Published : 25 Apr 2024 05:18 PM
Last Updated : 25 Apr 2024 05:18 PM

செங்கோட்டை முழக்கங்கள் 71 -  ‘ஒரு தவறு செய்தால்… அதைத் தெரிந்து செய்தால்...’ | 2017

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி – உலகில் மிகவும் மதிக்கப்படும் அரசியல் தலைவராக உயர்ந்து நிற்கிறார். இதற்கு முக்கிய காரணம் – அரசுத் திட்டங்களைத் திறம்பட மக்களுக்கு எடுத்துச் செல்வதில் அவர் காட்டும் தீவிரம். இத்துடன் இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டன; பொருளாதாரக் குற்றங்களைக் களைவதில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முனைப்பு காட்டப்பட்டது. புலனாய்வு அமைப்புகளின் செயல்பாடுகளின் மீது மக்களுக்கு மிகுந்த ஆர்வமும் நம்பிக்கையும் ஏற்படத் தொடங்கியது இந்தக் காலத்தில்தான். தனிப்பட்ட முறையில் பிரதமர் காட்டிய கண்டிப்பும் மனவுறுதியும் ஊழல், முறைகேடுகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க ஊக்கம் தந்தது. மிக நிச்சயமாக, தவறு செய்வோர் சட்டப்படி தண்டனைக்கு உள்ளாவார்கள் என்கிற செய்தி எல்லாத் தரப்பினருக்கும் சென்று சேர்ந்தது இப்போதுதான்.

2017 ஆகஸ்ட் 15 அன்று நான்காவது முறையாக டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் முழு வடிவம் இதோ: என் அன்பான சக குடிமக்களே சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து வாழ்த்துக்கள். இன்று சுதந்திர தினத்துடன், ஜென்மாஷ்டமி (ஸ்ரீகிருஷ்ணர் பிறப்பு) நாளையும் நாடு கொண்டாடுகிறது. நான் இங்கு, ‘பால் கனஹியாக்களை’ (வேடமணிந்த சிறுவர்கள்) பார்க்கிறேன். சுதர்சன சக்ரதாரி மோகன் (ஸ்ரீகிருஷ்ணர்) முதல் ‘சர்க்க’தாரி மோகன் (‘சர்க்கா’நூற்ற மகாத்மா காந்தி) வரை நம்மிடையே இருப்பது, கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியத்தில் நாம் பெற்றுள்ள அதிர்ஷ்டம்.

செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து 125 கோடி நாட்டு மக்களின் சார்பாக, நாட்டின் சுதந்திரம், பெருமை மற்றும் பெருமைக்காக, பெரும் துன்பங்களுக்கு ஆளான, உயிர் தியாகம் செய்த ஆண், பெண் அனைவருக்கும் தலைவணங்கி மரியாதை செலுத்துகிறேன். சில நேரங்களில், இயற்கை சீற்றங்கள் நமக்கு பெரும் சவாலாக இருக்கும். ஒரு நல்ல பருவமழை நாட்டின் செழிப்புக்குப் பெரிதும் உதவுகிறது. இருப்பினும், பருவநிலை மாற்றத்தால், சில நேரங்களில் இது இயற்கைப் பேரிடராக மாறும். நாட்டின் பல பகுதிகள் சமீபகாலமாக இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டன. தவிர, அப்பாவிக் குழந்தைகள் பலர் மருத்துவமனையில் உயிர் இழந்தனர். நமது 125 கோடி நாட்டு மக்களும் இந்த நெருக்கடி மற்றும் துயரத்தில் அவர்களுடன் தோளோடு தோள் நிற்கிறார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில் அனைவரின் நல்வாழ்வையும் உறுதிசெய்ய எம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம் என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன்.

என் அன்பான நாட்டுமக்களே, இந்த ஆண்டு சுதந்திர இந்தியாவுக்கு, சிறப்பான ஆண்டாகும். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75 ஆண்டுகளை, கடந்த வாரம் நினைவு கூர்ந்தோம். இந்த ஆண்டு சம்பாரண் சத்தியாகிரகம் மற்றும் சபர்மதி ஆசிரமத்தின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடுகிறோம். லோகமான்ய திலகரின் “சுயராஜ்யம் என் பிறப்புரிமை” என்ற அழைப்பின் நூற்றாண்டு விழாவும் இந்த ஆண்டு வருகிறது. இந்த ஆண்டு ‘கணேஷ் உத்சவ்’ 125-வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது, இந்த விழா, கொண்டாட்டங்கள் மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இது நாட்டுக்கு நம்மை அர்ப்பணிக்கத் தூண்டுகிறது. 1942 முதல் 1947 வரை நாடு முழுவதும் குடிமக்களின் மனவுறுதி, கூட்டாகக் காணப்பட்டது, இது ஐந்து ஆண்டுகளுக்குள் ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேறக் கட்டாயப் படுத்தியது. சுதந்திரத்தின் 70-வது ஆண்டில் இருந்து சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டான 2022 வரை அதே உறுதியை நாம் வெளிப்படுத்த வேண்டும்.

நாம் சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டை எட்டுவதற்கு இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளன. நமது மகத்தான தேசபக்தர்களின் நினைவுகளை நினைவுகூர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும். நமது ஒற்றுமை, வலிமை மற்றும் உறுதிப்பாடு 2022 ஆம் ஆண்டுக்குள் அவர்கள் கனவு கண்ட இந்தியாவைக் கட்டமைக்க உதவும். எனவே, புதிய இந்தியாவை உருவாக்க உறுதியுடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

நமது 125 கோடி குடிமக்களின் கூட்டு உறுதி, கடின உழைப்பு, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் சக்தியை நாம் அறிவோம். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அபரிமிதமான சக்தி வாய்ந்தவர், ஆனால் பால்காரர்கள் அவருக்கு ஆதரவாக குச்சிகளுடன் வெளியே வந்தபோதுதான் அவரால் கோவர்த்தன மலையைத் உயர்த்த முடிந்தது. ராமர் இலங்கைக்கு செல்ல வேண்டியிருந்தபோது, வானர சேனை அவருக்கு உதவியாக வந்தது, ராமசேது கட்டப்பட்டது, ராமரால் இலங்கையை அடைய முடிந்தது. பின்னர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, பருத்தி மற்றும் நூற்பு சக்கரத்தால் சுதந்திரத்தின் துணியை நெய்ய தனது நாட்டு மக்களுக்கு அதிகாரம் அளித்தார்.

மக்களின் கூட்டு உறுதியும் பலமும் நம் நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தது. சிறியவர் அல்லது பெரியவர் என்று யாரும் இல்லை. மாற்றத்தின் முகவராக மாறிய அணில் கதை நம் நினைவில் உள்ளது. அதனால்தான் 1.25 பில்லியன் மக்களில் எவரும் சிறியவர் அல்லது பெரியவர் அல்ல - அனைவரும் சமம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் ஒவ்வொருவரும், அவர் எங்கிருந்தாலும், ஒரு புதிய உறுதியுடன், ஒரு புதிய ஆற்றலுடன், புதிய பலத்துடன் பாடுபட்டால், 2022-ல், சுதந்திரம் அடைந்த 75வது ஆண்டில், நமது கூட்டு பலத்தால் நாட்டின் முகத்தை மாற்ற முடியும். புதிய இந்தியா - பாதுகாப்பான, வளமான மற்றும் வலுவான தேசமாக இருக்கும். அனைவருக்கும் சம வாய்ப்புள்ள புதிய இந்தியா. உலக அரங்கில் தேசத்துக்குப் பெருமை சேர்ப்பதில் நவீன அறிவியல் தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது.

நமது சுதந்திர இயக்கம் நமது உணர்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர், நிலத்தை உழும் விவசாயி, உழைக்கும் கூலித் தொழிலாளி என அனைவருமே தம் மனதுக்குள் அறிந்து வைத்திருந்தார்கள் - தாம் எதைச் செய்தாலும் அது, நாட்டின் சுதந்திரத்தை நோக்கியதே. இந்த எண்ணம் ஒரு பெரிய பலம். குடும்பத்தில், தினமும் உணவு தயாரிக்கப்படுகிறது, ஆனால் அதனை தெய்வத்துக்கு சமர்ப்பித்தால் மட்டுமே 'பிரசாதமாக' மாறும்.

நாம் உழைக்கிறோம். பாரத அன்னையின் பெருமைக்காகவும், பாரத அன்னையின் தெய்வீகத்துக்காகவும் உழைக்க வேண்டும் என்ற எண்ணத்தில், நம் நாட்டு மக்களை வறுமையில் இருந்து விடுவிப்பதற்காக, அதைச் செய்தால், நமது சமூகக் கட்டமைப்பை சரியாக நெய்யச் செய்தால், தேசத்தின் மீதான உணர்வுடன் நமது கடமைகளைச் செய்தால், தேச பக்தி உணர்வோடு செய்தால், நாட்டுக்காக அர்ப்பணித்து நமது வேலையைச் செய்தால், சாதனைகள் மேலும் அதிகமாகும். இந்த உணர்வோடு நாம் முன்னேற வேண்டும்.

ஜனவரி 1, 2018 ஒரு சாதாரண நாளாக இருக்காது - இந்த நூற்றாண்டில் பிறந்தவர்களுக்கு 18 வயதாகத் தொடங்கும். அவர்களுக்கு அது அவர்களின் வாழ்க்கையின் தீர்க்கமான ஆண்டு. 21 ஆம் நூற்றாண்டில் நம் தேசத்,தின் விதியை (பாக்ய விதாதா) உருவாக்குபவர்களாக அவர்கள் இருக்கப் போகிறார்கள் . இந்த இளைஞர்கள் அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன், அவர்களைக் கவுரவித்து, அவர்களுக்கு என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் நாட்டின் தலைவிதியை வடிவமைக்க உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது. ஒரு பெருமைமிக்க தேசம் அதன் வளர்ச்சிப் பயணத்தின் ஒரு பகுதியாக உங்களை அழைக்கிறது.

என் அன்பான நாட்டு மக்களே, குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அர்ஜுனன் கிருஷ்ணரிடம் நிறைய கேள்விகளை எழுப்பியபோது, கிருஷ்ணர் அர்ஜுனனிடம் உங்கள் சிந்தனை மற்றும் நம்பிக்கைகளின்படி இலக்குகளை அடையுங்கள் என்று கூறினார். நம்மிடம் வலுவான உறுதி உள்ளது, ஒளிமயமான இந்தியாவுக்காக நாம் உறுதியாக இருக்கிறோம். நம்பிக்கையற்ற நிலையில் வளர்ந்த நாம், விரக்தியின் உணர்வை நிராகரிக்க வேண்டும், நம்பிக்கையுடன் முன்னேற வேண்டும்.

இந்த 'சல்தா ஹை' (இருந்துவிட்டுப் போகடும்) மனோபாவத்தை விட்டுவிட வேண்டும். 'பாதல் சக்தா ஹை' (மாற்றங்கள் நிகழ்கின்றன) என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஒரு தேசமாக, இந்த அணுகுமுறை நமக்கு உதவும். தியாகம், கடின உழைப்பு, எதையாவது செய்ய வேண்டும் என்ற உறுதியுடன், தேவையான வளங்களையும், அதைச் செய்வதற்கான திறனையும் பெறுவோம், பின்னர் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும், மேலும் நமது உறுதியானது சாதனையாக மாறும் என்ற நம்பிக்கை நமக்கு இருக்க வேண்டும்.

சகோதர சகோதரிகளே, நாட்டு மக்கள், பாதுகாப்பு பற்றி நினைப்பது இயல்பு. நமது நாடு, நமது ராணுவம், துணிச்சல் உள்ளவர்கள், சீருடை அணிந்தவர்கள், ராணுவம்,
விமானப்படை, கடற்படை என எந்தப் படையாக இருந்தாலும் சரி, அனைத்து சீருடை அணிந்த படைகளும், அழைக்கப்பட்ட போதெல்லாம், தங்கள் வீரத்தை வெளிப்படுத்தினர். துணிச்சல் மிக்க இதயங்களே நமது வலிமை. உயர்ந்த தியாகம் செய்வதில் ஒருபோதும் இவர்கள் பின்வாங்குவதில்லை. இடதுசாரித் தீவிரவாதமாக இருந்தாலும், பயங்கரவாதமாக இருந்தாலும், ஊடுருவல்காரர்களாக இருந்தாலும், நமது நாட்டுக்குள் பிரச்சினைகளைத் தூண்டும் கூறுகளாக இருந்தாலும் சரி- இவர்களுக்கு எதிராக நமது நாட்டின் சீருடை அணிந்த படைகள் தீவிர தியாகங்களைச் செய்துள்ளன. சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தப்பட்டபோது, இந்தியாவின் திறனையும் வலிமையையும் உலகமே ஒப்புக்கொண்டது.

என் அன்பான நாட்டு மக்களே, இந்தியாவின் பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை. நமது கடற்கரையோரமாக இருந்தாலும், நமது எல்லைகளாக இருந்தாலும், விண்வெளியாக இருந்தாலும், அல்லது சைபர்ஸ்பேஸாக இருந்தாலும், இந்தியா தனது சொந்தப் பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் கொண்டது; நாட்டுக்கு எதிரான எந்த அச்சுறுத்தலையும் தடுகத்து நிறுத்தும் வலிமைகொண்டது. .

என் அன்பு நாட்டு மக்களே, தேசத்தைக் கொள்ளையடித்த, ஏழைகளைக் கொள்ளையடித்த நபர்களால் இன்று நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. இதன் காரணமாக, உழைப்பாளி மற்றும் நேர்மையான நபரின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. ஒரு நேர்மையான மனிதன் இப்போது தன் நேர்மை முக்கியம் என்று உணர்கிறான். இன்று நேர்மையின் திருவிழாவாகக் கொண்டாடுகிறோம், நேர்மையின்மைக்கு இங்கே இடமில்லை. இது நமக்குப் புதிய நம்பிக்கை அளிக்கிறது.

பினாமி சொத்துக்கு எதிரான சட்டம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டது. தற்போது பினாமி சொத்துக்கு எதிரான சட்டம் கொண்டு வந்துள்ளோம். குறுகிய காலத்தில் ரூ.800 கோடிக்கு மேல் பினாமி சொத்துகளை அரசு பறிமுதல் செய்துள்ளது. இவை நடக்கும்போது, நாடு நேர்மையானவர்க்கானது என்ற நம்பிக்கை சாமானியனுக்குத் தோன்றுகிறது. நமது பாதுகாப்புப் படைகளுக்கான 'ஒரே பதவி - ஒரே ஓய்வூதியம்' கொள்கை 30-40 ஆண்டுகளாக முடக்கப்பட்டது. அதை எங்கள் அரசு செயல்படுத்தியது. நமது வீரர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் போது, அவர்களின் மனவுறுதி, தேசத்தைப் பாதுகாப்பதற்கான உறுதி பன்மடங்கு உயரும்.

நாட்டில் மத்திய அரசும் மாநில அரசுகள் பலவும் உள்ளன. ஜிஎஸ்டி -கூட்டாட்சி உணர்வைக் காட்டியுள்ளது; கூட்டாட்சிக்கு ஒரு புதிய பலத்தை அளித்துள்ளது. ஜி.எஸ்.டி.யின் வெற்றிக்குக் காரணம், அதை வெற்றியடையச் செய்யும் கடின உழைப்புதான். தொழில்நுட்பம் அதை ஒரு அதிசயம் போல் ஆக்கியுள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் ஜிஎஸ்டியை எப்படி அமல்படுத்த முடிந்தது என்று உலக சமூகம் வியப்பில் உள்ளது. இது நமது திறமையின் பிரதிபலிப்பாக எதிர்கால சந்ததியினரின் நம்பிக்கையை வளர்க்க உதவுகிறது.

புதிய அமைப்புகள் உருவாகி வருகின்றன. இன்று இரண்டு மடங்கு வேகத்தில் சாலைகள் அமைக்கப்படுகின்றன. இரயில் தண்டவாளங்கள் இரட்டிப்பு வேகத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. சுதந்திரம் அடைந்த பிறகும் இதுவரை இருளில் மூழ்கியிருந்த 14,000-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. 29 கோடி பேருக்கு வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன; 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் மண் ஆரோக்கிய அட்டை பெற்றுள்ளனர். 2 கோடிக்கும் அதிகமான ஏழைத் தாய்மார்கள், சகோதரிகள் இப்போது எரிபொருளைப் பயன்படுத்துவதில்லை; எல்பிஜி எரிவாயு அடுப்பைப் பயன்படுத்துகின்றனர். ஏழைப் பழங்குடியினர், இந்த அமைப்பின் மீது நம்பிக்கை பெற்றுள்ளனர். வளர்ச்சியின் கடைக் கோடியில் இருக்கும் நபர் இப்போது பிரதான நீரோட்டத்தில் இணைகிறார், தேசம் முன்னேறி வருகிறது.

இளைஞர்களுக்கு சுயவேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் தரவேண்டி இல்லாமல், 8 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வழங்கப்பட்டுள்ளது. வங்கிக் கடனுக்கான வட்டி குறைக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டைக் கட்ட விரும்பினால், அவருக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இதன் மூலம் நாடு முன்னேறி வருகிறது. இந்த இயக்கத்தில் மக்கள் (தாமாக) இணைகிறார்கள்.

காலம் மாறிவிட்டது. நேர்காணல் (இன்டர்வியூ) செயல்முறையை ரத்து செய்வது போல, சொல்வது அனைத்தையும் செயல்படுத்த, அரசாங்கம் உறுதியாக உள்ளது.
தொழிலாளர் துறையில் மட்டும், ஒரு சிறு தொழிலதிபர் கூட 50 - 60 படிவங்களை நிரப்ப வேண்டியிருந்தது, ஆனால் இப்போது அதை 5 - 6 படிவங்களாகக் குறைத்து, எளிமையானதாய் மாற்றியுள்ளோம். நல்லாட்சிக்கான இதுபோன்ற பல நிகழ்வுகளை என்னால் வழங்க முடியும். இதை மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் விரைவான முடிவெடுப்பதை அமல்படுத்தியுள்ளோம். அதனால்தான் 125 கோடி நாட்டு மக்கள், நமது ஆட்சியில் நம்பிக்கை வைக்க முடிகிறது.

அன்புள்ள நாட்டுமக்களே, இந்தியா இன்று உலக அளவில் உயர்ந்து நிற்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான எங்கள் போராட்டத்தில் நாம் தனியாக இல்லை என்பதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். பல நாடுகள் நமக்கு ஆதரவளித்து வருகின்றன. ஹவாலா அல்லது பயங்கரவாதம் தொடர்பான உள்ளீடுகள் எதுவாக இருந்தாலும், உலகளாவிய சமூகம் முக்கியமான தகவல்களுடன் நமக்கு ஆதரவளிக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தில் மற்ற நாடுகளுடன் கைகோர்த்துள்ளோம். நம்முடன் ஒற்றுமையாக நின்று நமது திறமையை அங்கீகரிக்கும் அனைத்து நாடுகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜம்மு & காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், அதன் செழிப்பு மற்றும் குடிமக்களின் ஆசைகளை நிறைவேற்ற, ஜம்மு & காஷ்மீர் அரசுக்கு மட்டுமல்ல, குடிமக்களாகிய நமக்கும் பொறுப்பு உள்ளது. மாநிலத்தை அதன் முந்தைய பெருமைக்கு மீட்டெடுக்க நாம் உறுதி பூண்டுள்ளோம், இதனால் அது, இழந்த சொர்க்கத்தை மீண்டும் அனுபவிக்க முடியும்.

காஷ்மீர் விவகாரத்தில் பேச்சும், அரசியலும் உள்ளது. ஆனால், ஒரு சிலரால் பரப்பப்படும் பிரிவினைவாதத்துக்கு எதிரான போரில் எப்படி வெற்றி பெறுவது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். துஷ்பிரயோகம் அல்லது தோட்டாக்கள் மூலம் பிரச்சினையைத் தீர்க்க முடியாது. அனைத்து காஷ்மீரிகளையும் அரவணைப்பதன் மூலம் தீர்க்க முடியும். 125 கோடி இந்தியர்களின் பாரம்பரியம் அதுதான். இந்த உறுதியுடன் நாம் முன்னேறி வருகிறோம். தீவிரவாதத்துக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். பயங்கரவாதம் அல்லது பயங்கரவாதிகளிடம் மென்மையாக இருப்பது என்ற கேள்விக்கே இடமில்லை. தீவிரவாதிகளைப் பிரதான நீரோட்டத்தில் இணையுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்.

ஜனநாயகம் அனைவருக்கும் சமமான வாய்ப்பையும் உரிமைகளையும் வழங்குகிறது. அவர்கள் பிரதான நீரோட்டத்தில் இணைவதன் மூலம் மட்டுமே பேச்சுவார்த்தையை முன்கொண்டு செல்ல முடியும். இந்த மண்டலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்களை சரணடையச் செய்து பிரதான நீரோட்டத்தில் இணைத்து இடதுசாரித் தீவிரவாதத்தைத் தடுத்ததில் பாதுகாப்புப் படைகள் ஆற்றிய பணிகளை நான் மிகவும் பாராட்டுகிறேன்.

நமது எல்லையில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ’கேலண்ட்ரி’ வீரதீர விருது வென்றவர்களின் வீரத்தைப் பற்றி அறிய இந்திய அரசு இன்று ஒரு இணையதளத்தை அறிமுகப்படுத்துகிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். தேசத்துக்குப் பெருமை சேர்த்த இந்த துணிச்சலான இதயங்களின் முழு விவரங்களையும் வழங்கும் நோக்கத்துடன் ஒரு ‘போர்டல்’ தளம் தொடங்கப்படுகிறது. இவர்களின் தியாகக் கதை நிச்சயமாக இளைய தலைமுறையினரை ஊக்குவிக்கும்.

தொழில்நுட்ப உதவியுடன், நாட்டில் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த முயற்சிக்கிறோம். கருப்புப் பணத்துக்கு எதிரான நமது போராட்டம் தொடரும்; ஊழலுக்கு எதிரான நமது போராட்டம் தொடரும். தொழில்நுட்பத்தின் உதவியுடன், மெதுவாக கணினியோடு ஆதாரை இணைக்க முயற்சிக்கிறோம். அமைப்பில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்துவதில் நாம் வெற்றி பெற்று வருகிறோம். உலகெங்கும் உள்ள மக்கள் இந்த மாதிரியைப் பாராட்டியுள்ளனர்; மற்றும் கற்றுக் கொள்கின்றனர். பல்லாயிரம் கிலோமீட்டர் தொலைவில் வசிக்கும் ஒரு சாமானியர் இப்போது தனது தயாரிப்புகளை அரசாங்கத்துக்கு வழங்க முடியும். இடைத்தரகர் தேவையில்லை. "GEM" என்ற போர்ட்டலைத் தொடங்கியுள்ளோம். இந்த போர்டல் மூலம் அரசு கொள்முதல் செய்கிறது. பல்வேறு நிலைகளில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.

சகோதர சகோதரிகளே, திட்டங்களைச் செயல்படுத்துவதுவதில் அரசு வேகமெடுத்து வருகிறது. ஒரு வேலை தாமதமாகும்போது, அந்தத் திட்டம் மட்டும் தாமதமாகாது. இது பணம் செலவழிக்கும் விஷயம் மட்டுமே அல்ல. ஒரு திட்டம் முடங்கினால், மிகவும் பாதிக்கப்படுவது ஏழைக் குடும்பங்கள்தாம். 9 மாதங்களுக்குள் செவ்வாய் கிரகத்தை அடையலாம்; நம்மால் அடைய முடியும். ஒவ்வொரு மாதமும் அரசின் திட்டங்களை மதிப்பாய்வு செய்கிறேன். ஒரு குறிப்பிட்ட திட்டம் என் கவனத்துக்கு வந்தது. இது 42 ஆண்டுகள் பழமையான திட்டம். 70 - 72 கிலோ மீட்டர் ரயில் பாதைகள் அமைக்கப்பட இருந்த நிலையில், கடந்த 42 ஆண்டுகளாக இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

சகோதர சகோதரிகளே, 9 மாதங்களுக்குள் செவ்வாய் கிரகத்தை அடையும் திறன் கொண்ட ஒரு நாடு, 42 ஆண்டுகளாக 70 - 72 கிலோ மீட்டர் ரயில் பாதைகளை அமைக்க முடியாமல் போனது எப்படி? இது ஏழைகளின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவற்றையெல்லாம் நாம் கவனித்து வந்துள்ளோம். தொழில்நுட்பத்தின் மூலம் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். புவி - தொழில்நுட்பமாக இருந்தாலும், விண்வெளி - தொழில்நுட்பமாக இருந்தாலும், மாற்றத்தைக் கொண்டு வர இந்தத் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் இணைக்க முயற்சித்தோம்.

யூரியா மற்றும் மண்ணெண்ணெய்க்காக மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பதற்றம் நிலவிய காலகட்டம் இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள். மத்திய அரசு மூத்த சகோதரனைப் போலவும், மாநிலங்கள் இளைய சகோதரர்களாகவும் கருதப்பட்டன. நான் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்தேன், நாட்டின் வளர்ச்சியில் மாநிலங்களின் முக்கியத்துவம் எனக்குத் தெரியும். முதலமைச்சர்கள் மற்றும் மாநில அரசுகளின் முக்கியத்துவம் எனக்குத் தெரியும். எனவே, கூட்டுறவு, கூட்டாட்சி முறைக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். இப்போது நாம் ஒரு போட்டி கூட்டுறவு கூட்டாட்சியை நோக்கி நகர்கிறோம். நாங்கள் எல்லா முடிவுகளையும் ஒன்றாகச் செய்கிறோம் என்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

நமது பிரதமர் ஒருவர் செங்கோட்டைக் கொத்தளத்தில் இருந்து ஆற்றிய உரையில் நாட்டின் மின்விநியோக நிறுவனங்களின் மோசமான நிலை குறித்து பேசியது நினைவிருக்கலாம். இந்த விவகாரம் குறித்து அவர் தனது கவலையை தெரிவித்தார். இன்று "உதய்" யோஜனா மூலம், இந்த மின் நிறுவனங்கள் உடனான பிரச்சினைகளைத் தீர்க்க ஒன்றாக வேலை செய்துள்ளோம். இது, உண்மையான அர்த்தத்தில் கூட்டாட்சிக்கு ஓர் உறுதியான எடுத்துக்காட்டு. ஜிஎஸ்டியாக இருந்தாலும், ஸ்மார்ட் சிட்டி திட்டமாக இருந்தாலும், தூய்மை இந்தியா இயக்கமாக இருந்தாலும், கழிவறைகள் கட்டுவதானாலும், எளிதாகத் தொழில் செய்வதாக இருந்தாலும், இவை அனைத்தும் மாநிலங்களுடன் தோளோடு தோள் சேர்ந்து செயல்படுவதன் மூலமே நிறைவேறுகிறது.

என் அன்பான சக நாட்டு மக்களே, புதிய இந்தியாவில் ஜனநாயகம்தான் மிகப்பெரிய பலம். ஆனால் நாம் நமது ஜனநாயகத்தை வெறும் வாக்குப் பெட்டிகளாக மாற்றிவிட்டோம். ஆனால், ஜனநாயகம் என்பது வாக்குப் பெட்டிகளில் மட்டும் நின்றுவிட முடியாது. எனவே, மக்களை அமைப்பு முறை இயக்குவதாய் அல்லாமல், அமைப்பு முறையை மக்கள் இயக்குவதாய் இருக்கும் ஜனநாயகத்தை காண்பதற்கு உறுதி பூண்டுள்ளோம். அத்தகைய ஜனநாயகம் புதிய இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும், அந்த திசையை நோக்கி நாம் செல்ல விரும்புகிறோம்.

லோகமான்ய திலக் "சுயராஜ்யம் என் பிறப்புரிமை" என்று கூறினார். சுதந்திர இந்தியாவில் நமது மந்திரம் ‘நல்லாட்சி எனது பிறப்புரிமை’ என்பதே. 'சுராஜா' அல்லது நல்லாட்சி, நமது கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும். குடிமக்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும், அரசாங்கமும் அதன் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

நாம் ‘ஸ்வராஜ்’இல் இருந்து ‘சுரஜ’வுக்கு மாறும்போது, குடிமக்கள் பின்தங்க மாட்டார்கள். உதாரணமாக, எரிவாயு மானியத்தைக் கைவிடுமாறு நாட்டு மக்களை நான் அழைத்தபோது, தேசம் ஒட்டுமொத்தமாக பதிலளித்தது. நான் தூய்மை பற்றிப் பேசினேன். இப்போது இந்த தூய்மை இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் மக்கள் கைகோர்த்து வருகின்றனர். பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானதும் உலகமே வியந்தது. இது மோடியின் முடிவு என்று மக்கள் நினைத்தனர். ஆனால், நமது 125 கோடி நாட்டு மக்களும் பொறுமை, நம்பிக்கையைக் காட்டிய விதத்தில் ஊழலுக்கு எதிரான நமது உந்துதலில், ஒன்றன் பின் ஒன்றாக, முன்னேற முடிந்தது. மக்கள் பங்கேற்பு என்ற புதிய நடைமுறையின் மூலம், மக்கள் ஈடுபாட்டுடன் நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான நமது முயற்சி, நமது இலக்கை அடைய உதவும்.

என் அன்பான சக நாட்டு மக்களே, லால் பகதூர் சாஸ்திரி "ஜெய் ஜவான் ஜெய் கிசான்" என்ற முழக்கத்தை வழங்கினார். அதன்பிறகு நம் விவசாயிகள் திரும்பிப் பார்க்கவில்லை. இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டாலும் அவர்கள் இப்போது சாதனையளவு அறுவடை செய்து புதிய உயரங்களை எட்டி வருகின்றனர். இந்த ஆண்டு துவரம் பருப்பு உற்பத்தி, சாதனை படைத்துள்ளது.

என் அன்பு சகோதர சகோதரிகளே, பருப்பு வகைகளை இறக்குமதி செய்யும் பாரம்பரியம் இந்தியாவில் இருந்ததில்லை, அரிதான சந்தர்ப்பங்களில் இறக்குமதி செய்ய வேண்டும் என்றால், அது சில ஆயிரம் டன்கள் மட்டுமே. இந்த ஆண்டு ஏழைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதற்காக 16 லட்சம் டன் பருப்பு வகைகளை உற்பத்தி செய்தபோது, அவர்களின் விளைபொருட்களைக் கொள்முதல் செய்து, அவர்களை ஊக்குவிக்கும் வரலாற்று நடவடிக்கையை அரசு எடுத்தது.

பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா நமது விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு முன், வேறு பெயரில் இயங்கி வந்த இந்தத் திட்டம், 3.25 கோடி விவசாயிகளுக்கு மட்டுமே பயன்பட்டது. இப்போது மூன்று ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் மேலும் பல விவசாயிகள் அதன் வரம்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை விரைவில் 5.75 கோடியை எட்டப்போகிறது.

பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சாய் யோஜனா, விவசாயிகளின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. என் விவசாயிகளுக்குத் தண்ணீர் கிடைத்தால், அவர்கள் தங்கள் வயல்களில் வளமான விளைச்சலை வழங்க முடியும். அதனால்தான் கடந்த சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் இருந்து சில அறிவிப்புகளை வெளியிட்டிருந்தேன். அவற்றில், 21 திட்டங்களை நாம் முடித்துள்ளோம், மீதமுள்ள 50 திட்டங்கள் விரைவில் முடிக்கப்படும். 99 பெரிய திட்டங்களை முடிக்கத் தீர்மானித்துள்ளேன். அந்த 99 பெரிய திட்டங்களை 2019-க்கு முன் முடிப்பதன் மூலம், நமது உறுதிமொழியை நிறைவேற்றுவோம். விதைகளைக் கொள்முதல் செய்வதில் இருந்து, விளைபொருட்களை சந்தைக்குக் கொண்டு வருவது வரை, விவசாயியின் கரங்களைப் பற்றிக் கொண்டு இருப்போம். இல்லையேல் விவசாயிகளின் தற்போதைய நிலையை மாற்ற முடியாது. இதற்கு உள்கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலி தேவை.

ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள், பழங்கள், தானியங்கள் வீணாகின்றன. இந்த நிலையை மாற்றும் வகையில், உணவு பதப்படுத்துதல் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அரசு ஊக்குவித்துள்ளது. உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக இந்திய அரசு 'பிரதான் மந்திரி கிசான் சம்பதா யோஜனா' தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, விதைகளை வழங்குவது முதல் அவரது விளைபொருட்களை சந்தைப்படுத்துவது வரை விவசாயிகளின் பிடியை உறுதிசெய்யும் அமைப்புகள் ஏற்படுத்தப்படும். இத்தகைய ஏற்பாடுகள் நமது கோடிக்கணக்கான விவசாயிகளின் வாழ்வில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்.


தேவை மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களால், நம் நாட்டில் வேலைகளின் தன்மை மாறி வருகிறது. 21 ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப மனித வள மேம்பாட்டுக்காக வேலைவாய்ப்பு தொடர்பான திட்டங்களிலும், பயிற்சி அளிக்கப்படும் விதத்திலும் அரசு பல புதிய முயற்சிகளைத் தொடங்கியுள்ளது. இளைஞர்களுக்கு, பிணையில்லாக் கடன் வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். நமது இளைஞர்கள் சுதந்திரமாக மாற வேண்டும், அவருக்கு வேலை கிடைக்க வேண்டும், வேலைவாய்ப்பை வழங்குபவராக அவர்கள் மாற வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில், 'பிரதான்மந்திரி முத்ரா யோஜனா' லட்சக்கணக்கான மற்றும் மில்லியன் கணக்கான இளைஞர்கள் சுயசார்புடையவர்களாக மாற வழிவகுத்தது. அது மட்டுமின்றி, ஒரு இளைஞர், இரண்டு அல்லது மூன்று பேருக்கு வேலை வாய்ப்பு வழங்குபவராக மாறி வருகிறார்.

கல்வித் துறையில், பல்கலைக்கழகங்களை உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு, கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடுவதற்கான முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளோம். 20 பல்கலைக்கழகங்களிடம் அவர்களின் செயல்பாட்டை அவர்களே தீர்மானித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளோம். அவர்களின் செயல்பாட்டில் அரசு தலையிடாது. தவிர, அரசு ரூ.1,000 கோடி வரை நிதி வழங்கத் தயாராக உள்ளது. நமது நாட்டின் கல்வி நிறுவனங்கள் நிச்சயமாக வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். கடந்த மூன்று ஆண்டுகளில் நாம், 6 ஐஐடிகள், 7 புதிய ஐஐஎம்கள் மற்றும் 8 புதிய ஐஐஐடிகளை அமைத்துள்ளோம், மேலும், கல்வியை வேலை வாய்ப்புகளுடன் இணைப்பதற்கான அடித்தளத்தையும் செய்துள்ளோம்.

எனது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், குடும்பங்களில் உள்ள பெண்கள், அதிக அளவில் வேலை தேடுகிறார்கள். எனவே அவர்களுக்கு இரவு நேரத்திலும் வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக தொழிலாளர் சட்டங்களை சீர்திருத்த ஒரு மிக முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளோம். நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் நமது குடும்பத்தின் ஒருங்கிணைந்த அலகு ஆவார்கள்.. நமது எதிர்காலத்தை உருவாக்குவதில் அவர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதனால்தான் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பை முந்தைய 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்க முடிவு செய்துள்ளோம்.

பெண்கள் அதிகாரமளிக்கும் சூழலில், 'முத்தலாக்' காரணமாக மிகவும் கடினமான வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ள அந்த சகோதரிகளை நான் கவுரவிக்க விரும்புகிறேன். அவர்களுக்கு எந்த நிவாரணமும் இல்லை, மேலும் இதுபோன்ற 'முத்தலாக்' பாதிக்கப்பட்டவர்கள் நாட்டில் ஒரு பெரிய இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் நாட்டின் அறிவுஜீவி வர்க்கத்தின் மனசாட்சியை உலுக்கினர், நாட்டின் ஊடகங்களும் அவர்களுக்கு உதவியது மற்றும் நாட்டில் 'முத்தலாக்'க்கு எதிரான இயக்கம் தொடங்கப்பட்டது. 'முத்தலாக்'க்கு எதிராகப் போராடி வரும் இந்த இயக்கத்தைத் தொடங்கிய அந்த சகோதரிகளை நான் மனதாரப் பாராட்டுகிறேன், இந்தப் போராட்டத்தில் அவர்களுக்கு நாடு உதவும் என்று நான் நம்புகிறேன்.

இந்த உரிமையைப் பெறுவதற்கு, இந்த தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும், நாடு உதவும். இந்தியா அவர்களை முழுமையாக ஆதரிக்கும், மேலும் பெண்கள் அதிகாரம் பெறும் திசையில் இந்த மிக முக்கியமான பணியில் அவர்கள் இறுதியில் வெற்றியை அடைவார்கள்; இதில் நான் முழு நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

என் அன்பான நாட்டு மக்களே, சில நேரங்களில் நம்பிக்கையின் பெயரால், சிலர் பொறுமையின்மையால் சமூகக் கட்டமைப்பை அழிக்கிறார்கள். அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையால்தான் ஒரு நாடு ஆளப்படுகிறது. சாதிவெறி மற்றும் வகுப்புவாதவிஷம் நாட்டுக்கு ஒருபோதும் நன்மை செய்யாது. இது காந்தி மற்றும் புத்தரின் பூமி, அனைவரையும் அணைத்துக்கொண்டு நாம் முன்னேற வேண்டும். இது நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் ஒரு பகுதி. நாம் இதை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். மத நம்பிக்கையின் பெயரால் வன்முறையை அனுமதிக்க முடியாது.

மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு ஏதாவது நேர்ந்தால், மருத்துவமனை எரிக்கப் படுகிறது; ஏதேனும் விபத்து ஏற்பட்டால், வாகனங்கள் எரிக்கப்படுகின்றன; போராட்டம் நடத்துகிறார்கள், பொதுச் சொத்துக்கள் எரிக்கப்படுகின்றன; இவையெல்லாம் சுதந்திர இந்தியாவுக்காகவா நடத்தப்படுகின்றன? இது யாருடைய கலாச்சார மரபு? நமது கலாச்சார பாரம்பரியம் - 125 கோடி மக்களின் பாரம்பரியம். இது யாருடைய நம்பிக்கை? இது எங்கள் நம்பிக்கை, 125 கோடி மக்களின் நம்பிக்கை; அதனால்தான் இந்த நாட்டில் மதநம்பிக்கையின் பெயரால் வன்முறைப் பாதை ஒருபோதும் வெற்றிபெற முடியாது.

இதனை நாடு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. அந்தக் காலத்தில், நமது முழக்கம் - 'பாரத் சோடோ' என்று இருந்தது; ஆனால் இன்று..? 'பாரத் ஜோடோ' என்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் அழைத்துச் செல்ல வேண்டும். வளமான இந்தியாவை உருவாக்க, வலுவான பொருளாதாரம், சமச்சீர் வளர்ச்சி மற்றும் அடுத்த தலைமுறை உட்கட்டமைப்பு தேவை. அப்போதுதான் நாம் கனவு காணூம் இந்தியாவை நனவாக்க முடியும்.

சகோதர சகோதரிகளே, கடந்த மூன்று ஆண்டுகளில் எண்ணற்ற முடிவுகளை எடுத்துள்ளோம். சில கவனிக்கப்பட்டவை, மீதமுள்ளவை கவனிக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் ஒன்று முக்கியமானது - நீங்கள் பெரிய மாற்றங்களை நோக்கி நகரும்போது, தடைகளை சந்திக்க நேரிடும். ஆனால் இந்த அரசாங்கத்தின் செயற்பாட்டு முறையைப் பாருங்கள்; ரயில் நிலையத்தைக் கடந்து, பாதையை மாற்றும் போது, வேகத்தை 60ல் இருந்து 30 ஆக குறைக்க வேண்டும். பாதையை மாற்றும் போது ரயிலின் வேகம் குறைகிறது. வேகம் குறையாமல் முழு நாட்டையும் புதிய பாதையில் கொண்டு செல்ல முயற்சிக்கிறோம். வேகத்தைத் தக்கவைத்துள்ளோம்.

ஜிஎஸ்டி போன்ற பல புதிய சட்டங்கள் மற்றும் அமைப்புகளைக் கொண்டு வந்திருக்கலாம், ஆனாலும் நமது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளோம், மேலும் பணிகள் தொடர்கின்றன. உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். ஒரு சிறிய நகரத்தில் உள்ள ரயில் நிலையத்தை நவீனமயமாக்குதல், விமான நிலையம் கட்டுதல், நீர் வழிகள் அல்லது சாலைகளை விரிவுபடுத்துதல், எரிவாயு கட்டம் அல்லது நீர் கட்டம் அல்லது தரைமட்டமாக்குதல் போன்ற உள்கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு நிறைய நிதி முதலீடு செய்துள்ளோம். ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் உள்ளிட்ட அனைத்து வகை நவீன உட்கட்டமைப்புகளுக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

என் அன்பான நாட்டு மக்களே, 21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் முன்னோக்கிய நகர்வுக்கு கிழக்கு இந்தியாவின் செழிப்பு தேவை. இது மிகப்பெரிய ஆற்றல், வளமான மனித வளம், அபரிமிதமான இயற்கை செல்வம், உழைப்பு சக்தி மற்றும் வாழ்க்கையை மாற்றும் சக்தி கொண்டது. கிழக்கு இந்தியா - பீஹார், அசாம், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடகிழக்கு பகுதிகளில் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்துகிறோம். இந்தப் பகுதிகள் மேலும் வளர வேண்டும். இவை இயற்கை வளங்கள் ஏராளமாகக் கொண்டுள்ளன மற்றும் நாட்டைப் புதிய உயரத்துக்குக் கொண்டு செல்லக் கடுமையாகப் பாடுபடுகின்றன.

சகோதர சகோதரிகளே, ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவது ஒரு முக்கியமான பணியாகும், அதற்கு உத்வேகம் அளிக்க முயற்சிக்கிறோம். அரசு அமைத்த பிறகு, எங்கள் முதல் பணி எஸ்ஐடி அமைத்ததாகும். மூன்றாண்டுகளுக்குப் பிறகு இன்று நாட்டு மக்களுக்குப் பெருமையாகச் சொல்ல விரும்புகிறேன் - ரூ.1.25 லட்சம் கோடி மதிப்புள்ள கருப்புப் பணத்தைப் பறிமுதல் செய்துள்ளோம். குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சரணடைய கட்டாயப்படுத்தப்படுவார்கள்.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் பல மைல்கற்களை அடைந்துள்ளோம். மறைத்து வைக்கப்பட்ட கருப்புப் பணம், முறையான பொருளாதாரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. நாங்கள் 7 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை 15 நாட்கள் வரை நீட்டிப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்; சில சமயங்களில் பழைய கரன்சி நோட்டுகளை பெட்ரோல் பம்ப், கெமிஸ்ட் கடைகளில் மற்றும் சில சமயங்களில் ரயில் நிலையங்களில் அனுமதித்தோம், ஏனென்றால் எல்லாப் பணத்தையும் முறையான வங்கி முறைக்குள் கொண்டு வருவதே எங்கள் நோக்கம் இப்பணியை முடிப்பதில் வெற்றி அடைந்தோம். வெளிவல்லுநர்கள் நடத்திய ஆய்வின்படி, பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வங்கி அமைப்பில் இதுவரை வராத ரூ.3 லட்சம் கோடி கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், வங்கிகளில் 1.75 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. கருப்புப் பணம் ரூ. 2 லட்சம் கோடியை வங்கிகளில் டெபாசிட் செய்ய வேண்டியிருந்ததால், இந்த அமைப்பு கணக்குக் கேட்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது. கருப்புப் பணப்புழக்கத்தையும் தடுத்து நிறுத்தியுள்ளது. ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 5 வரை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்த புதிய வரி செலுத்துவோர் எண்ணிக்கை 56 லட்சமாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 22 லட்சம் பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.. ஒரு வகையில் இது இருமடங்காக அதிகரித்துள்ளது. கருப்புப் பணத்துக்கு எதிரான நமது போராட்டத்தின் விளைவு இது.

18 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களின் வருமானம் அவர்களின் அறிவிக்கப்பட்ட வருமானத்தை விட அதிகமாக உள்ளது, எனவே அவர்கள் இதைத் தெளிவுபடுத்த வேண்டும். சுமார் 4.5 லட்சம் பேர் இப்போது முன் வந்து தங்கள் தவறுகளை ஏற்று சரியான பாதையில் வர்த்தகம் செய்ய முயற்சிக்கின்றனர். வருமான வரி பற்றி கேள்விப்படாத, வருமான வரி கட்டாத ஒரு லட்சம் பேர், இப்போது அதைச் செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

சகோதர சகோதரிகளே, நம் நாட்டில், நிறுவனங்கள் மூடப்பட்டதைத் தொடர்ந்து முடிவில்லாத விவாதங்களில், உரையாடல்களில் ஈடுபடுகிறோம். பொருளாதாரச் சரிவு மற்றும் பலவற்றைப் பற்றி மக்கள் யூகமாகப் பேசுகிறார்கள். கருப்புச் சந்தையாளர்கள், போலி நிறுவனங்கள் (ஷெல் கம்பெனி) வைத்திருந்தனர் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு, 3 லட்சம் ஷெல் நிறுவனங்கள் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டு வருவதாக வரும் தரவுகள் வியக்க வைக்கின்றன. யாராவது கற்பனை செய்ய முடியுமா? இந்த 3 லட்சம் ஷெல் நிறுவனங்களில் 1.75 லட்சம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டது.

இந்தியாவில் ஐந்து நிறுவனங்கள் கடைகளை மூடிவிட்டாலும், பெரிய அளவில் மக்கள் எதிர்ப்பு கிளம்புகிறது. இங்கு, 1,75,000 நிறுவனங்களை மூடிவிட்டோம். நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடித்தவர்கள் பதில் சொல்ல வேண்டும். இந்தப் பணியை நிறைவேற்றியுள்ளோம். ஒரே முகவரியில் இயங்கும் சில ஷெல் நிறுவனங்கள் இருப்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஒரு முகவரியில் 400 நிறுவனங்கள் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களிடம் கேள்வி கேட்க யாரும் இல்லை. அவர்களுக்குள் ஒரு ‘கூட்டு’ இருந்தது. சகோதர சகோதரிகளே, ஊழலுக்கும் கருப்புப் பணத்துக்கும் எதிராக நான் மாபெரும் போரை நடத்தியுள்ளேன். இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்துக்காகவும் நமது மக்களின் நல்வாழ்வுக்காகவும் - ஊழலுக்கு எதிராகப் போராடுகிறோம்.

சகோதர சகோதரிகளே, நாங்கள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், ஜிஎஸ்டிக்குப் பிறகு, அது மேலும் அதிகரிக்கும்; வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரும் என்று உறுதியாக நம்புகிறேன். இன்று ஜிஎஸ்டி அறிமுகப் படுத்தப்பட்ட பிறகு ஒரு லாரி டிரக் டிரைவர் சராசரியாக ஒரு புள்ளியில் இருந்து மற்றொரு இடத்துக்குச் செல்ல, தனது பயண நேரத்தில் 30 சதவீதம் சேமிக்க முடிகிறது. சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டதால் பல நூறு கோடி ரூபாய் மிச்சம். இது அவரது செயல்திறனில் 30 சதவீதம் அதிகரிப்பு ஆகும். இந்தியப் போக்குவரத்துத் துறையில் 30 சதவீதம் அதிக செயல்திறனை அடைவதன் அர்த்தம் என்னவென்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? இந்த புரட்சிகரமான மாற்றத்தை ஜிஎஸ்டி கொண்டு வந்துள்ளது.

என் அன்பான நாட்டு மக்களே, இன்று பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் போதுமான பணப்புழக்கம் உள்ளது. வங்கிகள் வட்டி விகிதத்தைக் குறைத்து வருகின்றன. ஒரு சாமானியர் கூட முத்ரா மூலம் நிதியுதவிக்கு அணுக முடியும். என்றாவது ஒரு நாள் சொந்த வீடு வேண்டும் என்று ஆசைப்படும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர், வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் பெறுகின்றனர். இத்தகைய நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளன.

என் அன்பான நாட்டு மக்களே, காலம் மாறிவிட்டது. நாம் 21ஆம் நூற்றாண்டில் இருக்கிறோம். உலகிலேயே அதிக இளைஞர்களைக் கொண்ட நாடு என்ற பெருமையை நம் நாடு கொண்டுள்ளது. ஐடி மற்றும் டிஜிட்டல் உலகில் இந்தியா தனது திறமைக்காக உலகளவில் அறியப்படுகிறது. நாம் இன்னும் பழைய மனநிலையில் இருக்க வேண்டுமா? தோல் நாணயங்கள் நடைமுறையில் இருந்த ஒரு காலம் இருந்தது, ஆனால் படிப்படியாக அவை இல்லாமல் போய்விட்டன. இன்று நம்மிடம் காகித பணம்
உள்ளது. மெதுவாக இந்த காகித பணம் டிஜிட்டல் பணமாக மாற்றப்படும். டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நோக்கி நகர்வதற்கு முன்னோக்கி நடக்க வேண்டும். பரிவர்த்தனைகளுக்கு நாம் BHIM செயலியை ஏற்றுக்கொண்டு அதை நமது பொருளாதார நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும். ப்ரீபெய்ட் சிஸ்டம் மூலமாகவும் நாம் வேலை செய்ய வேண்டும். டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஆண்டை விட இது 34 சதவீதம் அதிகரித்துள்ளது அதே சமயம் ப்ரீபெய்டு பரிவர்த்தனைகள் 44 சதவீதம் அதிகரித்துள்ளது. குறைந்த பணப் பொருளாதாரத்தை நோக்கி நாம் செல்ல வேண்டும்.

என் அன்பான நாட்டுமக்களே, அரசின் சில திட்டங்கள் சாமானியர்களின் சேமிப்பை உறுதி செய்வதற்காகவே உள்ளன. எல்இடி பல்புகளைப் பயன்படுத்தினால் ஓராண்டுக்கு ரூ.2,000 முதல் ரூ. 5,000 வரை சேமிக்கலாம். தூய்மை இந்தியா இயக்கத்தில் நாம் வெற்றி பெற்றால், ஏழைகள் மருந்துக்காக ரூ. 7,000 செலவழிக்க வேண்டி வராது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், ஒரு வகையில் பணத்தைச் சேமிக்க மக்களுக்கு உதவியுள்ளது.

’ஜன் ஔஷதி கேந்திரா’ மக்கள் மருந்தகம் மூலம் மலிவான விலையில் மருந்துகள் கிடைப்பது - ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதம். ஆபரேஷன்கள் மற்றும் ஸ்டென்ட்களுக்கு அதிக செலவு இருந்தது. முழங்கால் ஆபரேஷன்களுக்கும் இதை சாத்தியமாக்க முயற்சி செய்து வருகிறோம். ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு இந்த செலவினத்தைக் குறைக்க முயற்சி செய்து வருகிறோம். முன்பு மாநிலத் தலைநகரங்களில் மட்டுமே டயாலிசிஸ் இருந்தது. இப்போது மாவட்ட அளவில் டயாலிசிஸ் மையங்களைத் திறக்க முடிவு செய்துள்ளோம். ஏழைகளுக்கு இலவச டயாலிசிஸ் சேவை கிடைக்கும். 350 முதல் 400 மாவட்டங்களில் இந்த வசதியை ஏற்கனவே திறந்துள்ளோம்.

உலகத்துக்குக் காட்டுவதற்காக பல்வேறு அமைப்புகளை உருவாக்கியிருப்பதில் நாம் பெருமை கொள்ளலாம். ஜிபிஎஸ் மூலம் 'NAVIC Navigation System' ஐ உருவாக்க முடிந்தது. சார்க் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி அண்டை நாடுகளுக்கு உதவி செய்துள்ளோம்.

தேஜாஸ் விமானத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் உலகில் நமது உன்னதத்தை நிலைநாட்டினோம். டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான BHIM ஆதார் ஆப் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. நாட்டில் இப்போது கோடிக்கணக்கான ரூபே கார்டுகள் கிடைக்கின்றன. அனைத்து கார்டுகளும் செயல்படும் போது, அது உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான அட்டைகளாக இருக்கும்.

என் அன்பான நாட்டுமக்களே, புதிய இந்தியா உறுதிமொழியை எடுத்துக் கொண்டு முன்னேறிச் செல்லுமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன். நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன, " அனியத் கால:, அனியத் கால: பிரபுத்யோ விபலவந்தே , பிரபுத்யோ விபலவந்தே ". குறிப்பிட்ட நேரத்துக்குள் நாம் ஒரு வேலையைச் செய்யவில்லை என்றால், நாம் விரும்பிய முடிவுகளைப் பெற முடியாது என்பதை இது குறிக்கிறது. எனவே 'டீம் இந்தியா'வுக்காக, 125 கோடி நாட்டு மக்களுக்கு, 2022-க்குள் இலக்கை அடைவதற்கான உறுதிமொழியை எடுக்க வேண்டும்.

2022-ம் ஆண்டுக்குள் சிறந்த, கம்பீரமான இந்தியாவைக் காண அர்ப்பணிப்போடு செயல்படுவோம். ஏழைகளுக்கு மின்சாரம், தண்ணீர் வசதியுடன் கூடிய நல்ல வீடு இருக்கும் இந்தியாவை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம். விவசாயிகள் கவலையின்றி உறங்கும் அத்தகைய இந்தியாவை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம். அவர்கள் இன்று சம்பாதிப்பதை விட 2022 க்குள் இரட்டிப்பாக சம்பாதிப்பார்கள். இளைஞர்கள், பெண்கள் தங்கள் கனவுகளை நனவாக்கப் போதுமான வாய்ப்புகள் உள்ள இந்தியாவை நாம் ஒன்றாகக் கட்டி எழுப்புவோம்.

தீவிரவாதம், வகுப்புவாதம், சாதிவெறி இல்லாத இந்தியாவை நாம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம். ஊழலுடனும், உறவுமுறையுடனும் யாரும் சமரசம் செய்து கொள்ளாத இந்தியாவை நாம் ஒன்றாகக் கட்டியெழுப்புவோம். சுராஜின் கனவு நனவாகும், தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் அத்தகைய இந்தியாவை நாம் ஒன்றாகக் கட்டியெழுப்புவோம். அதனால்தான் என் அன்பான சக நாட்டுமக்களே, இந்த வளர்ச்சியை நோக்கி முன்னேற நாம் ஒன்றாகப் பாடுபடுவோம்.

அடுத்த ஐந்தாண்டுகளில் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்து 75வது ஆண்டு சுதந்திரத்துக்காகக் காத்திருக்கும் நாம் அனைவரும் கம்பீரமான இந்தியாவைக் கட்டியெழுப்பும் கனவோடு அணிவகுப்போம். இந்த எண்ணத்தை மனதில் கொண்டு நமது சுதந்திரப் போராட்ட மாவீரர்களுக்கு முன் மீண்டும் தலை வணங்குகிறேன். எனது 125 கோடி நாட்டு மக்களின் புதிய நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் முன் நான் தலை வணங்குகிறேன், மேலும் இந்த புதிய உறுதிமொழியுடன் அணிவகுத்துச் செல்ல இந்திய அணிக்கு அழைப்பு விடுக்கிறேன். இந்த எண்ணத்துடன் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரத் மாதா கி ஜெய், வந்தே மாதரம், ஜெய் ஹிந்த். ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த், ஜெய் ஹிந்த். பாரத் மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய், பாரத் மாதா கி ஜெய், வந்தேமாதரம், வந்தேமாதரம், வந்தேமாதரம், வந்தேமாதரம், அனைவருக்கும் நன்றி.

(தொடர்வோம்...)

(முக்கிய குறிப்பு: 2017 முதல் பிரதமர் ஆற்றிய உரைகள், அதிகாரபூர்வமாக, தமிழிலும் வெளியிடப்பட்டு பொதுவெளியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தமிழாக்க வடிவம் அதன் அடிப்படையில், எளிமை, புரிதல் கருதி, ஆங்காங்கே சிறு திருத்தங்களுடன் தரப்படுகிறது. அரசின் பதிவுக்கும் நமது உரைக்கும் இடையே வேறுபாடு ஏதும் இருப்பின், அரசின் அதிகாரபூர்வ பதிவில் சொல்லப்பட்டதே இறுதியானது என்பதை கவனத்தில் கொள்ளவும்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x