Last Updated : 31 Dec, 2023 01:10 PM

 

Published : 31 Dec 2023 01:10 PM
Last Updated : 31 Dec 2023 01:10 PM

‘திட்டமிடுதல், சிக்கனம் தேவை’ - விருச்சிகம் ராசியினருக்கான 2024 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 

விருச்சிகம் ஆன்மிகம் முதல் அறிவியல் வரை அனைத்தையும் அறிந்து வைத்திருக்கும் நீங்கள், நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள். மென்மையும், விட்டுக்கொடுக்கும் மனமும், எல்லோருக்கும் உதவும் குணமும் கொண்ட நீங்கள், மற்றவர்களை வழி நடத்துவதில் வல்லவர்கள்.

உங்களுக்கு 10-வது ராசியில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் பதவி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு எதிர்பார்த்தது போல வேலை அமையும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். குருபகவான் 30.4.2024 வரை உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் மறைந்திருப்பதால் சில நேரங்களில் வீண் டென்ஷன், மன உளைச்சல், வேலைச்சுமை, வீண் பழி, செரிமானக் கோளாறு வந்து நீங்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். எதிரிகளில் சிலர் நண்பர்களாவார்கள். உள்மனதில் ஒருவித போராட்டம் எழும்பும். திட்டமிட்ட காரியங்களை இரண்டு மூன்று முறை அலைந்து முடிக்க வேண்டி வரும். அதிக வட்டிக்கு வாங்கிய கடனில் ஒருபகுதியை கொடுத்து முடிப்பீர்கள். குலதெய்வ கோயிலை புதுப்பிப்பீர்கள். தங்க ஆபரணங்கள், வீட்டுப் பத்திரங்களை கவனமாக கையாளுங்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். உறவினர்கள், நண்பர்களுடன் அதிக உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.

குருபகவான் 1.5.2024 முதல் 7-ம் வீட்டில் அமர்வதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். சோர்ந்துக் கிடந்த நீங்கள் உற்சாகமாவீர்கள். எதிலும் ஆர்வம் பிறக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முழுமையடையும். வீட்டில் தாமதமான சுப நிகழ்ச்சிகள் இனி கோலாகலமாக நடக்கும். தம்பதிக்குள் இருந்த சந்தேகம், ஈகோ பிரச்சினைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. தள்ளிப் போன வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். மகளுக்கு இருந்த கூடாப்பழக்கம் விலகும். மகனுக்கு நீங்கள் எதிர்பார்த்ததைப் போல நல்ல குடும்பத்திலிருந்து பெண் அமையும். வீட்டை கட்டி முடிக்க எதிர்பார்த்த வங்கிக் கடன் கிடைக்கும். தாயாருக்கு இருந்த நெஞ்சு வலி நீங்கும். செலவுகளை குறைத்து இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். பூர்வீகச் சொத்திலிருந்த பிரச்சினை தீரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

இந்த வருடம் முடிய ராகுபகவான் 5-ம் வீட்டிலும், கேது 11-ம் வீட்டிலும் தொடர்வார்கள். ராகுவால் கனவுத் தொல்லை, பிள்ளைகள் விஷயத்தில் அலைச்சல் வந்து செல்லும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். வயிற்று வலி, தோல் நோய் வரக்கூடும். அசைவ, கார உணவுகளை தவிர்த்து விடுங்கள். தாய்மாமன் வகையில் மனத்தாங்கல் வரும். கேதுவால் திடீர் யோகங்களும், பணவரவும் உண்டாகும். மூத்த சகோதரர்கள் உதவுவார்கள். கௌரவப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்ந்து தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள்.

இந்தாண்டு முழுவதும் சனிபகவான் உங்கள் சுகஸ்தானமான 4-ம் வீட்டிலேயே தொடர்வதால் இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. வாகனம் அடிக்கடி பழுதாகும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள். தாயாருக்கு சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும். தாய்வழி சொத்தை விற்று புது சொத்து வாங்குவீர்கள். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். வேற்றுமதத்தினர் உதவுவார்கள். இலவசமாக அறிமுகமாகும் கெட்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி விடாதீர்கள்.

வியாபாரிகளே! சந்தை நிலவரம் அறிந்து புது முதலீடு செய்வது நல்லது. முன் பின் அனுபவம் இல்லாத துறையில் மற்றவர்களை நம்பி கைப்பொருளை இழக்க வேண்டாம். கொடுக்கல் - வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். அனுபவம் மிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். ரியல் எஸ்டேட், பதிப்பகம், இரும்பு, துரித உணவு வகைகளால் லாபம் பெறுவீர்கள். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். ஏப்ரல் மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் புது ஏஜென்சி எடுப்பீர்கள். புரிந்து கொள்ளாமல் அவ்வப்போது பிரச்சினை செய்த கூட்டுத்தொழில் பங்குதாரர்கள் இனி பணிந்து போவார்கள். பழைய பங்குதாரர்களும் தேடி வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களே! எதற்கெடுத்தாலும் உங்களை குறை சொல்லுவதற்கென்றே இருந்த கூட்டம் காணாமல் போகும். இனி உங்களின் மதிப்பு மரியாதை கூடும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். சம்பள பாக்கியும் கைக்கு வரும். ஏபரல் மாதத்தில் அயல்நாட்டு நிறுவனங்கள் அழைக்கும். இந்தாண்டு முழுவதும் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும். செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உயரதிகாரிகளின் ராஜதந்திரத்தை உடைத்தெறிவீர்கள். உங்கள் மீது தொடரப்பட்ட பொய் வழக்கும் தள்ளுபடியாகும்.

இந்த புத்தாண்டு திட்டமிட்டு செயல்பட வைப்பதுடன், சிக்கனத்தையும் கடைப்பிடிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: மதுரை மாவட்டம், பசுமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீவிபூதி விநாயகரை சென்று வணங்குங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட ஏதேனும் வாங்கிக் கொடுங்கள். மகிழ்ச்சி தொடங்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x