துறை அறிமுகம்: பேரிடரிலிருந்து மீளப் படிப்போம்!

By ம.சுசித்ரா

மழைக் காலம் வந்துவிட்டது. அதிலும் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களுக்குக் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்தான் கண் முன் வந்து பயமுறுத்துகிறது. வட மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பிஹார், அசாம் ஆகியவை சென்ற மாதம் வெள்ளப் பெருக்கில் தத்தளித்ததும் அங்கு வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்துன்பத்தால் அல்லாடியதும் நமக்குத் தெரியும். இந்தியாவில் மட்டுமல்ல இத்தாலியில் நிலநடுக்கம், கலிபோர்னியாவில் காட்டுத்தீ, இந்திய எல்லை உட்பட உலக நாடுகள் சிலவற்றில் பயங்கரவாதத் தாக்குதல் எனப் பலவிதமான பேரிடர்களால் மக்கள் பேராபத்தைத் தொடர்ந்து எதிர்கொண்டிருக்கிறார்கள்.

வெள்ளம், சுனாமி, நிலநடுக்கம், வறட்சி, பயங்கரவாதத் தாக்குதல், அணுக்கதிர் வீச்சு உள்ளிட்ட பேரழிவுகளால் கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் 30 லட்சம் பேர் பலியாகிவிட்டார்கள், 80 கோடி மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஐ.நா.வின் ஆய்வறிக்கை. எதிர்பாராத நேரத்தில் சில மணி நேரங்களில் நம் வாழ்வைச் சூறையாடும் இயற்கைச் சீற்றங்களும் பேரிடர்களும் ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து மீளப் பல ஆண்டுகள் தேவைப்படுகின்றன.

ஆனால் ஒன்றை யோசிக்க வேண்டியிருக்கிறது. பேரழிவுகள் நிகழ்வதை நம்மால் முழுவதுமாகத் தடுக்க முடியாது என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சரியாக எடுப்பதன் மூலம் கூடுமானவரை அவை ஏற்படுத்தும் பாதிப்பிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும். நம்மை அச்சுறுத்தும் விஷயமே இதுதான். போன ஆண்டு பெய்த கனமழையைத் தாண்டி மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதற்குக் காரணம் பெருமழையை எதிர்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்கத் தவறியதுதான். ஆனால் இப்போதும் அதே நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

அரசும் கல்வி அமைப்பும்

இந்தியாவில் ஏற்படக்கூடிய இயற்கைப் பேரழிவுகள் முதல் உயிரியல், ரசாயன, அணுக் கதிரியக்கம், பயங்கரவாதத் தாக்குதல் போன்ற பேரழிவுகளைச் சமாளிக்க உருவாக்கப்பட்டதுதான் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம். 2001-ல் குஜராத் பூகம்பத்துக்குப் பிறகு இந்த ஆணையத்தின் தேவை மேலும் தீவிரமாக உணரப்பட்டது. அதன்படி 25 டிசம்பர் 2005-ல் பேரிடர் மேலாண்மைச் சட்டம் இயற்றப்பட்டது.

எவ்வாறு அரசு இதுகுறித்துத் தீவிரமாகச் சிந்தித்துச் செயல்பட வேண்டுமோ அதுபோலவே கல்வி நிறுவனங்களும் இதை எதிர்கொள்ளக் கற்றுத்தர வேண்டும் இல்லையா? இதைப் படிப்பாக அறிமுகப்படுத்தி அதற்குரிய வேலை வாய்ப்புகளை உண்டாக்கினால் மட்டுமே சரியான முறையில் பேரழிவுகளை எதிர்கொள்ள முடியும். இயற்கைச் சீற்றங்களையும் பேரழிவுகளையும் எதிர்கொள்ளவும் அதனால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும், மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் சொல்லித் தருவதுதான் பேரிடர் மேலாண்மை (Disaster Management) படிப்பாகும்.

பேரழிவுகள் ஏன் நிகழ்கின்றன, அவை ஏற்படுத்தும் பாதிப்புகளின் தீவிரத்தை எப்படிக் குறைப்பது, பேரிடரில் சிக்கிக்கொள்ளும் மக்களை எப்படி மீட்பது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து, நிவாரணப் பொருட்கள் ஆகியவற்றை எப்போது எப்படி வழங்குவது உள்ளிட்டவை பேரிடர் மேலாண்மையில் விரிவாகக் கற்றுத்தரப்படுகின்றன. இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டமாகவும் இந்தப் படிப்பு இந்தியா முழுவதும் பல கல்வி நிறுவனங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

பேரிடர் மேலாண்மையை எங்கே படிக்கலாம்?

# சிம்பயாசிஸ் இன்ஸ்டிடியூட் அஃப் ஜியோஇன்ஃபர்மாட்டிக்ஸ், பூனே

# தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம், புதி டெல்லி

# டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சைன்சஸ், மும்பை, ஜம்செட்ஜி டாடா செண்டர் ஃபார் டிஸாஸ்டர் மேனேஜ்மெண்ட்

# இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலைப் பல்கலைக்கழகம், புது டெல்லி

# டிஸாஸ்டர் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட், போபால்

# அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.

இவற்றைத் தவிரவும் மேலும் பல நிறுவனங்களில் பேரிடர் மேலாண்மை கற்றுத்தரப்படுகிறது.

அடிப்படைத் தகுதி

இளங்கலை பட்டப்படிப்பாக வழங்கப்படும் பேரிடர் மேலாண்மையில் சேர பிளஸ் டூவில் குறைந்தது 55% எடுத்திருக்க வேண்டும். கலை, வணிகவியல், கணிதம், கணினி, அறிவியல் இப்படி எந்தப் பிரிவைச் சேர்ந்தவர்களானாலும் இதைப் படிக்கலாம். முதுகலைப் பட்டமாகப் படிக்க ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதை அடுத்து ஆய்வு மேற்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளன.

வேலை வாய்ப்பு

பேரிடர் மேலாண்மையை முறையாகப் படித்தவர்கள் சமூகச் செயற்பாட்டாளர், பொறியாளர், மருத்துவ நிபுணர், சுற்றுச்சூழல் நிபுணர், மறுசீரமைப்பு பணியாளர் உள்ளிட்ட பொறுப்புகளை அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் வகிக்க முடியும்.

தொண்டு நிறுவனங்களில், சமூக வேலை அமைப்புகளில், நிவாரணப் பணிகளில் ஈடுபடும் சர்வதேச மையங்களில், துணை ராணுவத் துறையில், பேரிடரைக் கண்காணிக்கும் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.

இந்திய அரசாங்கத் துறைகளான தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம், தீ அணைப்புத் துறை, வறட்சி மேலாண்மை மையங்கள், காப்பீடு நிறுவனங்கள், சட்டம் அமலாக்கத் துறை, ரசாயனத் துறை, சுரங்க பணி, பெட்ரோல் தயாரிக்கும் துறை ஆகியவற்றில் அதிகமாக வேலை வாய்ப்புகள் உள்ளன. இதேபோல உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேசச் செஞ்சிலுவை, ஆக்ஸ்ஃபாம், கேர் உள்ளிட்ட நிறுவனங்களும் வேலை கொடுக்கக் காத்திருக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக, பேரிடர் மேலாண்மை என்பது சேவைக்கான படிப்பும் வேலையும் ஆகும். அதைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு மனிதநேயமும், பேராபத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணமும் துணிச்சலும் அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

கருத்துப் பேழை

16 mins ago

கருத்துப் பேழை

22 mins ago

கருத்துப் பேழை

30 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

47 mins ago

உலகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்