குச் செல்வதன் மூலம், நமது முதலீட்டாளர்கள் , இந்தியாவின் அந்தஸ்தை உயர்த்துவார்கள்; மேலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவார்கள். வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கு முன்வர முதலீட்டாளர்களை ஊக்குவிக்க நாம் முற்றிலும் தயாராக இருக்கிறோம்.

நமது நாட்டில் சில தவறான நம்பிக்கைகள் முளைத்து இருக்கின்றன. இந்த மனநிலையில் இருந்து நாம் வெளியே வர வேண்டும். நாட்டுக்காக செல்வத்தை உருவாக்குவோர், நாட்டுக்காக செல்வத்தை உருவாக்குவதில் பங்காற்றுவோர் - இந்த நாட்டுக்கு சேவை புரிகின்றனர். இவர்களை நாம் சந்தேகிக்கக் கூடாது. இவர்களை அங்கீகரித்து ஊக்குவித்தல், காலத்தின் தேவை ஆகும். இவர்களுக்கு மேலும் கவுரவம் கிடைக்க வேண்டும். செல்வம் உருவாக்கப்படவில்லை என்றால், அதனை விநியோகிக்க முடியாது. செல்வம் விநியோகிக்கப்படவில்லை என்றால், சமுதாயத்தின் வறிய பிரிவினரை உயர்த்த முடியாது. செல்வத்தை உருவாக்குதல், அந்த அளவுக்கு முக்கியமானது. இதை நாம் மேலும் வளர்க்க வேண்டும். என்னைப் பொருத்த வரை, செல்வத்தை உருவாக்க முயற்சிப்போர், இந்த தேசத்தின் சொத்து ஆவார்கள். அவர்கள் வலிமை பெற வேண்டும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, வளர்ச்சியோடு சேர்ந்து அமைதி மற்றும் பாதுகாப்பையும் நாம் வலியுறுத்துகிறோம். உலக அளவில் நாடுகள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு ஆபத்துகளில் சிக்கி உள்ளன. உலகில் சில பகுதிகளில் மரணம் சூழ்ந்துள்ளது. உலக அமைதியை மீட்டு எடுப்பதில் இந்தியா முக்கிய பங்கு ஆற்ற வேண்டி உள்ளது. உலகச் சூழலில் நாம் மௌனப் பார்வையாளராக இருக்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக நாம் கடுமையாகப் போரிடுகிறோம். உலகின் எந்த மூலையில் நிகழ்ந்தாலும், பயங்கரவாதச் செயல் என்பது மனித குலத்தின் மீதான தாக்குதலாகவே கருதப்பட வேண்டும். ஆகவே, பயங்கரவாத அமைப்புகளுக்கு இடமளித்து ஊக்குவிக்கும் அனைவருக்கும் எதிராக ஒன்று சேருமாறு எல்லாரையும் வேண்டுகிறோம். இத்தகைய மனித குல எதிர்ப்பு நடவடிக்கைகளை விழிப்புணர்வதில் இந்தியா பங்களித்தாக வேண்டும். பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வர உலக சக்திகள் அனைத்தையும் ஒன்று சேர்ப்பதில் இந்தியா உறுதியாய் இருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என்று விரும்புகிறோம். பயங்கரவாதத்துக்கு இடமளித்து ஊக்குவித்து ஏற்றுமதி செய்வோரை அடையாளம் காட்டி அவர்களுக்கு எதிராக எல்லா சக்திகளையும் இந்தியா ஒன்று சேர்க்க வேண்டும்.

சில பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவைக் குறி வைத்துள்ளது மட்டுமல்ல; நமது அண்டை நாடுகளையும் சேதப்படுத்தி வருகின்றனர். வங்கதேசமும் ஆப்கானிஸ்தானும் கூட பயங்கரவாத நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டு உள்ளன. வருந்தத்தக்க விதத்தில், இலங்கையிலும் கூட ஒரு சர்ச்சுக்கு உள்ளே அப்பாவி மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். இது மனதைப் பிளக்கும் சம்பவம். ஆகவே இந்த துணைக் கண்டத்தில் பாதுகாப்பு அமைதி ஒற்றுமையைக் கொண்டு வர நாம் அனைவரும் இணைந்து தீவிரமாகச் செயலாற்ற வேண்டும். இன்னும் நான்கு நாட்களில் நமது அண்டை நட்பு நாடான ஆப்கானிஸ்தான் சுதந்திரத்தின் நூற்றாண்டைக் கொண்டாட இருக்கிறது. இந்தப் புனிதமான தருணத்தில் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள்.

அச்சத்தை பரப்புவோர், வன்முறையை ஊக்குவிப்போம் நசுக்கப்பட வேண்டும் என்பது நமது தெளிவான கொள்கை. இத்தகைய தீய எண்ணங்களை ஒழிப்பதை நமது கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மூலம் தெளிவாக்கி உள்ளோம். இது நமக்கு நெருடலோ அச்சமோ இல்லை. நமது ராணுவம் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு அமைப்பினர் பாராட்டத்தக்க வகையில் கடமை ஆற்றியுள்ளார்கள். இவர்கள் எப்போதுமே, சீருடையில் உயர்ந்து நிற்கிறார்கள்; எல்லா ஆபத்துகளில் இருந்தும் நம்மைப் பாதுகாக்கிறார்கள். நம்முடைய ஒளிபரமான எதிர்காலத்துக்காக தங்களின் வாழ்வைத் தியாகம் செய்துள்ளார்கள். இவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். அஞ்சலி செலுத்துகிறேன்.

தகுந்த நேரத்தில் சீர்திருத்த நடவடிக்கைகள் எடுப்பது மிக முக்கியம். இராணுவ வளங்கள், ராணுவப் படைகள் ராணுவக கட்டுமானங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டு வர நீண்ட காலமாக பேச்சுகள் நடைபெற்று வருவதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். முந்தைய அரசுகளும் இதுகுறித்து பேசி உள்ளன. பல ஆணையங்கள் நிறுவப் பட்டன; எல்லா அறிக்கைகளும் அநேகமாக அதே பிரச்சினைகளையே வெளிச்சம் போட்டுக் காட்டின. எந்த வேறுபாடும் இல்லை. மீண்டும் மீண்டும் அதுவே சொல்லப் பட்டது. நமது ராணுவம் கடற்கரை விமானப்படை இடையே நல்ல ஒருங்கிணைப்பு உள்ளது. இந்த ஏற்பாடு குறித்து நாம் பெருமை கொள்ளலாம். எந்த இந்தியரும் இந்திய ராணுவம் குறித்து பெருமைப் படலாம். தனக்கு உரித்தான வகையில் நமது படைகள் நவீனத்துக்கும் முயற்சித்து வருகின்றன.

உலகம் இன்று மாறிக் கொண்டு வருகிறது. போருக்கான சாத்தியம் மாறி வருகிறது. போரின் தன்மை மாறி வருகிறது. அது முற்றிலும் தொழில்நுட்ப ஒன்றாக மாறிவிட்டது. இந்தச் சூழலில் இந்தியா துண்டு துண்டான அணுகுமுறை (fragmented approach) கொண்டிருக்க முடியாது. நமது ராணுவ வலிமை முழுதும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டும்; முன்செல்ல வேண்டும். கடற்படை ராணுவம் விமானப்படை மூன்றில் ஏதேனும் ஒன்று அதிக முன்னிலையிலும் மற்ற இரண்டும் பின்தங்கியும் இருக்க முடியாது. மூன்றும் ஒரே வேகத்தில் இணைந்து முன்னேற வேண்டும். நல்ல ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். மக்களின் ஆசைகள், நம்பிக்கைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்.

உலகில் மாறிவரும் போர் மற்றும் பாதுகாப்பு சூழலுக்கு ஏற்ப இருக்க வேண்டும். செங்கோட்டையில் இருந்து ஒரு முக்கிய முடிவை அறிவிக்க விரும்புகிறேன். இந்தத் துறையின் நிபுணர்கள் இதனை நீண்ட காலமாகக் கோரி வருகிறார்கள். இன்று நாம் முடிவெடுத்துள்ளோம் - பாதுகாப்பு படைகளின் தலைவர் (Chief of Defence Staff - CDS) பதவி உருவாக்கப் படும். மூன்று படைகளுக்கும் உயர் மட்டத்தில் திறமையான தலைமை இருக்கும். இந்தியாவின் பாதுகாப்பு தேவைகளை சீர்திருத்தம் நமது கனவில் CDS அமைப்பு முறை மிக முக்கிய பணியாக இருக்கும்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, நம்மால் சிலவற்றை சாதிக்க முடியும் என்கிற காலத்தில் பிறந்தது, வளர்ந்தது.. அதிர்ஷ்டம் ஆகும். சில சமயங்களில் நான் நினைப்பது உண்டு - விடுதலைக்காக நாம் போராடிய போது, பகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு போன்ற மாமனிதர்கள் தியாகம் செய்வதில் போட்டி போட்டார்கள். மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றார்கள்; சுதந்திரக் கனவை நனவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். அந்த சமயத்தில் நாம் பிறக்கவில்லை. நமது நாட்டுக்காக தியாகம் செய்யும் வாய்ப்பு நமக்குக் கிட்ட வில்லை. ஆனால் நிச்சயமாய், நமது நாட்டுக்காக வாழ்வதற்கு இப்போது வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தக் காலம் இப்படி இருப்பது நமக்குக் கிடைத்திருக்கிற கௌரவம். இந்த ஆண்டு - நமக்கு மிகவும் முக்கியமானது. இது மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்ட ஆண்டு.

இத்தகைய வாய்ப்பு கிடைக்க நாமெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டு இருக்க வேண்டும். சுதந்திரம் கிடைத்து 75 ஆண்டுகள்... நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்களை நினைவு கூர்தல்.. நம்மை செயல் புரியத் தூண்டும். இந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மகாத்மா காந்தியின் கனவுகளை, சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க நாம், 130 கோடி மக்கள், முன்னோக்கி நகர வேண்டும். சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் மற்றும் மகாத்மா காந்தியின் 150-வது ஆண்டு... இதை நாம் ஒரு திருவிழா ஆக்க வேண்டும். நம்மை வழிநடத்த இது மாபெரும் நல்வாய்ப்பு.

இந்த செங்கோட்டையில் இருந்து 2014-ல் தூய்மை குறித்துப் பேசினேன். 2019-ன் அடுத்த சில வாரங்களில், திறந்தவெளிக் கழிப்பிடம் அற்றதாக இந்தியா மாறி இருக்கும் என்று நம்புகிறேன். இதற்காக மாநிலங்கள் கிராமங்கள் நகராட்சிகள் ஊடகங்கள். ஒவ்வொருவருமே இந்த மக்கள் இயக்கத்தில் பங்காற்றினார்கள். எங்குமே அரசைப் பார்க்க முடியவில்லை; மக்களே தாமாக இந்த இயக்கத்தில் பங்கு பெற்றார்கள். அதன் நல்விளைவுகளை இப்போது பார்க்கிறோம். அன்பார்ந்த நாட்டு மக்களே, உங்களுக்கு நான் ஒரு சிறிய வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன். இவ்வாண்டு அக்டோபர் 2 அன்று, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கில் இருந்து இந்தியாவை விடுவிப்போமா? சுற்றி வருவோம்; குழுக்களாய் சேருவோம்; வீடு பள்ளி கல்லூரி விட்டு வெளியே வருவோம். நம்மால் இயன்றதைச் செய்வோம்.

நீங்கள் செல்லும் இடங்களில் எல்லாம் ஒரு புதிய உலகம் உண்டாகும். வடகிழக்கு மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு நாம் இந்தியர்கள் ஒரு முறை சென்று வந்தால் நமக்கும் மகிழ்ச்சியாய் இருக்கும்; நம்மைப் பார்த்து வெளிநாட்டவரும் அங்கே வரத் தொடங்குவார்கள். யோசித்துப் பாருங்கள் - வெளிநாட்டு செல்கிறீர்கள்; அங்கே இருக்கிற மக்கள், 'நீங்கள் தமிழ்நாட்டுக் கோயில்களைப் பார்த்திருக்கிறீர்களா..?' என்று கேட்டு நீங்கள், 'இல்லை' என்று சொன்னால்.. எப்படி உணர்வீர்கள்? அவர்கள் வியந்து போய் சொல்வார்கள் - வெளிநாட்டில் இருக்கும் நாங்கள் அந்த கோயிலுக்கு சென்று வந்துள்ளோம்; ஆனால் இந்தியர் நீங்கள் இதுவரை பார்த்ததில்லையா? ஆகவே வெளிநாடு செல்லும் முன் நாம் நம் நாட்டை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

விவசாய சகோதரர்களுக்கு சொல்கிறேன். இந்த நாடு விவசாயிகளுக்கான நாடு. பாரத் மாதா கி ஜே என்று சொல்லும் போதே நமது இதயங்களில் ஆற்றல் நிரம்பி விடுகிறது. வந்தே மாதரம் என்கிற சொல், நாட்டுக்காகத் தியாகம் புரிய வேண்டும் என்கிற விருப்பத்தை நமது இதயங்களில் ஊட்டுகிறது. நமக்கு மிக நீண்ட வரலாறு இருக்கிறது. நமது தாய் நாட்டின் ஆரோக்கியம் குறித்து நாம் என்றாவது அக்கறை கொண்டுள்ளோமா? ரசாயன உரங்களையும் பூச்சி கொல்லி மருந்துகளையும் நாம் உபயோகிக்கிற விதத்திலே.. இந்த மண்ணின் சுகாதாரம் சேதமடைகிறது. ஒரு விவசாயியாக இந்த மண்ணின் குழந்தையாக... இந்த மண்ணின் சுகாதாரத்தை சீர்குலைக்க எனக்கு உரிமை இல்லை. அன்னை இந்தியாவை வருத்தப்பட வைக்க, நோய்க்கு உள்ளாக்க நமக்கு உரிமை இல்லை.

மகாத்மா காந்தி நமக்கு வழிகாட்டுகிறார். நமது வயல்களில் ரசாயன உரப் பயன்பாட்டை 10 சதவீதம் / 20 சதவீதம் / 25 சதவீதம்வரை குறைக்கலாமா? முடிந்தால் இவை அறவே இல்லாத ஓர் இயக்கத்தைத் தொடங்கலாமா? இது, நாட்டுக்குச் செய்யும் மகத்தான சேவையாய் இருக்கும். அன்னை பூமியைப் பாதுகாக்கும் மகத்தான செயலாக இருக்கும். நமது அன்னை பூமியைப் பாதுகாக்கும் இந்த முயற்சி, நம் நாடு விடுதலை பெற வேண்டி வந்தே மாதரம் என முழங்கி தமது வாழ்வை அர்ப்பணித்த மாமனிதர்களின் ஆசிகளுக்கு உரித்தாகும். இதை நிச்சயம் நம் மக்களால் நிறைவேற்ற முடியும். நம் நாட்டு விவசாயிகள் இதைச் செய்வார்கள். அவர்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது.

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நம் நாட்டு நிபுணர்கள் உலகளவில் நல்ல நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் திறமை நன்கு அங்கீகரிக்கப் படுகிறது. மக்கள் அவர்களை மதிக்கிறார்கள். விண்வெளி ஆகட்டும், தொழில்நுட்பம் ஆகட்டும்; நாம் புதிய உயரங்களை எட்டி இருக்கிறோம். யாரும் இதுவரை சென்றிராத நிலவின் பகுதியை நோக்கி நமது சந்திரயான் விரைந்து கொண்டிருக்கிறது என்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் செய்தி. இதுதான் நம் விஞ்ஞானிகளின் மேதைமை. இதேபோன்று, முன்பெல்லாம் சர்வதேச விளையாட்டுத் துறையில் நமது பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தது. இன்று, நம் நாட்டின், 18 - 22 வயது இளைய புதல்வர்கள் புதல்விகள், வெவ்வேறு விளையாட்டு மைதானங்களில் இந்தியாவின் மூவண்ணக் கொடியை உயரப் பறக்க விட்டுள்ளார்கள். எவ்வளவு பெருமையாக இருக்கிறது! நமது விளையாட்டு நபர்கள் நம் நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறார்கள்.

அன்பார்ந்த நாட்டு மக்களே, நாம் நமது நாட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நமது நாட்டை மாற்றியாக வேண்டும். நமது நாடு மேலும் புதிய உயரங்களை எட்டச் செய்ய வேண்டும். இதனை நாம் அனைவரும் சேர்ந்து செய்தாக வேண்டும். அரசும் மக்களும் இணைந்து செய்தாக வேண்டும். 130 கோடி மக்களும் இதைச் செய்ய வேண்டும். இந்த நாட்டின் பிரதமரும் இந்த நாட்டின் பிள்ளை; உங்களைப் போலவே இந்த நாட்டின் குடிமகன். நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும்.

வரும் நாட்களில் நாடெங்கும் கிராமப்புறங்களில் 1.5 லட்சம் சுகாதார மையங்கள், ஆரோக்கிய மையங்கள் அமைக்கப்படும். மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரு மருத்துவக் கல்லூரி அமைப்பதன் மூலம், நமது இளைஞர்கள் மருத்துவர் ஆகும் கனவு நனவாகும். ஏழை மக்களுக்காக 2 கோடிக்கு மேற்பட்ட வீடுகள் கட்டப்படும். கிராமப் பகுதிகளில் 15 கோடி வீடுகளுக்குக் குடிநீர், சப்ளை செய்யப்படும். சாலைகள் இடப்படும். ஒவ்வொரு கிராமத்துக்கும் பிராட்பேண்ட் இணைப்பு, ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் இணைப்பு வழங்கப்படும். மேலும், 50,000க்கு மேற்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எழுப்பப்படும். இதுபோன்று இன்னும் பல கனவுகளுடன் நான் முன்னேற வேண்டும்.

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து முன்னேற வேண்டும்.
சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு இதற்கான உத்வேகம் தரும். 130 கோடி மக்களுக்கும் கனவுகள் இருக்கின்றன; சவால்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கனவும் ஒவ்வொரு சவாலும் முக்கியமானது. சிலது மிக முக்கியம்; சிலது அத்தனை முக்கியமல்ல என்று எதுவும் இல்லை. இந்த உரையில் எல்லா தலைப்புகளைப் பற்றியும் பேசுவது இயலாதது. ஆகவே இன்று நாள் என்னவெல்லாம் பேசினேனோ அல்லது என்னவெல்லாம் பேசவில்லையோ... இரண்டுமே சமஅளவில் முக்கியமானது. மனதில் கொள்வோம் - நாம் முன்னேற வேண்டும் எனில், இந்த நாடு முன்னேற வேண்டும்.

சுதந்திரத்தின் 75 ஆண்டுகள், மகாத்மா காந்திக்கு 150, இந்தியா சாசனத்துக்கு 70 ஆண்டுகள்.. பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கர் கண்ட கனவை நிறைவேற்றுவோம். பர்வ குருநானக் தேவ்-ன் 550-வது ஆண்டையும் கொண்டாடுகிறோம். ஒட்டுமொத்த உலகின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மேலும் சிறந்த நாடு மேலும் சிறந்த சமுதாயத்தை கட்டமைக்க பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் மற்றும் குரு நானக் தேவ் ஜி யின் போதனைகளைப் பின்பற்றி முன்னேறுவோம்.

எனது அன்பார்ந்த சகோதரர்களே சகோதரிகளே, நமக்குத் தெரியும் - நமது இலக்குகள் இமயம் போன்று உயர்ந்தவை; நமது கனவுகள் எண்ணற்ற நட்சத்திரங்களை விட அதிகமானவை. ஆனாலும் நமது துணிச்சலின் பாய்ச்சலை வானத்தாலும் தடுக்க முடியாது என்பதை நாம் அறிவோம். இதுவே நமது உறுதி. இந்தியப் பெருங்கடலைப் போன்றே நமது ஆற்றலும் அளவிட முடியாதது. நமது முயற்சிகள் கங்கையைப் போன்று புனிதமானவை; தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கும். அனைத்துக்கும் மேலாய், நமது பண்டைய பண்பாட்டில் இருந்து, நமது துறவிகள், ஞானிகளிடம் இருந்து நமது விழுமியங்கள் உத்வேகம் பெறுகின்றன. நம் நாட்டு மக்கள் செய்த தியாகம் மற்றும் கடின உழைப்பே, நமக்கு உத்வேகம் தருகிறது.

வாருங்கள். இந்த உயரிய லட்சியங்களை உறுதிகளை மனதில் கொண்டு புதிய இந்தியாவை நிர்மாணிக்க தொடர்ந்து முன்னேறுவோம். புதிய நம்பிக்கையுடன் நமது பொறுப்புகளை நிறைவேற்றி புதிய இந்தியாவை நிர்மாணிப்பதே நமது மந்திரம் ஆகும். இந்த ஒற்றை இலக்குடன் நாம் அனைவரும் இணைந்து தேசத்தை முன்னேற்றுவோம். இந்த தேசத்துக்காகவே வாழ்ந்த பாடுபட்ட உயிர் நீத்த அனைவரையும் மீண்டும் ஒருமுறை வணங்குகிறேன். ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்... பாரத் மாதா கி ஜே! பாரத் மாதா கி ஜே! வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(தொடருவோம்...)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 72 - ‘விண்ணைத் தாண்டி உயரும் நேரம்!’ | 2018

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x