வன்முறையை இயல்பாக்கலாமா?

By ச.கோபாலகிருஷ்ணன்

வன்முறையை இயல்பாக்கலாமா?

இன்று பகல் 1மணிக்கு 'சாணிக் காயிதம்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது. வன்முறையையும் அதற்கு அடிநாதமாக விளங்கும் மனித உணர்ச்சிகளையும் மேம்பட்ட அழகியலுடன் காட்சிப்படுத்திய ‘ராக்கி’ திரைப்படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் அடுத்த படம் இது. நம் சமகாலத்தின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன் இந்தப் படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இன்னொரு முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கடந்த டிசம்பர் 23அன்று வெளியாகி விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட ‘ராக்கி’ அருண் மாதேஸ்வரனின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. 'சாணிக் காயிதம்’ படத்தை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

திரையில் தெறிக்கும் வன்முறை

‘சாணிக் காயிதம்’ ட்ரெய்லரின் மூலம் அருணின் முந்தைய படத்தைப் போலவே இதுவும் வன்முறையை திரை முழுவதும் தெறிக்கவிடும் படம் என்பது தெளிவாகியிருக்கிறது.கேஸ் சிலிண்டர் போடுபவரான சங்கையா (செல்வராகவன்), காவலரான பொன்னி (கீர்த்தி சுரேஷ்) இருவரிடமும் நடத்தப்படும் விசாரணையில் அவர்கள் வெவ்வேறு ஊர்களில் 24 கொலைகளைச் செய்திருப்பதாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்கள். விசாரணை செய்பவர் யார் என்பது காண்பிக்கப்படவில்லை. இந்த விசாரணைக் காட்சிகளுக்கிடையில் இண்டர்கட்டாக கத்திக் குத்துகளும் ‘சதக் சதக்’ என்று ஒலி எழுப்பும் கத்தி வெட்டுகளும். துப்பாக்கியால் சுடுவதும். துப்பாக்கியால் அடித்தே கொல்வதுமாக அப்பட்டமான தயக்கமற்ற வன்முறைத் துணுக்குகளால் நிரம்பியிருக்கின்றன. குத்து அல்லது வெட்டு விழுவதைக் கேமரா காண்பிக்கவில்லை என்றாலும் ஆயுதங்கள் எழுப்பும் ஒலிகள், கதாபாத்திரத்தின் முகபாவங்கள், அலறல்கள் ஆகியவற்றின் மூலமே வன்முறை முகத்தில் அறைகிறது.

தமிழ் சினிமாவில் நாயகர்கள் செய்துவந்த மிகைநாயக சாகசங்களையும், அடி, வெட்டு, கொலை உள்ளிட்ட வன்முறைசெயல்பாடுகளையும் நாயகிகளும் செய்வதுபோல் காண்பிப்பது கடந்த சில ஆண்டுகளின் போக்காக உருவெடுத்திருக்கிறது. நாயகர்களின் இடத்தில் நாயகிகள் இவற்றைச் செய்வதற்கு ஒரு முற்போக்கு/புரட்சி பாவனையும் கிடைத்துவிடுகிறது. அந்த வரிசையில், இதுவரை மென்மையான அல்லது வெள்ளந்தியான கதாபாத்திரங்களில் மட்டுமே திரையில் தோன்றியுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் சளைக்கச் சளைக்க கொலைகளைச் செய்பவராகக் காண்பிக்கப்பட்டிருக்கிறார். அதோடு தன்னிடம் விசாரணை செய்பவரையும் “கொன்னுடனும் போல இருக்கு” என்கிறார். அந்தக் கொலைக் கோவத்தை அவர் வெளிப்படுத்தும் வசனத்திலும் நினைத்துப் பார்க்கவே கொடூரமாக உள்ள வன்முறையின் மூலம் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் ட்ரெய்லரின் இறுதி ஷாட் “சங்குல எறக்கறேன்ன” என்று கேட்டுக்கொண்டே கீர்த்தி சுரேஷ் ஒருவரைச் சுட்டுக் கொல்வதுபோல் அமைந்துள்ளது.

தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட தாக்கம்

கதையின்படி சங்கையாவும் பொன்னியும் இவ்வளவு கொடூரமான வன்முறையைக் கையிலெடுத்து இத்தனை கொலைகளைச் செய்திருப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் என்பதை ஊகிக்க முடிகிறது. அதேபோல் பல வகையான வடிவங்களில் வன்முறை ஏதேனும் ஒரு மூலையிலேனும் அன்றாட நிகழ்வாகச் சமூகத்தில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கிறது. இத்தகைய சமூகத்தில் உருவாகும் படைப்புகள் வன்முறையைக் காட்சிப்படுத்தவே கூடாது என்று எதிர்பார்ப்பதிலும் நியாயமில்லை. மேலும் வன்முறையைப் பற்றியும் வன்முறையை பிரதான உள்ளடக்கமாக முன்வைத்தும் கதைகளை எழுதுவதற்கும் திரைப்படங்களை உருவாக்குவதற்குமான படைபாளிகளின் சுதந்திரம் மதிக்கப்பட வேண்டும். ஆனால் இதையெல்லாம் தாண்டி வன்முறையை இவ்வளவு தீவிரமாகவும் விரிவாகவும் கேமராவில் பதிவுசெய்து திரையில் படரவிடும் இது போன்ற படைப்புகள் சமூகத்தில் என்ன விதமான தாக்கத்தை விளைவிக்கும் என்பதையும் யோசித்தாக வேண்டியுள்ளது.

எந்தக் குற்ற உணர்வும் இல்லாமல் வன்முறையில் ஈடுபடுவது. சின்ன சின்ன குற்றங்களுக்கெல்லாம் தீவிர வன்முறையை பிரயோகித்து தண்டிப்பது, இத்தகையை தண்டனைகளைக் கடந்து செல்வது, ஏற்றுக்கொள்வது, இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலே போய் வன்முறையைக் கொண்டாடுவது உள்ளிட்ட மனநிலைகளைக் கொண்ட மனிதர்களுக்கு நம் சமூகத்தில் பஞ்சமில்லை. வன்முறையை முற்றிலும் தவிர்க்க விரும்புவோர்கூட வன்முறையால் பாதிக்கப்படுவதும் பிறர் பாதிக்கப்படுவதைத் தட்டிக் கேட்டு தானும் அகப்பட்டுக்கொள்வது அல்லது பின்விளைவுகளுக்கு பயந்து வன்முறையைக் கடந்து செல்ல வேண்டியிருப்பதுமான வன்முறை இயல்பாக்கப்பட்ட சூழலில்தான் நாம் இருக்கிறோம்.

இந்தப் பின்னணியில் பொதுப்புத்தியில் பெரும் தாக்கம் செலுத்தக்கூடிய ஆகப் பெரும் வெகுஜனக் கலைவடிவமான சினிமாவில் கொடூரக் கொலைகளையும் வன்முறைக் காட்சிகளையும் திரையில் விரிவாகக் காண்பிப்பது இந்த வன்முறை இயல்பாக்கத்துக்கு வலுவூட்டுகிறது. அதனை மேலும் துரிதப்படுத்துகிறது. முதன்மைக் கதாபாத்திரங்கள் வன்முறையைக் கையிலெடுப்பதற்குக் கதையில் எவ்வளவு நியாயங்கள் காண்பிக்கப்பட்டாலும் திரையில் காண்பிக்கப்படும் வன்முறையைக் காட்சியாக உள்வாங்கும்போது அது மனித மனங்களில் ஏற்படுத்தும் தாக்கங்கள் நியாய அநியாயம் குறித்த தர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை படைப்பாளிகள் கருத்தில்கொள்ள வேண்டும்.

தவறாகப் பயன்படுத்தப்படும் சுதந்திரம்

’சாணிக் காயிதம்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓ.டி.டியில் மே-6 அன்று நேரடியாக வெளியாகவிருப்பதாக ட்ரெய்லரில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிடியில் வெளியாகும் தமிழ்ப் படைப்புகள் பலவற்றில் கெட்ட வார்த்தை வசவுகள், வெளிப்படையான பாலியல் சார்ந்த உரையாடல்கள், திரையில் ரத்தம் தெறிக்கும் வன்முறை ஆகியவை அதிகமாக இடம்பெற்றுவருகின்றன. கதையின் தேவைக்கேற்ப இவற்றைப் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் தணிக்கைக்கு உட்படாத ஓ.டி.டி வெளி வழங்கும் கட்டற்ற சுதந்திரத்தை இதுபோன்ற தவறான விஷயங்களைக் காண்பிப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதையும் கவலையுடன் கவனிக்க வேண்டியுள்ளது. நீண்டகால நோக்கில் ஓ.டி.டி வெளி படைப்பாளிகளுக்கு வழங்கும் சுதந்திரத்தை இல்லாமல் ஆக்கக்கூடிய அல்லது நீர்த்துப்போகவைக்கக்கூடிய அபாயம் இதில் இருப்பதைப் படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் உணர வேண்டியது காலத்தின் கட்டாயம்.

படத்தின் ட்ர்யெலரை மட்டும் முன்வைத்து விமர்சிப்பது சரியா என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ட்ரெய்லரில் காண்பிக்கப்பட்ட வன்முறைக் காட்சிகளின் பின்னணியையும் காரணங்களையும் படம் வெளியான பிறகுதான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், இதில் வெளிப்பட்டிருக்கும் அதீத வன்முறையின் காரணமாக இங்கு விவாதிக்கப்பட்டுள்ள விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் தன்னளவில் இந்த ட்ரெய்லர் இடமளிக்கவே செய்கிறது.

https://www.youtube.com/watch?v=Ri_4HlFQHU4

இதுபோன்ற பயனுள்ள கட்டுரைகளை தவறவிடாமல் படிக்க: https://www.hindutamil.in/web-subscription

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

50 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்