விமானவியல் குறித்த ‘பறக்கலாம் வாங்க’ (லெட்ஸ் ஃபிளை) இணைய வழிகாட்டி நிகழ்ச்சி; எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறது ‘ட்ரோன்’ தொழில்நுட்பம்: 3-ம் நாள் அமர்வில் விஞ்ஞானி செந்தில்குமார் உறுதி

By செய்திப்பிரிவு

தகவல் தொழில்நுட்ப புரட்சி உலகத்தில் ஏற்படுத்திய மாற்றத்துக்கு அடுத்து ‘ட்ரோன் ’புரட்சிதான் எதிர்காலத்தில் உலகை ஆட்சி செய்யப் போகிறது என்று ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றம் (என்டிஆர்எஃப்) உடன்இணைந்து நடத்திய ‘பறக்கலாம் வாங்க’ (லெட்ஸ் ஃபிளை) என்றஇணைய வழி வழிகாட்டி நிகழ்ச்சியில் விஞ்ஞானி செந்தில்குமார் தெரிவித்தார்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு செயல்பாடுகளை இணையம் வழியாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்துடன் (என்டிஆர்எஃப்) இணைந்து ‘பறக்கலாம் வாங்க’ எனும் விமானவியல் துறை தொடர்பான தகவல்கள், அதைக் கற்பதற்கான வழிமுறைகள், வேலைவாய்ப்புகள் குறித்து பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி டாக்டர் ஏ.சிவதாணு பிள்ளை, விஞ்ஞானி வெ.பொன்ராஜ் ஆகியோர் கடந்த 2 அமர்வுகளில் உரையாற்றினர்.

ஆக.7-ம் தேதி நடைபெற்ற 3-வதுநாள் அமர்வில் ‘டாக்டர் கலாம் அட்வான்ஸ்டு யுஏவி ரிசர்ச்’ மையத்தின் இயக்குநரும், பேராசிரியருமான விஞ்ஞானி செந்தில்குமார், ‘ட்ரோன்கள்: கல்வி, ஆராய்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள்’ என்ற தலைப்பில் பேசினார். அவர் கூறியதாவது:

‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லாகுட்டி விமானம் குறித்து முதன்முதலில் அப்துல் கலாமின் சுயசரிதையான ‘அக்னிச் சிறகுகள்’ என்ற நூலைப் படித்தபோது நான் தெரிந்து கொண்டேன். 2001-ம் ஆண்டில், அண்ணா பல்கலைக்கழகத்தின் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் கல்லூரிப் படிப்பில் அடியெடுத்து வைத்தபோது கலாம் அவர்களே எனக்கு வகுப்பெடுத்தார். எதிர்கால தொழில்நுட்பம் ‘ட்ரோன்’ என்று அன்றே கூறினார்கலாம்.

அண்மைக் காலமாக திருமணநிகழ்ச்சிகளிலும், இந்த கரோனா காலத்தில் காவல்துறை கண்காணிப்புக்கும், கிருமிநாசினியைத் தெளிக்கவும் ‘ட்ரோன்கள்’ பயன்படுத்தப்படுவதைப் பார்க்கிறோம்.இரண்டாம் உலகப் போர் காலத்தில் ராணுவப் பயன்பாட்டுக்காக கண்டுபிடிக்கப்பட்ட ஆளில்லா குட்டி விமானங்கள் இன்று அன்றாடப் பயன்பாட்டுக்கு வந்து கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சி உலகத்தில் ஏற்படுத்திய மாற்றத்துக்கு அடுத்து ‘ட்ரோன்’ தொழில்நுட்ப புரட்சிதான் உலகை ஆட்சி செய்யப் போகிறது.

‘ட்ரோன்’களில் 4 வகைகள் உள்ளன. 250 கிராம் வரை எடை கொண்டவை ‘நானோ ட்ரோன்’. இது 50 அடி உயரம் வரை பறக்கும்.2-வது ‘மைக்ரோ ட்ரோன்’. இது 2 கிலோ வரை எடை இருக்கும். இந்த வகை ‘ட்ரோன்கள்’ அரசு மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களின் பயன்பாட்டுக்கானவை. சந்தையில் விற்கும் சீனா உள்ளிட்ட வெளிநாட்டுத் தயாரிப்பு ‘ட்ரோன்’களை வாங்குவது சட்டப்படி குற்றம்.

3-வது, 2 முதல் 25 கிலோ எடை கொண்ட சிறிய வகை ‘ட்ரோன்’. இது கண்காணிப்பு, தகவல் சேகரிப்புஉள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படுவதால் விமானி உரிமம் பெற்றவர்கள் மட்டுமே இதை வாங்கலாம்.

4-வது, 25 முதல் 250 கிலோ எடை கொண்ட பெரிய ‘ட்ரோன்’. இது ராணுவ பயன்பாட்டுக்கானது. இப்படிப்பட்ட ‘ட்ரோன்’களை விவசாய நிலத்தில் பூச்சி மருந்து தெளித்தல், நிலத்தைத் துல்லியமாக அளத்தல், சுரங்கப் பணி, வனப்பாதுகாப்பு கண்காணிப்பு, போக்குவரத்து நெரிசலைத் தடுக்க தகவலை முன்கூட்டியே தெரிவித்தல், நகர திட்டமிடல் என பல்வேறு விதங்களில் இதைப் பயன்படுத்தலாம்.

காவல்துறை, வருவாய்த் துறை, மீட்புப் பணி, ராணுவம் உள்ளிட்ட பல துறைகளின் அத்தியாவசியத் தேவையாக ‘ட்ரோன்’கள் மாறிவருகின்றன. கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,கண்காணிப்பு, கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்காக, 25 ‘ட்ரோன்’களை எங்கள் துறையிடம் இருந்து தமிழக அரசு வாங்கியுள்ளது.

சமீபத்தில், நாட்டை உலுக்கியெடுத்த வெட்டுக்கிளி தாக்குதலை முறியடிக்க பெட்ரோலால் இயக்கக்கூடிய ‘ட்ரோன்’களை அண்ணா பல்கலை.யிடம் இருந்து இந்தியஅரசு வாங்கியது. வெட்டுக்கிளிகளை அப்புறப்படுத்த அவை சிறப்பாகப் பயன்பட்டதால் நாடு முழுவதும் 5 லட்சம் ‘ட்ரோன்’களை விநியோகிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது உறுதி.

இப்படி நாளுக்கு நாள் ‘ட்ரோன்’களின் தேவை அதிகரித்து வருகிறது. இதனால் ‘ட்ரோன்’ தொழில்நுட்பம் அறிந்தவர்களுக்கு எதிர்காலத்தில் மிகப் பெரிய வேலைவாய்ப்பு காத்திருக்கிறது.

இவ்வாறு விஞ்ஞானி செந்தில் குமார் பேசினார்.

பின்னர், ‘ட்ரோன்’கள் தொடர்பான வீடியோ காட்சிகளைக் காட்டி மாணவர்களுக்கு விளக்கினார். நிறைவாக, மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்