Published : 12 Oct 2023 04:27 PM
Last Updated : 12 Oct 2023 04:27 PM

செங்கோட்டை முழக்கங்கள் 24 - “அச்சப்பட ஏதுமில்லை” | 1970

'இன்று உள்ளது போன்று இந்திய மக்கள் எச்சரிக்கை உணர்வுடன் வேறு எப்போதும் இருந்ததில்லை. எல்லாக் கட்சிகளும் மக்களும் நாட்டுப் பிரச்சினைகள் பற்றி ஆழமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்' என்று குறிப்பிடுகிறார் பிரதமர் திருமதி இந்திரா காந்தி. 1970 ஆகஸ்ட் 15 - இந்திய சுதந்திரத்தின் 24 ஆவது ஆண்டுக் கொண்டாட்டம். செங்கோட்டையில் கொடியேற்றி வைத்து பிரதமர் இந்திரா காந்தி ஆற்றிய உரையின் முழு விவரம் இதோ:

“இந்திய குடிமக்களே, சகோதர, சகோதரிகளே, ஆர்வம் மிக்க இளைஞர்களே... இன்று சுதந்திர இந்தியா 24-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில் யமுனை நதிக்கரையில் உள்ள இந்த செங்கோட்டையில் நாம் ஒருவரை ஒருவர் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்தச் சந்திப்பு நமக்கு வலிமை தருகிறது. கடந்த ஆண்டின் சுதந்திர தினத்தை ஒட்டியும் அதற்குப் பிறகும் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்களும் எல்லா அரசியல் கட்சிகளும், நமது பிரச்சினைகள் குறித்து ஆழமாக சிந்திக்க தொடங்கியுள்ளனர். நமது கொள்கைகளை விளக்கவும், புதிய வழிமுறைகளைக் காணவும் நாம் எல்லோரும் முயற்சிக்கிறோம். நமது ஜனநாயகத்தை பக்குவப்படுத்த மக்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நமது சாதனைகளை எடை போட்டு எதிர்பார்த்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிசீலித்து புதிய முடிவுகள் எடுக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

போர், வறட்சி அல்லது வேறு ஏதோ காரணத்துக்காக நிறுத்தி வைக்கப்பட்ட திட்டங்கள் புத்துயிர் பெறுகின்றன. ஒருபுறம் நாம் வேகமாக வளர்கிறோம். மறுபுறம் இந்த வளர்ச்சியால் கவலை கொண்ட சில சக்திகள் எதிர்க்கின்றன. ஆனால் எது சரி எது தவறு என்று மக்களுக்குத் தெரியும். நன்மைக்கும் தீமைக்கும் வேறுபாடு தெரியும். நமது ஜனநாயகத்தின் உண்மையான வலிமை இதுதான். இந்த வலிமை ஏழை மக்களின் கையில் இருக்க வேண்டும்.

நீங்கள் அனைவரும் அறிவீர்கள் - நான் பிரதமர் ஆவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்த நாட்டின் மூலை முடுக்கெல்லாம் சென்று வந்துள்ளேன். வேறு எப்போதும் இல்லாத அளவுக்கு இன்று நம் மக்கள் விழிப்புணர்வுடன் எச்சரிக்கையுடன் உள்ளனர். இந்த அளவு நம்பிக்கைகளும் தமது உரிமைகள் குறித்த விழிப்புணர்வும் மக்களிடம் இதற்கு முன்பு நான் கண்டதில்லை. இது நல்ல அடையாளம்; மகத்தான சவால். இந்த சவாலை நாம் சந்திப்போம். முன்பு அறிவித்து செயல்படுத்தாத திட்டங்களை இப்போது செயல்படுத்தத் தொடங்கியுள்ளோம். வேளாண் துறையில் தொழில் துறையில் உற்பத்தி அதிகரித்து உள்ளது. மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு வங்கிகள் நாட்டுடைமை ஒரு நல்ல வாய்ப்பைத் திறந்திருக்கிறது. வங்கிகளை நாட்டுடைமை ஆக்கி ஓராண்டு ஆகி விட்டது. அதன் பலன் இப்போது சில மாதங்களாக தான் தெரிய ஆரம்பித்துள்ளது. நீங்கள் அறிவீர்கள் - இது உச்ச நீதிமன்றத்தின் முன்னால் இருந்தது; அதனால்தான் இந்தத் தாமதம்.

வினோதமான சில முழக்கங்கள் எழுவதைக் கேட்கிறேன். வன்முறைக்கு ஆதரவாகச் சிலர் பேசுகிறார்கள். ஆனால் வன்முறை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கண்டதில்லை. நம்முடைய நோக்கம் எவ்வளவுதான் புனிதமாக இருந்தாலும் மேற்கொள்ளும் பாதை தவறாக இருந்தால் நிச்சயமாக மனநிறைவான முடிவு கிட்டாது. அகிம்சை வன்முறை மீதான விவாதம் நமது நாட்டில் முடிந்து விட்டது என்ற கருதினேன். நம்ம சுதந்திர போராட்டத்தின் மூலம், அஹிம்சையால் சுதந்திரம் கிடைக்காது என்கிற வாதத்தைப் பொய்யாக்கினோம். அகிம்சை வழியில் சுதந்திரம் பெற முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்தோம். பொருளாதார வளர்ச்சியும் அகிம்சை வழியில் சாதிக்க முடியும். நாட்டில் எல்லா பெரிய மாற்றங்களையும் அகிம்சை வழியில் கொண்டுவர முடியும்.

வெற்றி முழக்கங்களைப் பொருட்படுத்தாது எல்லாரும் ஒன்றுபட்டு வளர்ச்சிக்கு வழி காண்பதே நமது கடமை. புதிய புரட்சியைக் கண்டு விட்டதாய் சில இளைஞர்கள் நினைக்கிறார்கள். முழக்கங்களை எழுப்புவதால், சேதங்களை உண்டாக்குவதால் நாட்டு நலன் சாத்தியப்படுமா என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டுமாய் இளைஞர்களை வேண்டுகிறேன். அவர்களின் ஏமாற்றம், விரக்தியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இது ஒரு மோசமான அறிகுறி அல்ல என்று நம்புகிறேன்.

இன்று நாம் பல பெரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி உள்ளோம். விலைவாசி உயர்ந்து வருகிறது. வேலையின்மையும் அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்கிறபோது, தொழிலாளர்களும் நிலையான வருமானம் கொண்டவர்களும் மிகுந்த இன்னலுக்கு உள்ளாகிறார்கள். எனக்கு இது தெரியும். இது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால், ஒரு நாடு முன்னேறிச் செல்கிறபோது, விலைவாசியும் ஓரளவு உயர்கிறது. ("when a nation goes forward, the prices go up to a certain extent.") அத்தியாவசிய பொருட்களின் விலை உயராமல் தடுப்பது நமது கடமை. வருமானம் - விலைவாசி இடையில் சமநிலையை உருவாக்க வேண்டும். இது நமது கடமை. அதேசமயம், உணவுப் பொருட்களின் விலை குறைவதால் கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு சுமை கூடுகிறது. எனவே நாம் மிகவும் கவனத்துடன் செயல்பட்டு ஓர் இடைப்பட்ட பாதையைக் கண்டாக வேண்டும்.

ஓர் இன்னல், ஒரு துயரம் எழுந்தால் அதனை இயன்றவரை சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். யார் மீதும் அதீத சுமை ஏற்றக்கூடாது. சிலரிடம் மிதமிஞ்சி இருக்கிறது. இது விஷயத்தில், தேவையான நடவடிக்கை எடுக்கப் போகிறோம். இந்த திசையில் விரைவில் நடவடிக்கை எடுக்க இயலும் என்று நம்புகிறேன். உற்பத்தி குறைந்து விடக்கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறோம். உற்பத்தி குறைந்து விட்டால் ஏழைகளுக்கு வறியவர்களுக்கு நம்மால் உதவ முடியாமல் போய்விடும். எனவே நாம் சரியான சமநிலையை பாதுகாக்க வேண்டும். எதிர்பார்த்த அளவுக்கு வேகமாக நாம் முன்னேறவில்லை என்று சிலர் கருதலாம். நாம் சரியான பாதையை தேர்ந்தெடுத்துள்ளோம். பல புதிய நடவடிக்கைகள் மூலம் வளர்ச்சியை விரைவு படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

தற்போதுள்ள நிலைமையை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதை மாற்ற வேண்டும், அப்போதுதான் வளர்ச்சி காண முடியும் என்று சிலர் கருதுகிறார்கள். இது நல்ல எண்ணம் தான். ஆனால் தற்போது உள்ளதை அழித்துவிடுதல், நமது நாட்டுக்கு இளைஞர்களின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல. இது மிகப்பெரிய தீங்கையே விளைவிக்கும். நமது முன்னேற்ற நடையில் இது நம்மைப் பின்னுக்கு தள்ளிவிடும். எனவே இது அதற்கான தருணம் அல்ல. மக்களின் வலிமையுடன் பெரிய மாற்றங்களை எவ்வாறு கொண்டு வருவது என்பதை காந்தியும் நேருவும் நமக்குக் காட்டியுள்ளனர். எனக்கு 13 வயது இருந்த போது என்னோட தந்தை சிறையில் இருந்து எனக்குக் கடிதம் எழுதினார். எதையும் ரகசியமாக செய்தல் கூடாது என்று எனக்கு அறிவுரை கூறினார். பிறரிடம் இருந்து மறைக்க வேண்டிய எதையும் செய்ய வேண்டாம். வெளிப்படையாக வெளிச்சத்தில் செய். ("Nothing should be done in secracy. Do not do anything which you had to conceal from others. Do it in the open and in full light.")

மகாத்மா காந்தி தலைமையில் நாம் சுதந்திர போராட்டத்தை நடத்தினோம். நம் மக்கள் அனைவருக்கும் இது தான் வலிமைக்கான நிரந்தர சாட்சி. வன்முறை இன்றி அகிம்சை வழியில் சாதித்துக் காட்டினோம். இதை நம் மக்கள், நம் நிறுவனங்கள் எல்லாரும் நினைவில் கொள்ள வேண்டும். பிறரிடம் இருந்து மறைக்க வேண்டிய எதையும் நாம் செய்ய வேண்டாம். எதையும் நாம் வெளிப்படையாகச் செய்ய வேண்டும். இதனால் நாம் என்ன செய்கிறோம் என்பதை மக்களால் எளிதில் புரிந்து கொள்ள முடியும். மக்களும் தமது முழு ஒத்துழைப்பை நமக்கு நல்குவர். மாற்றங்களைக் கொண்டு வருதல் எளிதாகும்.

நமது பொருளாதார நிலைமை கணிசமாக உயர்ந்து இருக்கிறது. நம்முடைய பிரச்சினைகள் முழுவதுமாக தீர்ந்து விட்டது என்று பொருள் அல்ல. வளர்ச்சி பெற்று உள்ளோம். பிரச்சினைகளும் பெருகியுள்ளன. வளர்ச்சியால் பிரச்சினைகள் உருவாகின்றன. சில சமயங்களில் பிரச்சினைகளே வளர்ச்சிக்கு வழி காட்டுகின்றன. ("Progress creates problems and sometimes problems show the way for progress.") எனவே இவற்றைக் கண்டு நாம் அஞ்ச வேண்டாம். இவற்றை நமது வலிமையாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

நம்மைப் பொறுத்தவரை, பிரச்சினை என்பது மலை போன்றது. பின்னால் திரும்பி எந்த அளவு உயரே ஏறி இருக்கிறோம் என்று பார்க்க வேண்டியது இல்லை; இன்னும் எவ்வளவு உயரம் ஏற வேண்டி இருக்கிறது என்று மட்டும் பார்ப்போம். நாம் அனைவரும் ஒன்று திரள வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். சில பொருட்களின் விலையை குறைக்க முடியவில்லை என்றால் அதனை ஏற்றுக் கொண்டு முன்செல்ல வேண்டும். ("if the prices of certain commodities could not be controlled, we have to endure them.")

இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். நம் திட்டங்களுக்கு உள்ளும் வெளியிலும் பல புதிய பாதைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. நமது இளைஞர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு, நமது சொந்தக்காலில் தற்சார்பு அடைவார்கள் என்று நம்புகிறேன். இதை சாதிக்க முடியும். ஏனெனில், முன்னேறிய நாடுகள் எல்லாமே இதைத்தான் செய்துள்ளன. அவர்கள் தம்முடைய வளர்ச்சிக்கு வேறு யாரையும் சார்ந்து இருக்க வில்லை. நான் மாறியாக வேண்டும். இளைஞர்கள் மாற வேண்டும். சமுதாயத்தை எப்படி மாற்றலாம் என்று அவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த திசையில் நாம் பணியாற்றத் தொடங்கியுள்ளோம்.

சிலர் வங்கிகள் மூலம் பயன் பெறுகின்றனர். சிலர் வேறு வகைகளில் முதலீடு பெறுகின்றனர். இந்த திட்டங்கள் எல்லாமே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவதற்காக உருவானவை. எல்லாருக்கும் ஒரே சமயத்தில் பயன் கிடைக்காமல் போகலாம். இலக்கு நோக்கிய நீண்ட பயணத்தை நாம் ஒவ்வொரு அடியாகத்தான் மேற்கொள்ள வேண்டும். ஆர்வத்துடன் துணிச்சலுடன் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளோம்.

இந்த பயணத்தில் நம்முடன் இளைஞர்கள் சேரும் போது இன்னும் விரைவாக முன்னேற முடியும். பொருளாதார சமூக சீர்திருத்தங்களுக்கு தேவை இருக்கிறது. இவற்றில் சில சிக்கல்களும் இருக்கின்றன. சமீபத்தில் ஒரு பிரச்சினை முளைத்தது - 'நில அபகரிப்பு'. இது குறித்து இந்த சந்தர்ப்பத்தில் விரிவாகப் பேச விரும்பவில்லை. ஆனால் இதை மட்டும் குறிப்பிடுகிறேன். சிலரிடம் ஏராளமாக நிலம் இருக்கிறது. சிலரிடம் மிகச் சிறிதளவு நிலம் கூட இல்லை. இது நீதி அல்ல. சமூகத்தில் நீதியை நிலைநாட்டுவது நமது கடமை. சிலருக்கு நிவாரணம் தரும் வகையில், இந்த திசையில் சில நடவடிக்கைகள் எடுத்துள்ளோம். இது தொடர்பாக நாம் நிறைவேற்றி உள்ள சட்டங்களை மத்திய அரசு மாநில அரசுகளும் நேர்மையுடன் திறமையுடன் அமல்படுத்துவது கடமை ஆகும். மாநில அரசுகள் இவற்றை அமல் படுத்துவதில், மாநில அரசுகளை மத்திய அரசு சமாதானப்படுத்தி செயல்படுத்த முனைந்து வருகிறது.

இந்திய வெளியுறவுக் கொள்கையில் அடிநாதமாய் விளங்குவது - உலக அமைதி. இதன் அடிப்படையில் தான் நமது கொள்கை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. உலகில் பல நாடுகள் நமது கொள்கையைப் பின்பற்றி வருகின்றன. மேற்கு ஆசியாவுக்காக, ஐக்கிய நாடுகள் சபையில் ஐக்கிய அரபுக் குடியரசு முன்வைத்த தீர்மானங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை ஏற்றுக் கொண்டதன் மூலம் அதிபர் நாசர், அபார துணிச்சல் மற்றும் உலக அறிவை வெளிப்படுத்தி உள்ளார்.

இதேபோன்று, நீண்ட நாள் பகைமையுடன் போரிட்டுக் கொண்ட சோவியத் யூனியன் - மேற்கு ஜெர்மனி இடையே அமைதி உடன்படிக்கை கையெழுத்து ஆகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு இங்கிலாந்து அரசு ஆயுதம் வழங்க முன்வந்துள்ளது. தென் ஆப்பிரிக்காவில் சுற்றியுள்ள ஜனநாயக நாடுகளுக்கு இதனால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தனது கொள்கையை இங்கிலாந்து மறுபரிசீனை செய்யும் என்று நம்புகிறேன். உலக அமைதிக்கு என்றும் இந்தியா துணைநிற்கும். ஜெய்ஹிந்த்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x