Published : 02 May 2024 04:05 PM
Last Updated : 02 May 2024 04:05 PM

சென்னை - தி.மலை இடையே மெமு ரயில் இயக்கம்: தென்னக ரயில்வே மறு அறிவிப்பு

 திருவண்ணாமலை ரயில் நிலைய பகுதி

திருவண்ணாமலை: சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் வரை இயக்கப்படும் மெமு ரயில் சேவை திருவண்ணாமலை வரை நீட்டித்து வெளியிட்ட அறிவிப்பை திரும்ப பெற்ற தென்னக ரயில்வே, 24 மணி நேரத்தில் இன்று (மே 2) மறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மெமு ரயில் சேவையானது, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதி முதல் தினசரி இயக்கப்படும் என தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் கடந்த 2007-ம் ஆண்டு மே மாதத்துடன் நிறுத்தப்பட்டது. விழுப்புரம் - காட்பாடி இடையே மீட்டர் கேஜ் ரயில் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றும் பணிக்காக, தாம்பரம் ரயில் சேவை தடைப்பட்டது. அகல ரயில் பாதை அமைக்கும் பணி 2 ஆண்டுகளில் நிறைவு பெற்றதும், நிறுத்தப்பட்ட தாம்பரம் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என காத்திருந்த பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் கானல் நீரானது அவர்களின் கனவு.

திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு மீண்டும் ரயில் சேவையை தொடங்க வேண்டும் என பக்தர்கள், வணிகர்கள், விவசாயிகள், பெண்கள், மாணவர்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்தனர். சென்னைக்கு மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகளுக்கு, ரயில் சேவை பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என கோரிக்கை விடுக்கப்பட்டன. ரயில்வே அமைச்சர் மற்றும் அமைச்சகத்திடம் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், பொது நல அமைப்புகள் வலியுறுத்தப்பட்டு வந்தன.

மத்திய அரசுகளிடம் கடந்த 15 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மக்களின் தொடர் கோரிக்கை போராட்டம் எதிரொலியாக சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் வரை தினசரி இயக்கப்படும் ‘மெமு ரயில்’ திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்படும் என தென்னக ரயில்வே சார்பில் கடந்த வாரம் அறிவிப்பு வெளியானது. ரயில் பயண வழித்தடம், நேரம் மற்றும் கட்டணம் ஆகியவை வெளியிடப்பட்டன.

சென்னை கடற்கரையில் இருந்து மே 2-ம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில், திருவண்ணாமலை ரயில் நிலையத்தை நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடையும் என்றும், பின்னர், திருவண்ணாமலையில் இருந்து மறுநாள் 3-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரையை காலை 9.50 மணிக்கு சென்றடையும் என அறிவிக்கப்பட்டன. திருவண்ணாமலை - சென்னை கடற்கரை வரை செல்ல கட்டணம் 50 ரூபாய் என்ற ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது.

இதற்கிடையில், சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் வழியாக திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்ட மெமு ரயில் சேவை, நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்படுகிறது என தென்னக ரயில்வே நேற்று (மே 1) அறிவித்தது. இந்த அறிவிப்பு, அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சியடைய செய்தது. திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு 17 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கப்படுவதை மிகுந்த ஆவலுடன் காத்திருந்தவர்கள் ஏமாற்றமடைந்தனர்.

பல கட்ட ஆய்வுக்கு பிறகு வெளியிடப்பட்ட அறிவிப்பை, தென்னக ரயில்வே திரும்ப பெற்றதற்கு கண்டன குரல்கள் எழுந்தன. திருவண்ணாமலை வரை மெமு ரயில் சேவை நீட்டிப்புடன் அறிவிக்கப்பட்ட இதர 7 ரயில் சேவைகளும் (விழுப்புரம் - திருச்சி உட்பட) தடையின்றி தொடங்கியபோது, மெமு ரயில் சேவையை மட்டும் நிறுத்தியது ஏன்? என்ற கேள்வி எழுந்தது. மெமு ரயில் சேவையை திரும்ப பெற்றதற்கான காரணத்தை வெளிப்படையாக தென்னக ரயில்வே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், திருச்சி ரயில்வே கோட்ட செய்தி தொடர்பாளர் ஆர்.வினோத் இன்று (மே 2 ) பிற்பகல் 2.15 மணியளவில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கன்டோன்மென்ட் வரை இயக்கப்படும் மெமு ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டு, ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து இயக்கப்படும். சென்னை கடற்கரையில் இருந்து மே 2-ம் தேதி மாலை 6 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக திருவண்ணாமலை ரயில் நிலையத்தை நள்ளிரவு 12.05 மணிக்கு வந்தடையும்.

பின்னர், திருவண்ணாமலையில் இருந்து மே 3-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு வேலூர் வழியாக சென்னை கடற்கரை ரயில் நிலையத்தை காலை 9.50 மணி சென்றடையும்” என தெரிவித்துள்ளார். தென்னக ரயில்வே நிர்வாகத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளால்(24 மணி நேரத்தில்) அனைத்து தரப்பு மக்களும் குழப்பம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x