கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஆசிரியர்கள், கல்வியாளர்கள் வலியுறுத்தல்

By சி.பிரதாப்

கரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி செய்யுமாறு அரசுக்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வியின் பாடத்திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை முப்பருவக் கல்வி முறையும், 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு தேர்வு முறையும் அமலில் உள்ளன. அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 2-ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றன.

இதற்கிடையே கரோனா வைரஸ் தீவிரத்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 8-ம்வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்வு இல்லாமலேயே தேர்ச்சி செய்ய மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன. அதேபோல, தமிழகத்திலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களையும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி செய்யுமாறு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இத்துறையினர் கூறியதாவது:

தமிழ்நாடு மாணவர் பெற்றோர் ஆசிரியர் நலச் சங்கத் தலைவர் எஸ்.அருமைநாதன்: கரோனா விஷயத்தில் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. அதேபோல, நடப்பு கல்வி ஆண்டில் 1 முதல் 9-ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி செய்வதே சிறப்பானதாக இருக்கும்.

மன அழுத்தம் ஏற்படும்

ஏனென்றால், ஏப்ரலில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் எஞ்சியுள்ள பாடங்களை நடத்தி தேர்வுகள் வைக்க போதிய அவகாசம் இருக்காது. குறைந்த காலத்தில் இவற்றைமேற்கொள்ளும்போது மாணவர்கள், பெற்றோருக்கு தேவையற்ற மனஅழுத்தம் ஏற்படும்.

மேலும், இலவச கல்வி உரிமை சட்டத்தின்படி 8-ம் வகுப்பு வரை மாணவர்கள் ஏற்கெனவே கட்டாயத் தேர்ச்சிதான் செய்யப்படுகின்றனர். எனவே, இறுதிப் பருவத் தேர்வை நடத்திதான் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரசுஇந்த முடிவை எடுத்தால் எவ்விதபாதிப்பும் ஏற்படாது. மாணவர்கள், பெற்றோரும் நிம்மதி அடைவார்கள்.

கல்வியாளர், பேராசிரியர் தி.ராசகோபாலன்: தற்போதைய அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, உத்தரபிரதேச அரசு எடுத்த முடிவு வரவேற்புக்குரியது. அதேபோல, தமிழக அரசும் மாணவர்களை தேர்வு இல்லாமல் தேர்ச்சி செய்ய வேண்டும். ஏற்கெனவே மாணவர்கள் 2 பருவத் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றுள்ளனர். அதனால் ஒரு பருவத் தேர்வு பற்றிய கவலையை தவிர்த்து, குழந்தைகளின் பாதுகாப்பு நலன்கருதி முந்தைய பருவத் தேர்வுகளின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க பொருளாளர் நீ.இளங்கோ: கோடை வெயில் தாக்கம் இப்போதே அதிகமாக காணப்படுகிறது. இந்த சூழலில் ஏப்ரலில் மீண்டும் பள்ளிகளை திறப்பது சரியாக இருக்காது. இதனால் குழந்தைகளுக்கு உடல்ரீதியான உபாதைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, நாடு முழுவதும் நிலவும் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை முழு தேர்ச்சி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும். ஒருவேளை விடுமுறை நாட்கள் அதிகமாக சென்றுவிடும் என அரசு கருதினால், பதற்றமான சூழல் தணிந்த பிறகு மாணவர்களுக்கு கல்வி சார்ந்த இதர சிறப்பு பயிற்சிகளை வழங்கலாம். தற்போதையசூழலுக்கு தேர்வு பொருத்தமானதாக இருக்காது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பரிசீலனை செய்து வருகிறோம்

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை உயரதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மார்ச் இறுதிக்குள் கரோனாவின் தாக்கம் கட்டுக்குள் வந்துவிட்டால் ஏப்ரலில் பள்ளிகளை திறந்து ஏப்ரல் 20-ம் தேதிக்குள் துரிதமாக பாடங்களை முடித்து, பள்ளிகளிலேயே பெயரளவுக்கு தேர்வு நடத்தி முடிப்பது குறித்து பரிசீலனை செய்துவருகிறோம்.

ஒருவேளை, அசாதாரண நிலை தொடரும் பட்சத்தில், அரசு வழிகாட்டுதலின்படி 1 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வுகளை ஒத்திவைப்பது அல்லது ரத்து செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

தமிழகம்

11 mins ago

வலைஞர் பக்கம்

14 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

50 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்