பல ஊழல் பட்டியல்களை அரசு அதிகாரிகள் ஸ்டாலினிடம் கொடுத்துள்ளார்கள்; விரைவில் வெளிவரும்: கே.என்.நேரு  

By செய்திப்பிரிவு

தன் துறையில் ஊழலே இல்லை என்ற அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பேட்டி இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவை. ஊழலுக்காகவே சிறைக்குப் போன முதல்வர் தன் கட்சியில் இருந்ததை மறந்துவிட்டு எங்கள் கட்சித் தலைவர் பற்றி பேசுவதற்கு அமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கே.என்.நேரு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு இன்று வெளியிட்ட அறிக்கை:

“ஊழல் என்ற கரன்சி முகட்டில் உட்கார்ந்துகொண்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஏதோ தன் துறையில் ஊழலே நடக்கவில்லை என்று அப்பாவி போல் நேற்று முன்தினம் போட்ட வேடத்தை நேற்றுக் கலைத்துவிட்டது சென்னை உயர் நீதிமன்றம் அளித்துள்ள இடைக்காலத் தடையுத்தரவு.

“118 நிறுவனங்கள் இருக்கும்போது 8 நிறுவனங்களிடம் ஜி.பி.எஸ். கருவி வாங்க போக்குவரத்துத் துறை அளித்த உத்தரவுக்கு” தடை வழங்கியுள்ள உயர் நீதிமன்றம் போக்குவரத்துச் செயலாளர் ஜனவரி 18ஆம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறது.

ஏற்கெனவே இந்த நிறுவனங்களுக்குப் போட்ட உத்தரவைப் போக்குவரத்து ஆணையர் நிறுத்தி வைத்துள்ளதாக இன்று தனியார் ஆங்கிலப் பத்திரிகையில் செய்தியாக வெளிவந்துள்ளது. கெட்டிக்காரர் புளுகு எட்டு நாளைக்கு நிலைக்காது என்பது போல், ஊழலே நடக்கவில்லை என்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் புளுகு 24 மணி நேரம் கூட நிலைக்கவில்லை.

தன் துறையில் ஊழலே இல்லை என்ற அமைச்சரின் பேட்டி இந்த ஆண்டு இறுதியின் மிகப்பெரிய நகைச்சுவை. ஊழலுக்காகவே சிறைக்குப் போன முதல்வர் தன் கட்சியில் இருந்ததை மறந்துவிட்டு - திமுக பற்றியும், எங்கள் கட்சித் தலைவர் பற்றியும் பேசுவதற்கு விஜயபாஸ்கருக்கு என்ன தகுதி இருக்கிறது?

பேட்டி என்ற பெயரில் பத்திரிகையாளர்களை வைத்துக்கொண்டு வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டியிருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால் அந்த உளறலின்போது எங்கள் கட்சித் தலைவர் வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்றிற்குக் கூட பதில் இல்லை. எங்கள் கட்சித் தலைவர் எழுப்பிய ஊழல்களுக்கு நேரடியாகப் பதில் சொல்ல வக்கின்றி - “ஊழலே நடக்கவில்லை. ஆதாரமற்ற அறிக்கை” என்று 'ஒய்யாரக் கொண்டையாம் தாழம்பூவாம், அதன் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும்' என்ற பழமொழிக்கொப்ப பேட்டியளித்திருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

ஒரு குறிப்பிட்ட கம்பெனியிடம் மட்டும் ஒளிரும் பட்டை வாங்க போக்குவரத்துத் துறை வெளியிட்ட உத்தரவிற்கு ஏற்கெனவே உயர் நீதிமன்றமே தடை போட்டு, இப்போது ஜி.பி.எஸ் கருவி விவகாரத்திலும் உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு வழங்கிய பிறகும் - தன் முகத்தில் கரி பூசப்பட்ட நிலையில் - “என் துறையில் ஊழலே நடக்கவில்லை” என்று வாதிடுவது - “பறப்பது வெள்ளைக் காக்காய் மட்டுமல்ல - அது ஜோராகவும் பறக்கிறது” என்பதைப் போல் இருக்கிறது.

“தனியார் கம்பெனிகள்தான் ஒளிரும் பட்டை உள்ளிட்டவற்றைத் தயாரிக்கிறது” என்று ஒரு புதிய கண்டுபிடிப்பைத் தனது பேட்டியில் கூறியிருக்கிறார் விஜயபாஸ்கர். அரசு நிறுவனம் தயாரிக்கிறது என்று எங்கள் கட்சித் தலைவர் கூறவே இல்லை. அப்படியிருக்கையில் ஏன் இந்தக் குதர்க்கமான மறுப்பு? எங்கள் கட்சித் தலைவர் கேட்டது, “ஏன் ஒரு சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் மட்டும் ஒளிரும் பட்டை உள்ளிட்ட கருவிகளைப் பொருத்திய பிறகு - அந்தத் தனியார் நிறுவனங்களின் வெப்சைட்டில் ஆர்.டி.ஓ. அலுவலர்கள் ஒப்பிட்டுப் பார்த்து எப்.சி. வழங்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டார்” என்பதுதான்.

அதற்கு அமைச்சர் தனது பேட்டியில் கடைசி வரை பதில் சொல்லவே இல்லை, ஒளிரும் பட்டை விவகாரத்தில் போக்குவரத்துத் துறை ஆணையர் அப்படியொரு உத்தரவை வெளியிட்டாரா இல்லையா? அந்த உத்தரவை எதிர்த்து வாகன உரிமையாளர்கள் சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்ததா இல்லையா? உயர் நீதிமன்றம் போக்குவரத்துத் துறை ஆணையரின் உத்தரவுக்குத் தடை விதித்ததா இல்லையா?

உயர் நீதிமன்றம் தடை விதித்ததால், குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் வாங்க வேண்டும் என்ற அந்த உத்தரவில் மீண்டும் சில மாற்றங்களை மட்டும் செய்து போக்குவரத்து ஆணையர் சுற்றறிக்கை அனுப்பினாரா இல்லையா? சவால் விடுகிறேன். அமைச்சர் விஜயபாஸ்கரால் இவற்றை மறுக்க முடியுமா?

“தேசிய நெடுஞ்சாலையில் வேகக்கட்டுப்பாட்டுக் கருவிகள் குறித்த டெண்டரில் 25 கோடி ரூபாய் 900 கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது என்று எங்கள் கட்சித் தலைவர் கூறியதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். அந்தக் கோப்புகள் எல்லாம் அவரிடம் உள்ளன. ஆதாரத்தை எங்கள் தலைவரிடம் கேட்கிறார்.

இருந்தாலும் நான் ஒரு சில கேள்விகளை மட்டும் இதில் கேட்கிறேன். எங்கள் தலைவர் கூறியதுபோல் டெண்டரில் பங்கேற்கும் கம்பெனி “200 சிஸ்டங்களை அமைத்துக் கொடுத்தால் போதும்” என்று முதலில் டெண்டர்விட்டது உண்மையா இல்லையா? பிறகு “1000 சிஸ்டங்கள்” என எண்ணிக்கையை உயர்த்தி டெண்டரைத் திருத்தியது ஏன்? அதேபோல் பங்கேற்கும் நிறுவனம் “150 சிஸ்டங்கள் செய்த நிறுவனமாகவும் - குறைந்தபட்சம் இதுபோன்ற இரு திட்டப் பணிகளை எடுத்துச் செய்த நிறுவனமாகவும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்” என்று டெண்டரில் கூறப்பட்டது உண்மையா இல்லையா?

“ப்ரீ பிட்” கூட்டத்திற்குப் பிறகு “30 சிஸ்டங்கள் உள்ள ஒரேயொரு திட்டத்தை டெண்டரில் பங்கேற்கும் நிறுவனம் செய்திருந்தாலே போதும்” என்று அனுபவத்தைக் குறைத்து திடீரென ஒரு திருத்தம் டெண்டரில் வெளியிட்டது ஏன்? “கரோனா காலத்தால் டெண்டர் பலமுறை தள்ளிவைக்கப்பட்டது” என்று நொண்டிச்சாக்கு கூறுகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர். அவர் அதிமுக அமைச்சரவையில் இருக்கிறாரா அல்லது கமிஷன் மயக்கத்தில் கண் திறக்க முடியாமல் இருக்கிறாரா என்றே தெரியவில்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி துறையில்தான் கோடிக்கணக்கான ரூபாய்க்கு டெண்டர்கள் விடப்பட்டு திறக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துறையிலும்தான் கரோனா காலத்திலும் மளமளவென டெண்டர்கள் விடப்பட்டு - திறக்கப்பட்டுள்ளன. அந்த டெண்டர்களைக் கரோனா காலத்தில் திறக்க முடிந்தபோது - ஏன் போக்குவரத்துத் துறையில் மட்டும் டெண்டர் திறக்கவில்லை.

பலமுறை தள்ளி வைக்கப்பட்டது? கமிஷன் வரும் கான்டிராக்டருக்கு கைகாட்டவே டெண்டர் தள்ளிவைக்கப்பட்டது என்பதுதான் பேட்டியில் அவர் பதில் சொல்ல முடியாமல் தத்தளிப்பதில் தெரிகிறது. இதுதான் அதிமுக ஆட்சியில் நடக்கும் ஒளிவு மறைவற்ற டெண்டரின் லட்சணமா? எனவே, விஜயபாஸ்கருக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். எங்கள் கட்சித் தலைவர் எப்போதும் ஆதாரபூர்வமான ஊழல்களைத்தான் அறிக்கையாகக் கொடுக்கிறார்.

இன்னும் பல ஊழல் பட்டியல்கள் எங்கள் கட்சித் தலைவரிடம் அரசு அதிகாரிகள் கொடுத்து வைத்துள்ளார்கள். அவை சமயம் வரும்போது “சுனாமி” போல் அதிமுக அமைச்சர்களை வந்து தாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இப்போது அவர் துறையில் இரு முறை உயர் நீதிமன்றம் ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ். கருவி உள்ளிட்ட உத்தரவுகளுக்குத் தடையுத்தரவும் வழங்கிவிட்டது.

என் துறையில் ஊழல் நடக்கவில்லை என்று இதற்குப் பிறகும் அமைச்சர் பல்லவி பாடி தன்னையும் ஏமாற்றி - மக்களையும் ஏமாற்றக் கூடாது. தேசிய நெடுஞ்சாலைகளில் வேகக் கருவி அமைக்கும் டெண்டரிலும், ஒளிரும் பட்டை, ஜி.பி.எஸ் கருவி ஆகியவற்றை சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்ற உத்தரவு போட்ட அரசுக் கோப்புகளை இன்றே லஞ்ச ஊழல் ஒழிப்புத் துறையிடம் ஒப்படையுங்கள்.

ஊழல் உண்டா இல்லையா என்பதை லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையே விசாரிக்கட்டும். அமைச்சர் விஜயபாஸ்கருக்குத் திராணியும் தெம்பும் இருக்கிறதா? அமைச்சர் இந்த ஊழல் கோப்புகளைக் கொடுக்கிறாரோ இல்லையோ லஞ்ச ஒழிப்புத் துறையே சம்பந்தப்பட்ட கோப்புகளைக் கைப்பற்றி எங்கள் கட்சித் தலைவர் கேட்டதுபோல் உடனடியாக விசாரணையை நடத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு கே.என்.நேரு வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

54 secs ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்