Last Updated : 07 May, 2024 11:56 PM

 

Published : 07 May 2024 11:56 PM
Last Updated : 07 May 2024 11:56 PM

கிருஷ்ணகிரி அருகே வடமாநிலத் தொழிலாளர்களை மிரட்டி பணம் பறித்த 9 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தொழிற்சாலைகளில் வேலை வாங்கி தருவதற்கு பணம் தர வேண்டும் என கூறி, வடமாநிலத் தொழிலாளர்களை அறையில் அடைத்து வைத்து மிரட்டிய 9 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், சூளகிரி, ஓசூர் பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் வட மாநிலத்தவர், ஆயிரக்கணக்கில் வேலை செய்கின்றனர். இதை சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தி தமிழகத்திற்கு வரும் வட மாநில இளைஞர்களை மிரட்டி பணம் பறிப்பது அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன் கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரத்தில் பெரிய தொழிற்சாலைகளில் வேலை, தங்குமிடம் இலவசம் என வாக்குறுதிகளுடன் சிலர் சமூக வலைதளத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். இதை நம்பி அசாம் மாநிலத்தை சேர்ந்த 9 தொழிலாளர்கள் ரயில் மூலம் கடந்த 5-ம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். தொடர்ந்து விளம்பரத்தில் பார்த்த செல்போன் எண்ணை தொடர்பு பேசி உள்ளனர். பின்னர், அவர்கள் அனுப்பிய காரில், கிருஷ்ணகிரிக்கு வந்தனர்.

தொடர்ந்து, வடமாநிலத் தொழிலாளர்கள், 9 பேரையும் குருபரப்பள்ளி அருகில் உள்ள ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளனர். அவர்களிடம் வந்து பேசிய கும்பல், ‘உங்களுக்கு வேலை கிடைக்க வேண்டுமெனில் நீங்கள் ஒவ்வொரும், குறிப்பிட்ட தொகை தர வேண்டும். இல்லையெனில் அறையை விட்டு வெளியில் செல்ல முடியாது’ எனக்கூறி மிரட்டியுள்ளனர். விபரீதத்தை உணர்ந்த வடமாநில தொழிலாளர்களும் தங்களிடம் இருந்த பணத்தை அவர்களிடம் கொடுத்துள்ளனர். ஒருசிலர் இங்குள்ள தங்கள் உறவினர்களிடம் பேசி பணம் வாங்கி தருகிறேன் எனக்கூறி தாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த குருபரப்பள்ளி போலீஸார், நேற்று இரவு அப்பகுதியில் சோதனை செய்து, அடைத்து வைக்கப்பட்டிருந்த, 9 வடமாநிலத் தொழிலாளர்களை மீட்டனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம், வடமலம்பட்டி நிஷாந்த்(26), போச்சம்பள்ளி பிரபு(29), விளங்காமுடி மோகன்(27), வேட்டியம்பட்டி வினோத்(34), வலசகவுண்டனூர் காளிதாஸ்( 33), கும்மனூர் அரவிந்த்(21), மோடிக்குப்பம் சக்திவேல்(38), போச்சம்ள்ளி பவித்ரன்(28), குருபரப்பள்ளி மணிகண்டன்(31) ஆகிய 9 பேர், வட மாநில தொழிலாளர்களை மிரட்டி பணம் பறித்ததும் தெரிந்தது.

தொடர்ந்து 9 பேரையும் இன்று கைது செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்தனர். இதில், நிஷாந்த், அரவிந்த், பிரபு ஆகியோர் கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி, இதேபோல், வடமாநில தொழிலாளர்களை மிரட்டி கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x