தமிழ் சினிமா

சீண்டிய எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின்: ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் சாடல்

செய்திப்பிரிவு

பிரபல எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் வெளியிட்ட பதிவைச் சாடி, தனது இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள்

கடந்தாண்டு இதே வேளையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் மகள் கதிஜா ஹிஜாப் அணிந்து கொண்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டதைப் பலரும் விமர்சித்திருந்தனர். அதற்கு கதிஜா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிலளித்திருந்தார்.

இந்தச் சர்ச்சை தற்போது மீண்டும் வந்துள்ளது. பிப்ரவரி 11-ம் தேதி பிரபல எழுத்தாளரான தஸ்லீமா நஸ்ரின் தனது ட்விட்டர் பதிவில் ஏ.ஆ.ரஹ்மானின் மகள் கதிஜா ஹிஜாப் அணிந்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து, "எனக்கு ஏ ஆர் ரஹ்மான் இசை மிகவும் பிடிக்கும். ஆனால் அவரது அன்பு மகளை பார்க்கும்போதெல்லாம் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவது போல் உணர்கிறேன். பாரம்பரியம் மிக்க ஒரு குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள் கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுவது உண்மையில் வேதனையளிக்கிறது” என்று பதிவிட்டு இருந்தார்.

இந்தப் பதிவு பலராலும் பகிரப்பட்டது. தற்போது இந்தப் பதிவுக்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் ட்வீட்டின் புகைப்படத்தைப் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கதிஜா, "ஒரே வருடத்தில் இந்த விவகாரம் மீண்டும் சுற்றி வருகிறது. நாட்டில் எவ்வளவோ விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் மக்கள் அனைவரும் ஒரு பெண் என்ன ஆடையை அணிய விரும்புகிறாள் என்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

வாவ், எனக்கு மிகவும் திகைப்பாக இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இந்த விவகாரம் தலையெடுக்கும்போதும் என்னுள் எரியும் தீ பல்வேறு விஷயங்களைச் சொல்வதற்கு என்னைத் தூண்டுகிறது. பல ஆண்டுகளாகப் பார்க்காத என்னுடைய பல்வேறு குணாதிசயங்களைக் கடந்த ஒரு வருடமாக நான் கண்டுகொண்டேன். என்னுடைய வாழ்வின் நான் எடுத்த முடிவுகளை எண்ணி பலவீனமடையவோ வருத்தப்படவோ மாட்டேன். என்ன செய்துகொண்டிருப்பதை எண்ணி மகிழ்வாகவும் பெருமையாகவும் உணர்கிறேன்.

நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொள்பவர்களுக்கு நன்றி கூறுகிறேன். கடவுளுடைய விருப்பத்தால் என்னுடைய பணிகள் மட்டுமே பேசும். மேற்கொண்டு நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. இதற்கு ஏன் நான் விளக்கமளிக்கிறேன் என்று உங்களில் யாரேனும் நினைத்தால், இங்கே ஒருவர் தனக்காகப் பேசியாக வேண்டியிருக்கிறது. அதனால்தான் நான் அதைச் செய்கிறேன்.

அன்புள்ள தஸ்லிமா, என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதற்கு நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தயவுசெய்து உங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் எனக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதில்லை. மாறாக எனக்குப் பெருமையாகவும், நான் ஏற்றுக் கொண்ட விஷயத்தில் உறுதியாகவும் உணர்கிறேன்.

உண்மையான பெண்ணியம் என்றால் என்ன என்று கூகிள் செய்து பார்க்கவும். ஏனென்றால் அது மற்ற பெண்களைத் தரக்குறைவாகச் சாடுவதும் இந்த விவகாரத்தில் அவர்களது தந்தையை இழுத்துப் பேசுவதும் அல்ல. மேலும் உங்களுடைய ஆய்வுக்காக உங்களுக்கு என்னுடைய எந்த புகைப்படத்தையும் நான் அனுப்பியதாக எனக்கு நினைவில்லை”என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா.

தவறவிடாதீர்

SCROLL FOR NEXT