5 கேள்விகள் 5 பதில்கள்: பன்னீர்செல்வத்துக்கான மூன்று வியூகங்கள்!

முதல்வர் பன்னீர்செல்வத்தின் ஆதரவுப் படையின் முக்கியமான அஸ்திரம் அவர்களுடைய தகவல் தொழில்நுட்பப் பிரிவு. சமூக வலைதளங்கள் வழி பன்னீர்செல்வம் ஆதரவுப் பிரச்சாரத்தை ஒருபுறம் மேற்கொண்டபடியே மறுபுறம் பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் இவர்கள். கடந்த வாரம் சசிகலா அணியிலிருந்த அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலர் அஸ்பயர் சுவாமிநாதன்தான் அங்கிருந்து விலகி வந்து, இப்போது பன்னீர்செல்வம் அணியின் வேலைகளைக் கவனித்து வருகிறார்.

எப்படி குறுகிய காலத்தில் பெரிய கூட்டத்தைச் சென்றடைந்தீர்கள்?

மூன்று வியூகங்களில் வேலைகளைப் பிரித்துக்கொண்டோம். முதல் வேலை, சிறை பிடிக்கப்பட்டுள்ள சட்டசபை உறுப்பினர்களை மக்கள் மூலமாக மீட்பதற்கானது. அவர்களுடைய செல்பேசி எண்களைச் சமூக வலைதளங்கள் மூலம் பரவச்செய்தோம். மக்கள் கூப்பிட்டுப் பேசுவது நல்ல பலனைத் தரத் தொடங்கியிருக்கிறது. இரண்டாவது வேலை, ‘ஐ சப்போர்ட் ஓபிஎஸ்’ எனும் மிஸ்டுகால் திட்டம். முதல்வர் பதவிக்குப் பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக இருந்தால் மிஸ்டு கால் தாருங்கள் என்று ஒரு செல்பேசி எண்ணை அளித்தோம். முதல் 30 நிமிடங்களிலேயே 20 ஆயிரம் பேர் அழைத்தனர். இந்த நான்கு நாட்களில் 50 லட்சம் பேர் அழைத்துள்ளனர். மக்கள் ஆதரவின் வீச்சை இது தெரிவிப்பதோடு, சட்டசபை உறுப்பினர்கள் மத்தியிலும் மக்களின் எண்ணவோட்டத்தைக் கொண்டுசேர்த்திருக்கிறது. மூன்றாவது வேலை, சமூக வலைதளங்களின் மூலம் ஆதரவைக் கொண்டுசெல்வதும் அந்த ஆதரவை ஒருங்கிணைப்பதும். ‘ஐ சப்போர்ட் ஓபிஎஸ்’ ஹேஷ்டாக் எல்லாம் இப்படிக் கொண்டுவரப்பட்டதுதான். இதன் விளைவாகவே மக்கள் எவ்வளவு பெரிய ஆதரவைத் தருகிறார்கள் என்பதை உணர்ந்து, பலர் சசிகலா முகாமிலிருந்து தப்பி இங்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.

மக்களின் ஆதரவுக்கு முதல்வரின் எதிர்வினை எப்படி இருந்தது?

நெகிழ்ந்துபோய் இருக்கிறார். அதனுடைய வெளிப்பாடாகவே ‘வாய்ஸ் கால்’ மூலம் தனக்கு ஆதரவளித்த எல்லோருக்கும் நன்றி தெரிவித்துக் குரல் பதிவுசெய்து அனுப்பச் சொன்னார். கட்சிக்காரர்களைத் தாண்டி, பொதுமக்கள் வலிய வந்து பெரிய அளவில் ஆதரவளிப்பது அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தி யிருக்கிறது. அவருக்கான ஆதரவில் சமூக வலைதளங்களுக்குப் பெரிய பங்கிருப்பதை அவர் முழுமையாக உணர்ந்திருக்கிறார்.

இப்படித் தானாக முன்வந்து ஆதரவளிப்பவர்களில் எந்தத் தரப்பினர் அதிகம் இருக்கிறார்கள்?

செல்பேசி வழி ‘மிஸ்டுகால்’ இயக்கத்தில் சேர்ந்தவர்களில் 92% பேர் தமிழகத்துக்கு உள்ளிருந்தும் 4% பேர் வெளி மாநிலங்களிலிருந்தும் 4% பேர் வெளிநாடுகளிலிருந்தும் தொடர்புகொண்டிருக்கின்றனர். இணையவழி தொடர்பு கொண்டிருப்பவர்களில் அப்படித் தனித்துப் பகுப்பதில் சிரமம் இருக்கிறது. என்றாலும், இளைஞர்கள், பெண்கள் கணிசமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது.

சசிகலாவுக்கு எதிரான மீம்ஸ் எல்லாம்கூட உங்கள் கூடாரத்திலிருந்துதான் வெளியாகின்றனவா?

இது அபாண்டம். “எந்த ஒரு தனிநபர் விமர்சனமோ, இழிவான தூற்றலோ வேண்டாம்; நம் தரப்பு நியாயங்களை மட்டும் பரப்புங்கள், போதும்” என்றுதான் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். நாங்கள் ‘ஏன் ஓபிஎஸ் வேண்டும்?’ என்றுதான் பிரச்சாரம் மேற்கொள்கிறோமே தவிர ‘ஏன் சசிகலா வேண்டாம்?’ என்று பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.

இந்தப் பிரச்சார அணிக்கு வெளியிலிருந்து பார்ப்பவராக இப்போதைய சூழலை எப்படிக் கணிக்கிறீர்கள்?

சசிகலா மீது பெரிய அளவில் அதிருப்தி இருப்பதை உணர முடிகிறது. பன்னீர்செல்வத்தின் எளிமையும் மக்களுடனான அவருடைய சகஜமான உரையாடல் அணுகுமுறையும் அவர்களைப் பெரிய அளவில் ஈர்ப்பதைப் பார்க்க முடிகிறது. இந்த யுத்தத்தில் அவரே இறுதி வெற்றியை அடைவார்!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வலைஞர் பக்கம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்