புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸுக்கு 16 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக மற்றும் கூட்டணியிலுள்ள அதிமுக, லஜக கட்சிகள் 14 இடங்களில் போட்டியிடும். கூட்டணி கட்சிகளுக்கான இடங்கள் விரைவில் முடிவு செய்யப்படும் என்று பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா தெரிவித்தார்.
புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியுடன் மத்திய அமைச்சர் மான்சுவிக் மாண்டவியா பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறியது: “புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியுடன் தேர்தல் பாஜக பொறுப்பாளர் மத்திய அமைச்சர் பேசினார். வரும் தேர்தலில் பிரதமர் மோடியின் வழிகாட்டுதல், மேம்பாட்டு பணிகள், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி செய்துள்ள பணிகள் வைத்து அடுத்து தேர்தலை சந்திக்கிறோம்.
என்ஆர் காங்கிரஸ் கடந்த தேர்தலில் 16 இடங்களில் போட்டியிட்டனர். பாஜக தரப்புக்கு ஒதுக்கப்பட்ட 14 இடங்களில் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து போட்டியிட்டோம். கடந்த தேர்தலில் இருந்த அதே நடைமுறை இம்முறையும் தொடரும். எந்த தொகுதியில் யார் போட்டியிடுவார் என்பது ஓரிரு நாள்களில் இறுதி செய்து விடுவோம்.
பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சி என்.ஆர்.காங்கிரஸ். இதர கட்சிகளுடன் பாஜக கூட்டணி அமைத்து ஒருங்கிணைத்து போட்டியிடுகிறது. லஜகவும் எங்கள் கூட்டணிக்கு வருகிறது. கூட்டணியில் லஜக வர முதல்வர் ஏதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதிமுகவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது பற்றி இன்னும் பேசவில்லை. கடந்த முறை 4 எம்எல்ஏக்கள் இருந்ததால் 5 இடங்கள் ஒதுக்கினோம். இம்முறை பேசி முடிவு எடுப்போம்.
காங்கிரஸை இரண்டு இடங்களுக்கு கொண்டுவந்தவர் நாராயணசாமி. ஏற்கெனவே அவர் கேள்விகளுக்கு மக்கள் பதில் அளித்து விட்டனர். என்டிஏ கூட்டணி தமிழகத்தில் உள்ளது, புதுச்சேரியிலும் தொடரும். புதுச்சேரியில் தவெகவுடன் பேச்சுவார்த்தை ஏதும் நடக்கவில்லை. புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறை அமலாகும் முன்பு தொகுதி பங்கீடு பற்றி முழுமையாக தெரிவித்து விடுவோம் கூட்டணியிலுள்ள பாமக கடந்தமுறை தொகுதி கேட்கவில்லை. இம்முறையும் இதுவரை ஏதும் அவர்கள் கேட்கவில்லை” என்றார்.