வாசிப்பை முடக்கும் உத்தரவைத் திரும்பப் பெறுங்கள்!

By செய்திப்பிரிவு

‘வீட்டுக்கு ஒரு நூலகம்’ என்பது எட்டாக்கனவாக இருக்கும் நம் நாட்டில், வசதி வாய்ப்பற்ற பலரும் நாளிதழ்களையும் புத்தகங்களையும் படிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்துபவை அரசு நூலகங்களே. இந்த நூலகங்களிலுள்ள புத்தகங்களின் துணை கொண்டு, வாழ்க்கையில் உயரங்களைத் தொட்ட பலர் இருக்கிறார்கள்.

தமிழகத்தின் மாவட்டங்கள்தோறும் மாவட்ட மைய நூலகம், கிளை நூலகம், பகுதி நேர நூலகம், மகளிர் - குழந்தைகள் நூலகம், ஊர்ப்புற நூலகம், நடமாடும் நூலகம் எனச் சுமார் 5,000-க்கும் மேற்பட்ட நூலகங்கள் தற்போது இயங்கிவருகின்றன. இவை பொதுநூலகத் துறையின் கீழுள்ள மாவட்ட நூலக ஆணைக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. இந்த நூலகங்களுக்குச் சராசரியாக மூன்று அல்லது நான்கு தமிழ் நாளிதழ்கள், மூன்று ஆங்கில நாளிதழ்கள், 20-க்கும் மேற்பட்ட வார, மாத இதழ்கள் உள்ளூர் முகவர்கள் மூலமாக வாங்கப்படுகின்றன. நாளிதழ்கள், வார, மாத இதழ்கள், சிறுபத்திரிகைகள் என 50-க்கும் மேற்பட்ட இதழ்கள் தபால் மூலமாகவும் நூலகங்களுக்கு வருகின்றன. இவற்றைப் படிப்பதற்கென்றே தினந்தோறும் பல நூறு வாசகர்கள் நூலகங்களை நோக்கி ஆர்வத்தோடு வருகிறார்கள்.

இந்நிலையில், கடந்த வாரம் கோவை மாவட்ட நூலக அலுவலரால் கிளை நூலகங்களுக்குச் சுற்றறிக்கையொன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், 2017-2018-ம் ஆண்டில் தமிழ், ஆங்கில நாளிதழ்களில் தலா ஏதாவது ஒரு நாளிதழ், வார இதழ்களில் இரண்டு, மாத இதழ்களில் ஒன்று ஆகியவற்றை மட்டுமே வாங்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு கோவை மாவட்டத்திலுள்ள கிளை நூலகங்களுக்கு மட்டுமே அனுப்பப்பட்டிருந்தாலும், தமிழகம் முழுவதுமுள்ள மற்ற கிளை நூலகங்களுக்கும் விரைவில் இத்தகைய உத்தரவு வரும் என்கிறார்கள் நூலகத் துறையைச் சேர்ந்தவர்கள். இது மோசமான ஒரு நடவடிக்கை.

காசு கொடுத்து நாளிதழ் வாங்கிப் படிப்பவர்கள்கூட ஒரு நாளிதழுக்கு மேல் வாங்கிப் படிக்க முடியாத நிலைதான் பலருக்கு உள்ளது. கூடுதலாகப் பல நாளிதழ்களை வாசிக்க விரும்புகிறவர்களுக்கு நூலகங்கள்தான் சரியான இடம். இந்நிலையில், நூலகங்களுக்கு வாங்கப்படும் நாளிதழ்களைத் தடாலடியாகக் குறைப்பது, அரசு நூலகங்களுக்கு வரும் வாசகர்களையும் வர விடாமல் தடுக்கும் முயற்சியாகவே உள்ளது. உள்ளூர் முகவர்களிடம் வாங்கும் இதழ்கள் வெகுவாக குறைக்கப்பட்டிருப்பதைப் போலவே, தபால் மூலம் வரும் இதழ்களும் இனி முற்றாகக் குறைவதற்கான அபாயம் உள்ளது. இது வாசிப்பை மேலும் குறுக்கிவிடும்.

மக்களின் குறிப்பாக, வளரும் தலைvமுறையினரின் வாசிப்பைக் கடுமையாகப் பாதிக்கக்கூடிய இந்த உத்தரவை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், பல ஜன்னல்களைத் திறந்து புதிய காற்றை வீசச் செய்வதற்குப் பதிலாக இருக்கும் ஜன்னல்களை அடைப்பது அறிவு மலர்ச்சிக்கு எதிரான செயல். பத்திரிக்கைகளுக்கான செலவானது விரயம் அல்ல - அது முதலீடு. ஒரு நல்ல அரசு, சமூகத்தின் அறிவுச் சாளரத்தை விசாலமாக்க வேண்டுமே தவிர, குறுக்கக் கூடாது!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

40 secs ago

தமிழகம்

43 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்