சென்னை: இந்தியப் பங்குச் சந்தை இன்று வர்த்தகத்தின்போது கடும் சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் 1,470 புள்ளிகள் சரிந்து 74,563-ல் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 488 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 23,151 புள்ளிகளில் நிலைபெற்றது.
பங்குச் சந்தையில் இன்று ஏற்பட்ட திடீர் வீழ்ச்சியின் காரணமாக, முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ரூ.10 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்க போர் பதற்றம் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வருவது உலகளாவிய சந்தைகளில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. போர்ச் சூழல் காரணமாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இது இந்தியா போன்ற இறக்குமதி சார்ந்த நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் முன்னெப்போதும் இல்லாத வகையில் 92.45 என்ற வரலாற்றுச் சரிவை சந்தித்துள்ளது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையால், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களும் இந்தியச் சந்தையிலிருந்து முதலீடுகளை தொடர்ந்து விலக்கி வருகின்றனர்.
இதுபோன்ற சாதகமற்ற நிலவரங்களால் வங்கி மற்றும் வாகன உற்பத்தித் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் கடும் விற்பனை அழுத்தத்திற்கு உள்ளானது. இதுவே சந்தையின் கடும் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம் என பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.