Published : 02 May 2024 05:31 PM
Last Updated : 02 May 2024 05:31 PM

மன்னிப்புக் கேட்ட பிரபுதேவா - சென்னை நிகழ்வில் ரசிகர்கள் கொந்தளிப்பால் சலசலப்பு

சென்னை: சென்னையில் ‘100 நிமிடங்கள் 100 பிரபுதேவா பாடல்’ என்ற உலக சாதனை நிகழ்வை நடத்த திட்டமிட்டிருந்த நிலையில், அந்த நிகழ்வில் கடைசி நேரத்தில் பிரபுதேவா கலந்து கொள்ளாததால், வெயில் நின்றிருந்த பெற்றோர்களும், குழந்தைகளும் சிரமத்துக்கு ஆளாகின்றன. இது தொடர்பாக அவர்களிடம் பிரபுதேவா மன்னிப்புக் கோரினார்.

நடன இயக்குநரும், நடிகருமான பிரபு தேவாவின் திரையுலக பங்களிப்பை பெருமைபடுத்தும் விதமாகவும், சர்வதேச நடன தினத்தையொட்டியும் சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் பிரபுதேவாவின் 100 தேர்ந்தெடுத்த பாடல்களுக்கு 100 நிமிடம் நடனமாடும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக சிறியவர்கள், பெரியவர்கள் என 5000 ஆயிரம் பேர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரபு தேவா கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிகழ்வை நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் தனது குழுவினருடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பிரபுதேவா நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதனால், காலையிலிருந்து வெயிலில் காத்திருந்த சிறுவர்களும், அவர்களது பெற்றோர்களும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

“பல்வேறு ஊர்களிலிருந்து காலை 6 மணிக்கே நிகழ்விடத்திற்கு வந்துவிட்டோம். 7.30 மணிக்கு நிகழ்வு நிறைவடைந்துவிடும் என்று கூறியதை நம்பி வந்தோம். ஆனால் 9 மணி வரை பிரபுதேவா வரவில்லை” என்று பெற்றோர் குற்றம் சாட்டினர்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள பிரபுதேவா, “எல்லோருக்கும் என்னுடைய சல்யூட். இவ்வளவு சிரத்தை எடுத்து நேரம் ஒதுக்கி நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளீர்கள். உங்கள் அன்புக்கு நன்றி. என்னால் நிகழ்வுக்கு வர முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. அங்கே நடனமாடியவர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

அவர்களை சந்திக்க முயற்சி செய்கிறேன். இறுதிப்பாடல் வரை லைவ்வில் பார்த்துக்கொண்டு தான் இருந்தேன். இந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன். எல்லோருக்கும் நன்றி” என தெரிவித்திருந்தார். முன்னதாக நிகழ்விடத்தில் லைவ்வில் பேசிய அவர் பங்கேற்பாளர்களிடம் வருத்தம் தெரிவித்திருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x