Published : 07 Aug 2023 03:16 PM
Last Updated : 07 Aug 2023 03:16 PM

செங்கோட்டை முழக்கங்கள் 2 - வழிகாட்டும் அணையா விளக்கு | 1948

ஓராண்டு... இல்லையில்லை... அரையாண்டு கூட நிறைவடையவில்லை. அதற்குள்ளாகவே, இழக்கக் கூடாத விலை மதிப்பற்ற மனிதகுல மாணிக்கத்தை இழந்து விட்டோம்.

அறியாமை மண்டிக் கிடந்த மிகப் பெரிய மக்கள் கூட்டத்தை, அறவழிப் போராட்டத்துக்குத் தயார்ப் படுத்தினார்; மறுபலன் எதிர்பாராத தன்னலமற்ற தியாகிகளாய் அவர்களை மாற்றினார்; கற்பனையிலும் யாரும் முயற்சிக்காத சத்திய வேள்வியில் அவர்களை உட்படுத்தினார்; சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை தானாக வெளியேறச் செய்தார்; நம்பமுடியாமல் உலகம், இந்தியாவை அண்ணார்ந்து பார்க்கச் செய்தார் - மகாத்மா காந்தி!

“ரத்தமும் சதையுமாய் இப்படியொரு மனிதன் இந்த மண்ணில் நடமாடினார் என்பதை நாளைய உலகம் நம்ப மறுக்கும்’ எனும்படி வாழ்ந்த மகாத்மாவின் மறைவு, உலகையே உலுக்கி விட்டது. எனில், அவரோடே பயணித்து, அவரின் தலைமைச் சீடனாய், சுதந்திர இந்தியாவின் தலைமைப் பொறுப்பு ஏற்றிருந்த ஜவஹர்லால் நேரு எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருப்பார்!

தனது வாழ்வில் நேரு சந்தித்த இரு பெரும் அதிர்ச்சிகள் - தனக்கு எல்லாமாய் இருந்த மகாத்மாவின் மறைவு; உற்ற நண்பன் என்று தான் உண்மையாய் நம்பிய சீனா, இந்தியா மீது தொடுத்த போர்.

நிலை குலைந்து போன நேரு ஒருவழியாய்த் தன்னைத் தேற்றிக் கொண்டு நாட்டுப் பணிக்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட நாள் - 1948 ஆகஸ்ட் 15. அன்று, சுதந்திர தின உரைக்கு முன்னதாக நாட்டு மக்களுக்கு பிரதமர் நேரு விடுத்த செய்தியின் மையக் கருத்து இது: “இந்தியாவின் வலுவான வளங்களை எண்ணிப் பார்ப்போம். இதனைப் பொது நோக்குடன் மக்களுக்காகப் பயன்படுத்தினால், இந்தியாவின் முகத்தை மாற்றி விடலாம், இந்தியாவை வளமானதாய் பெருமை உடையதாய் மாறி விடலாம்.”

அன்று அவர் தொடங்கிய ஆட்டம்… வளமான எதிர்காலத்தை நோக்கி அன்று நாம் எடுத்த ஓட்டம்… இன்று நாம் காணும் அத்தனை வளங்களும் அத்தனை வலிமைகளும்! அன்று நேரு விதைத்த இந்தச் செய்தியின் விளைவு; இல்லையில்லை… விளைச்சல்! ‘அகன்ற இதயம் ஆழமான சிந்தனை நமக்கு வேண்டும்’ என்பதை 1948 சுதந்திர தின உரையில் பிரதமர் நேரு மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தினார்.

”நாம் எப்படியோ நம் நாடும் அப்படியே இருக்கும். நம்முடைய சிந்தனையும் செயல்களுமே இந்த நாட்டை வடிவமைக்கும். நாம் பெரியவர்கள் என்றால் இந்தியாவும் பெரியதாய் இருக்கும். நம் சிந்தனை, அணுகுமுறை குறுகியதானால், இந்தியாவும் அப்படியே இருக்கும்.” (“If we are big, so will India be, and if we grow little minded and narrow in outlook, so also India will be.”)

இதோடு, வேறொரு அறிவுரையும் கூறினார். இதை அவர் தனது வாழ்நாள் முழுதும் தொடர்ந்து கூறிக் கொண்டே இருந்தார். உண்மையில் இதுதான் பண்டிதர் நேருவின் வாழ்க்கை நமக்கு விட்டுச் சென்ற செய்தி என்று கொள்ளலாம். என்ன அது..? தனது உரையில் நேரு குறிப்பிடுகிறார்: “நாம் எவ்வளவு தருகிறோமோ அதைவிட அதிகமாய் அவளிடம் (இந்த நாட்டிடம்) இருந்து எதையும் பெற மாட்டோம்”. (“We can take nothing from Her beyond what we give Her”)

மகாத்மாவைத் தனது உரையில் நினைவுகூர்கிற நேரு, ஒரு முக்கிய கருத்தை வெளிப்படுத்துகிறார். “பல தோல்விகள் வரலாம். ஆனால் உண்மையான தோல்வி எனில் அது, மகாத்மா காந்தி முன்னெடுத்த உயரிய நெறிகளில் இருந்து பிறழ்ந்து செல்வதுதான். நேர்மையான வழிகள் மூலமாகவே நேரிய இலக்குகள் சாத்தியம் என்றார் மகாத்மா. அவரை இழந்த பிறகான இந்த சில நாட்களில் நான் உணர்ந்து கொண்டது இதுதான் - இந்தியா வளர வேண்டுமெனில், உயர்ந்து நிற்க வேண்டும் எனில், மகாத்மாவின் கொள்கைகளைப் பின்பற்றினால் மட்டுமே சாத்தியம்”.

இந்தச் செய்தி பலருக்குக் குழப்பத்தைத் தரலாம். இயந்திரமயமாதலை ஆதரித்த நேரு, இந்தச் செய்திக்கு மாறாகத் தானே நடந்து கொண்டார்..? அது எப்படி காந்தியின் பாதை ஆகும்? வேறு எதையும் விட, மகாத்மா காந்தியின் முக்கிய கொள்கையாக நேரு கருதியது - ஒற்றுமை, அமைதி.

மனிதருக்குள் வேற்றுமை பாராட்டாது, வன்முறைக்கு இடம் தராது அனைவரும் ஒற்றுமையாய் அமைதியாய் வாழலாம். இந்தக் கொள்கையை நேரு முழுமையாக ஆதரித்ததால், இதனை முழுமையாக நம்பியதால், இதனை முழுமையாக ஏற்றுக் கொண்டு செயல் வடிவம் தர நினைத்ததால், உலக அமைதிக்காக, போர் இல்லாத உலகத்துக்காக அவர் உண்மையிலேயே பாடுபட்டார். அதனால்தான், அவரது சிலையில் கூட அமைதிப் புறாவை அவரது கரங்களில் செதுக்கி இருக்கிறோம்.

போரில் ஈடுபடும் எந்த நாடும் வளர முடியாது; போரில் ஆர்வம் உடைய எந்த அரசாலும் தனது நாட்டு மக்களுக்கு வளமான எதிர்காலத்தைத் தர முடியாது. அமைதி இருக்கும் இடத்தில்தான் முன்னேற்றம் சாத்தியம் என்று காந்தி முழங்கினார். நேரு அதன்படியே நடந்தார். இன்றுள்ள சர்வதேச அரசியலை எண்ணிப் பாருங்கள்… எத்தனை ஆயிரம் கோடிகள் போருக்காகவும், எத்தனை லட்சம் கோடிகள் போரினால் ஏற்படும் மறைமுக இழப்பாகவும் நாம் இழந்து வருகிறோம்! ஆயுதக் குறைப்பு குறித்துப் பேசக் கூட யாரும் தயாராக இல்லை! வெகு தூரம் விலகி வந்து விட்டோம்.

தனது உரையில் நேரு குறிப்பிடுகிறார்: “இன்று நான், முரண்கள், போர்களைப் பற்றிப் பேச விரும்பவில்லை; அமைதி, ஒத்துழைப்பு பற்றியே பேச விழைகிறேன். உலக நாடுகளுக்கு, அண்டை நாட்டுக்கு சொல்கிறேன் – நாங்கள் அமைதிக்காக, நட்புக்காக நிற்கிறோம். முழு வலிமையுடன் நாம் தொடுக்க வேண்டிய போர் ஒன்று உண்டு; அது- வறுமைக்கு எதிரான போர்.”

யாரைக் கண்டும் யாரும் அஞ்ச வேண்டாம்; நமக்குள்ளேயே பகைமை பாராட்ட வேண்டாம் என்பதில் நேருவுக்கு தெளிவு இருந்தது.

“அச்சத்தின் பிடியில் சிக்கியுள்ளோம் நாம். இந்த அச்சம் - எங்கோ தூரத்தில் உள்ள பகைமையால் எழுந்தது அல்ல; ஒருவர் மீது மற்றவர் கொண்டுள்ள அச்சம் இது. இந்த அச்சத்தின் பிள்ளகள்தான் - வெறுப்பு, வன்முறை”.

தொடர்கிறார்: “மதவாதம் நமக்குள் இருக்கும் சுதந்திர எண்ணங்களை அச்சுறுத்துகிறது. ஒரு சிறு துண்டின் பாகமா நாம்..? மிகப் பெரும் விழுமியங்களைத் தாங்கி நிற்க வேண்டாமா..?”

அறிவுறுத்துகிறார் ஜவஹர்லால் நேரு: “நம்மை நாமே கண்டெடுக்க வேண்டும்; நமது கனவுகளில் இருக்கும் சுதந்திர இந்தியாவுக்கு நாம் திரும்ப வேண்டும். பழைய விழுமியங்களை மீட்டெடுக்க வேண்டும்; புதிய சுதந்திர இந்தியாவில் அதனை நாம் பொருத்த வேண்டும்”. (“We have to find ourselves and go back to the Free India of our dreams. We have to rediscover the old values and place them in the new setting of Free India.”)

1948 உரையின் சாராம்சமாக இதனைச் சொல்லலாம். எந்தக் குழப்பமும் இன்றி தெளிவாக, தெள்ளத் தெளிவாக அறிவிக்கிறார் பிரதமர் நேரு. அது என்ன..? “பெருவாரியான மக்களுக்கு அவர்களின் சுமைகளில் இருந்து நிவாரணம் தரவில்லை எனில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே இல்லை”.

நிறைவாக நாம் கொள்ள வேண்டிய செய்திதான் என்ன..? அது இதோ… ”ஜனநாயகம் என்றால் சகிப்புத்தன்மை; சுதந்திரம் பெற்ற கையோடு அதற்குப் பொருந்துகிறது போல நம்முடைய மனப்போக்கு, நடத்தையை மாற்றிக் கொள்ள வேண்டும்” ஆங்கிலத்தில் மிக எளிமையாகக் கூறுகிறார்: “With the coming of freedom, our patterns of behaviour must change also - to fit in with this freedom.”

உண்மைதான். அமைதி, ஒத்துழைப்பு, சகிப்புத்தன்மை - இந்த மூன்றும்தான் நேருவின் அடையாளங்கள். இவையே நம் தேசத்தின்அடையாளங்கள்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x