Published : 05 Oct 2023 05:36 PM
Last Updated : 05 Oct 2023 05:36 PM

செங்கோட்டை முழக்கங்கள் 22 - ‘எந்த அழுத்தமும் எங்களை அண்டாது!’ | 1968

இந்தியாவை ஒரு வலிமையான வளமான நாடாக ஆக்குவதற்கு வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்த பிரதமர் இந்திரா காந்தி, அண்டை நாடுகளுடன் உறவு பற்றி ஆழமாக எடுத்துரைத்தார். 1968 ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி பிரதமர் இந்திரா காந்தி ஆற்றிய உரை இதோ:

“ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தைக் கொண்டாட செங்கோட்டையில் நாம் கூடுகிறோம். நமக்கு நீண்ட சரித்திரம் இருக்கிறது. ஆனால் புதிய இந்தியாவின் வயது 21 மட்டுமே. இந்த 21 ஆண்டுகளில், வறட்சி, வெள்ளம், பஞ்சம், பற்றாக்குறை என்று பல பிரச்சினைகளை நாம் பார்த்து விட்டோம். அதே சமயம், பல பெரிய வளர்ச்சித் திட்டங்கள் உருப்பெறுவதையும் கண் முன்னால் பார்க்கிறோம். இவையே நமக்கு புதிய கோயில்கள். நம்பிக்கைகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் நடுவே தொடர்ந்து நாம் முன்நோக்கி நடைபோடுகிறோம்.

துணிச்சலுடன் மன உறுதியுடன் நமது மக்கள் எண்ணற்ற இன்னல்களை எதிர்கொண்டுள்ளனர். பலவகை பிரச்சினைகளை எதிர்கொள்வதில் அவர்கள் காட்டிய துணிச்சலுக்கு எனது பாராட்டுகள். நமது மகத்தான தலைவர்கள் ஆற்றிய தியாகம் மற்றும் கடின உழைப்பில் இருந்தே நமக்கு வலிமை கிட்டுகிறது.

இன்று நாம் கடந்த காலத்தின் கணக்குகளை பார்க்கிறோம், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்நோக்குகிறோம். ஐயத்துக்கிடமின்றி நாம் ஒரு மகத்தான தேசம். ஆனால் நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது என்பதை மறந்து விட வேண்டாம். நமது மகத்தான தலைவர்கள் காட்டிய பாதைகள், புகட்டிய கொள்கைகளைப் பின்பற்றினாலே, தாமதம் இன்றி நமது இலக்கை அடைய முடியும் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.

புத்தர், அக்பர், காந்தி (வாழ்ந்த) பூமியில் வன்முறை... வருத்தம் தருகிறது. இந்தியா போன்ற அளவில் மிகப் பெரிய நாட்டில் மக்களின் வெவ்வேறு பிரிவினர் இடையே வேறுபாடுகள், தவிர்க்க முடியாதுதான். இவற்றை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இதற்கு ஒவ்வொரு குடிமகனும் உதவுவது கடமையாகும். வன்முறை ஏற்பட முடியாத ஒரு சூழலை நாம் ஏற்படுத்த வேண்டும்.

கலவரங்கள் ஏற்பட நாம் அனுமதிக்கக் கூடாது. நம் பெரும்பாலான மக்கள் அமைதியை விரும்புகின்றனர். சிறிய எண்ணிக்கையில் உள்ள சிலரால் எப்படி அமைதியை சீர்குலைக்க முடிகிறது? தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர் சில சமயம் கொடுமைகளை அனுபவிக்கின்றனர். பல உயிர்களை இழந்துள்ளோம். தேசிய வளங்களுக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது எல்லாம் நமது நாட்டின் வலிமையை பலவீனமாக்கி உள்ளது. நாட்டு மக்களின் நம்பிக்கை குலைக்கிற வகையில் வேற்றுமைகளையும் ஐயங்களையும் எழுப்புவதற்கு முயற்சி நடைபெறுகிறது.

இத்தகைய விபரீத போக்குகளுக்கு இடம் தரமாட்டோம் என்று நாம் தீர்மானம் எடுத்துக் கொள்வோம். ஐயமில்லை, அரசுக்கும் கடமை இருக்கிறது. அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் மற்றும் நாட்டின் குடிமக்களுக்கும் கடமை இருக்கிறது. மறுசீரமைக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் சில முடிவுகளை எடுத்துள்ளது; அவை அமல்படுத்தப்பட்டு வருகின்றன. நாட்டில் அமைதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்கான புதிய சூழலை உருவாக்குவதில் நாம் வெற்றி காண்போம் என்று திடமாக நம்புகிறேன்.

அமைதியே நமது வளர்ச்சியின் அடித்தளம். கடந்த 21 ஆண்டுகளில் இந்த அடித்தளத்தை நாம் வலுப்படுத்தி இருக்கிறோம். நாம் நமது சொந்த காலில் நிற்கத் தொடங்கி இருக்கிறோம். நூற்றாண்டுகளாக உதாசீனப்படுத்தப்பட்ட நாம் எழுகிறோம். சுயசார்பை நோக்கி நடை போடுகிறோம்.

விவசாயத்தில் நாம் புரட்சி கண்டிருக்கிறோம். அமோக விளைச்சல் பெற்றுள்ளோம். ஆனாலும் சில பகுதிகள் வெள்ளத்தாலும் வறட்சியாலும் பாதிக்கப் பட்டுள்ளன. வறட்சியால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மனம் வருந்துகிறோம். அவர்களின் வேதனைகளை தீர்க்க இயன்றது அனைத்தையும் செய்கிறோம்.

திட்டமிட்ட உழைப்பே அமோக விளைச்சலுக்குக் காரணம். நல்ல மழையால் மட்டுமே நல்ல விளைச்சல் கிடைத்து விடவில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட விவசாய இடுபொருட்களை விவசாயிகள் நன்கு பயன்படுத்தி உள்ளார்கள். விவசாயப் புரட்சி நமது பொருளாதாரத்தை வலுவாக்கும். தொழிற்துறையும் நன்மை பெறும்.

நம்முடைய வளர்ச்சி நம்முடைய பிரச்சினைகளைப் பார்க்க விடாமல் செய்துவிடக் கூடாது. பாசன வசதிகள் இருந்தமையால் விவசாயிகள் விவசாய இடுபொருட்களின் பயனைப் பெற முடிந்தது என்பதை மறந்து விடக் கூடாது. பெரும்பான்மையான விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதி கிடைக்காமல் போனது. எனவே அவர்களால் விவசாய இடு பொருள்களின் பயனைப் பெற முடியாமல் போனது. நீர்ப்பாச வசதி உடைய, நீர்ப்பாசன வசதி இல்லா விவசாயிகள் இடையே உள்ள சமமின்மை பெருகி வருகிறது. நீர் வறட்சியுள்ள விவசாயிகளுக்கும் நன்மை கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்; இவர்களாலும் விவசாய உற்பத்தியைப் பெருக்குவதில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

நமது தொழில் வளர்ச்சி ஓரளவுக்கு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிக விவசாய உற்பத்தி தொழிற்துறையில் நல்ல விளைவைக் கொண்டு வருகிறது. இந்தத் துறையில் நாம் தொடர்ந்து வளர்ச்சி காண முடியும் என்று நம்புகிறேன். தனது இன்னல்களில் இருந்து இந்த நாடு விடுபடும் என்று கடந்த ஆண்டு இதே நிகழ்வில் கூறினேன். வறட்சி நாட்கள் முடிகின்றன. தொடர்ந்து வைராக்கியத்துடன் முன்னேறினால், நாம் புதிய யுகத்துக்குள் நுழைவோம்.

நாடு வளர்ச்சி அடைகிற போது, மக்களின் எதிர்பார்ப்புகளும் வளர்கின்றன. இதை நாம் எதிர்கொள்ள வேண்டும். பல்வேறு மக்களும் பல்வேறு சங்கங்களும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இவற்றில் சில நியாயமானவை; நிறைவேற்றப்பட வேண்டியவை. தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்களின் கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுக்கலாம். ஆனால் மிகப் பெரும்பான்மையாக உள்ள பாமரர், உடலுழைப்பு தருவோர், வறிய நிலையில் உள்ளோர், தங்களுடைய கோரிக்கைகளுக்காகக் குரல் கொடுக்கவும் முடியாத நிலையில் உள்ளனர் என்பதையும் உணர வேண்டும். அவர்களை நாம் உதாசீனப் படுத்த முடியாது.

சமூகத்தின் முறைசார் துறைகள் விடுக்கும் நியாயமான கோரிக்கைகளின் மீது ஒரு முடிவு எடுக்கிற போது, இவற்றை ஏற்றுக் கொள்வதால், தமது கோரிக்கைகளுக்குப் பிரதிநிதித்துவம் தர முடியாத அவர்களின் மீது இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் இயல்பாகவே நாம் பரிசீலிக்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை ஏற்பதால் பொதுப் பொருளாதார நிலைமையின் மீதான ஒட்டுமொத்த தாக்கத்தையும் எடை போட்டுப் பார்க்க வேண்டும். ("We have to realise that workers, teachers and office employees can voice their demands but a vast majority of people who are unable to give expression to their demands. We can not ignore them. In taking a decision on the demands of organised sections of community, we have naturally to consider what effect the acceptance of even just demands will have on those whose demands are unrepresented. We have also to weigh very carefully what overall effect the acceptance of demands will have on the general economic condition.") எனவே, தொழிலாளர்கள் ஆசிரியர்கள் மற்றும் பிறர், தமது கோரிக்கைகளை தேசியக் கண்ணோட்டத்தில் பார்க்குமாறு வேண்டுகிறேன். உங்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்கிறோம்; உங்களுடன் நாங்கள் நிற்கிறோம். தங்களுடைய இன்னல்களை, சமூகத்தில் பிறர்படும் இன்னல்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள் என்கிறேன்.

தொழிலாளர் மத்தியில் நிலவும் ஒழுங்கீனம் பற்றிப் பேசுகிறபோதே, தொழிலதிபர்களும் செல்வமிக்க வணிகர்களும் தமது பொறுப்புகளில் இருந்து தப்பித்து விட முடியாது என்றும் கூற விரும்புகிறேன். தொடர்ந்து, பெருத்த வருமானம் மற்றும் கனமான ஊதியம் பெற்று வந்தால் இவர்களால் ஒழுங்கைக் கொண்டு வர முடியாது. இந்த பிரச்சினையைப் பற்றி சிந்தித்து ஒரு தீர்வுக்கு வருமாறு இவர்களை நான் வேண்டுகிறேன்.

செல்வந்தர் - வறியோர் இடைவெளியைக் குறைக்க வேண்டும். நமது நாடு வளம் பெற வேண்டும் எனில், தேச நலனுக்காக நமது சொந்த ஆதாயத்தைப் பின் தள்ள வேண்டும். தியாக உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் இந்த நாட்டுக்கான பொறுப்பை உணர்ந்து கொள்ள வேண்டும். பரஸ்பர ஒத்துழைப்பு உணர்வையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். வறுமை ஒழிப்புதான் நமது முதன்மை இலக்கு என்பதை மறந்து விட வேண்டாம்.

பொறியாளர்கள் மற்றும் நன்கு படித்தவர்கள் இடையே வேலையின்மை பிரச்சினை இருக்கிறது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயல்கிறோம். புதிய தொழிற்சாலைகளை எவ்வாறு நிர்மாணிக்கலாம், மக்களுக்கு அதிக எண்ணிக்கையில் எவ்வாறு வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம் என்பதைப் பரிசீலிக்கிறோம். படித்தவர்கள் எல்லாரும் அரசு வேலையின் பின்னால் அலைய வேண்டாம் என்று வேண்டுகிறேன். அவர்கள் தமக்குத் தாமே புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். நம்முடைய வளரும் பொருளாதாரத்தில் வாய்ப்புகளுக்கான, இடம் நிறைய இருக்கிறது. தன்னுதவி, தற்சார்பு உணர்வை அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். ("I would appeal to educated people not to hanker after government jobs. They should try and create new opportunities for themselves. There is ample scope for them in our developing economy. They should develop a spirit of self-help and self-reliance.")

நாம் பல நூறு கோடிகளை பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளோம். இந்தத் தொகை, தொழிலாதிபர்கள், செல்வந்தர்களுக்கு சொந்தமானது அல்ல. இது - பொதுப் பணம். பொதுத்துறை நிறுவனங்கள் ஈட்டும் லாபத்தை, பள்ளிகள் சாலைகள் மருத்துவமனைகள் கட்டுவதற்காக மக்கள் நலனுக்காக செலவிடுகிறோம். எனவே பொதுத்துறை நிறுவனங்கள் திறமையாகவும் லாபகரமாகவும் நடப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த நிறுவனங்களில், ஒட்டுமொத்த இந்திய மக்களும் பங்குதாரர் ஆவார்கள். பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், மேலாளர்களுக்கு ஒரு சிறப்பு பொறுப்பு இருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள், பல குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு உள்ளன. எல்லா பொதுத்துறை நிறுவனங்களும் மோசமாக நிர்வகிக்கப்படுகின்றன என்று பொருள் அல்ல. சில நிறுவனங்கள் மிகத் திறமையாகவே நிர்வகிக்கப்படுகின்றன.

நமது வளர்ச்சி - தேச ஒற்றுமை, அமைதி, பொருளாதார அரசியல் நிலைத்தன்மையைச் சார்ந்து உள்ளது. சமீபத்தில் நமது நாட்டில் அரசியல் மாற்றங்களைக் கண்டோம். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள எதிர்மறை சிந்தனையாளர்கள், இந்த நாடு சீர்குலைந்து விடும் என்று ஆருடம் கூறினர். ஆனால் நம்முடைய ஜனநாயக கட்டமைப்பின் வலிமை இவர்களின் கூற்று, பொய் என்று நிரூபித்தது. இந்திய வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமையை நன்கு உணர்ந்துள்ளார்கள். இவர்கள் எப்போதும் தேச நலனுக்காக தங்களுடைய உரிமையை சரியாகப் பயன்படுத்துவார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன்.

நம்முடைய செய்கைகள் சர்வதேச அரங்கில் எதிர்வினை ஆற்றுகின்றன. விரைந்து நகர்கிற உலகில் நாம் வாழ்கிறோம். ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுடன் நட்புறவை வளர்க்க முயல்கின்றன. வேறுபாடுகள் இருந்தாலும் எந்த நாடும் மற்றொரு நாட்டுடன் உறவைத் துண்டித்துக் கொள்வதில்லை. இருநாட்டு சச்சரவில், நட்பு நாடுகள் கூட உள்ளே புக விரும்புவதில்லை.

அணிசாராக் கொள்கையை இந்தியா எப்போதும் பின்பற்றுகிறது. ஒவ்வொரு பிரச்சினையிலும் தகுதி (நியாயம்) அடிப்படையிலேயே தீர்மானிக்கிறோம். பிற நாடுகளும் இந்தக் கொள்கையை விரும்புகின்றன. பழைய கூட்டணி ஏற்பாடுகள் பலவீனம் அடைந்து வருகின்றன. சமீபத்தில் ரஷ்யா பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் விற்க முடிவு செய்தது. இது நமக்கு கவலை தந்தது. நமது பார்வையில் இது துரதிருஷ்டமான முடிவு. ஆனால் இதற்காக நாம் அநாவசியமாக கவலைப்பட வேண்டாம்.

உலகப் பார்வையில் நாம் அஞ்சுகிற நடுங்குகிற நாடாக இருத்தல் கூடாது. நாம் வலிமை மிக்க நாடு. கடந்த இரண்டு ஆண்டுகளில், இந்த நாட்டை வலிமையாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். நமது துருப்புகள், எல்லையில் மிகுந்த துணிச்சலுடன் காவல் காக்கின்றனர். பிற நாடுகள் என்ன சொல்கின்றன என்பது பொருட்டல்ல. நமது வலிமையில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும். இன்றைய உலகில் ராணுவ வலிமை மட்டுமே வலிமை அல்ல. வலுவான தொழில் கட்டமைப்பும் தேச ஒற்றுமையுமே தேவை. நம்மை பாதுகாத்துக் கொள்வதில் நமக்குள்ள திறமையில் நம்பிக்கை இழக்க வேண்டாம்.

எந்த ஒரு நாட்டின் அழுத்தத்துக்காவது நாம் பணிந்து போகிறோமா? எந்த அழுத்தத்துக்கும் இந்தியா பணிந்து போகாது என்பதை இங்கே மிக உறுதிபட அறிவிக்கிறேன். மனஉறுதி கொண்ட மனிதர்கள் அடிபணிவதில்லை. நமக்கு மிகுந்த மன உறுதி இருக்கிறது. மிகுந்த வைராக்கியம் இருக்கிறது.

பாகிஸ்தான் உடன் நமக்கு சில வேறுபாடுகள் உள்ளன. நாம் நெருக்கமான உறவு கொண்டிருந்தோம் என்பதும் இந்த வேறுபாட்டுக்கு காரணமாக இருக்கலாம். சில சமயங்களில் சகோதரர்களுக்கு இடையே தீவிர வேறுபாடுகள் ஏற்படுகின்றன. ஆக்கிரமிப்பு மற்றும் பகைமைப் பிரசாரத்தை அனுபவித்தவர்கள் நாம். இருந்த போதும், ஜவஹர்லால் நேரு மற்றும் லால் பகதூர் சாஸ்திரி இருவரும் பாகிஸ்தானுடன் போர் மறுப்பு ஒப்பந்தம் (No War Pact) செய்து கொண்டனர். இன்று நான் மீண்டும் ஒருமுறை, போர் மறுப்பு ஒப்பந்தத்தை பரிசீலிக்குமாறு பாகிஸ்தானைக் கோருகிறேன். போர் மறுப்பு ஒப்பந்தம் நம் இருவருக்குமே ஆதாயமானது. இதனால் உள்நாட்டு பிரச்சினைகளைத் தீர்த்து, வளர்ச்சி பெற முடியும்.

'இந்த மண்ணில் பிறந்தவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்' என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அதுபோலவே மாபெரும் தலைவர்கள் தோன்றிய நாடும் ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாகும். இத்தகைய மாபெரும் தலைவர்களில் ஒருவர் மகாத்மா காந்தி. வரும் அக்டோபரில் மகாத்மா காந்தியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. அவருடைய வாழ்நாளில் இருந்தது போன்றே, இப்போதும் அவருடைய புனிதமான கொள்கைகள் மிகவும் பொருத்தமானதாக மதிப்பு வாய்ந்ததாய் இருக்கின்றன. எதிர்காலத்திலும் இதே மதிப்புடன் திகழும். காந்திஜி தன்னுடைய வாழ்வை தலித்துகள், ஏழைகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்தார். தேச ஒற்றுமைக்காக தனது உயிரை தியாகம் செய்தார். அவரது போதனைகள், புனிதமான கொள்கைகளில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும்.

இன்று நாம் இந்திய இளைஞர்களை பற்றி யோசிக்கிறோம். இவர்களே இந்த நாட்டின் முதுகெலும்பு. நமது நாட்டின் வலிமை இவர்களின் வலிமையைச் சார்ந்து இருக்கிறது. உலகத்திலும் இந்தியாவிலும் இளைஞர்கள் மனதில் ஒரு ரசாயன மாற்றம் தெரிகிறது. இந்த மாற்றத்துக்குப் பல காரணங்கள் உள்ளன. புது யுகத்தின் பிரச்சினைகளுக்கு மரபுசார் நடைமுறைகள் தீர்வு தராது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட புள்ளி வரையில்தான் நம்மால் இளைஞர்களுக்கு தலைமை ஏற்க முடியும். அந்தப் புள்ளியில் இருந்து இளைஞர்கள் அவர்களாகவே தமக்கும் இந்த நாட்டு எதிர்காலத்துக்குமான புதிய பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும். ("We can provide leadership to the youth only upto a point. From that point, they have to carve out a new path for themslves and for the nation's future.") அவர்கள் பல இன்னல்களை சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். இன்னல்கள் என்னும் மலையில் ஏற வேண்டும். அல்லது அதைக் குடைந்து செல்ல வேண்டும். இதைத் தவிர்த்து வேறு வழி இல்லை.

இளைஞர்கள் தாம் நமது நம்பிக்கை. பல துறைகளில் அவர்கள் இந்த நாட்டுக்கு வலிமை சேர்க்க முடியும். ஒரு மகத்தான நாட்டை கட்டமைக்கும் வலுவான பணியில் அவர்கள் ஈடுபடுவார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன். இவர்களின் உற்சாகம் மற்றும் உத்வேகம், ஒட்டுமொத்த நாட்டையும் ஊக்குவிக்கும்.

சகோதர சகோதரிகளே, நம் ஒவ்வொருவரின் நலனும் இந்த நாட்டின் வளமையுடன் இரண்டறக்கலந்து இருக்கிறது. நமக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து இந்தியாவை வலிமையாக வளமானதாக மாற்ற வேண்டும். நம் முன் உள்ள இன்னல்களை நாம் அனைவரும் ஒன்றுபட்டு எதிர்கொள்ள வேண்டும். சமவெளியில் மலைகளில் எல்லையில் கடற்கரைகளில்... எங்கு இருந்தாலும் நாம் இந்த நாட்டின் குடிமக்களே. அறிந்தோ அறியாமலோ இந்த நாட்டின் மாண்பைக் குறைக்கும் எதையும் நாம் செய்தல் கூடாது. புது யுகத்துக்கான, வலிமையான தேசத்துக்கான அடித்தளமிட்டோம் என்று நம்மை வருங்கால சந்ததியர் நினைவு கொள்கிற வகையில் நாம் நடந்து கொள்ள வேண்டும்.

இந்த 21-வது சுதந்திர நாளில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். தம்முடைய கடின உழைப்பின் மூலம், உணவு பற்றாக்குறை பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு தந்த விவசாயிகளைப் பாராட்டுகிறேன். உற்பத்தியை பெருக்கிய தொழிலாளர்களைப் பாராட்டுகிறேன். இன்னல்களை துணிச்சலுடன் எதிர்கொண்ட அத்தனை பேரையும் பாராட்டுகிறேன். தலைநகரில் இருக்கும் நாம் இந்தியர்கள் அனைவரையும் சம பங்காளராகவே பாவிக்கிறோம். நமது நல்லெண்ணம், ஆதரவு, உதவி அவர்களுக்கு எப்போதும் கிடைக்கும். இந்தப் பழமையான தேசத்தை நவீன வலிமையான வளமையான தேசமாக உருவாக்க அனைவரும் கைகோர்க்குமாறு நாட்டு மக்களை அழைக்கிறேன்.

காந்திஜியின் தன்னலமற்ற சேவை நமது நாட்டு வரலாற்றில் அழிக்க முடியாத தடம் பதித்து இருக்கிறது. இனி வரும் எல்லா நாட்களிலும் அவர் நினைவுகூரப்படுவார். அவருடைய போதனைகள் மற்றும் புனிதமான கொள்கைகளில் இருந்து எழுச்சி பெற்று அவருடைய கனவை நினைவாக்க முயற்சி மேற்கொள்வோம்.

இந்த நாளில், உங்களுடன் பேசும் இந்தத் தருணத்தில், செங்கோட்டையின், செங்கோட்டை உடனான இரண்டு நிகழ்வுகள் நினைவுக்கு வருகின்றன. இந்திய தேசிய ராணுவம், செங்கோட்டையை நோக்கி வருமாறு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அழைப்பு விடுத்தார். அவர்தான் நமக்கு ஜெய்ஹிந்த் முழக்கத்தை தந்தார். இந்த முழக்கத்தை ஜவஹர்லால் நேரு இந்த நாட்டின் எல்லா மூலை முடுக்குகளுக்கும் கொண்டு சென்றார். இன்று ஜெய்ஹிந்த் முழக்கம், நமது ஒற்றுமையின் வலிமையின் அடையாளமாக இருக்கிறது.

என்னுடன் சேர்ந்து இந்த முழக்கத்தை மூன்று முறை ஒலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்! ஜெய்ஹிந்த்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x