உலகைக் கவர்ந்த உருளைக் கிழங்கு!

By எஸ்.சுஜாதா

உருளைக் கிழங்கைப் பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? சுவையில் உலக மக்கள் அனைவரின் மனதையும் கொள்ளைகொண்டது இந்த உருளைக் கிழங்கு மட்டுமே! உருளைக் கிழங்கைப் பற்றித் தெரிந்துகொள்வோமா?

உலகம் முழுவதும் அரிசி, கோதுமை, சோளத்துக்கு அடுத்தபடியாகப் பயிர் செய்யக்கூடிய தாவரம் உருளைக் கிழங்கு. சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருளைக் கிழங்கைப் பயிர் செய்ய ஆரம்பித்துவிட்டனர். உருளைக் கிழங்கின் தாயகம் பெரு. 16-ம் நூற்றாண்டில்தான் ஐரோப்பாவுக்கு அறிமுகமானது. ஐரோப்பியப் பயணிகள் மூலம் கடல் கடந்து, ஆசிய நாடுகளுக்கும் வந்து சேர்ந்தது.

உலகின் மிக நீளமான மலைத்தொடரான ஆண்டிஸ் மலைப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகை உருளைக் கிழங்குகள் பயிரிடப்படுகின்றன. சிவப்பு, வெள்ளை, மஞ்சள், இளஞ்சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்களிலும் பலவித அளவுகளிலும் உருளைக் கிழங்குகள் விளைகின்றன. அரிசி, ரொட்டியில் இருப்பதைப் போல உருளைக் கிழங்கில் ஏராளமான கார்போஹைட்ரேட் சத்து உள்ளது. நார்ச்சத்து, புரோட்டீன், கால்சியம், இரும்புச் சத்து, பொட்டாசியம், வைட்டமின் ‘சி’ ஏராளமாக உள்ளன.

130 ஆண்டுகளுக்கு முன்பு அலாஸ்காவில் தங்க வேட்டை நடந்தபோது, தங்கத்தைக் கொடுத்துவிட்டு உருளைக் கிழங்கை அந்த எடைக்கு வாங்கிக்கொண்டார்கள்! நிறைய சத்துகள் அதிகம் இருப்பதால், தங்கத்தைப் போல உருளைக் கிழங்கை அலாஸ்கா மக்கள் கருதினார்கள்.

பிரெஞ்சு மன்னர் லூயி பிலிப் ஒருநாள் இரவு உணவுக்குத் தாமதமாக வந்தார். ஏற்கெனவே பொறிக்கப்பட்ட உருளைக் கிழங்குகளை எடுத்து மீண்டும் சூடான எண்ணெயில் பொரித்துப் பரிமாறினார் சமையல்காரர். உருளைக் கிழங்குத் துண்டுகள் உப்பி, பலூன்களைப் போல இருந்தன. அந்தச் சுவை மன்னருக்கு மிகவும் பிடித்துப் போனது. அதிலிருந்து ஃபிரெஞ்ச் ஃப்ரை என்ற புதிய உணவு அறிமுகமானது.

அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கார்னெலிஸ் வாண்டர்பில்ட், 1853-ல் உருளைக் கிழங்கு மிகவும் குண்டாக நறுக்கப்பட்டிருப்பதாகக் கூறிச் சமையலறைக்குத் திருப்பி அனுப்பினார். சமையல் கலைஞர் காகிதத்தைப் போல மிக மெல்லியதாக உருளைக் கிழங்குகளை நறுக்கி, எண்ணெயில் பொரித்து, உப்பு தூவிக் கொடுத்தார். சாப்பிட்ட அனைவரும் சுவையில் மயங்கிப் போனார்கள். இப்படித்தான் சிப்ஸ் உருவானது. இன்று ஃபிரெஞ்ச் ஃப்ரைஸும் சிப்ஸும் உலகம் முழுக்கப் பரவிவிட்டன.

1995-ம் ஆண்டு விண்வெளியில் வளர்ப்பதற்காக நாசா மூலம் உருளைக் கிழங்குச் செடி அனுப்பி வைக்கப்பட்டது. நீண்ட காலம் விண்வெளியில் தங்குபவர்களுக்காகவும் எதிர்காலத்தில் விண்வெளிக்குச் செல்பவர்களுக்காகவும் இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. பூமியிலிருந்து விண்வெளிக்குச் சென்ற முதல் காய் உருளைக் கிழங்கு என்ற சிறப்பையும் பெற்றது.

உலகில் 155 நாடுகளில் உருளைக் கிழங்கு பயிரிடப்படுகிறது. சராசரியாக ஓர் அமெரிக்கர் ஓராண்டில் 56 கிலோ உருளைக் கிழங்கைச் சாப்பிடுகிறார்! ஜெர்மானியர்கள் இதைவிட அதிகமாகச் சாப்பிடுகிறார்கள்.

பெரு நாட்டில் வசித்த இன்கா மக்கள் உருளைக் கிழங்கைப் பல விதங்களிலும் பயன்படுத்தி வந்தனர். உடைந்த எலும்புகள் மீது உருளைக் கிழங்கை நறுக்கிக் கட்டிவைத்தனர். உருளைக் கிழங்கைச் சாறு எடுத்து முகப் பொலிவுக்குப் பூசினர். தொண்டை வலிக்கு உருளைக் கிழங்கைச் சூடுபடுத்தி ஒத்தடம் கொடுத்தனர்.

வேக வைத்த உருளைக் கிழங்கு என்றால் சீக்கிரத்தில் ஜீரணம் ஆகும். எண்ணெயில் பொரிக்கப்பட்ட உருளைக் கிழங்குகளை அதிகம் எடுத்துக்கொள்வது உடல் நலத்துக்குத் தீங்கானது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்