கரோனா காலத்தில் ஏழைக் குழந்தைகளுக்கு கலைக் கையேடு: மதுரையில்  ‘சிடார்’ குழந்தைகள் மையம் வழங்கியது

By கே.கே.மகேஷ்

மதுரையை மையமாகக் கொண்டு செயல்படும் 'சிடார்’ குழந்தைகள் மையம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் மதுரை மாவட்டங்களில் குழந்தைகள் கல்வி, பாதுகாப்பு, பங்கேற்பு, வளர்ச்சி சார்ந்த உரிமைப் பணி உள்ளிட்டவற்றை முன்னெடுத்து வருகிறது.

இந்த அமைப்பின் சார்பில், கரோனா நிவாரணமாகக் குழந்தைகளுக்குத் தேவையான சத்துமாவு, பிஸ்கட்டுகள், கடலை மிட்டாய் போன்ற உணவுப் பொருட்களோடு, அவர்களின் படைப்பாற்றலை வளர்க்கும் நோக்கில் கலைக் கையேடு மற்றும் அதற்குத் தேவையான எழுது பொருட்கள் உள்ளடக்கிய ரூ.1,500 மதிப்பிலான பொருட்கள் இன்று வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் தொடங்கி வைத்துப் பாராட்டிப் பேசினார்.

மதுரை மீனாம்பாள்புரம், அம்பேத்கர் காலனி, ஜவகர்புரம், தல்லாகுளம், பனங்காடி, கல்மேடு ஆகிய பகுதிகளில் வசித்து வரும் பட்டியலின மற்றும் பொருளாதரத்தில் பின்தங்கிய 1,100 குழந்தைகளுக்கு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சி நிறைவில் பேசிய 'சிடார்' செயல் இயக்குநர் சின்னராஜ் ஜோசப் ஜெய்குமார், "கரோனாவால் கட்டாய விடுப்பில் உள்ள குழந்தைகளின் உடல், மனநலம் சார்ந்த சிக்கல்களை மனதில் கொண்டு, 'பேப்பர் போட், லண்டன்' அமைப்பின் நிதியுதவியோடு இந்த நிவாரணங்களை வழங்கினோம்.

வசதியான வீட்டுப் பிள்ளைகள் இணைய வழிக் கல்வியைப் பெற்று வரும் நிலையில், அதற்கு வாய்ப்பில்லாத ஏழைக் குழந்தைகளுக்குக் கலைப் பயிற்சியினை வழங்கவிருக்கிறோம். 126 பக்கம் கொண்ட இக்கலைக் கையேடானது 6 முதல் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தாங்களாகவே வாசித்து, புரிந்து, கற்றுக்கொள்ளும் அணுகுமுறையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

படம் வரைதல், வண்ணம் தீட்டுதல், கதை, கவிதை எழுதுதல், புகைப்படம் எடுத்தல், பாடல், நாடகம் பழகுதல், கரோனா விழிப்புணர்வு போன்றவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன. தங்கள் பெற்றோர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களின் உதவியோடு எளிதில் கற்றுக் கொள்வதற்கான இனிய அனுபவமாக இந்தக் கையேடு திகழும்.

கரோனா முடக்கக் காலம் மட்டுமன்றி அதனைத் தொடர்ந்து வருகின்ற காலத்தையும் ஆரோக்கியமான மனநிலையோடும், ஆக்கபூர்வமாகவும், படைப்பாற்றலுடனும் எதிர்கொள்வதற்கு இது உபயோகமாக இருக்கும். இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த அரசுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் உதவத் தயாராக இருக்கிறோம்" என்றார்.

"குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கண்காணிப்பு, தலையீட்டுப் பணிகளை உடனடியாகத் தீவிரப்படுத்த தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்றும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்