'ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை'- 7 பேர் மரணம் குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி டீனுக்கு உத்தரவு

By வி.செந்தில்குமார்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் விநியோகக் குறைபாட்டால் 7 பேர் மரணமடைந்தது குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க மருத்துவக் கல்லூரி டீனுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் கரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவி வருவதால் தினமும் சராசரியாக 150 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சுமார் 1,650 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன.

மேலும், கோவிட் நல மருத்துவமனைகளான இஎஸ்ஐ மருத்துவமனை, பென்ட்லெண்ட் அரசு மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சுமார் 500 படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருப்பதுடன் கோவிட் நல மையங்கள் மூலம் சுமார் 2,300 படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் பணியும் வேகமாக நடைபெற்று வருகிறது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 150க்கும் மேற்பட்ட கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 145 படுக்கைகள் ஐசியூ வசதி கொண்டதாகவும் 360 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டதாகவும் உள்ளன. ஆக்சிஜன் விநியோகம் செய்வதற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒருங்கிணைந்த ஆக்சிஜன் கொள்கலனும், கூடுதலாக 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலனும் பயன்பாட்டில் உள்ளன.

7 பேர் உயிரிழப்பு

ஆக்சிஜன் விநியோக மையத்தில் இருந்து வார்டுகளுக்குச் செல்லும் குழாயில் நேற்று (ஏப்.19) பிற்பகல் 3 மணியளவில் திடீர் தடை ஏற்பட்டது. இதைச் சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட நேரத்தில், கரோனா சிகிச்சை வார்டு மற்றும் ஐசியூ வார்டில் ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அடுத்தடுத்து மரணடைந்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மாற்று ஏற்பாடாக 5 அடி உயரம் கொண்ட சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் விநியோகம் செய்தனர். ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் சிலர், தாங்கள் வேறு மருத்துவமனைகளுக்கு செல்வதாகக்கூறி ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை அழைத்துச் சென்றனர். ஆக்சிஜன் விநியோகக் குறைபாட்டால் அடுத்தடுத்து 7 பேர் உயிரிழந்தனர்.

மாவட்ட ஆட்சியர் விசாரணை

இந்தத் தகவலை அடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் மணிவண்ணன் உள்ளிட்டோர் விரைந்து சென்று விசாரணை செய்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘மருத்துவமனையில் போதுமான அளவுக்கு கையிருப்பில் ஆக்சிஜன் உள்ளது. 7 பேர் இறப்புக்கான விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தார்.

மருத்துவ கல்வி இயக்குநர்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் அடுத்தடுத்து 7 பேர் இறந்தது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபு நேற்று (ஏப்.19) இரவு மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் செல்வியிடம் விசாரணை நடத்தினார். அப்போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் விவரம், எத்தனை பேர் ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆக்சிஜன் விநியோகத்தில் ஏற்பட்ட கோளாறு, ஆக்சிஜன் இருப்பு விவரங்கள், எத்தனை மணிக்கு உயிரிழந்தனர் போன்ற விவரங்களை விசாரித்துள்ளார்.

இது தொடர்பாக இந்து தமிழ் திசையிடம் இன்று (ஏப்.20) மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் நாராயண பாபு கூறும்போது, ‘‘வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மொத்தம் 16 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலன் வசதி இருக்கிறது. 5 அடி உயர சிறிய சிலிண்டர்கள், மொத்தம் 150 உள்ளன. இதன் மொத்தக் கொள்ளளவு 17,500 லிட்டர். மருத்துவமனையில் தற்போதுள்ள நோயாளிகளுக்கு தினமும் 1,500 லிட்டர் ஆக்சிஜன் தேவைப்படுகிறது. இதன்மூலம் இன்னும் 10 நாட்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. எனவே, ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற பிரச்சினையே இல்லை.

7 பேர் இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவக் கல்லூரி டீன் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்சினை இல்லை. கரோனா தொடங்கியதுமே அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் வசதியை இரண்டு, மூன்று மடங்கு அளவுக்கு அதிகரித்து வைத்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

45 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்