Last Updated : 14 Dec, 2013 12:00 AM

 

Published : 14 Dec 2013 12:00 AM
Last Updated : 14 Dec 2013 12:00 AM

சித்தேஸ்வரி: பாடமாக இருக்கும் ஆவணப்படம்

சித்தேஸ்வரி, நான் பார்த்த முதல் மணி கவுலின் படம். கேரளத் திரைப்பட விழாவில், சிறப்புக் காட்சியாக இந்தப் படம் திரையிடப்பட்டது. அப்போது எனக்குத் தெரிந்ததெல்லாம், சித்தேஸ்வரி என்கிற ஹிந்துஸ்தானிய இசைப் பாடகியை பற்றிய ஆவணப்படம் இது என்பதுதான். படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது அதுவரை எனக்கிருந்த ஆவணப்படம் பற்றிய அத்தனை கற்பிதங்களும் கேள்விக்குள்ளாயின.

பொதுவாக ஒரு முக்கிய ஆளுமையைப் பற்றிய ஆவணப்படம் என்றால் வாழ்க்கைக் குறிப்புகள் போன்று செல்பவற்றை நாம் பார்த்திருப்போம். அதாவது, அவர் வாழ்ந்த ஊர், வாழ்ந்த காலகட்டம், அவரை பற்றிய மற்றவர்களின் பதிவுகள், அவரது படைப்புகளின் முக்கியத்துவம், தனிப்பட்ட ஆளுமை.... என்று நீண்டு செல்லும். இதை நாம் ஏன் சினிமாவாகப் பார்க்க வேண்டும்?, ஒரு நல்ல புத்தகத்திலேயே இது எல்லாம் நமக்குக் கிடைத்துவிடுமே?... அது ஆவணப்படமாக இருந்தாலும் சரி, திரைப்படமாக இருந்தாலும் சரி; அதில் சினிமா அனுபவம் நமக்குக் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் அவற்றையெல்லாம் நேர்த்தியாகச் செய்யப்பட்ட செய்திப்படம் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். இந்த உண்மையை எனக்கு உணர்த்திய முக்கியப் படங்களில் ஒன்று சித்தேஸ்வரி.

மணி கவுல், தனது படைப்புகளின் வழி நமக்கு அளிக்கும் சினிமா அனுபவம் முற்றிலும் வேறானது. சினிமா என்கிற ஊடகத்தின் பல்வேறுபட்ட சாத்தியங்களை உருவாக்கும் பொருட்டு பிரக்ஞையோடும், தன்னிச்சை செயல்பாடோடும், துணிச்சலோடும் இயங்குவது. இந்திய ஓவியம், இசை, இலக்கியம், நாடகம், கட்டிடக் கலை, இவற்றில் உள்ள ஆழ்ந்த தத்துவார்த்தப் புரிதலுடன் மணிகவுல் அவர்கள் இந்திய சினிமாவை மேற்கத்தியக் கோட்பாடுகளின் தாக்கத்தில் இருந்து விடுவிக்க முனைந்தார் என்று எனக்குத் தோன்றுகிறது. ‘கதை சொல்லுதல்’ என்கிற நாடகீய இயல்பை முற்றிலும் துறந்து அவர் சினிமாவின் ஆதார சுருதியில் (pure sense) இயங்கிட எப்போதும் முயன்றுவந்தார். அதனால் தான் அவரது ஆவணப்படங்கள் கூடக் கவிதை அனுபவங்களாக இருக்கின்றன. சித்தேஸ்வரி அதற்குச் சிறந்த உதாரணம். பிலிம் டிவிஷன் தயாரிக்கும் செய்திப் படங்களின் தரம் குறித்து நாம் அறிந்ததே. அவர்கள் தயாரிப்பில் உருவான சில படங்களை மணி கவுல் இயக்கி இருக்கிறார். அவற்றில் உச்சமான படைப்பாகப் பலர் சித்தேஸ்வரியைக் கருதுகிறார்கள்.

சித்தேஸ்வரி என்கிற ஆளுமையில் உள்ளோடி இருக்கும் இசை ஆன்மாவின் வேர்களை அறிய, அவரின் வாழ்வின் வெவ்வேறு காலகட்டங்களோடும், நிலவியல்களோடும் இணைந்து செல்கிற இசைப் பயணமே இந்தப் படம். தும்ரி என்கிற இந்துஸ்தானிய இசை வடிவத்தில், கிருஷ்ணா- ராதாவின் காதல் மற்றும் பிரிவு என்கிற புலன்சார்ந்த உணர்வும், இன்மையும் இயங்குகிறது. காரணம், அர்த்தம், தர்க்கம் என்கிற எல்லைகளைத் தாண்டி அவற்றை காலம், வெளி என்பவற்றில் ஊடாடும் கவித்துவக் கணங்களாக இந்தப் படம் விவரிக்கிறது. காட்சிகளின் அர்த்தங்களைப் பற்றி மணி கவுலின் வார்த்தைகளில் சொன்னால் ‘ஒரு காட்சி (shot) தன்னைத் தக்கவைக்கும் தன்மை கொண்டு என் படத்தொகுப்பில் ஒரு இடத்தை பிடித்துவிட்டால், எனக்கு அப்போது தெரிந்துவிடும், அதன் இடம்தான், அதன் அர்த்தம் என்று’.

அன்று திரைப்பட விழாவில் நடந்த கலந்துரையாடலில் மணி கவுல், டிஜிட்டல் சினிமாவைப் பற்றிச் சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. “டிஜிட்டல் சினிமாவை ஏன் பிலிமில் செய்யப்படும் சினிமாவைப் போல் துண்டு துண்டு காட்சிகளாகச் செய்கிறார்கள்...?... ஒரு பிலிம் சுருளின் கால அளவு பொதுவாக நான்கு நிமிடங்கள்.. அதற்கு மேல் நாம் காட்சியை எடுக்க இயலாது... ஆனால் ஒரு டிஜிட்டல் டேப் கொடுக்கும் கால அளவு தொண்ணூறு நிமிடங்களைத் தாண்டியது... துண்டுபடாமல் காட்சிகளைத் தொடர்ச்சியாக நாம் எடுக்க இயலும்... இந்த டிஜிட்டல் ஊடகத்தின் சாத்தியங்கள் பிலிமின் பாரம்பரியத்தில் இருந்து பல வகையில் வேறாக இருக்கிறது ...நம் காலகட்டத்தின் சீரற்ற தன்மையை (randomness) டிஜிட்டல் ஊடகத்தில் சிறப்பாக உருவாக்க முடியும்...புதிய மொழியை உருவாக்க முடியும்...” என்றார்.

அவர் எப்போதும் சினிமாவின் புதிய சாத்தியங்களை பற்றி கலை சார்ந்த பற்றுதலோடும், கேள்விகளோடும் உரையாடிக் கொண்டே இருந்தார். அவர் ஒரு முக்கிய திரை ஆளுமை மட்டும் அல்ல, ஒரு சிறந்த ஆசிரியரும் கூட என்பதை அன்று உணர்ந்தேன்.(பனுவல் புத்தக நிலையத்தில் டிசம்பர் 5 அன்று நடந்த திரையிடலின்போது வாசிக்கப்பட்டது)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x