Published : 07 May 2024 09:14 PM
Last Updated : 07 May 2024 09:14 PM

மே 8 முதல் 12 வரை ‘கல்லூரிக் கனவு 2024’ வழிகாட்டுதல் நிகழ்வு - மாவட்ட வாரியாக கால அட்டவணை

சென்னை: நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் “12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு 2024” நிகழ்ச்சியின் மாவட்ட அளவிலான தொடக்க விழா, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு 2024” நிகழ்ச்சி தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் இந்நிகழ்வின் கால அட்டவணை - மாவட்ட வாரியாக:

  • மே 8: சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகபட்டினம், மதுரை, திருநெல்வேலி, சேலம்
  • மே 9: திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், தருமபுரி
  • மே 10: செங்கல்பட்டு, திருப்பூர், அரியலூர், கடலூர், தேனி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி
  • மே 11: காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி, திருபத்தூர்
  • மே 12: ராணிபேட்டை, தென்காசி, நாமக்கல், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, வேலூர்

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை மாவட்டததுக்கான “கல்லூரிக் கனவு 2024” நிகழ்வானது மே 8ம் தேதியன்று நடைபெற உள்ளது. இவ்விழாவில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவ மாணவியர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இத்திட்டத்தின் நோக்கம் 12 ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர்கள் தங்களின் எதிர்கால கனவினை நனவாக்கும் வகையில் அவர்களின் உயர் கல்விக்கான வாய்ப்புகள் உள்ள பாடப்பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்டயபடிப்புகள் மற்றும் கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பதையும், மேற்படிப்பினை முடித்தவுடன் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் போன்ற விவரங்கள், புகழ்பெற்ற வல்லுனர்கள் மற்றும் கல்வியாளர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படவுள்ளன.

இத்தகைய நிகழ்ச்சிகள் மாணவர்களின் எதிர்கால குறிக்கோளை திட்டமிட்டு அடையவும் வெற்றி பெறவும் வழிவகை செய்யும். இந்நிகழ்ச்சியில் உயர் கல்வித்துறை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிகழ்ச்சியில் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

முன்னதாக, பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் “கல்லூரிக் கனவு” என்ற நிகழ்வானது 25.06.2022 அன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தொடங்கி வைக்கப்பட்டது. கடந்த 2022-2023 கல்வியாண்டில் அரசு பள்ளியில் பயின்று 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 3,30,628 மாணவர்களுக்கு உயர்கல்விக்கு உயர்கல்வி வழிகாட்டுதலின் மூலமாக 2,43,710 மாணவர்கள் மருத்துவம், பொறியியல், கலை மற்றும் அறிவியல், சட்டம், பாலிடெக்னிக் மற்றும் இதர உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதன் தொடர் நிகழ்வாக தமிழக விளையாட்டுத் துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினால் கோயம்புத்தூரில் 2024 ஆண்டுக்கான “கல்லூரிக் கனவு 2024” நிகழ்வானது 29.02.2024 அன்று தொடங்கி வைக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x