Published : 13 Oct 2023 03:58 PM
Last Updated : 13 Oct 2023 03:58 PM

செங்கோட்டை முழக்கங்கள் 25 - ‘துப்பாக்கிக் குண்டு வலிமையில் ஒரு நாடு வளர்வதில்லை’ | 1971

இந்திய சுதந்திரத்தின் வெள்ளி விழா ஆண்டுத் தொடக்கம். செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி பிரதமர் இந்திரா காந்தி உரையாற்றினார். பாகுபாடுகளை அகற்றுவதில் அரசு வைராக்கியத்துடன் செயல்படுவதாகத் தெரிவித்த பிரதமர், சமூக சமமின்மையை அகற்றுவதில் மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார். நம்மில் ஒரு சிலர் அனுபவிக்கும் அதீத செல்வத்தின் பயன் இந்த நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்று வலியுறுத்தினார். 1971 ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் இருந்து பிரதமர் இந்திரா காந்தி ஆற்றிய உரை இதோ:

“நமது நாட்டு வரலாற்றில் ஆகஸ்ட் மாதத்துக்கு தனி சிறப்பு உண்டு. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் நம் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்த நாம் இங்கே கூடுகிறோம். இது வெறும் துணி அல்ல, நமது சுதந்திரத்தின் அடையாளம். நமது சுதந்திரத்துக்காக இன்னுயிர் ஈந்த மாபெரும் மனிதர்களின் அடையாளம். இன்றும் நமது நாட்டுக்காகத் தியாகம் செய்ய தயாராக இருப்போரின் அடையாளம்.

இங்கே செங்கோட்டையில் கூடியிருப்போர் மற்றும் விவசாய நிலங்களில் தொழிற்சாலைகளில் அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட ஏராளமானோர் கேட்கின்றனர் - நமது இலக்கை நோக்கிய பயணத்தில் இதுவரை நாம் எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்? இன்னும் எவ்வளவு தூரம் மிச்சம் இருக்கிறது? ஒரு நாட்டின் பயணம் முடிவு பெறுவதே இல்லை. நாம் எவ்வளவு முன்னேறினாலும் வளர்ச்சிக்கான பாதை நீண்டு கொண்டே செல்லும்.

கடந்த ஆண்டில் இந்த நாட்டில் பல நிகழ்வுகள் நடந்தன. நமது நாட்டைப் பற்றி, நாட்டு மக்களைப் பற்றி, உள்நாட்டிலும் வெளியிலும் (அவதூறு) பேசியவர்களின் கூற்று, பொய் என்ற நிருபித்த உங்களுக்கு நன்றி கூறுகிறேன். நமது மக்கள், தமது அதிகாரம், உரிமை குறித்து நன்கு அறிந்துள்ளார்கள்.

உலகின் மிகப் பெரிய தேர்தலில் நீங்கள் இதை நிரூபித்துள்ளீர்கள். இத்தனை பெரிய மக்கள் தொகை கொண்டு, பொதுத் தேர்தல் நடத்திய நாடு, வேறொன்று இல்லை. அச்சுறுத்தல், மோசமான வானிலை, உயிருக்கு ஆபத்து என்கிற நிலையிலும், நீங்கள் வாக்களிக்கத் தவறவில்லை. ஒரு தனி மனிதருக்கோ ஒரு கட்சிக்கோ நீங்கள் வாக்களிக்கவில்லை. நீங்கள் இந்த நாட்டுக்காக வாக்களித்தீர்கள். விவசாயிகளும் அழிந்த பிரிவினரும் இந்த தேசத்தின் சமூக வாழ்க்கையில் முக்கிய பங்காற்றுகின்றனர். கிராம வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நமது முயற்சியில் இவர்கள் முக்கிய பங்குதாரர்கள்.

நகர சொத்துகளுக்கு உச்சவரம்பு நிர்ணயிக்க திட்டம் வைத்துள்ளோம். ஒன்றன் பின் ஒன்றாக நமது திட்டங்களை அமல்படுத்த உறுதி கொண்டுள்ளோம். பொதுத் தேர்தலுக்குப் பிறகு, உங்கள் பிரதிநிதிகள் தில்லியில் கூடிய போது உங்களுக்கு நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. எங்களுக்கும்தான். நாம் விரைந்து முன்னேறி விடலாம் என்று கருதினோம். ஆனாலும் நாம் கற்பனையிலும் நினைத்திடாத ஒரு புதிய பிரசினை, நம் மீது சுமையாய் விழுந்தது. நமது மக்கள் ஏராளமான சுமைகளைத் தாங்கி இருக்கிறார்கள். இனியும் தாங்கப் போகிறார்கள். இளைஞரோ முதியவரோ, போர் வீரனோ சாதாரண குடிமகனோ.. நம் எல்லாரிடத்தும் உள்ளுக்குள் ஒரு சக்தி இருக்கிறது. இதைக் கொண்டு நமது இன்னல்களை முறியடித்து முன்னேறுவோம்.

சில விஷயங்கள் உங்களை சங்கடப்படுத்தி இருக்கிறது என்பதை நான் அறிவேன். அதேசமயம் நமது நம்பிக்கைகளுக்கு வலுவூட்டிய சில விஷயங்களும் நடந்திருக்கின்றன. ஒருவருக்கொருவர் உதவி செய்து பரஸ்பரம் சுமைகளை தாங்கி துணிச்சலுடன் இன்னல்களை நாம் எதிர்கொண்ட விதம், நமக்குப் பெருமித உணர்வைத் தருகிறது. நாம் வெளி உதவியை நாடுகிறோம். ஆனாலும் நமது காலில் நாம் நின்றாக வேண்டும்.

இந்திய குடிமக்களாகிய நாம், நம்முடைய உரிமைகள் மட்டுமன்றி, குரல் எழுப்ப முடியாத மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும். இது அரசின் கடமை மட்டுமன்று. ஒவ்வொரு குடிமகனின் கடமையும் கூட. பல நூற்றாண்டுகளாக இந்த சமுதாயத்தை பாதித்துள்ள சமவுரிமை, பாகுபாடுகளால் நாம் இன்னல் படுகிறோம். இந்த சமமின்மை, நமது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறது, நம்மை பலவீனமாக்குகிறது. பொருளாதாரப் பாகுபாடுகளை நீக்குவது அரசின் கடமை. ஆனால் சமூகப் பாகுபாடுகளை மக்களேதான் நீக்க வேண்டும். இந்தியாவை ஒருங்கிணைக்கிற வலிமையாக்குகிற மாபெரும் பொறுப்பு மக்களிடம் தான் இருக்கிறது.

கவலை தரும் மற்றொரு அம்சம், குறிப்பாகப் பெண்களுக்கு - விலைவாசி உயர்வு. விலைவாசி உயர்வு நம் எல்லோரையும் பாதிக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை குறைய வேண்டும் என்பதே நமது முயற்சி. விலை ஏன் ஏறுகிறது? பொருட்கள் வரத்து (சப்ளை) குறைவாக இருக்கும் போது விலை கூடுகிறது. புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் ஒரு பொருளுக்கு வரி விதிக்கும் போது, இதனுடன் தொடர்பே இல்லாத பிற பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது. இதை யார், ஏன் அதிகரிக்கிறார்கள்? உங்கள் பகுதியில் நீங்களே புலனாய்வு செய்து இது மாதிரி நடவாமல் பார்த்துக் கொள்ளுங்கள். விலைவாசி உயர்வாக இருந்தாலும் வேறு எந்த பிரசினையானாலும் ஒரு குடிமகனாக உங்களது பொறுப்பை நீங்கள் பரிசீலிக்க வேண்டும்.

உங்களுக்குத் தெரியும் - இந்த நாடு பல சவால்களை சந்தித்து இருக்கிறது. ஆனால் இன்று நான் சந்திக்கும் பிரச்சினை, இணை இல்லாதது. இதற்கு முன் வேறு எந்த நாடும் கண்டிராதது. மக்களுக்கு அவர்களது உரிமையை பெற்றுத் தர முயற்சிக்கிறோம். அதே வேளையில் இதற்கு எதிர்மாறாக எல்லையில் நடைபெறுகிறது. நாட்டில் வேறு எங்கும் போலவே அங்கும் தேர்தல் நடந்தது. அங்கும் மக்கள் பெருவாரியாக வந்து வாக்களித்தார்கள்.

ஆனாலும் அங்கே ஒரு துயர சம்பவம் நடந்தது. இதனால் சுமார் 75 லட்சம் பேர் காயமுற்றார்கள். தங்களுடைய உடைமைகளை விட்டுவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்கள். இடத்தை இழந்தவர்களுக்காக, இந்தியாவில் எப்போதும் கதவுகளைத் திறந்து வைத்துள்ளோம். இவர்கள் அகதிகள் அல்லர். நம் நாட்டின் மிக முக்கிய இயக்கத்தில் பங்குதாரர்கள். இது நமக்கே உரித்தான இயக்கம். மக்களின் உரிமைகளை பாதுகாக்க இது போன்ற இயக்கங்கள் உலகம் எங்கும் பல நாடுகளில் நிகழ்ந்துள்ளன. விலைகள் பற்றிப் பேசுகிறோம். தம்முடைய நாட்டின் சுதந்திரத்துக்காக பங்களாதேஷ் மக்கள் தர வேண்டி உள்ள விலையை நாம் அலட்சியப் படுத்தக் கூடாது.

பல பெரிய பிரசினைகளை நாம் மனதில் கொள்ள வேண்டும். இவற்றை மறைக்கவோ பாராமுகமாக இருக்கவோ கூடாது. இவற்றை நாம் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். அதே சமயம் இன்னும் பெரிய சவால்களையும் நாம் பரிசீலிக்க வேண்டும். நம்மைச் சுற்றியும் (நாடுகளில்) ஜனநாயகம் தோற்று விட்டது. பல நாடுகள் தம்முடைய அரசியல் சட்டங்களை ரத்து செய்து விட்டன. ஜனநாயகத்தில் நிலையாக காலூன்றி அரசமைப்பு சட்டத்துக்கு முழுமையாக பொருள் தந்து மக்களுக்கு நன்மை பயக்கும்படி பராமரிக்க எது உதவியது? இது நமது மரபு. இதை நாம் பாதுகாக்க வேண்டும். நமது சுதந்திரம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். நமது ஜனநாயக மரபு எல்லாக் காலத்திலும் காப்பாற்றப்பட வேண்டும்.

எல்லா மக்களையும் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்பதே நமது கொள்கை என்பதை அறிவீர்கள். நமது வெளியுறவுக் கொள்கையும் அப்படியே - அமைதிக்கான கொள்கை. நாம் போரை விரும்பவில்லை. பிறர் மனம் புண்படும் எந்த ஒரு முழக்கத்தையும் நாம் எழுப்ப மாட்டோம். ஏனெனில் நமது வலிமை நமது மக்களிடம் இருக்கிறது. சமூக நிலைமையை முன்னேற்றுவது, பொருளாதாரத்தை வலுவாக்குவது மற்றும் நாட்டுக்கு வலிமை சேர்ப்பது - இதில் அடங்கி இருக்கிறது நமது உண்மையான வலிமை. இதைத்தான் கடும் முயற்சி எடுத்து செய்து வருகிறோம். நாம் யாரையும் அச்சுறுத்துவதில்லை. எந்த அச்சுறுத்தலுக்கும் நாம் அஞ்சுவதும் இல்லை. எந்த அவசர நிலையையும் துணிச்சல், மன உறுதியுடன் இந்தியா எதிர்கொள்ளும்.

அன்னை இந்தியாவுக்கு மரியாதை செலுத்த கூடியிருக்கிறோம். எந்த சவாலையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் மரபில் வந்தவர்கள் நாம். இந்த உணர்வை நாம் எந்நாலும் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சரியான தருணத்தில் மழை சற்று நின்று இருக்கிறது. நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பொழிகிறது. சில இடங்களில் கடும் வறட்சி நிலவுகிறது, குடிக்கக்கூட தண்ணீர் கிடைக்கவில்லை. இருந்தும் வேளாண் உற்பத்தி குறையவில்லை. பருப்பு எண்ணெய் வித்துகளில் மட்டும் சரிவு இருக்கிறது. ஆனால் உணவு பொருட்களில் பற்றாக்குறை இல்லை. நமது நாட்டு மக்களை மட்டுமல்ல எல்லை தாண்டி வந்துள்ள மக்களையும் நாம் ஆதரித்து ஆக வேண்டும்.

பங்களாதேஷ் மற்றும் அதன் தலைவர் பற்றிய முழக்கங்கள் எழுப்பப் படுகின்றன. சுதந்திரத்தை விரும்பும் யாரும் இது விஷயத்தில் மௌனமாக இருக்க முடியாது. நாம் எந்த முடிவு எடுத்தாலும் அது நமக்கு வலிமை சேர்க்குமா இல்லையா என்பதை பார்க்க வேண்டும். சுதந்திரத்துக்காக பாடுபடும் மக்களுக்கு வலிமை சேர்க்கிறதா என்று பார்க்க வேண்டும். எங்கெல்லாம் உறவுகளுக்காக மக்கள் போராடுகிறார்களோ அங்கெல்லாம் இந்தியா வெளிப்படையாக ஆதரவு தந்து சேர்ந்து கொள்ளும் .

இந்த நேரத்தில் நாம் மனசோர்வு அடைந்து விடக்கூடாது. துயரங்கள் சோகங்கள் இருந்தாலும் துணிச்சலுடன் தன்னம்பிக்கையுடன் நாம் எதிர் கொண்டுள்ளோம். எதிர்காலத்தைக் கண்டு நமக்கு அச்சமில்லை. இந்த நாட்டில் மாற்றத்துக்கான அலை வீசுகிறது. இதனால் பாதிக்கப்படாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இந்த அலை நம் எல்லாரையும் சூழ்ந்து கொள்ளும். எதிர்காலம் நமக்கு என்ன கொண்டு வந்தாலும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

வெள்ளம், வறட்சி, வறுமை அல்லது ஏதேனும் அநீதி காரணமாக பாதிக்கப்பட்ட எல்லா மக்களுக்கும் நமது முழு அனுதாபங்கள். உங்கள் தலையை தண்ணீருக்கு மேலே வையுங்கள். உங்கள் கரங்களை நீட்டுங்கள். நாங்கள் உங்களுக்கு உதவி செய்வோம். இந்தியாவை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்வோம். நாம் எல்லாருமாக சேர்ந்து இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வோம். இது இந்தியா மக்களுக்கான நேரம். எல்லா சிக்கலல்கள் சங்கடங்கள் சவால்களையும் நாம் சந்திப்போம்.

இந்திய மக்கள் ஏழ்மையில் அறியாமல் இருக்கலாம். ஆனாலும் நாம் தேர்ந்தெடுத்த பாதையில் இருந்து நாம் விலக வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய மரபு சமய சார்பற்றது. நீண்ட நாளுக்காக இருக்கக் கூடியது.

நாம் எல்லாரோடும் நட்புடன் இருக்க விரும்புகிறோம். சமீபத்தில் சோவியத் யூனியனுடன் ஓர் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டோம். இந்த உடன்படிக்கையின் காரணமாக நம்முடைய கொள்கை மாறிவிட்டது என்று சிலர் கருதுகிறார்கள். நமது கொள்கையில் மாற்றம் இல்லை. ஏனென்றால் ஏற்கனவே இருக்கும் கொள்கை. மக்களுக்கு நன்மை சேர்ப்பதாகும். இன்று பல நாடுகள் இந்த கொள்கையைப் பின்பற்றுகின்றன. வேறு எந்தக் கொள்கையும் இந்தியாவுக்கு நன்மை சேர்க்காது. மரபாக இருந்தாலும் நவீன அரசியலாக இருந்தாலும் நமது அடிப்படை கொள்கைகளை நாம் விடாமல் பற்றிக் கொள்ள வேண்டும்.

நாம் சில தவறுகள் செய்கிறோம். மன உறுதியுடன் ஒப்புக் கொள்வோம். அதை சரி செய்ய முனைவோம். நமது தேசியக் கொள்கைகள் பல மாற்றங்கள் செய்துள்ளோம். ஏழை மக்கள் சொந்தக்காலில் நிற்க, நமது நாட்டுக்கு வலிமை சேர்க்க, இந்த கொள்கை மாற்றம் செய்துள்ளோம்.

துப்பாக்கிக் குண்டு வலிமையில் ஒரு நாடு வளர்வதில்லை. நாட்டு மக்களுக்கு முறையாக சேவை செய்யும் போது, அவர்கள் வலிமையாக இருக்கும் போது, மக்களின் ஒப்புதலோடு அரசு நடைபெறுகிற போது நாடு வளர்கிறது.

இதைத்தான் நாம் செய்ய முயற்சிக்கிறோம். நீங்கள் முழு ஒத்துழைப்பு தருவீர்கள் என்று நம்புகிறேன். அரசியல் கொள்கைகள் எதுவாக இருந்தாலும், நாட்டு ஒற்றுமை மற்றும் எலை ஒருமைப்பாட்டுக்கு நாம் இணைந்திருப்போம். ஏழை மக்களைப் பாதுகாக்க வேண்டும். நமக்கு ஒரே ஒரு முழக்கம் தான் உண்டு - ‘நாம் ஒன்றாக துணிச்சலாக இருப்போம். தொடர்ந்து முன்னேறி நடைபெறுவோம்’ எந்த உணர்வுடன் ஒன்றுபட்டு நடந்தால் யாராலும் நம்முடைய முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தி விட முடியாது.

சகோதரர்களே சகோதரிகளே, உங்களில் சிலர் சீருடையில் இருக்கிறீர்கள். நினைவிருக்கட்டும் நாம் அனைவரும் இந்த நாட்டின் படை வீரர்கள். அவசியம் ஏற்பட்டால், நம் நாட்டின் பாதுகாப்புக்காக உயிரும் வியர்வையும் சிந்தத் தயாராக இருக்கிறோம். மொத்த மனித குலத்தையும் புதிய உயரத்துக்கு உயர்த்துவோம். இந்த மாபெரும் செயலில் நாம் எப்போதும் களத்தில் முன்நிற்போம். இந்த நல்ல நாளில் உங்களை வாழ்த்துகிறேன். கடந்த ஆண்ட விட வரும் ஆண்டில் இன்னும் திறம்பட செயல்படுவோம். உங்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் இன்னும் விரைந்து முன்னேறுவோம். என்னுடன் இணைந்து இந்த முழக்கத்தை எழுப்புங்கள் - ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x