தேசியத் தலைவராகிறாரா மம்தா?

By ஸ்மிதா குப்தா

எல்லா காலத்திலும் மம்தாவின் கணக்குகள் எளிமையானவை அல்ல



எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக வேண்டும் என்றால், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியை உருவாக்க வேண்டும். அதற்கான ஒரு வாய்ப்பை மோடி தானாக உருவாக்கித் தந்துவிட்டதாகவே, மம்தா பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிந்தைய இந்தக் காலகட்டத்தைக் கருதுகிறார்.

பிரதமர் நரேந்திர மோடிக்குச் சரியான போட்டியாளராக முன்னிறுத்திக்கொள்வதில், எவரையும்விட முன்னே நிற்கிறார் வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. 2019 மக்களவைப் பொதுத் தேர்தலுக்கு எதிர்க்கட்சிகளின் சார்பில் நிறுத்தப்படவிருக்கும் பொது வேட்பாளராக, இப்போதே தன்னைத் தயார்படுத்திக்கொண்டிருக்கிறாரா மம்தா என்ற கேள்வியை மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிந்தைய அவருடைய செயல்பாடுகள் தீர்க்கமாக ஏற்படுத்துகின்றன.

பிரதமர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் களத்தில் நிற்கக்கூடிய வேட்பாளர்களில், மம்தாவிடம் மட்டுமே வாக்காளர்களைச் சந்தித்துத் தனக்கு ஆதரவாக வாக்குகளைத் திரட்டும் வல்லமை அதிகம் இருக்கிறது. மக்களுடன் எளிதாகக் கலந்துவிடும் பண்பு, எஃகு போன்ற வளையாத குணம் இருப்பதால், அவருக்கு எதிராக எத்தனை குற்றச்சாட்டுகளைச் சுமத்தினாலும் மக்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள்.

எதிரிக்கும் நேசக் கரம்

அரசியல்ரீதியாகத் தொடுக்கப்பட்ட எல்லாத் தாக்குதல்களையும் தவிடுபொடியாக்கி, வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் அவருடைய திரிணமூல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தது. ஒருவகையில், குஜராத்தில் மோடி மீண்டும் மீண்டும் வென்றதோடு ஒப்பிடக்கூடிய செல்வாக்கு இன்றைக்கு மம்தாவுக்கு வங்கத்தில் இருக்கிறது. மோடியை எதிர்ப்பதில் தனக்குள்ள தீவிரத்தை மம்தா குறைத்துக்கொள்ளவில்லை, சமரசமும் செய்துகொள்ளவில்லை. சமீப நாட்களில் அவர் தன்னுடைய அரசியல் சாதுரியத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்திவருகிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக இணைந்து போராடுவோம் என்று மாநிலத்தில் தன்னுடைய பிரதான எதிரியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கே அவர் நேசக் கரம் நீட்டியது ஓர் உதாரணம்.

நீண்ட காலம் அவர் இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் இன்றைக்கும் நல்ல தொடர்பில் இருக்கிறார் மம்தா. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின் ஆசியும் அவருக்கு இருக்கிறது. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அவருடன் தோழமை பாராட்டுகிறார். குஜராத்தில் படேல்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்திவரும் ஹர்திக் படேல், மகாராஷ்டிரத்தில் பாஜகவுடன் உரசிக்கொண்டே இருக்கும் சிவசேனைத் தலைவர்கள் எனப் பலருடனும் மம்தாவுக்குப் பகைமை இல்லை.

அசத்தல் ஆலோசனை

எதிர்க்கட்சிகளைப் பிரித்தாளும் அரசின் முயற்சிகளைக் கவனமாகக் கண்காணிக்கும் மம்தா, “மத்திய அமைச்சர்களை எதிர்க்கட்சியினர் தனித்தனியாகச் சந்திக்கக் கூடாது, கூட்டாகத்தான் சந்திக்க வேண்டும்” என்று கொடுத்திருக்கும் ஆலோசனை கவனிக்க வேண்டிய ஒன்று. நவம்பர் 23 அன்று தன்னைச் சந்திக்குமாறு பிரதமர் மோடி விடுத்த அழைப்பை நிராகரித்தார் மம்தா.

நாடாளுமன்றத்தின் நடப்பு குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னால், குடியரசுத் தலைவரைச் சந்திக்க ஊர்வலமாகச் செல்லலாம் வாருங்கள் என்று மம்தா விடுத்த அழைப்பை பெரிய எதிர்க்கட்சிகள் நிராகரித்துவிட்டன. ஆனால், ஏனைய கட்சிகளுடன் ராஜபாட்டையில் அவர் நடந்துவந்தது தேசிய அளவில் அவருடைய செல்வாக்கை உயர்த்தவே செய்தது.1980-களின் பிற்பகுதியில் போஃபர்ஸ் பீரங்கி பேரம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் குவிமை யமாக வி.பி. சிங் இருந்ததைப் போல இப்போது செயல்பட விரும்புகிறார் மம்தா.

வாய்ப்பு தந்த மோடி

நவம்பர் 23-ல் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், திமுக, அதிமுக என்று எல்லாக் கட்சிகளும் நாடாளுமன்றத்துக்கு அருகில் இருக்கும் காந்தி சிலை எதிரில் கூடி நின்று எதிர்ப்பைத் தெரிவித்தன. என்றாலும், பணமதிப்பு நீக்கத்தில் பிற கட்சிகளைவிடத் தீவிரமாக இருக்கிறார் மம்தா. அந்த நடவடிக்கையையே திரும்பப் பெற்றாக வேண்டும் என்று வலியுறுத்துகிறார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக வேண்டும் என்றால், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியை உருவாக்க வேண்டும். அதற்கான ஒரு வாய்ப்பை மோடி தானாக உருவாக்கித் தந்துவிட்டதாகவே, மம்தா பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிந்தைய இந்தக் காலகட்டத்தைக் கருதுகிறார்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும், அது வணிகர்களையும் கிராமப்புற மக்களையும் எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதைப் பொறுத்து, எதிர்க்கட்சிகளின் போக்கும் மாறுபடும் என்பதை அவர் முன்கூட்டியே யூகித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

மம்தாவுக்கான முக்கிய இடம்

பணமதிப்பு நீக்கம் ஏன் என்று பிரதமர் மோடி உணர்ச்சிபூர்வமாக ஆற்றும் உரை ஓரளவுக்கு நடுத்தர வகுப்பு, ஏழைகளிடையே இன்றைய சூழலில் எடுபடுகிறது. இது கறுப்புப் பணக்காரர்களைத் தண்டிப்பதற்காகத்தான் என்று அவர் கூறுவதை நம்புகின்றனர். கோடிக்கணக்கான மக்களைப் பாதித்துவந்தாலும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பெரிய எதிர்ப்பு ஏதும் இல்லாமல் பாஜக அரசு தொடர்ந்து நடைபோட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த அவதி நீடித்தால் மக்களுடைய பொறுமை கரைந்துவிடும். நீண்ட காலத்தில் அது ஏற்படுத்தப்போகும் மோசமான விளைவுகள் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பாக அமையக்கூடும்.

ஒருகாலத்தில் செங்கோட்டையாக இருந்த வங்கத்தில் இடதுசாரிகளைத் தோற்கடித்த சாமர்த்தியம், சிங்கூரில் அமையவிருந்த தொழிற்சாலையையும் வேலைவாய்ப்பையும் வேண்டாம் என்று நிராகரித்துவிட்டு, மக்க ளுக்கு அவர்களுடைய நிலங்களையும் வாழ்வுரிமையையும் மீட்டுத் தந்த திறமை ஆகியவற்றின் பின்னணியில் மம்தாவின் கணக்குகள் எளிமையானவை அல்ல என்று சொல்லலாம். 2019 மக்களவைப் பொதுத் தேர்தலின்போது, பிரதமர் பதவிக்கான பொது வேட்பாளராக ஒருவேளை அவர் உருவா காமல்கூடப் போகலாம். ஆனால், எதிர்க் கட்சிகளின் உத்திகளை வகுக்கும் முக்கிய இடம் தனக்கு இருப்பதை இப்போதைய அவருடைய நடவடிக்கைகள் தெளிவாகக் கூறுகின்றன!

சுருக்கமாகத் தமிழில்: சாரி,

‘தி இந்து’ ஆங்கிலம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

59 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

கல்வி

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்