சாம்பலில் இருந்து உயிர்பெற்ற சிலை

By ம.சுசித்ரா

சீனாவில் உள்ள பவுத்த ஆலயங்களில் ஏற்றப்படும் ஊதுபத்திகளின் சாம்பலைக் கொண்டு சீனக் கலைஞர் ஜென் ஹூவாங் தீட்டிய ஓவியங்களும் செதுக்கிய சிற்பங்களும் உருவாக்கிய நிர்மாணக்கலை (Installation art) வடிவங்களும் பிரசித்திபெற்றவை.

புத்தரும் இயேசுவும் எதிர் எதிரே அமர்ந்து ஒருவருக்கொருவர் அன்புக்கரம் நீட்டும்விதமாக 2012-ல் அவர் செதுக்கிய  Ash Buddha and Ash Jesus என்ற தலைப்பிலான சாம்பல் சிற்பங்கள் சமய நல்லிணக்கத்தை உலகுக்குப் போதித்தன. சமய- பண்பாட்டு அரசியலை நுட்பமாகக் கலையில் இழைத்துக் கடந்த 20 ஆண்டுகளாக அவர் உருவாக்கிவரும் கலைப் படைப்புகள் உலக நாடுகள் பலவற்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

சீனப் பண்பாட்டையும் பிரான்ஸ் கலாச்சாரத்தையும் ஒருங்கிணைத்து அவர் உருவாக்கிய படைப்புகளுக்காக பிரான்ஸ் அரசு 2014-ம் ஆண்டில் உயரிய விருதான செவாலியர் விருது அளித்து அவரை கவுரவித்தது.

அருள் உறைந்த சிற்பம்

பவுத்த ஆலயங்களில் கிடைக்கப்பெறும் சாம்பலைக்கொண்டு  தன்னுடைய கலை வடிவங்களை அவர் வடிவமைப்பது ஏன் என்று கேட்பவர்களுக்கு, “என்னைப் பொறுத்தவரை ஊதுபத்தியி்ன் சாம்பல் வெறும் சாம்பல் அல்ல; மற்ற வஸ்துக்களைப் போன்றதல்ல. பல ஆன்மாக்களின், நினைவுகளின், பிரார்த்தனைகளின் திரள். புத்தரின் ஆலயத்தில் அவர் சொரூபத்தின் முன்பாக நின்றுகொண்டு யாரும் யாரையும் சபிக்க முடியாது.

தங்களுடைய வேண்டுதலையும் விருப்பங்களையும்தாம் சமர்ப்பிப்பார்கள். நன்மை உண்டாகும் என்ற நம்பிக்கை தோன்றும் உலகம்தான் கோயில். அத்தகைய அருளையும் நினைவுகளையும் ஆன்மாக்களையும் உறையவைப்பதற்கே நான் சாம்பல் சிற்பங்களைச் செய்கிறேன்” என்கிறார் ஜென் ஹூவாங். பவுத்தத் தத்துவமும் ஆன்மிகமும் இவருடைய படைப்புகளில் விரவியிருக்கின்றன.

மூன்று முகம்

சீனப் புராணங்களையும் பவுத்தத்தையும் அடிப்படையாக வைத்து கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோ நகரில்  Three Heads Six Arms என்ற பிரம்மாண்ட சாம்பல் சிற்பத்தை எழுப்பி இருக்கிறார் ஜென் ஹூவாங். மூன்று முகங்கள் கொண்ட அந்தச் சிலையில் புத்தரின் முகத்தைத் தவிர மீதம் இரண்டும் சாதாரணர்களின் முகங்கள். அதில் ஒன்று ஜென் ஹூவாங்கினுடைய முகம்.  இதற்கு அவர் தரும் வர்ணனையும் விளக்கமும் இதுதான்: ‘புத்தரின் இயல்புதான் மனிதர்களின் இயல்பு. நீங்களும் புத்தர் நானும் புத்தர் எல்லோரும் புத்தர்’.

சிலைக்குப் பின்னால் தத்துவம்

சாம்பலில் மட்டுமின்றி உலோகப் பொருட்களைக் கொண்டும் பல சிலைகளை வடித்திருக்கிறார் ஜென் ஹூவாங். அவற்றில் அதிக கவனம் பெற்றது சீனாவின் ஷாங்காய் நகரத்தில் உள்ள ராக்பண்டு கலை அருங்காட்சியகத்தில் உள்ள தத்துவ ஞானி கன்பூசியஸ் சிலையான Q Confucius. எஃகு, சிலிகான், கரிம நார், அக்ரிலிக் வண்ணங்களைக் கொண்டு தலையில் இருந்து தோள்பட்டைவரை கன்பூசியஸை தத்ரூபமாகவும் பிரம்மாண்டமாகவும் உருவாக்கி இருக்கிறார்.

சீனாவில் நிகழ்ந்துவரும் பொருளாதார, கலாச்சார, சூழலியல் மாற்றங்கள் கலை, சமூகம், சமயத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் மாற்றத்தையும் அவதானித்து நிற்கும் சிந்தனையாளர் கன்பூசியஸ் என்பதைச் சுட்டிக்காட்டும் படைப்பு இது .

தன்னுடைய ஒவ்வொரு சிலைக்குப் பின்னாலும் ஒரு சிந்தனையைக்கொண்டிருக்கிறார் இவர். மனிதர்கள் எல்லையைத் தாண்டும்போது அது விபரீதத்தில் முடியும் என்று நினைப்பது மனித இயல்பு. ஆனால், எல்லையைத் தாண்டினால்தான் கலை பிறக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறார் இவர்.  “என்னைப் பின்பற்றினால் வாழ்வு. என்னை எதிர்த்தால் சாவு என்றுதான் பொதுவாக மக்கள் சொல்வார்கள். ஆனால் கலையைப் பொறுத்தவரை என்னைப் பின்பற்றினால் சாவு, எனக்கு எதிராகச் சென்றால் வாழ்வு” என்கிறார் இந்தக் கலைஞர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

கருத்துப் பேழை

17 mins ago

கருத்துப் பேழை

23 mins ago

கருத்துப் பேழை

31 mins ago

இந்தியா

39 mins ago

இந்தியா

48 mins ago

உலகம்

59 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்