ட்ரம்ப் விரும்பினாலும் கூட ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வருவது சாத்தியம் இல்லையா?
வாஷிங்டன்: “ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியுள்ளார். அவரது இந்த ‘விருப்பம்’ இப்போதைக்கு சாத்தியமில்லை என்பதையே போர் நிலவரங்கள் காட்டுகின்றன. அதன் பின்புலத்தை சற்றே தெளிவாகப் பார்ப்போம்.
ரஷ்யா - உக்ரைன் போர் வந்தது, இஸ்ரேல் - பாலஸ்தீன் போர் வந்தது, இந்தியா - பாகிஸ்தான் மோதல் வந்தது. ஆனால் எதுவும் இத்தகைய பாதிப்பை உலகின் குறுக்கும் நெடுக்கும் ஏற்படுத்தவில்லை. ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு தாக்குதல் எல்லா போர் செய்திகளைப் போலவே அணுகப்பட்ட நிலையில், இது தற்போது ராணுவ பலத்தை நிரூபித்தைத் தாண்டி பொருளாதாரப் போராக அதுவும் உலகையே பீடிக்கும் பாதிப்பாக மாறிவருகிறது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் உலகத் தலைவர்கள் பலரும் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவரும்படி அழுத்தம் தரவதாக செய்திகள் வருகின்றன.
இந்த நிலையில் அக்சியாஸ் ஊடகத்துக்கு ட்ரம்ப் அளித்தப் பேட்டியில், “ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரும். ஏனெனில், ஈரானில் அமெரிக்க ராணுவம் குறிவைத்து குண்டுவீசி அழிப்பதற்கு என்று எதுவும் இல்லை. எந்த நேரத்திலும் முடிவுக்குக் கொண்டுவர நான் விரும்புகிறேன். போர் முடிவுக்கு வரும்.
இந்தப் போர் இதுவரை சிறப்பாக நடந்துள்ளது. விளைவுகள் திட்டமிட்டதைவிட அதிகமாக உள்ளது. நாங்கள் 6 வார காலத்தில் எந்த அளவிலான அழிவை ஏற்படுத்த நினைத்தோமோ அதைவிட அதிகமாகவே நிகழ்த்திவிட்டோம்” என்று கூறியுள்ளார்.
அதேவேளையில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், “இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான காலக்கெடு என்று எதுவும் இல்லை. தேவைப்படும் வரை ஆபரேஷன் தொடரும். எங்களது இலக்குகளை எட்டும்வரை இது தொடரும்” என்று கூறியுள்ளதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ ஊடகம் தெரிவித்துள்ளது.
போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதில் ட்ரம்ப்பும், இஸ்ரேல் தரப்பும் இவ்வாறாக தங்களது கருத்துகளைச் சொல்லியிருந்தாலும், இத்தனை நாட்கள் என்பது போன்று எந்த காலவரையறையையும் சொல்லவில்லை. அதேபோல், போர் முடிந்துவிட்டது என்று அமெரிக்கா தன்னிச்சையாக அறிவித்தாலும்கூட ஈரான் அதை எவ்வாறு அணுகும் என்பதும் தெளிவாகத் தெரியவில்லை.
முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று சிஎன்பிசி செய்தி ஊடகம் ட்ரம்ப் தூதர் ஸ்டீவ் விட்காஃபிடம், போர் எப்போது முடிவுக்கு வரும் என்று வினவியதற்கு, “எனக்குத் தெரியாது” என்று கூறிச் சென்றது கவனிக்கத்தக்கது.
அதேபோல் டைம்ஸ் ஆஃப் இஸ்ரேலுக்கு பேட்டியளித்த ட்ரம்ப், “இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவருவது என்பது இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் இணைந்து எடுக்கும் கூட்டு முடிவாக இருக்கும்” என்று சொல்லியிருந்ததும் கவனிக்கத்தக்கது.
இந்தச் சூழலில், புதன்கிழமையன்றி ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் போரை முடிவுக்குக் கொண்டுவர சில நிபந்தனைகளை விதித்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் இருக்கிறோம். பிராந்திய அமைதியில் நாங்கள் உறுதியாக இருப்பதைத் தெரிவித்தோம். யூத ஆட்சியும், அமெரிக்காவும் தொடங்கிய இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரே வழிதான் இருக்கிறது.
போர் பாதிப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும், ஈரானின் உரிமைகளை மதித்து அதன் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்ற சர்வதேச உத்தரவாதம் வேண்டும்” என்று ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியான் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் எச்சரிக்கை:
ஈரான் அதிபரின் நிபந்தனைகள் ஒருபுறம் இருக்க மறுபுறம், ஈரானின் இலக்கு இனி அமெரிக்க ஆதரவு பொருளாதார மையங்கள் / அமைப்புகள், வங்கிகள் என்று எச்சரித்துள்ளது.
ஹோர்முஸ் நீர்நிலை பதற்றம்:
போர் எப்போது முடிவுக்கு வரும் என்பதில் தெளிவற்ற சூழல் நீடிக்க, ஹோர்முஸ் நீர்நிலை பதற்றம் இன்னும் ஓயவில்லை. இதுவரையில், இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதலில் ஈரானில் 1300 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவுவதை நிறுத்தவில்லை. மத்திய கிழக்கு, வளைகுடாவில் உள்ள அமெரிக்க உடைமைகளுக்கு, ராணுவத் தளவாடங்களுக்கு சேதம் விளைவிப்பதும் தொடர்கிறது.
அமெரிக்காவின் எச்சரிக்கைகளை மீறியும், ஈரான் ஹோர்முஸ் நீர்நிலையின் பெரும்பகுதியை வர்த்தக கப்பல்கள் செல்லாதவாறு கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதன்மூலம் எண்ணெய் விலை எகிறி உலகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி ஹோர்மூஸ் நீர்நிலையில் 3 எண்ணெய்க் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. ஹோர்மூஸ் நீர்நிலை பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்ற ட்ரம்ப் வாக்குறுதியால் தற்காலிகமாக கட்டுப்பாட்டுக்குள் வந்த எண்ணெய் விலை ஊசலாடத் தொடங்கியுள்ளது.
ஹோர்முஸ் நீர்நிலையில் சரக்கு கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை கப்பல்கள் பாதுகாப்பு வழங்கும் என்று ட்ரம்ப் அறிவித்தபோதே, “நாங்கள் இதை வரவேற்கிறோம். அமெரிக்க கப்பல்களை பதம் பார்ப்போம்” என்று ஈரான் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.
இந்நிலையில் புதன்கிழமையன்று அமெரிக்கா ஓர் எச்சரிக்கை விடுத்தது. அதில், “ஈரானிய கப்பல் தொழிலாளர்கள், நிர்வாக பணியாளர்கள் மற்றும் வணிகக் கப்பல் குழுவினர் ஈரானிய கடற்படைக் கப்பல்கள் மற்றும் ராணுவ உபகரணங்களைத் தவிர்க்க வேண்டும்” என்று எச்சரித்துள்ளது.
ஆனால், ஈரானிய கடற்படை வணிக போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் துறைமுகங்களுக்குள் ராணுவக் கப்பல்கள் மற்றும் உபகரணங்களை நிலைநிறுத்தியுள்ளன.
இவ்வாறாக ஹோர்மூஸ் நீர்நிலை அச்சுறுத்தல் நீடிக்கும் வரை இந்தப் போர் முழுமையாக முடிவுக்கு வந்ததாகக் கூறவே முடியாது என்பது தான் சர்வதேச போர் அரசியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
ஈரானின் எதிர்பார்ப்பு என்ன?
“அமெரிக்கா, இஸ்ரேல் தங்கள் மீது தொடுத்துள்ள போரை வெல்ல வேண்டும் என்று ஈரான் நினைக்கவில்லை. ஈரானின் இலக்கே வேறு. ஈரான் இப்போது ராணுவ பலத்தைக் காட்டவில்லை அது நேர்த்தியாக ஒரு பொருளாதரப் போரை முன்னெடுத்துள்ளது. இந்தப் போரில் அவர்களின் இலக்கு கச்சா எண்ணெய் விலை. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகரப் படைகள் ( IRGC ) இதனைத் தெளிவுபடுத்தியுள்ளது.
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 200 டாலராக உயர வேண்டும் என்பதே அதன் இலக்கு. F-35 ஏவுகணையை வீழ்த்துவதைவிட இந்த எண்ணெய் விலை ஏற்றத்தைத் தான் ஈரான் வெற்றியாகக் கருதுகிறது.
இது உலகப் பொருளாதாரத்துக்கு சிக்கலைத் தரும். வேதனையுடன் நாடுகள் ட்ரம்ப்பை நச்சரிக்கும். உலகின் மொத்த எண்ணெய் வணிகத்தில் 20% -ஐ கையாளும் ஹோர்முஸ் நீர்நிலையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது ஈரான்.
எண்ணெய் பைப்லைன்கள், கிடங்குகள், சரக்கு முனையங்கள் என மிகவும் துல்லியமாக திட்டமிட்டு ஈரான் தாக்குதல் நடத்திவருகிறது. அவர்கள் பல ஆண்டு காலமாக இதுமாதிரியான ஒரு போருக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். எண்ணெய் வர்த்தகம் பாதித்தால் விலை எகிறும். விலை உயர்ந்தால் இந்த உலகம் அலறும்.
கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 200 அமெரிக்க டாலர் என்ற நிலை எட்டும்போது ஈரான் அதை தனது போர் வெற்றியாகக் கொள்ளும். ஈரானின் போர் உத்தி ஏவுகணை அல்ல, எண்ணெய் விலை” என்று கூறுகிறார் ‘Rich Dad Poor Dad’ என்ற உலகின் பெஸ்ட் செல்லர் நூலை எழுதிய ராபர்ட் கியோஸகி.
