இன்றைய காலத்திற்கான வீடுகள்

By ரிஷி

கட்டுமானத் துறை அதிவேகமாக வளர்ந்துவருகிறது. கட்டுமானத்தை நம்பி வாழ்வை நகர்த்துபவர்களுக்கு இது ஆரோக்கியமான விஷயம். என்றாலும் கட்டுமானத் துறையின் அபரிமிதமான வளர்ச்சி சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் சேதப்படுத்துகிறது எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். இந்தக் கூற்றைக் கட்டுமானத் துறையினரும், வீடு வாங்க நினைப்போரும் கவனத்தில் கொள்வது அவசியம்.

புவி வெப்பமயமாதலை அதிகரிக்கும் காரணங்களில் ஒன்றாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது. கட்டுமானங்களின்போது சுற்றுச்சூழல் பெருமளவில் மாசுபடுகிறது. மேலும் கட்டிடங்களிலிருந்து வெளியேறும் பசுமை மாறா வாயுக்களும் சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்குக் காரணமாக அமைகின்றன.

ஆகவே நமது வீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்யத் துடிக்கும் அதே வேளையில் சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் நினைவில் நிறுத்துவது நல்லது. கட்டுமானங்களை மேற்கொள்ளும்போது சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்னும் அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு சில தீர்வுகளைக் கண்டறிவது மிகவும் அவசியமானது.

இந்தக் கண்ணோட்டத்தாலேயே பசுமை வீடுகள் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் நம்மிடையே வலுப்பெற்றது. வீடுகளைக் கட்டத் தேவைப்படும் கட்டுமானப் பொருள்களின் உபயோகம் அடுத்த தலைமுறையினரைப் பாதித்துவிடக் கூடாது. ரியல் எஸ்டேட் துறை நீண்ட காலம் ஆரோக்கியமாக நீடித்திருக்க கட்டுமானப் பொருள்களின் உபயோகத்தில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

மேம்படும் வாழ்க்கைத் தரம்

சுற்றுசூழலுக்கு உகந்த வீடுகளை நாம் கட்டும்போது, அதிகப்படியான நீர் தேவைப் படாது, கட்டுமானப் பொருள்களும் தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்தப்படும். இதனால் கட்டிடப் பணிகள் இயற்கையைப் பாதிக்காது.

இந்த வீட்டில் குடியேறிய பின்னரும் இயற்கை ஆதாரங்களான வெளிச்சமும் நல்ல காற்றும் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் வீட்டிற்குள் காணப்படும். அதிகமான வெப்பம் வீட்டிற்குள் உருவாவதைப் பசுமை வீடுகள் தவிர்த்துவிடும். இதனால் நாம் சுவாசிப்பதற்குத் தேவையான ஆரோக்கியமான காற்று வீட்டில் எப்போதும் கிடைக்கும்.

பசுமை வீடுகளால் நமது வாழ்க்கைத் தரம் மேம்படுவது மட்டுமல்ல வீடு கட்டும் செலவும் மிகக் குறைவாகவே இருக்கும். ஏனெனில் இந்தக் கட்டுமானங்கள் அதிக கட்டுமானப் பொருள்களை வேண்டுவதில்லை; நீரையும் ஆற்றலையும் அதிகமாக உட்கொள்வதில்லை.

உண்மையான பசுமை வீடுகள் எவை?

பசுமை வீடுகள் பற்றிய போதிய விழிப்புணர்வின்மை, அவற்றைச் சரியாக புரிந்துகொள்ளாதது ஆகிய காரணங்களால் இந்தியாவில் இத்தகைய வீடுகள் பெரிய அளவில் உருவாக்கப் படவில்லை. இந்த வீடுகளை உருவாக்க அதிக செலவு பிடிக்கும் என நினைக்கிறார்கள். ஆனால் இதில் எள்ளளவும் உண்மை இல்லை.

அதேபோல் கட்டுமான நிறுவனங்களும் பசுமை வீடுகளை அமைக்க அதிக செலவாகும் என்னும் தவறான எண்ணத்தாலேயே அவற்றை அமைக்கத் தயக்கம் காட்டுகின்றன. மேலும் பசுமை வீடுகளுக்கான தொழில்நுட்பம், கட்டுமானப் பொருள்கள், கட்டிட நிபுணர்கள் போன்றவற்றைக் கண்டடையவும் கட்டுமான நிறுவனங்கள் சிரமப்படுகின்றன.

ஆனால் பசுமை வீடுகளுக்கான தேவை இந்தியாவில் உள்ளதையும் கட்டுமான நிறுவனங்கள் உணர்ந்துள்ளன. எனவே பசுமை வீடுகளுக்குரிய விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாமலேயே பசுமை வீடுகள் என்னும் குடியிருப்புகளை விற்றுவருகின்றன.

கட்டுமானத்தில் கட்டிட வரைபடம் முதல் குடியேறுவது வரையிலான அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றிய வீடே முழுமையான பசுமை வீடு.

இதற்கு மாறாக ஒருசில விதிமுறைகளை மட்டும் பின்பற்றி அதைப் பசுமை வீடு என்பது சரியான செயலல்ல. அப்படியானால் நிஜமான பசுமை வீட்டில் என்னென்ன வசதிகள் இருக்க வேண்டும் எனக் கேள்வி எழுகிறதா?

நிபுணர்கள் சில தகுதிகளைக் கூறுகிறார்கள், அவை:

குடியிருக்கத் தகுதியான பசுமை வீட்டுக்குச் சென்றுவர பொதுப் போக்குவரத்தே பயன்பட வேண்டும். வீட்டை ஒளியூட்டும் விளக்குகள் ஆற்றல்சேமிப்பு பெற்றவையாக இருக்க வேண்டும். கட்டுமானத்தின் நீர் தேவை குறைவாக இருக்க வேண்டும்.

சூரிய சக்தியில் இயங்கும் வாட்டர் ஹீட்டர் பயன்படுத்த வேண்டும்; மழைநீர் சேகரிப்பு முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும்; தண்ணீரை மறு சுழற்சி செய்து பயன்படுத்தும் அமைப்பு நிறுவப்பட்டிருக்க வேண்டும். குளிர்சாதன வசதி போன்ற செயற்கை வசதிகள் இன்றி இயற்கையான முறையில் வீட்டில் குளுமை நிலவ ஏற்பாடு செய்யப்பட்டிருக்க வேண்டும்.

தேவையான அளவில் வீட்டில் திறந்தவெளியும் பசுமையான சூழலும் இருக்க வேண்டும். வீட்டில் உபயோகப்படுத்தப்படும் கழிவுநீரை முறையாகக் கையாளும் வசதி இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் பின்பற்றி கட்டப்பட்ட வீடே முறையான பசுமை வீடாக இருக்கும்.

பசுமை வீடுகள் என்று சொன்னாலும் சரி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகள் என்று சொன்னாலும் சரி இரண்டுமே சுற்றுச்சூழல் பாதிப்பை இயன்றவரை தவிர்த்த கட்டுமானத்தாலேயே சாத்தியப்படும். இந்தப் பசுமை வீடுகளால் மனிதர்களின் இயல்பான சுற்றுச்சூழல் அதிகமான அளவில் பாழாக்கப் படாததால் அவர்களின் நலமான வாழ்வு மேம்பட வழியேற்படும்.

நமது நாட்டின் தட்பவெப்பத்திற்கு உகந்த மரபான கட்டிடங்களில் நாம் வாழும்போது நமது வாழ்வின் தரம் மேம்படும். அதேவேளையில் அதிகப் படியான ஆற்றலையும் அந்தக் கட்டிடங்கள் உறிஞ்சாது. இயற்கைக்குச் சேதாரமற்ற ஆரோக்கிய சூழலையே நமது மரபான கட்டிடங்கள் வேண்டி நிற்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

4 mins ago

தமிழகம்

11 mins ago

வலைஞர் பக்கம்

14 mins ago

தமிழகம்

27 mins ago

சினிமா

50 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்