Published : 04 Aug 2023 08:55 PM
Last Updated : 04 Aug 2023 08:55 PM

செங்கோட்டை முழக்கங்கள் 1 - கிழக்கே ஒரு நட்சத்திரம் | 1947

“இந்தியாவுக்கு, ஆசியாவுக்கு, உலகத்துக்கே, விதியை நிர்ணயிக்கிற தருணம் இது. கிழக்கே ஒரு புதிய நட்சத்திரம், சுதந்திரத்தின் நட்சத்திரம் உதிக்கிறது. ஒரு புதிய நம்பிக்கை உயிர் பெறுகிறது. நீண்ட காலமாகப் போற்றி வந்த லட்சிய நோக்கு செயல்வடிவம் பெறுகிறது. இந்த நட்சத்திரம் எந்நாளும் மறையாது ஒளிரட்டும்! (உலகின்) நம்பிக்கை பொய்க்காது இருக்கட்டும்.”

இந்தியா சுதந்திரம் பெற்ற நாளில் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரையில் உற்சாகம், நம்பிக்கை, எதிர்பார்ப்பு, பொறுப்புணர்ச்சி மிகுந்து இருந்தது. இன்றளவும் உலகம் கண்டு வியக்கும் காந்தியப் போராட்டத்தை முன்னெடுத்து, மகத்தான வெற்றி கண்ட பழம்பெரும் தேசம் விடுக்கும் ‘விடுதலைச் செய்தி’ எப்படி இருத்தல் வேண்டும்? ஜவஹர்லால் நேரு அதனை மிகச் சிறப்பாகச் செய்தார்.

1947 ஆகஸ்ட் 15 அன்று நாட்டு மக்களுக்கு ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரை – சிறந்த மொழி நடை, சீரிய சிந்தனை, அர்த்தமுள்ள கருத்துகள், தெளிவான செயல் திட்டம் கொண்டதாய், உலக வரலாற்றில் பதிவான மிக முக்கிய உரையாக அமைந்தது.

“இந்தத் தருணத்தில், இந்தியாவுக்கு, இந்திய மக்களுக்கு, மிகப் பெரிய மனித குலத்துக்கு சேவை புரிய நம்மை நாம் அர்ப்பணிக்க உறுதி ஏற்கிறோம்”. இந்த உரையின் ‘மகத்துவம்’ எத்தகையது? நமக்கு ஒருநாள் முன்னதாக சுதந்திரம் பெற்ற ‘அந்த நாட்டின்’ தலைமகனார் ஆற்றிய உரையைப் படித்தால் நன்கு புரியும். யாரையும் குறை சொல்வதற்காக அல்ல; நம்முடைய பயணம் எப்படித் தொடங்கியது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளவே இந்தக் குறிப்பு. நாட்டு மக்கள் முன், நேரு ஒரு கேள்வியை முன் வைக்கிறார்.

“எதிர்காலத்தின் சவால்களை ஒப்புக்கொள்ள வாய்ப்புகளைக் கவர்ந்துகொள்ள துணிச்சலும் அறிவும் நமக்கு இருக்கிறதா..?” (“Are we brave enough and wise enough to grasp this opportunity and accept the challenge of the future?”). (பேச்சின் ஆழத்தைப் புரிந்து கொள்ள, பொது மேடையில் பேச, போட்டித் தேர்வுகளில் எழுத நம்முடைய மொழியாற்றலை வளர்த்துக் கொள்ள உதவும் என்பதால், ஆங்காங்கே உரைகளின் மூலத்தில் உள்ள முக்கியமான வாசகங்கள் அடைப்புக் குறிக்குள் அப்படியே சொல் பிசகாமல் ஆங்கிலத்தில் தரப்படுகின்றன.)

எத்தனை அர்த்தம் பொதிந்த கேள்வி இது..! வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அறிவு மட்டுமல்ல; துணிச்சலும் தேவை; அது இருக்கிறதா..? புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தில் நாட்டு மக்களிடம் பிரதமர் தொடுக்கும் இந்த வினா, அறிவார்ந்தது மட்டுமல்ல; துணிச்சலானதும் கூட.

‘நல்ல எதிர்காலம்’ – நாட்டு மக்களின் அறிவு உழைப்பு இன்றிப் பெற முடியாது. இதனை உணர்ந்து மக்களைத் தயார் செய்யும் பணியை முதல் நாளிலேயே முதல் உரையிலேயே தொடங்கி விடுகிறார் முதல் பிரதமர். காந்தியின் பிரதான சீடர் அல்லவா..? வேறு எப்படி இருக்க முடியும்?!

தொடர்ந்து கூறுகிறார்: “இந்தியாவுக்கான சேவை என்பது வேதனைப்படும் பல லட்சக்கணக்கானவருக்கு சேவை செய்தல் என்று பொருள். வறுமையை, அறியாமையை, நோய்களை, வாய்ப்புகளில் சமமின்மையை முடிவுக்குக் கொண்டு வருகிற சேவை என்று பொருள். நமது தலைமுறையின் ஆகச் சிறந்த மனிதர் (மகாத்மா) கொண்டுள்ள லட்சியம் – ஒவ்வொருவரின் கண்ணில் இருக்கும் ஒவ்வொரு துளி கண்ணீரையும் துடைப்பதுதான்.” (The ambition of the greatest man of our generation has been to wipe every tear from every eye). தொடர்ந்து அடுத்த கட்டத்துக்கு மக்களை நகர்த்துகிறார் நேரு.

“இந்தியாவின் கனவுகள், இந்த உலகத்தின் கனவும் கூட. எல்லா நாடுகளும் எல்லா மக்களும் பின்னிப் பிணைந்து இருக்கிறோம். தனித்து நிற்பேன் என்று யாரும் கற்பனை கூட செய்ய இயலாது. சுதந்திரத்தைப் போலவே அமைதியும், வளமும் (நம் வாழ்க்கையில்) இருந்து பிரிக்க முடியாதவை.”

தனது பொறுப்பை உணர்ந்து மக்களிடம் அதனை நாசூக்காகக் கடத்துகிறார். “சுதந்திரத்தால் நாம் மகிழ்ச்சியில் திளைக்கிறோம். ஆனால் மேகங்கள் நம்மை சூழ்ந்து இருக்கின்றன. நம்மில் பலர் வருத்தத்தில் உள்ளனர்; மிகக் கடினமான பிரசினைகள் நம்மைச் சுற்றி உள்ளன. இவற்றை நாம் சுதந்திர உணர்வுடன் கட்டுப்பாடான மக்களாய் இருந்து எதிர்கொள்ள வேண்டும்.”

“இந்த நாளில் நம்மைச் சுற்றியுள்ள இருளை அகற்ற தீபத்தை ஏந்தி நிற்கும் தேசத் தந்தை காந்தியை நினைவுகூர்கிறோம். அன்னாரின் செய்தியில் (கொள்கையில்) இருந்து விலகி இருக்கிற நாம் (அவரின்) தகுதியற்ற தொண்டர்கள்.” (We have often been unworthy followers and have strayed from his message) நிறைவு செய்யுமுன் மீண்டும் ஒருமுறை நினைவு படுத்துகிறார்; எச்சரிக்கிறார் – “கடினமான பணி நம் முன் இருக்கிறது.

நமக்கு ஓய்வு இல்லை. துணிச்சலான முன்னேற்றத்தின் தொடக்கத்தில் உள்ள மாபெரும் தேசத்தின் குடிமக்கள் நாம். (We are citizens of a great country on the verge of bold advance) எந்த மதத்தைச் சேர்ந்தவர், ஆனாலும், சம உரிமைகள், சம பெருமைகள், சம கடப்பாடுகளுடன் இந்தியாவில் பிள்ளைகளாக இருப்போம். மதவாதத்தை, குறுகிய மனப்பான்மையை நாம் அனுமதிக்கலாகாது. குறுகிய சிந்தனை, குறுகிய செயல்பாடுகள் கொண்ட மக்கள் வாழும் எந்த நாடும், சிறந்ததாக இருக்க இயலாது.” (“no nation can be great whose people are narrow in thought and in action’).

“உலக நாடுகளுக்கு, உலக மக்களுக்கு வாழ்த்துகளை அனுப்புகிறோம். அமைதி, சுதந்திரம், ஜனநாயகம் தழைக்க உங்களோடு கூட்டாகச் செயல்பட உறுதி ஏற்கிறோம்”. (“To the nations and peoples of the world we send greetings and pledge ourselves to cooperate with them in furthering peace, freedom and democracy”)

“மிகத் தொன்மையான என்றும் புதியதான நேசமிக்க தாய் நாடு இந்தியாவை வணங்குகிறோம். மீண்டும் புத்துணர்ச்சியுடன் இந்த நாட்டின் சேவையில் கட்டுண்டு இருப்போம்.” (“We bind ourselves afresh to Her service”).

உரையை முழுவதுமாக மீண்டும் மீண்டும் வாசிக்கும் போது – அடங்காத பிள்ளைகள் நிறைந்த ஒரு பள்ளிக்குத் தலைமை ஆசிரியராகப் பொறுப்பு ஏற்றால் எப்படி இருக்கும்? ஏறத்தாழ அந்த மன நிலையில் பண்டிதர் நேரு இருந்திருப்பார் என்றே தோன்றுகிறது.

எத்தனை பெரிய பொறுப்பு? நம் முன் உள்ள சவால்கள் எத்தனை? எல்லாரையும் ஒருங்கிணைத்து, வளர்ச்சிப் பாதைக்குத் திருப்புவது எப்படி? சாத்தியமா..? எப்படி..? என்ன செய்யப் போகிறோம்..?

இந்த சிந்தனைதான் நேருவை ‘நவீன இந்தியாவின் சிற்பி’ ஆக்கியதோ?

(தொடர்வோம்)

முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் - ஓர் அறிமுகம் | புதிய தொடர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x