

தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலையில் நடைபெற்ற மறியல்.
கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே பிளஸ் 2 மாணவி கொலையான சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, குறுக்குச்சாலை, தூத்துக்குடி ஆகிய இரு இடங்களில் கிராம மக்கள், உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் உடனடி நடவடிக்கை எடுக்காத மகளிர் காவல் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி. குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வந்தார்.
வேடநத்தம் கிராமத்தில் பல வீடுகளில் கழிப்பிடம் இல்லாத நிலையில், இயற்கை உபாதையை கழிக்க அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு கடந்த 10-ம் தேதி இரவு அந்த மாணவி சென்றார்.
அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர் உடனடியாக 10-ம் தேதி இரவு குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். போலீஸார் அவர்களை, விளாத்திகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அறிவுறுத்தினர்.
11-ம் தேதி காலை விளாத்தி குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது, அங்கும் புகாரை பெறாமல் பலமணி நேரம் அலைக்கழிக்கப்பட்டனர். இதனால், மாணவியின் தந்தை மீண்டும்குளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், 11-ம் தேதி மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் முகத்தில் காயங்களுடன் அந்த மாணவி இறந்து கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த பெற்றோரும், பொதுமக்களும் குறுக்குச்சாலை - ராமேசுவரம் சாலையில் வேடநத்தம் அருகே இரவு மறியலில் ஈடுபட்டனர். போலீஸாரின் உறுதிமொழியை ஏற்று நேற்று அதிகாலை 1 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது.
மீண்டும் போராட்டம்
ஆனால், நேற்று காலையாரும் கைது செய்யப்படாததால், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் குறுக்குச்சாலை விலக்கில் காலை 9 மணி முதல் மீண்டும் மறியல் தொடங்கியது. நெல்லை சரக டிஐஜி சரவணன், சார் ஆட்சியர் ஹிமான்ஷூ மங்கள், எஸ்.பி. மதன் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.
போராட்டத்துக்கு அதிமுக, நாம் தமிழர், தவெக, பாஜக, புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.
மாலை 5 மணியை கடந்தும் போராட்டம் நீடித்தது. தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது.
இதேவேளையில், மாணவியின் உறவினர்களில் மற்றொரு தரப்பினர், மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து தூத்துக்குடி விவிடி சந்திப்பு அருகே மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீஸார் தடுத்ததால் கடும் வாக்குவாதம் மற்றும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர்.
பெண் ஆய்வாளர் சஸ்பெண்ட் இச்சம்பவத்தில் புகாரை வாங்க போலீஸார் மறுத்ததாக எழுந்த புகார் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, நெல்லை சரக டிஐஜியிடம் அறிக்கை சமர்ப்பித்தனர். அதன்பேரில், விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீனாவை பணியிடை நீக்கம் செய்து, டிஐஜி சரவணன் உத்தரவிட்டார்.
பாலியல் வன்கொடுமையா?
எஸ்.பி. விளக்கம் தூத்துக்குடி எஸ்.பி. கூறுகையில்,“கொலையான மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டரா என்பது உடற்கூராய்வு அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும்.
சமூக வலைதளங்களில் சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை யாரும் பரப்பக் கூடாது. மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.