கட்டிடங்களின் கதை 02: அருவி வழிந்தோடும் கட்டிடம்

By ரேணுகா

அடர்ந்த காட்டுக்கு நடுவே ஆர்ப்பரிக்கும் அருவியின் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது உலகில் மிக பிரபலமான ஃபாலிங்வாட்டர் (Fallingwater) கட்டிடம். அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பகுதியில் உள்ள இந்தப் பிரபல கட்டிடத்தைக் காண்பதற்கு வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அமெரிக்கக் கட்டிட கலை வரலாற்றில் எல்லாக் காலத்திலும் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது ஃபாலிங்வாட்டர் கட்டிடம்.

நவீன கட்டிடக் கலைக்கும் பசுமைக் கட்டிடக் கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் ஃபாலிங்வாட்டர் கட்டிடத்தை வடிவமைத்தவர் உலகப் புகழ் பெற்ற கட்டிட வடிவமைப்பாளரான ஃபிராங்க் லாய்ட் ரைட் (Frank Lloyd Wright).

வீழ்ச்சியிலும் வீழாதாவர்

அமெரிக்காவில் 1920-களில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் அந்நாட்டில் பெரும் பஞ்சம் நிலவியது. உற்பத்தி சார்ந்த துறைகள் முடங்கிப் போயிருந்தன. இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் தன்னுடைய கட்டிட வடிவமைப்பு அலுவலகத்தில் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருந்தார் ஃபிராங்க் லாய்ட் ரைட். இவரிடம் தொழில்பயிற்றுநர் பணியில் சேர்ந்தார் அமெரிக்காவின் முன்னணித் தொழிலதிபரான எட்கர் ஜோனஸ் காஃப்மானின் மகன் ஜூனியர் எட்கர் காஃப்மான்.

அவரின் கட்டிட வடிவமைப்பில் பிரமித்து போன ஜூனியர் தன்னுடைய தந்தையிடம் ஃபிராங்க் லாய்ட் ரைட்டை அறிமுகப்படுத்தி வைத்தார். தொழிலதிபராக இருந்தாலும் கட்டிடத் துறையில் ஆர்வமுடைய காஃப்மான், ரைட்டின் கட்டிட வடிவமைப்புகளைப் பார்த்த பிறகு வார இறுதிநாட்களில் தங்குவதற்காகத் தனக்கு ஒரு கட்டிடத்தைக் கட்டி தருமாறு கேட்டுள்ளார். இதில் உற்சாகமடைந்த ரைட் உடனடியாக அந்த வேலையை ஒப்புக்கொண்டார்.

அருவியின் அருகில்

இதற்காக பென்சில்வேனியாவின் அருகில் பியர் ரன் (Bear Run)பகுதியில் காஃப்மானுக்கு சொந்தமான இடத்தைப் பார்க்க விரைந்தார் ரைட். அங்கு சென்ற பிறகுதான் அவருக்குத் தெரிந்தது அந்தப் பகுதி முழுவதும் அடர்ந்த மரங்களும் அருவிகளும் சூழ்ந்த பகுதி என்பது. பசுமைக் கட்டிடக் கலையில் ஆர்வமுடைய ரைட்டுக்கு அந்த இடத்தைப் பார்த்தவுடனே பிடித்துப்போய்விட்டது.

முதலில் ஃபாலிங்வாட்டர் கட்டிடத்தை ஆற்றங்கரையின் ஓரத்தில்தான் கட்ட காஃப்மான் திட்டமிட்டிருந்தனர். ஆனால், ரைட்டுக்கு வேறு ஒரு யோசனை தோன்றியது. கொட்டும் அருவியின் மேல் பகுதியில் கட்டிடம் கட்டலாம் எனத் தீர்மானித்தார். இதைச் செயல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருந்தாலும் தன்னுடைய முடிவில் திடமாக இருந்தார் ரைட். அதற்காக அருவியின் மேல் பகுதியில் ஐந்தாயிரத்து முந்நூறு சதுர அடி பரப்பளவில் ஃபாலிங்வாட்டர் கட்டிடத்துக்கான வடிவமைப்பை வரையத் தொடங்கினார்.

waterfall 2jpgஃபிராங்க் லாய்ட் ரைட்

இந்த நேர்த்தியான வடிவமைப்புப் பணியைச் செய்து முடிக்க மட்டும் அவருக்கு ஓராண்டு ஆனது. ஃபாலிங்வாட்டர் கட்டிடத்தின் கட்டுமானப் பணிகள் 1935-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 1938-ஆண்டு நிறைவடைந்தன. கட்டிடத்தின் அடித்தளம் உறுதியாக இருக்கும் வகையில் பிரம்மாண்ட பாறைகளால் அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஃபாலிங்வாட்டர் கட்டிடத்தின் பெரும் பகுதி சுவர்களில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது.

அதேபோல் கட்டிடத்தை வடிவமைக்கச் செங்கல்லுக்குப் பதிலாக முழுமை பெறாச் சிறு பாறைக் கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கட்டிடத்தின் உட்புறமும் வெளிப்புறமும் அருவி பாய்ந்தோடும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பது இந்தக் கட்டிடத்தின் சிறப்புகளில் ஒன்று. அதேபோல் ஒவ்வோர் அறைக்கும் தனி மொட்டை மாடிகள் உள்ளன.

வெறும் கட்டுமானப் பணிகளை மட்டும் செய்யாமல் அந்தக் கட்டிடத்துக்குத் தேவையான நாற்காலி, சோபா போன்ற மரப்பொருட்களையும் ரைட் வடிவமைத்தார். ஃபாலிங் வாட்டர் ஓய்வு இல்லத்துக்கு காஃப்மான் செலவழித்த தொகை மட்டும் 1,55,000 டாலர். அதன் இன்றைய மதிப்பைக் கணக்குப் போட்டு பார்த்தால் பல மில்லியன்களைத் தாண்டும்.

இந்த இல்ல வடிவமைப்பு ரைட்டுக்குப் பேர் வாங்கித் தந்தது. நவீன கட்டிடக் கலைக்கான உதாரணமாகவும் ஆனது. அமெரிக்காவின் மிகச் சிறந்த கட்டிடக் கலைஞர் என்ற பட்டத்தையும் ரைட்டுக்கு ஃபாலிங்வட்டர் பெற்றுத்தந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கம்

1963-ம் ஆண்டுவரை ஃபாலிங்வாட்டரில் காஃப்மான் குடும்பத்தினர் வசித்து வந்தனர். அதன் பிறகு ஃபாலிங்வாட்டர் வீடு பென்சில்வேனியா பாதுகாப்பு அறக்கட்டளைக்குத் தானமாகக் கொடுக்கப்பட்டது. தற்போது இந்த வீடு அமெரிக்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. பொதுப் பயன்பாட்டுக்கு வந்த பிறகு ஃபாலிங்வாட்டரை இதுவரைக்கு ஐம்பது லட்சத்துக்கும் மேற்பட்டடோர் பார்த்துள்ளனர். இந்தக் கட்டிடத்தில் தங்கி இயற்கைச் சூழலைக் கண்டுகளிப்பதற்காகச் சிறப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

தமிழகம்

56 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்