ஏடிஎம் பணம் ரூ.28 லட்சத்துடன் ஓட்டுநர் மாயம்: சொந்த ஊருக்கு விரைந்தது தனிப்படை

By செய்திப்பிரிவு

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஏடிஎம் மெஷினில் பணம் நிரப்ப வந்த ஊழியர்களை ஏமாற்றிவிட்டு செக்யூரிட்டி நிறுவன ஜீப் ஓட்டுநர் ரூ.28 லட்சம் பணத்துடன் மாயமாகிவிட்டார். அவரைத்தேடி சொந்த ஊருக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.

சென்னை விமான நிலைய வளாகத்தில் கனரா வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மிஷினில் பணம் நிரப்புவதற்காக 'ரைட்டர் சேப் கார்டு' என்ற தனியார் ஏடிஎம் பணம் நிரப்பும் நிறுவனம் ரூ. 65 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தனர்.

பணம் நிரப்பப்பட்ட ஜீப்பில் கனரா வங்கியின் ஊழியர்கள் கருணாகரன் (24), ராஜ்குமார் (34) மற்றும் துப்பாக்கி ஏந்திய காவலாளி பிஹாரைச் சேர்ந்த ஜியாவுத்தீன் ஆகியோர்  இருந்தனர். ஜீப்பை தூத்துக்குடியைச் சேர்ந்த உதயகுமார் (43) என்பவர் ஓட்டி வந்தார். விமான நிலைய ஏடிஎம் அருகில் வந்ததும் வேனுக்குள் ரூ. 28 லட்சத்தை வைத்து விட்டு மீதிப் பணத்தை கனரா வங்கி ஏடிஎம் மிஷினில் செலுத்துவதற்காக மூவரும் சென்றனர்.

பணத்துடன் ஓட்டுநர் உதயகுமார் மட்டும் வேனுக்குள் அமர்ந்திருந்தார். ஏடிஎம் மிஷினின் அருகில் வேனை நிறுத்துவது வழக்கம் இல்லை என்பதால், சற்று தூரம் தள்ளி ஜீப்பை நிறுத்திவிட்டு செக்யூரிட்டி மற்றும் இரண்டு ஊழியர்கள் பணத்தை நிரப்ப ஏடிஎம் இருந்த இடத்திற்குச் சென்றனர்.

ஏடிஎம் மிஷினில் பணத்தை நிரப்பி விட்டு மூவரும் ஜீப்புக்கு திரும்பினர். ஜீப் மட்டும் நிற்க டிரைவர் உதயகுமாரைக் காணவில்லை. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்து ஜீப்பில் இருந்த ரூ. 28 லட்சம் வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டியை பார்த்த போது அதையும் காணவில்லை. பணம் அனைத்தையும் திருடிக் கொண்டு ஓட்டுநர் உதயகுமார் மாயமானது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த வங்கி ஊழியர் கருணாகரன் மீனம்பாக்கம் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் மீனம்பாக்கம் விமான நிலைய போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். விமான நிலையத்தில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில் ஜீப் ஓட்டுநர் உதயகுமார் ரூ. 28 லட்சத்துடன் தப்பிச்செல்வது பதிவாகி இருந்தது.

தப்பியோடிய உதயகுமாரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பணத்துடன் மாயமான ஓட்டுநர் உதயகுமார் மூன்று நாளைக்கு முன்னர் தற்காலிக ஓட்டுநராக சேர்ந்துள்ளார். அவர் திட்டமிட்டே பணத்தை திருடுவதற்காகவே சேர்ந்தாரா என்பது தெரியவில்லை.

தப்பி ஓடிய வேன் டிரைவர் தனியாக பணப்பெட்டியை தூக்கிச் சென்றிருக்க முடியாது. யாராவது வாகனத்துடன் நின்று ஓட்டுநருக்கு உதவி இருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். ஓட்டுநரின் நண்பர்கள் உறவினர்கள், வேலை கொடுத்த நிறுவனத்தில் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர். ஓட்டுநரின் சொந்த ஊரான தூத்துக்குடிக்கும் தனிப்படை சென்றுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

கருத்துப் பேழை

15 mins ago

கருத்துப் பேழை

21 mins ago

கருத்துப் பேழை

29 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

46 mins ago

உலகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்