தமிழகம்

காவல் துறையின் மெத்தனம் ஏற்புடையது அல்ல: தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் ஐகோர்ட் காட்டம்

கி.மகாராஜன்

மதுரை: தென் மாவட்டங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் வருத்தம் அளிப்பதாக உள்ளது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் மாரீஸ்வரி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: விளாத்திகுளம் குளத்தூர் பகுதியில் மார்ச் 10-ம் தேதி மாலை இயற்கை உபாதை கழிக்க சென்ற 12-ம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

மாணவி காணாமல் போனது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டபோது பெண் காவல் ஆய்வாளர் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளார். மாணவியின் பெற்றோரை காவல் ஆய்வாளர் மோசமாக பேசியுள்ளார். சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கடந்தும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

புகார் அளித்த உடனே போலீஸார் நடவடிக்கை எடுத்திருந்தால் மாணவி காப்பாற்றப்பட்டிருக்கலாம். போலீஸாரின் தாமதம் காரணமாக மாணவியின் உயிர் பறிபோயுள்ளது. தற்போது போலீஸார் தங்களின் மெத்தன போக்கை சமாளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த வழக்கை உள்ளூர் போலீஸார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, மாணவியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கவும், வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றியும் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் சதீஷ்குமார், ஜோதிராமன் அமர்வு இன்று விசாரித்தது. அரசுத் தரப்பில், ‘விசாரணை சரியான பாதையில் செல்கிறது. குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணையை வேறு அமைப்புக்கு மாற்றுவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும்’ எனக் கூறப்பட்டது.

பின்னர் நீதிபதிகள், ‘தென் மாவட்டங்களில் கடந்த ஒரு மாதத்தில் நடைபெறும் இதுபோன்ற குற்ற நிகழ்வுகள் நீதிமன்றத்துக்கும் வருத்தம் அளிக்கின்றன. அதே நேரத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அழுத்தம் கொடுக்கும்போது சரியான குற்றவாளிகளை கைது செய்யவோ, விசாரணையை சரியாக நடத்தவோ முடியாத நிலையை உருவாக்கும். வழக்கில் அறிவியல்பூர்வமான முறையில் சான்றுகளை சேகரிக்க வேண்டும். இதுபோன்ற விஷயங்களில் முறையாக விசாரணை நடத்த அவகாசம் வழங்காமல் அழுத்தம் தருவது விசாரணை சரியான பாதையில் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தும்.

வழக்கு விசாரணை குறிப்புகளை போலீஸார் தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர்.

மனுதாரர் தரப்பில், “மாணவியின் பெற்றோர் புகார் அளித்த உடனே போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை” எனக் கூறப்பட்டது. அதற்கு நீதிபதிகள், “போலீஸார் இதுபோன்ற புகார்களை மெத்தனமாக கையாளுவது ஏற்கத்தக்கது அல்ல” என்றனர். பின்னர் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT