ஜனவரி 15: ராணுவ நாள்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு பெயர் பெற்ற நாள்

ஜனவரி 14

இன்று நாம் தமிழ்நாடு என்று அழைக்கும் பல பகுதிகள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தின் பகுதிகளாக இருந்தன. இந்திய சுதந்திரத்துக்குப் பின் 1950-ல் சென்னை மாகாணம் சென்னை மாநிலமானது. மொழிவாரி மாநிலப் பிரிவினைக் கொள்கையின் அடிப்படையில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் பேசும் பகுதிகள் தனி மாநிலங்களாக்கப்பட்டன.

அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சில பகுதிகள் சென்னை மாநிலத்தில் சேர்க்கப்பட்டன. 1956-ல் சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும் என்று கோரிய சுதந்திரப் போராட்டத் தியாகி சங்கரலிங்கனார் அதற்காக உண்ணா விரதப் போராட்டம் மேற்கொண்டு உயிர்நீத்தார்.

அவருக்குப் பின் திராவிட முன்னேற்றக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இந்தப் பெயர்மாற்றக் கோரிக்கைக்குக் குரல்கொடுத்தன. ஆனால், அன்றைய காங்கிரஸ் அரசு இந்தக் கோரிக்கைக்குச் செவிசாய்க்கவில்லை. 1962-ல் மாநிலங்களவை உறுப்பிரான திமுக தலைவர் அறிஞர் அண்ணா, இந்தக் கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பினார்.

இறுதியாக 1967-ல் மாநிலத்தில் திமுகஆட்சி அமைத்து அண்ணா முதல்வரான பிறகுதான் இந்தக் கோரிக்கை நிறைவேறியது. 1967-ல் இதற்கான தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது. 1968-ல் நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் இத்தீர்மானம் நிறைவேறியது. 1969 ஜனவரி 14 அன்று சென்னை மாநிலத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் இந்தியா முழுவதும் ஏற்றுக் கொண்ட நடைமுறை ஆனது. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்படும்.

ராணுவ நாள்

ஜனவரி 15

இந்திய ராணுவம் பிரிட்டிஷ் அரசால் 1895 ஏப்ரல் 1 அன்று உருவாக்கப்பட்டது. நாடு சுதந்திரம் பெறும்வரை பிரிட்டிஷ் அதிகாரிகளே இந்திய ராணுவத்தின் தலைமைப் பதவியில் இருந்தனர். சுதந்திரத்துக்குப் பின் 1949 ஜன-15 அன்று இந்தியரான ஃபீல்ட்மார்ஷல் கே.எம். கரியப்பா இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியானார்.

அப்பதவியைப் பெற்ற முதல் இந்தியர் அவர்தான். ராணுவத்துக்கு முதல் முறையாக ஒரு இந்தியர் தலைவரான நாளையே இந்திய அரசு ராணுவ நாளாகக் கொண்டாட முடிவு செய்தது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15 அன்று டெல்லியில் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு நடைபெறும்.

ஆப்ரிக்காவின் முதல் பெண் அதிபர்

ஜனவரி 16

மேற்கு ஆப்ரிக்க நாடான லைபீரியாவின் 24-ம் அதிபராக 2006 ஜனவரி 16 அன்று பதவியேற்றார் எல்லென் ஜான்சன் சர்லீஃப். இதன் மூலம் ஆப்ரிக்க நாடு ஒன்றின் அரசு தலைமைப் பதவியைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். 1938-ல் பிறந்தவரான சர்லீஃப், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்.

1970 களின் தொடக்கத்தில் தாய் நாடு திரும்பியவர் அதிபர் வில்லியம் டோல் பெர்ட்டின் கீழ் நிதித் துறைக்கான துணை அமைச்சராகச் செயல்பட்டார். அதன் பிறகு ராணுவ ஆட்சிகளிலும் உள்நாட்டுக் கலவரங்களாலும் லைபீரியா பாதிக்கப்பட்டபோது சிறைவாசம், தலைமறைவாக வாழ்வது என வாழ்க்கையைக் கழித்தார். அதன் பிறகு அமைதி திரும்புவதற்கான முயற்சிகளில் முக்கியப் பங்கு வகித்தார்.

2011-ல் அமைதிக்கான நோபல் பரிசு பெண்கள் மத்தியில் அமைதி வளர்ப்புப் பணியில் ஈடுபட்டதற்காக மூன்று பெண் தலைவர்களுக்கு வழங்கப்பட்டது. அவர்களில் சர்லீஃபும் ஒருவர். இவருக்கு 2013-ல் இந்தியக் குடியரசுத் தலைவர் வழங்கும் இந்திரா காந்தி பரிசும் வழங்கப்பட்டது.

பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் பிறந்த நாள்

ஜனவரி 17

அரசியல், அறிவியல், எழுத்து, இதழியல், அச்சுத்தொழில் என்று பல்துறை வித்தகராக விளங்கிய பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் 1706 ஜனவரி 17 அன்று பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் பிறந்தார். அமெரிக்கா என்ற நாட்டை உருவாக்கிய தந்தைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். பிரிட்டிஷ் காலனிகளாக இருந்த நாடுகள், அரசுகளின் ஒற்றுமைக்குப் பணியாற்றினார். ஃப்ரான்ஸின் நம்பிக்கையைப் பெற்று அந்நாட்டின் உதவியுடன் பிரிட்டனிடம் இருந்து அமெரிக்கா சுதந்திரம் பெறுவதில் முக்கியப் பங்காற்றினார். அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை உருவாக்கிய மூவரில் இவரும் ஒருவர்.

இளவயதிலேயே பத்திரிகை நடத்தி செல்வந்தரானவர். தொடர்ந்து பல நாடுகளில் முக்கியப்பதவிகளை வகித்தவர். ஒரு அறிவியலாளராகவும் தொடர்ந்து செயல்பட்டுவந்தார். மின்சாரம் தொடர்பாக இவர் நிகழ்த்திய கண்டு பிடிப்புகள் இயற்பியல் துறையில் பெரும் தாக்கம் செலுத்தின. இடிதாங்கி, வெள்ளெழுத்துக் கண்ணாடி உள்ளிட்ட பல்வேறு கருவிகளையும் கண்டுபிடித்துள்ளார். 1790 ஏப்ரல் 17 அன்று பிலடெல் பியாவில் ஃப்ராங்ளின் மறைந்தார்.

தொகுப்பு: கோபால்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

19 mins ago

சினிமா

40 mins ago

தமிழகம்

47 mins ago

வலைஞர் பக்கம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்