Last Updated : 19 Oct, 2013 03:58 PM

 

Published : 19 Oct 2013 03:58 PM
Last Updated : 19 Oct 2013 03:58 PM

இப்படியும் கட்டலாம் வீடு!

சொந்தவீடு என்ற கனவை நனவாக்க வேண்டுமென்றால், அதற்குக் கொடுக்க வேண்டிய விலை மிக அதிகம். திட்டமிடல், போதிய கையிருப்பு, மாத ஊதியம் வைத்திருப்பவர்களுக்கே வீட்டுக் கனவை நனவாக்குவது கஷ்டம் என்றால் சாதாரண மக்களைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.

அந்தக் காலத்தில் அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் மூலப்பொருட்களை வைத்தே எளிதாக வீட்டை உருவாக்கினார்கள். பெரும்பாலும் சுண்ணாம்பு, செம்மண், களிமண் ஆகியவை வீடு கட்டுவதற்கானத் தேவையாக இருந்தது. அந்தக்கால வீடுகள், கோட்டைகள், பல தலைமுறைகளைத் தாண்டியும் நீடித்து நிற்பதே இதற்கு சாட்சி.

உள்ளூரில் கிடைக்கும் பொருட்களின் பயன்பாட்டு வர்த்தகம் குறைந்து போனதால்தான் கருங்கல், ஜல்லி, செங்கல், சிமெண்ட் என பொது நிலைப்பாட்டுக்கு பல ஊர் மக்களும் வந்துவிட்டனர். இதனால் சாதாரணமாக வீடு கட்ட நினைத்தாலும் லட்சத்தில் செலவு செய்ய வேண்டியுள்ளது. இதை மாற்ற முடியுமா என்ற ஏக்கம் பலருக்கும் உண்டு.

வீடு கட்ட புதிய வழி

அந்த ஏக்கத்தைப் போக்கவும் வழி கிடைத்திருக்கிறது. உச்சத்தில் இருக்கும் கட்டுமானப் பொருட்களின் விலையேற்றம் பற்றி கவலைவேண்டாம். செங்கல், சிமெண்ட், கம்பி என எதுவுமே தேவையில்லை. அந்தந்தப் பகுதியில் கிடைக்கும் பொருட்களை வைத்தே வீடு கட்டலாம். உதாரணமாக, களிமண், ஏரி-குளங்களை தூர்வாரினால் கிடைக்கும் சவுடு மணல், வைக்கோல் கொண்ட மூட்டையை வைத்தே வீடுகள் கட்டத்தொடங்கியிருக்கிறார்கள்.

புதுச்சேரி-விழுப்புரம் பகுதியில்தான் இதை சாத்தியமாக்கியிருக்கிறார்கள். தானே புயலில் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகளைக் கட்டித்தரும் தனியார் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இதுபோன்ற புதிய வீடுகள் கட்டப்படுகின்றன. குறிப்பாக பூவரசம்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட நரசிங்கபுரத்தில் இந்த வீடுகள் அதிகளவில் கட்டுகிறார்கள்.

வீடு கட்டும் முறை

சவுடுமணல், வைக்கோல், களிமண் ஆகியவற்றை பிளாஸ்டிக் சாக்குகளில் போட்டு மூட்டையாக தைக்கின்றனர். செங்கலுக்கு பதிலாக இந்த மூட்டையை அடுக்குகின்றனர். அதைச்சுற்றி வலையை அடித்து சிமெண்ட் கொண்டு சிறிது பூசுகின்றனர். இது 30 ஆண்டுகளுக்கு மேல் உறுதியாக இருக்கும் என்கிறார்கள் இப்பணியில் ஈடுபடும் கட்டுமானப் பொறியாளர்கள். இந்த வீடுகளை எங்கு வேண்டுமானாலும் எளிதாகக் கட்டலாம். ஜன்னல், மேற்கூரை, கதவு போன்றவற்றை வைப்பதும், எடுப்பதும் எளிது. அதேபோல் வீட்டை சேதமின்றி பிரிக்க முடியும். ஏரிகளை தூர்வாரினால் கிடைக்கும் சவுடு மணலை இதற்கு அதிகளவில் பயன்படுத்த முடியும். தூர் வாரப்படுவதால் ஏரிகளின் நீர்பிடிப்பு அதிகரிப்பதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும், விவசாயிகளுக்கும் பயன் கிடைக்கும்.

செலவு எவ்வளவு?

அதெல்லாம் சரி இந்த வீடு கட்ட எவ்வளவு செலவாகும் என்றுதானே கேட்கிறீகள்? இதுப்பற்றி கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் சின்னப்பன் கூறுகையில், “சிறியதாக அதாவது 325 சதுர அடி வீடு கட்டுவதற்கு கட்டுமானப்பொருள்கள் செலவு ரூ. 80 ஆயிரம் ஆகும். பணியாட்கள் கூலி உள்ளிட்ட செலவுகளுக்கு கூடுதலாக 1 லட்சம் வீதம் ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் செலவாகும். தற்போது இரு இடங்களில் 22 வீடுகள் கட்டி முடிக்க உள்ளோம். மழைக்காலத்தில் மண் எடுப்பது சிரமம். எளிதில் இவ்வீடு தீப்பிடிக்காது. அத்துடன் எளிதாக பிரித்து எடுத்து விடலாம். வீடுகட்டும் நுட்பத்தை பொறியாளர்கள் மூலம் கற்று தர தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

வீடு கட்ட ரூ.1.8 லட்சம் போதும் என்கிறார்கள். அப்புறம் என்ன.. இந்தப் புதிய முறையை பயன்படுத்திதான் பார்ப்போமே...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x