பார்வை : திருமணமே வாழ்க்கையாகிப் போனால்...

By என்.கெளரி

தமிழ்த் திரையுலகம் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் படங்கள் எடுக்கத் தொடங்கியிருக்கிறது. ‘இறைவி’யைத் தொடர்ந்து வெளியாகியிருக்கும் ‘ஒரு நாள் கூத்து’ படமும் பெண்களை முன்னிறுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் இந்தப் படம் மூன்று பெண்களின் திருமணத்தை நோக்கிய பயணத்தைப் பதிவுசெய்கிறது.

மூன்று பெண்களும் திருமணமும்

இந்தப் படத்தின் முதல் முக்கியமான கதாபாத்திரமாக சுசீலாவை (ரித்விகா) சொல்லலாம். பிரபல பண்பலை வானொலியில் ‘ஆர்ஜே’வாக இருக்கும் சுசீலாவுக்கு இருபத்தெட்டு வயதாகியும் திருமணமாகவில்லை. குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்ட திருமணமும் சுசீலாவின் தோற்றத்தால் நின்றுவிடும் நிலையில் இருக்கிறது. நன்றாகப் படித்து, நல்ல வேலையில் சுயமாகச் சிந்திக்கும் திறனிருக்கும் பெண்கூட, “இன்னும் ஏன் திருமணமாகவில்லை”என்ற கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் திணறுவதை இவருடைய கதாபாத்திரம் உணர்த்துகிறது.

இரண்டாவது முக்கியமான கதாபாத்திரம் லக்ஷ்மி (மியா ஜார்ஜ்). பள்ளி வாத்தியாரான அப்பா பார்த்துவைக்கும் ‘நல்ல மாப்பிள்ளை’யைத் திருமணம் செய்துகொள்வதற்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் கிராமத்துப் பெண்ணின் கதாபாத்திரம். வருகிற வரன்களை எல்லாம் அப்பா ஏன் தட்டிக்கழிக்கிறார் என்ற கேள்விக்குக்கூட விடைதேடத் துணியாத ஒரு பெண்ணின் வாழ்க்கையை இவரது கதாபாத்திரம் பதிவுசெய்கிறது.

மூன்றாவது, ஐ.டி. துறையில் வேலைபார்க்கும் காவ்யாவின் (நிவேதா பெத்துராஜ்) கதாபாத்திரம். சவாலான காதல் வாழ்க்கைக்காகக் காத்திருக்கலாமா, இல்லை அப்பா சொல்லும் மாப்பிள்ளையைத் திருமணம் செய்துகொள்ளலாமா என்ற குழப்பத்தில் இருக்கும் பெண்ணின் கதாபாத்திரம் இது.

திருமணச் சந்தை தேவையா?

இந்த மூன்று பெண்களும் திருமணத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதை வைத்து இன்றைய பெண்கள் திருமணச் சந்தையில் சந்திக்கும் பிரச்சினைகளைச் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் நெல்சன். ஆனால், இயக்குநரின் முயற்சி முழுமையாக வெற்றிபெற்றதாகச் சொல்ல முடியவில்லை.

பெற்றோர்களையும் சமூகத்தையும் எதிர்த்துத் துணிச்சலுடன் தங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் இந்தத் தலைமுறைப் பெண்களால் இந்தப் படத்தை ரசிக்க முடியாது. ஏனென்றால், இந்தப் படத்தில் வரும் மூன்று பெண்களும் தங்கள் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை தங்களுடையது என்ற தெளிவான சிந்தனை இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

இன்றைய பெண்கள் யாராவது, இந்தப் படத்தில் வரும் சுசீலா கதாபாத்திரத்தைப் போல, ‘உன்னை எனக்குப் பிடிக்கவில்லை’ என்று சொன்ன பிறகும், ஓர் ஆணிடம் சென்று திருமணம் செய்துகொள்ளச் சொல்லிக் கெஞ்சுவார்களா? படத்தில் வரும் காவ்யா கதாபாத்திரத்தைப் போல, காதலனுக்காகக் காத்திருக்காமல், அவன் பிரச்சினை என்ன எனப் புரிந்துகொள்ள முயலாமல், அவசரமாக அப்பா கைகாட்டும் யாரோ ஒருவனைத் திருமணம் செய்துகொள்கிறார்களா? இல்லையென்றால், லக்ஷ்மி கதாபாத்திரத்தைப் போல அப்பாவின் முட்டாள்தனத்தை ஆண்டுக்கணக்கில் கேள்வி கேட்காமல் திருமணம் எப்போது நடக்கும் என்ற ஏக்கத்திலேயே காலம்கழிக்கிறார்களா? நிச்சயமாகக் கிடையாது.

இன்றைய பெண்கள் அவர்களுடைய வாழ்க்கைத் துணையை அவர்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றுதான் விரும்புகிறார்கள். அதற்காகத் தங்கள் உயிரையும் பணயம் வைத்துப் போராடுகிறார்கள். சுசீலாவும் சரி, காவ்யாவும் சரி, பணி வாழ்க்கையில் வெற்றிகரமாக இருப்பதைப் பற்றி எந்தப் பெருமிதமும் இல்லாமல் இருக்கிறார்கள். இன்று நகரத்தில் வாழும் இளம் பெண்கள் இவர்கள் இருவரையும் போலத் திருமணத்தைப் பற்றி மட்டுமா யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்?

படத்தில் வரும் மூன்று பெண்களும் ஏதோவொரு கட்டத்தில் தங்களுடைய வாழ்க்கையைத் தாங்களே அமைத்துக்கொள்ளலாம் என்று துணிச்சலுடன் முடிவெடுக்கிறார்கள். ஆனால், அந்தத் துணிச்சலான முடிவுகளையும் தோல்வியடைய வைத்திருப்பது படத்தைப் பெண்களுக்கு எதிரான படமோ என்று யோசிக்க வைத்துவிடுகிறது. அந்த முடிவுகள் யதார்த்தத்துக்குத் தொடர்பில்லாமல், நம்பகத்தன்மையும் இல்லாமல் இருக்கின்றன. தோல்வியின் கழிவிரக்கத்தின் மீதே இயக்குநருக்கு அதிக நம்பிக்கை இருப்பதாகத் தெரிகிறது. பல காட்சிகளைக் கவனமாகக் கையாண்டுள்ள இயக்குநர், பெண்களின் பாத்திர வார்ப்பில் சறுக்கியிருக்கிறார். சம்பந்தமே இல்லாமல், படத்தின் முடிவில் மூன்று பெண்களின் வாழ்க்கையும் இணைக்க முயற்சித்திருப்பதும் படத்தின் நம்பகத்தன்மையை ஒரேடியாகக் குறைத்துவிடுகிறது.

திரைக்கதை வலிமையற்றதாக இருந்தாலும் ரித்விகா, மியா ஜார்ஜ், அறிமுக நடிகை நிவேதா என மூன்று பெண்களின் இயல்பான நடிப்பு இந்தப் படத்துக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

திருமணத்தைத் தாண்டியும், வாழ்க்கைத் துணையைத் தாண்டியும் பெண்கள் சிந்திக்கத் தொடங்கி வெகு காலமாகிவிட்டது. ஆனாலும், இன்னமும் பெண்களுக்குத் திருமணம்தான் வாழ்க்கை என்று ஏன் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் நிறுவ முயற்சித்துக்கொண்டிருக் கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

17 mins ago

விளையாட்டு

34 mins ago

இந்தியா

57 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்