அறப்போர் இயக்கம் உண்ணாவிரதம்; அனுமதி கோரிய வழக்கில் நாளை உத்தரவு: உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

நீர்நிலைகள் சம்பந்தமாக அறப்போர் இயக்கத்தின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கோரிய வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு முறை பொழியும் மழை நீர்நிலைகளிலும், நிலத்தடியிலும், சதுப்பு நிலங்களிலும் எவ்வளவு சேமிக்கப்பட்டிருக்கிறது என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும். நீர்நிலைகளில் சுத்திகரிக்காத கழிவு நீர் மற்றும் குப்பை கொட்டுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

கழிவுநீர் அனைத்தையும் சுத்திகரித்த பிறகே நீர்நிலைகளில் கலக்க வேண்டும். நீர்நிலைகளை ஆழப்படுத்தி அதன் சேமிப்புக் கொள்ளளவை பல மடங்கு அதிகப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி அறப்போர் இயக்கம் 'கேளு சென்னை கேளு' என்ற தலைப்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

'கேளு சென்னை கேளு' என்ற தலைப்பில் ஜூன் 30-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அறப்போர் இயக்கம் அளித்த விண்ணப்பத்தைக் காவல்துறை நிராகரித்தது.

அதே தேதியில் வேறு அமைப்பு அனுமதி கோரிய விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதாகவும், ஒரே நாளில் இரண்டு பேருக்கு அனுமதி வழங்குவது சாத்தியமில்லை எனவும் ஜூன் 20-ல் பிறப்பித்த நிராகரிப்பு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர பொது அமைதி, சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை நிலைநாட்ட வேண்டிய காரணத்தாலும் அனுமதி மறுக்கப்படுவதாக காவல் ஆணையரகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்து, உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி அறப்போர் இயக்கத்தின் சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகசைலா, ''அமைதியான முறையில் நடைபெறும் போராட்டத்திற்கு வழக்கமான காரணங்களைக் கூறியும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் கூறியும் அனுமதி மறுக்கப்பட்டது'' என்று வாதிட்டார்.

ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது, வழக்கமான நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க வேண்டியதுதானே என காவல்துறையிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகமது ரியாஸ், ''ஏற்கெனவே இரண்டு முறை அனுமதி வழங்கப்பட்டபோது அறப்போர் இயக்கம் நிபந்தனைகளை மீறியது. அதுதொடர்பாக மனுதாரர் மீதான குற்ற வழக்கு நிலுவை காரணமாகவும் அனுமதி மறுக்கப்பட்டது'' என்று தெரிவித்தார்.

இவற்றைப் பதிவு செய்த நீதிபதி, இந்த வழக்கில் நாளை உத்தரவு பிறப்பிப்பதாக கூறி வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

தமிழகம்

11 mins ago

வலைஞர் பக்கம்

14 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

50 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்