360: புத்துயிர் பெறும் காந்திய நூல்கள்

By செய்திப்பிரிவு

ஆ.சிவசுப்பிரமணியனுக்கும் வண்ணதாசனுக்கும் கௌரவ டாக்டர் பட்டம்

நாட்டார் வழக்காற்றியல், பழங்குடி மக்கள், பண்பாட்டு அரசியல் தொடர்பாக ஐம்பது ஆண்டு காலமாக ஆய்வுப் பணியில் மகத்தான பங்களிப்பு செய்துவரும் பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியனுக்கும், சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் வண்ணதாசனுக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்திருக்கிறது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம். இருவருக்கும் வாழ்த்துகள்!

புத்துயிர் பெறும் காந்திய நூல்கள்

காந்தியின் 150-வது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி காந்தியப் புத்தகங்கள் புத்துயிர் பெற்றிருக்கின்றன. இந்த மாதத்தில் வெளியான புத்தகங்களில் மூன்று கவனம் ஈர்க்கின்றன. காஷ்மீர் தொடர்பாக காந்தி எழுதிய விஷயங்களைத் தொகுத்து மொழிபெயர்த்திருக்கிறார் த.கண்ணன். ‘போரும் அகிம்சையும்’ என்ற தலைப்பில் ‘யாவரும்’ பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது. விவசாயத் தொழிலாளர்களுக்கு நிலவுரிமையைப் பெற்றுத்தந்த கிருஷ்ணம்மாள், ஜெகந்நாதனின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் லாரா கோப்பாவின் ‘சுதந்திரத்தின் நிறம்’ நூலும், காந்தியத்தை அடிப்படையாகக் கொண்டு தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்ட ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பான பாலசுப்ரமணியம் முத்துசாமியின் ‘இன்றைய காந்திகள்’ நூலும் ‘தன்னறம்’ வெளியீடாக வந்திருக்கிறது. கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பங்கேற்ற விழாவில் ஜெயமோகன் இவற்றை வெளியிட்டார். (நூல்களைப் பெற - யாவரும்: 90424 61472 & தன்னறம்: 98438 70059). விழாவின் முக்கிய நிகழ்வாக, வாடிப்பட்டியைச் சேர்ந்த மறைந்த காந்தியவாதியும், பொட்டுலுபட்டியில் இருந்த தன் வீட்டையே இடித்து காந்திஜி ஆரம்பப் பள்ளியை நிறுவியவருமான பொன்னுத்தாய் அம்மாவுக்கு வழங்கப்பட்ட ‘முகம்’ விருதை அவர் சார்பில் அவரது மகன் நாகேஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

ஷேக்ஸ்பியர் என்ன செய்வார்?

ஷேக்ஸ்பியர் நம்மை மேன்மையாக்க மாட்டார்; சீரழிக்கவும் மாட்டார். ஆனால், நம்மிடம் நாம் மேற்கொள்ளும் உரையாடலை நாம் கேட்பதற்கு அவர் கற்றுத்தரலாம். நம்மிடம் ஏற்படும் மாற்றங்களைப் போலவே மற்றவர்களிடம் நடக்கும் மாற்றங்களையும் ஏற்றுக்கொள்வதற்கு அவர் கற்றுத்தரலாம்; ஒருவேளை, மாற்றத்தின் இறுதி வடிவத்தை ஏற்பதற்கும்கூட.

- சமீபத்தில் மறைந்த புகழ்பெற்ற அமெரிக்க இலக்கிய விமர்சகர், பேராசிரியர் ஹெரால்ட் ப்ளூம்.

இசையில் கலந்த இலக்கியம்

சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள மாநகராட்சி பூங்காவில் இன்று (அக்டோபர் 19) மாலை 5 மணிக்கு ஒரு புதுமையான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. எழுத்தாளர் தோப்பில் முஹம்மது மீரானின் சிறுகதையிலிருந்து ஒரு பகுதியை சி.ஈஸ்வர ராவின் சித்தார் இசைப்பின்னணியில் ஓய்வு பெற்ற நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வாசிக்கிறார். கூடவே, மெய் கலைக்கூடல் சார்பில் பறையாட்டமும் நாடகமும் அரங்கேறவிருக்கின்றன.

ந.முத்துசாமியின் நினைவாக…

சிறந்த சிறுகதை ஆசிரியர், நவீன நாடக முன்னோடி, கூத்துப்பட்டறை நிறுவனர் என்ற பல்வேறு அடையாளங்களைக் கொண்ட ந.முத்துசாமியின் முதலாமாண்டு நினைவு நாள் அக்டோபர் 24. அதையொட்டி, ந.முத்துசாமியின் புகழ்பெற்ற நாடகமான ‘அப்பாவும் பிள்ளையும்’, இயக்குநர் எஸ்.வடிவேலால் அக்டோபர் 18, 19, 20 தேதிகளில் மாலை ஏழு மணிக்கு கூத்துப்பட்டறை அரங்கில் நடைபெறவுள்ளது. 24 அன்று மதியம் மூன்று மணிக்கு மீண்டும் அரங்கேற்றுகிறார்கள். அதே நாளன்று மாலை ஆறு மணிக்கு கூத்துப்பட்டறையும் மூன்றாம் அரங்கும் இணைந்து ந.முத்துசாமியின் ‘கீசகவதம்’ நாடகம் கே.எஸ்.கருணா பிரசாத்தின் இயக்கத்தில் நிகழ்த்தப்படுகிறது. பெசன்ட் நகர் ‘ஸ்பேசஸ்’ அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பேராசிரியரும் நாடகச் செயல்பாட்டாளருமான செ.ரவீந்திரன் எழுதிய ‘ந.முத்துசாமியின் படைப்புலகம்’ நூலும் வெளியிடப்படவுள்ளது. தொடர்புக்கு: 90420 73633

வாசகர்கள் வழங்கும் விருது

‘வாசகசாலை’ இலக்கிய அமைப்பின் சார்பில் வழங்கப்படும் இலக்கிய விருதுகளுக்கான தனித்துவம் அந்த விருதுகளை வாசகர்கள் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுதான். கவிதைத் தொகுப்பு, கட்டுரைத் தொகுப்பு, நாவல், சிறுகதைத் தொகுப்பு, சிறார் இலக்கியம், மொழிபெயர்ப்பு நாவல், மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு மற்றும் சிறந்த அறிமுக எழுத்தாளர் என எட்டு பிரிவுகளின் கீழ் விருதுகளை வழங்குகிறார்கள். அக்டோபர் 31-க்குள் படைப்புகள் அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு: 9942633833

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

25 mins ago

சினிமா

46 mins ago

தமிழகம்

53 mins ago

வலைஞர் பக்கம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்