Published : 22 Apr 2021 04:04 PM
Last Updated : 22 Apr 2021 04:04 PM

உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் - 9

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

பரணி நட்சத்திரம் பற்றி கடந்த அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் கார்த்திகை நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கலாம்.

கார்த்திகை

கார்த்திகை நட்சத்திரம் வான மண்டலத்தில் செந்நிற கத்தி அல்லது கூரிய வாள் போன்ற தோற்றத்தில் காணப்படும். இதற்கு வடமொழியில் வெட்டுவது என்ற பொருளுண்டு.

கார்த்திகை என்ற நட்சத்திரம் வானில் காந்தள் மலர் போலவோ அல்லது செங்காந்தள் மலர் போலவோ தெரியும். இதை தீபத்தின் வடிவத்திற்கு இணையாக எடுத்துரைக்கின்றனர்.

கார்த்திகை நட்சத்திரம் ஆண்ராசியாகிய மேஷம் மற்றும் பெண் ராசியாகிய ரிஷபம் ஆகிய இரண்டு ராசிகளில் இருப்பதால், இதை ஆண் பெண் கலந்த அர்த்தநாரீஸ்வர வடிவமாகக் கூறலாம். இந்த அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டே முருகப்பெருமானின் பிறப்பு நிகழ்ந்தது. கார்த்திகை நட்சத்திர அதிதேவதை அக்னி என்று ஜோதிடம் விவரிக்கிறது.

கார்த்திகை நட்சத்திரம் பற்றி கந்த புராணம் மிகத் தெளிவாக கூறுகிறது. சூரபத்மனுக்கு பயந்த தேவர்கள் சிவபெருமானை அணுகி நல்வழி காட்டுங்கள் என்று வேண்டினார்கள்.

அப்போது ஐந்து முகம் (சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம்) எடுத்து தனது நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் மூலம் முருகப் பெருமானை தோற்றுவித்தார் சிவனார்.

சிவபெருமானின் நெற்றிக்கண் என்பது பரணி வடிவத்தைக் குறிக்கும். அதில் இருந்து வெளிவந்த தீப்பொறிகள் கார்த்திகை நட்சத்திர வடிவத்தைக் குறிக்கும்.

தீபத்தின் பெருமை

சூரியன் உச்சமாகும் மேஷத்தின் ஒரு பாதியும், சந்திரன் உச்சமாகும் ரிஷபத்தின் ஒரு பாதியும் இணைந்திருக்கும் நட்சத்திரம் கார்த்திகை. இது அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டது என்று சொன்னேன். அதாவது ஒரு பகுதி ஆண், மறுபகுதி பெண். இதுவொரு ஜோதி வடிவாகும். ஆண் பெண் இரண்டறக் கலந்த குடும்ப ஒற்றுமையைக் குறிக்கும் வடிவமாகும். இந்த நட்சத்திரத்தைதான் கார்த்திகை மாதம் அன்று திருவண்ணாமலையில் ஜோதியாகக் காண்கிறோம்.

இதன் காரணமாகவே, வீட்டில் பெண்களை விளக்கேற்றச் சொல்கிறார்கள். அர்த்தநாரீஸ்வர வடிவமான தீபத்தை பூஜையறையில் ஏற்றி, அனைவரும் தரிசித்து வந்தால், குடும்ப ஒற்றுமை மேலோங்கும்.

கார்த்திகை சூட்சுமம் - வாளும் சத்ரபதி சிவாஜியும்

ஒருவரின் ஜென்ம நட்சத்திர வடிவம் சிறந்த கேடயமாகவோ அல்லது ஆயுதமாகவோ அமையும் என்பது நட்சத்திர சூட்சுமம். சத்ரபதி சிவாஜி அவர்களின் ஜென்ம நட்சத்திரம் கார்த்திகை. எனவே அவரின் ஜென்ம தாரை கார்த்திகை நட்சத்திர வடிவான வாள் அவருக்கு சிறந்த ஆயுதமாக விளங்கியது. மேலும் அவரது நட்சத்திரத்தின் பரம மித்ர நட்சத்திரம் பரணியாகும். பரணியின் அதிதேவதையே துர்கை எனும் பவானி அம்மன் என்று விவரிக்கிறது ஜோதிடம். அந்த பவானியம்மனே சத்ரபதி சிவாஜி அவர்களுக்கு வாளை உபயோகிக்கச் சொல்லி அறிவுறுத்தியதாக வரலாறு சொல்கிறது. அதுபற்றிய சிறு வரலாற்று நிகழ்வு பற்றி விரிவாகவே பார்க்கலாம்.

சிறுவயதில் சத்ரபதி சிவாஜி அவர்களின் கனவில் ஒருமுறை அன்னை பவானி தோன்றினாள். அப்போது தரிசனம் தந்தவள், சிங்கத்தின் மீது அமர்ந்தபடி வந்தாள். சிவாஜிக்கு வீரவாள் ஒன்றையும் பரிசளித்தாள். "இந்த வீர வாள் உன்னிடம் இருக்கும்வரை உனக்கு தோல்வியே கிடையாது" என்று கூறி மறைந்தாள். இந்தக் கனவு அவருக்கு அடிக்கடி வருவதுண்டு.

ஒருநாள் தன்னுடைய சில நண்பர்களோடு சத்யாத்திரி மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஒருபெண்ணை மூன்று வீரர்கள் கற்பழிக்க முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். உடனே அந்த மாவீர இளைஞனான சிவாஜி, அவர்களைத் தாக்க ஆயுதம் தேடிய போது அந்த மலைச்சரிவில் ஓடிய நீரோடையில் ஒரு பெரிய வாள் கிடந்தது. அதனை அந்த இளைஞன் எடுத்தபோது அதுவே தினமும் கனவில் கண்ட அன்னை பவனியின் வாள் என்பதை உணர்ந்தார். அந்த வாளால் அந்த மூன்று காமுகர்களையும் கொன்றார்.

இந்த செய்தி தேசமெங்கும் பரவியது. அவர் மக்களிடையே பிரபலமடைந்தார். பிறகு ஒரு சிறு போர்க்குழுவை உருவாக்கினார். அதுவே சக்திமிக்க, உறுதிமிக்க படையானது. அதுமட்டுமின்றி முகலாயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் விளங்கியது. சிவாஜி பல வெற்றிகளைக் குவித்து மாபெரும் பேரரசை உருவாக்கினார். அதன் பிறகு அந்த மாவீரர் தான் பங்குகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போர்களிலும் அந்தப் புனிதமான வாளை பயன்படுத்தினார்.
வெற்றியை மட்டுமே சிவாஜிக்கு அள்ளித்தந்த அந்த வாளை இறுதிவரை தன்னுடன் வைத்திருந்தார். துணிந்தவனுக்கு தோல்வி இல்லை என்பதே சத்ரபதி சிவாஜி அவர்களின் தாரக மந்திரம் .

பரணி, பூரம் மற்றும் பூராடம் நட்சத்திர அன்பர்கள் வாள் வடிவத்தைப் பயன்படுத்தி வந்தால் சர்வ சம்பத்துகளையும் பெறலாம்.

கார்த்திகை, உத்திரம் மற்றும் உத்திராடம் நட்சத்திர அன்பர்கள் வாள் வடிவத்தை பயன்படுத்தி வந்தால் பாதுகாப்பு உணர்வினைப் பெறலாம்.

ரேவதி, ஆயில்யம் மற்றும் கேட்டை நட்சத்திர அன்பர்கள் வாள் வடிவத்தைப் பயன்படுத்தி வந்தால் காரியங்களில் வெற்றியைப் பெறலாம்.

பூரட்டாதி, புனர்பூசம் மற்றும் விசாக நட்சத்திர அன்பர்கள் வாள் வடிவத்தைப் பயன்படுத்தி வந்தால் எதிலும் சாதகமான சூழலைக் காணலாம்.

அஸ்வினி, மகம் மற்றும் மூலம் நட்சத்திர அன்பர்கள் வாள் வடிவத்தைப் பயன்படுத்தி வந்தால் நல்ல மனிதர்களின் தொடர்பும் வழிகாட்டுதலும் கிடைக்கப் பெறலாம்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x