Published : 27 Sep 2023 07:01 PM
Last Updated : 27 Sep 2023 07:01 PM

செங்கோட்டை முழக்கங்கள் 20 - முழங்குவோம்... முன்னேறுவோம் | 1966

சுதந்திர இந்தியாவின் மூன்றாவது பிரதமராக பொறுப்பேற்ற இந்திரா காந்தி, செங்கோட்டையில் 20-வது (1947-1966) சுதந்திர தின உரை ஆற்றினார். வறுமைக்கு எதிராகப் போராட வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்தார். நாட்டில் பரவலாக வன்முறை காணப்படுகிறது; மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழி இன்று மிகவும் தேவைப்படுகிறது என்பதே இந்திரா காந்தியின் முக்கியச் செய்தியாக இருந்தது.

1966 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் இந்திரா காந்தி ஆற்றிய சுதந்திர தின உரை இதோ: இந்த சரித்திரப் புகழ் வாய்ந்த இடத்திலிருந்து சரித்திர புகழ் பெற்ற இந்த நாளில் நாட்டு மக்களை வாழ்த்துகிறேன். சில சரித்திர சம்பவங்கள் ஒவ்வொரு தனி நபரின் வாழ்க்கையிலும் சில ஆழமான நினைவுகளை விட்டுச் செல்கின்றன. நமது சுதந்திரம் அப்படி ஒரு நிகழ்வு. சுதந்திர தினம் நமக்கு மிக முக்கிய நாள். ஏனெனில் நாம் புது வாழ்க்கையை தொடங்கிய நாள் அது. 19 ஆண்டுகளுக்கு முன்னர் முதல் இந்திய பிரதமர் ஜவஹர்லால் நேரு, செங்கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றினார். விடுதலை தீபத்தை ஏற்றி சுதந்திர இந்தியாவுக்கு அடித்தளம் இட்டார்.

விடுதலைப் போரில் ஏராளமான தியாகங்களைச் செய்த நாட்டின் எல்லா பாகங்களையும் சேர்ந்த அத்தனை பேரையும், மிகப்பெரிய தலைவர்களையும் இன்று நமது சிந்தனையில் கொண்டு வருகிறோம். அவர்கள் உண்மையிலேயே மிகப்பெரிய மனிதர்கள். நமது சுதந்திரம், அவர்களின் துணிச்சல் பொறுமை தியாகங்களுக்கு உரித்தானது. இந்தியாவின் தீரம் மிக்க மனிதர்கள் வழியில் நடப்பது நம்முடைய பொறுப்பாகும்.

செங்கோட்டை கொத்தளத்தில் நான் நிற்கிற போது, எனது சிந்தனை, தவிர்க்க முடியாமலே, கடந்த காலத்துக்குச் செல்கிறது. அறிவியல் தத்துவம் மற்றும் பிற துறைகளில் நாம் முழு வளர்ச்சி கண்டிருந்த காலம் அது. இந்தியா முழுமையாக வளர்ச்சி பெற்ற நாடாக, உலகத்துக்குத் தலைமைப் பொறுப்பில் இருந்து வழிகாட்டியது. இந்தியாவின் பெருமைமிகு கடந்த காலத்தை எப்படி மறக்க முடியும்? நமது கடந்த காலப் பெருமைகளுக்குக் களங்கம் வராது நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த மகிழ்ச்சியான தருணத்தில் நாம் இயற்கையாகவே தேசத்தந்தை மகாத்மா காந்தியை நினைவு கூர்கிறோம். ஜவஹர்லால் நேரு ஒருமுறை காந்தியை 'மேஜிக் மனிதர்' என்று விளம்பினார். அறிவியலில் புது உலகத்தில் தீவிர நம்பிக்கை இருந்த போதும், மகாத்மா காந்தியின் பாதையே மிகச் சரியானது என்பதை ஜவஹர்லால் நேரு உணர்ந்தே இருந்தார். அகிம்சை, வாய்மை, சுதேசி... ஆகிய மூன்றும்தான் காந்திஜி கூறும் செய்தியின் மொத்தமும். இந்தச் செய்தி இன்றும் கூட பொருத்தமாய் இருப்பதாக உறுதியாய் நம்புகிறேன். அஹிம்சை என்றால், பிறரின் கருத்துகளுக்கு மதிப்பு அளித்து அமைதியுடன் இணக்கமாய் வாழ்வது என்று பொருள். வெவ்வேறு கொள்கைகளைக் கொண்ட நாடுகளை மதிப்பது என்றும் பொருள் படும். இதுவே நமது அணுகுமுறையின் மொத்த வெளிப்பாடு ஆகும்.

இதேபோன்று, நம்முடைய எல்லா செயல்பாடுகளிலும் வாய்மை இருக்க வேண்டும். நாட்டு நலன் அல்லாத எதையும் நாம் செய்யக் கூடாது. அச்சமின்மை, வாய்மையின் முக்கிய அங்கமாகும். விடுதலைப் போரின் போது இருந்த அதே அச்சமின்மை இப்போதும் வேண்டும். தவறு செய்து விடுவோமோ என்கிற அச்சம் வேண்டாம்; மாற்றத்தைக் கண்டும் நாம் அஞ்ச வேண்டாம். புது யோசனைகள், புது பாதைகளுக்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். நாம் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றிய முழு புரிதல் நமக்கு வேண்டும். அப்போதுதான் தீர்வுக்கான வழியைக் கண்டுபிடிக்க முடியும்.

'சுதேசி' - மகாத்மா காந்தி விட்டுச் சென்ற செய்தியின் மூன்றாவது அங்கம். நமது நாடு பொருளாதாரப் பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. சுதேசி உணர்வை ஊட்டுவதன் மூலம் பொருளாதார சூழலை மேம்படுத்த முடியும். சுதேசி என்றால் இறக்குமதியே செய்ய மாட்டோம் என்று பொருள் அல்ல. இயன்றவரை உள்நாட்டில் உள்ள வளங்களைக் கொண்டு இங்கேயே தயாரிப்போம். இயன்றவரை இறக்குமதியைக் குறைப்போம். இறக்குமதிப் பொருட்களின் மூலம் புதிய தொழில்நுட்பங்களைக் கற்க முடியும். இதற்கு நாம் தயங்கவே கூடாது. சுதேசி தத்துவத்தைப் பிரபலப்படுத்த அரசு மட்டுமே முனைந்தால் போதாது. ஒவ்வொரு நகரவாசியும் கிராமவாசியும் இதில் ஈடுபட வேண்டும்.

சோசலிசப் பாதையை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம். வறுமை ஒழிக்க வேறு வழி இல்லை. ஜனநாயகம் ஒவ்வொரு தனிநபருக்கும் சில உரிமைகளைத் தருகிறது. ஆனால் இந்த உரிமைகளுடன் கூடவே இணையாக சில கடமைகளும் உள்ளன. பல வளர்ச்சி திட்டங்களை நாம் தொடங்கியுள்ளோம். வறுமை ஒழிப்பு நமக்கு மிகப்பெரிய, மிக முக்கிய பணி. வறுமைக்கு எதிராகக் கடுமையாகப் போராட வேண்டும். இந்தப் போரில் என்னுடன் இணையுமாறு நாட்டு மக்களை அன்புடன் அழைக்கிறேன்.

வேளாண்மை நமது நாட்டின் மிக முக்கிய கிளையாகும். நமது மக்களின் முக்கிய தொழில் அதுவே ஆகும். விவசாய உற்பத்தியில் நவீன தொழில்நுட்ப உபகரணங்களைப் பயன்படுத்துமாறு வேண்டுகிறேன். கிராம வாழ்க்கையில் சீர்திருத்தங்கள் கொண்டுவர விழைகிறேன். தொழிலாளர்களின் பங்களிப்பும் சம அளவில் முக்கியமானதே. பாதுகாப்புத் துறையிலும் பிறதுறைகளிலும் மிகப் பெரும் பொறுப்பு தொழிலாளர்களின் தோள்களில் உள்ளது. உற்பத்தியை பெருக்குவதன் மூலம் நம்முடைய வாழ்க்கை தரம் உயர்கிறது. நாட்டு முன்னேற்றத்திற்கும் நேரடியாகப் பயன் தருகிறது.

தீரமிக்க நமது வீரர்கள் எல்லையைப் பாதுகாக்கின்றனர். இமயமலை மீது மட்டுமல்ல; ஒவ்வொரு நகரம், ஒவ்வொரு கிராமத்திலும் பாதுகாப்புத் துறை செயல்படுகிறது. விவசாயி, தொழிலாளி, தொழிலதிபர், ஆசிரியர், பணியாளர். அத்தனை பேருக்கும் பெரும் பொறுப்பு இருக்கிறது. ஒவ்வொருவரும் தனது பொறுப்புகளை விசுவாசத்துடன் நிறைவேற்ற வேண்டும். வாய்மையும் ஒற்றுமையும் நமது தேச வாழ்க்கையின் அடித்தளங்ளாக இருக்க வேண்டும். கவிஞர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களுக்கு இந்த தேசத்தை சரியான பாதையில் வழி நடத்துகிற பொறுப்பு இருக்கிறது. வெளியில் இருந்து புதிய யோசனைகளை உள்வாங்கி கொள்ளை இவர்கள் தயங்கக் கூடாது. இதேபோன்று நம்முடைய புதிய யோசனைகள் வெளிநாடுகளுக்கு செல்லவும் அவர்கள் பணிபுரிய வேண்டும்.

வளர்ச்சி நோக்கிய நம்முடைய நடை தொடர வேண்டும். தளர்வு இருக்க முடியாது. நமது சமுதாயத்தின் பல பிரிவுகள். தலித்துகள், ஆதிவாசிகள், மலைமக்கள் மற்றும் சிறுபான்மையினர் பல நூற்றாண்டுகளாக ஒதுக்கப்பட்டனர். இவர்கள் மீது நாம் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இவர்கள் நல்வாழ்வுக்காக சிறப்பு திட்டங்கள் தீட்டி உள்ளோம். இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. இந்த பிரச்சினையை நான் முழுமையாக அறிவேன். சமீபத்து வறட்சியில் இவர்கள் மிகுந்த இன்னலுக்கு உள்ளாயினர். இவர்கள் முன்னேறாமல் இந்த நாடு பெரிய வளர்ச்சியைக் காண முடியாது. இந்த நாட்டை எதிர்நோக்கி உள்ள பெரும் பணிகளில் இவர்களின் ஒத்துழைப்பை நான் வேண்டுகிறேன்.

சமுதாயத்தின் பல பிரிவுகளையும் சேர்ந்த இந்தியப் பெண்கள் - வெவ்வேறு பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார்கள். குடும்பத்தை நிர்வகித்தல் மற்றும் புதிய தலைமுறையை உருவாக்குதல் என்கிற பெரும் பொறுப்பை அவர்கள் சுமக்கிறார்கள். நமது மக்கள் தொகையில் இவர்கள் 50% இருக்கிறார்கள். பல நூற்றாண்டுகளாக அவர்கள் இந்த தேசத்துக்கு வலிமை சேர்த்து வருகிறார்கள். பல நூற்றாண்டுகளாக இந்தியாவின் புனிதமான மரபுகளைக் காத்து வருகிறார்கள். நமது கலாசாரத்தின் உயரிய மரபுகளை அவர்கள் பராமரிப்பார்கள் என்று நம்புகிறோம். நமது தேசத்தின் வலிமைக்கான ஊற்று அவர்கள். நம்மை வழிநடத்த அவர்களையே எதிர்பார்க்கிறோம். நற்குணங்களின் மொத்த வடிவம் நம் நாட்டுப் பெண்கள்.

விடுதலைப் போராட்டத்தில் எண்ணற்ற பொதுமக்கள் பங்கெடுத்துக் கொண்டார்கள். அவர்களில் பலர் இன்று நம்மிடையே இல்லை. இந்த நாளில் அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். சில விடுதலைப் போராட்ட வீரர்கள் நம்மிடையே, முதியவராய் இருக்கிறார்கள். அவர்களின் அனுபவத்தால் நாம் பலன் பெறுகிறோம்.

ஒரு புதிய தலைமுறை வந்து கொண்டிருக்கிறது. அவர்கள் சுதந்திரப் போராட்டத்தை பார்த்தவர்கள் அல்ல. சுதந்திரப் போராட்ட உணர்வை அவர்கள் அறிய மாட்டார்கள். சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெற்றிருந்தாலும் இல்லையானாலும், அவர்கள் இளையவராய் இருந்தாலும் முதியவராக இருந்தாலும், இந்த நாட்டின் வளர்ச்சிக்கான பொறுப்பு எல்லோர் தோள்களிலும் இருக்கிறது. அர்ப்பணிப்பு வைராக்கியத்துடன் பணிபுரிந்தால் எல்லாத் தடைகளையும் மீறி வளர்ச்சி காணலாம். எல்லோரும் இணைந்து ஒற்றுமையாய் நடந்தால், அயல்நாட்டு அழுத்தம், வறுமை, பிணக்குகள் ஆகியவற்றை வெல்ல முடியும். காந்தியின் நேருவின் இது போன்ற தலைவர்களின் வாரிசுகள் நாம். எல்லா அழுத்தங்களையும் எதிர்கொண்டு சோசலிசப் பாதையில் தொடர்ந்து முன்னேறுவோம்.

நமது நாட்டு எல்லையில் அச்சுறுத்தல்களை சந்திக்கிறோம். உள்நாட்டில் வறுமை பிற்போக்குத்தனத்தை எதிர்கொள்கிறோம். மூடத்தனத்தை விட்டால் ஒழிய, புதிய சிந்தனைகளை ஏற்றுக் கொண்டால் ஒழிய வறுமைக்கு எதிரான போராட்டத்தை வெற்றிகரமாக நடத்த முடியாது. நாம் வெற்றி பார்வையாளராக இருக்க முடியாது. வறுமைக்கு எதிரான போரில் நாம் அனைவரும் வீரர்கள்.

எல்லையில் எதிரிகள் ஆக்கிரமித்த போது நமது இளைஞர்கள் நமது மாணவர்கள் தியாகம் செய்ய முன்வந்தார்கள். இந்திய சரித்திரத்தில் தங்களுடைய ரத்தத்தால் புதிய அத்தியாயம் எழுத அவர்கள் தயாராக இருந்தார்கள். மீண்டும் ஒரு முறை அவர்களை இந்த நாடு எதிர் நோக்குகிறது. சவாலை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயாராக இருக்க வேண்டும். இந்த நாட்டுக்கு புதிய வாழ்க்கையை கொண்டு வர வேண்டும். இந்த நாட்டுக்கு புத்தாக்கம் தர வேண்டும்.

இன்று நாம் சரித்திரப் புகழ் பெற்ற செங்கோட்டையில் கூடியிருக்கிறோம். இந்த நாட்டின் கண்கள் அனைத்தும் நம் மீதே உள்ளன. இந்தியா சரித்திரத்தின் மாட்சிமை நம் பின்னால் இருக்கிறது. ஒளிமயமான எதிர்காலத்துக்கான தொலைநோக்குப் பார்வை நம் முன்னால் இருக்கிறது. இந்த நாட்டின் ஒளிமயமான எதிர்காலத்திற்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்று ஒவ்வொரு குடிமகனும் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்த நாட்டின் கொள்கைகளை கோட்பாடுகளை வெற்றிகரமாக அமல்படுத்த முடியுமா என்று அவர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும். இந்தக் கேள்விக்கான விடையில் இந்த நாட்டின் வளர்ச்சி அடங்கி இருக்கிறது. நாட்டு மக்களிடம் ஐயங்களும் தயக்கங்களும் நீடித்தால் பிரச்சினைகள் முளைக்கவே செய்யும்.

ஆனால் சவாலை ஏற்றுக் கொண்டால், உள்நாட்டு வெளிநாட்டு அபாயங்களை எதிர்கொண்டு முன்னேற்ற பாதையில் செல்ல முடியும். இது எளிதான பணி அல்ல. நாம் கற்பனையில் உழலவில்லை. நாம் தவறு இழைத்திருக்கலாம். விரைவாக வளராது இருக்கலாம். ஆனால் வளர்ச்சியும் முன்னேற்றமும்தான் அதிக பிரச்சினைகள் உருவாகக் காரணம். நாம் தேங்கிக் கிடந்தால் ஒருவேளை புதிய பிரச்சினைகள் உருவாகாமல் இருக்கலாம். ஆனால் தொடர்ந்து ஏழை நாடாகவே இருப்போம். எனவே நாம் தெரிந்தே கடினமான, வளர்ச்சிப் பாதையைத் தேர்ந்தெடுத்தோம்.

காந்திஜி காட்டிய அகிம்சை வழியில் இருந்து நாம் விலகிச் செல்கிறோம் என்பது வேதனைக்குரியது. இந்தியாவிலும் பிற நாடுகளிலும் வன்முறை அதிகரித்து வருகிறது. வன்முறையைக் கட்டுப்படுத்த ஒரு வழி தான் உண்டு. வன்முறை பெருக இடமில்லை என்கிற சூழலை ஏற்படுத்த வேண்டும். இத்தகைய சரியான சூழலை ஏற்படுத்துவது நம் அனைவரின் பொறுப்பு. பெற்றோர் ஆசிரியர்கள் குடிமக்கள் ஆகிய எல்லோருமே அழிவு எண்ணங்களுக்கு இங்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். சரியான எண்ணங்களை பிரபலப் படுத்த வேண்டும்.வேலை நிறுத்தம் உற்பத்தியைத் தடுக்கிறது; தொழிலாளர் வாழ்க்கையை இந்த தேசத்தை பாதிக்கிறது.

இந்த தேசத்துக்குப் புத்துயிரூட்ட, விடுதலைப் போராட்ட உணர்வை மீண்டும் கொண்டு வர வேண்டும். இந்த உணர்வு நிச்சயம் நம்முள் இருக்கிறது என்பதில் எனக்குச் சிறிதும் சந்தேகம் இல்லை. நாம் சரியான பாதையை விட்டு விலகினால் அழிவை நோக்கி செல்பவர்கள் ஆவோம். நமது தேசத்துக்காக பாடுபட்ட தியாகிகளின் உழைப்பு வீணாய்ப் போய்விடும். சுதந்திரப் போராட்ட வீரர்களிடம் இருந்து உத்வேகம் பெறுவோம். நமது தேசியக் கொடி உயரப் பறக்கட்டும்.

ஜெய்ஹிந்த் என்பது ஒரு தேசிய முழக்கம். இது நமக்கு தன்னம்பிக்கை தரும். நமது நாட்டு வலிமையின் மீது நம்பிக்கை பிறக்கும். நான் முன்னேறிச் செல்ல இது ஊக்கம் அளிக்கும். எல்லா முனைகளிலும் வளர்ச்சி பெறுவோம் என்பதற்கான குறியீடுதான் ஜெய்ஹிந்த் முழக்கம்.

நட்பு நாடுகளுக்கு நாம் கரம் நீட்டுகிறோம். காலனியத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நாம் அனுதாபம் காட்டுகிறோம். எல்லா இடங்களிலும், போருக்கு எதிராக அநீதிக்கு எதிராக நாம் தொடர்ந்து குரல் எழுப்புவோம். அநீதியால் பாதிக்கப் பட்டவர்கள் பக்கம் நாம் இருப்போம் என்று மீண்டும் உறுதி கூறுகிறோம்.

நாம் சில இன்னல்களை சந்திக்கிறோம். கூடவே பல வாய்ப்புகளும் பெற்றுள்ளோம். மக்களின் எதிர்பார்ப்புகள் கூடியிருக்கின்றன. நம் மக்கள், மேலும் அதிக வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்று விரும்புகிறோம். உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கிருந்தாலும் அவர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும், அவர்கள் முன்னேறுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.

இந்த நாட்டின் வளர்ச்சிக்காக உழைப்பதற்கு நான் இந்த நாளில் உறுதி ஏற்கிறேன். காந்திஜி நேருஜி காட்டிய பாதையில் நாம் ஒழுங்கு மிக்க வீரர்களாக நடை போட்டால், இந்தியாவை ஒரு மகத்தான தேசமாக நம்மால் உருவாக்க முடியும். நாம் அனைவரும் இந்த உறுதிமொழி ஏற்போம்.

இந்தியா எங்கும் எதிரொலிக்கும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முன்வைத்த அந்த மாபெரும் முழக்கத்தை எழுப்புவதில் என்னோடு இணையுமாறு உங்களை அழைக்கிறேன். இந்த முழுக்கம் நமது வலிமையைக் குறிக்கிறது. என்னுடன் இணைந்து மூன்று முறை இந்த முழக்கத்தை ஒலியுங்கள். இந்தக் குரல் இந்த மாபெரும் தேசத்தின் குரல். இந்த முழக்கம் மலைகளில் பட்டுத் தெறித்து, இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் எதிரொலிக்கட்டும். இந்த முழக்கம், ஒவ்வொரு இந்தியனுக்கு உள்ளும் துணிவு, தன்னம்பிக்கை தரும். முழங்குங்கள் - ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

(தொடர்வோம்)

> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 19 - ஊடுருவல் ஒடுக்கப்படும் | 1965

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x