வளைகுடா நாடுகளுடன் வலுவான நட்புறவில் இந்தியா

By செய்திப்பிரிவு

வளைகுடா நாடுகளுடன் கடந்த 6 ஆண்டுகளில் இந்தியா தனது உறவை வலுப்படுத்தி வந்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரக பட்டத்து இளவரசர் முகமது பின் சையது அல் நயான், டெல்லி வந்தபோது, மரபுகளைத் தாண்டி, பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்துக்கே சென்று அவரை ஆரத்தழுவி வரவேற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் வந்தபோதும், பிரதமர் நேரில் சென்று வரவேற்றார்.

இந்த நிகழ்வுகள், இந்தியாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான உறவு, தோழமை, மரியாதை, நம்பிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் புத்தாக்கம் செய்யப்பட்டுள்ளதைக் காட்டுகின்றன. இந்தியாவுக்கும் வளைகுடா நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றுப்பூர்வ உறவுகள், மக்களின் அன்றாட பாரம்பரிய, கலாச்சார வாழ்வில் இன்றும் வெளிப்படுகின்றன. இஸ்லாமியர்களின் புண்ணிய தலங்களாகத் திகழும் மக்காவும் மதினாவும் வளைகுடா பகுதியில்தான் உள்ளன என்பதோடு, நமது புராணங்கள், மொழிகள், மதங்கள், உணவு, கட்டிடக் கலை ஆகியவை ஒன்றோடு ஒன்று நெருங்கிப் பிணைந்துள்ளன.

இத்தகைய உயிரோட்டமுள்ள வரலாற்றை தாண்டி இருதரப்பு உறவுகள் இன்று வெகுதூரம் வளர்ந்துள்ளன. கடந்த 6 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையால், ‘மேற்கை நோக்கி’ என்ற கொள்கை வழியாக வளைகுடா பகுதி நாடுகளுடனான உறவு மேலும் உறுதிப்பட்டுள்ளது. அந்தப் பகுதியிலுள்ள சில நாடுகளோடு பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகமும், சவுதி அரேபியாவும் இந்தியாவின் மூன்றாவது, நான்காவது பெரிய வர்த்தகக் கூட்டாளிகளாக திகழ்கின்றன. இருதரப்பு பொருளாதார உறவுகளில் முதலீட்டுத் திட்டங்கள் முக்கிய இடம் பிடித்துள்ளன. 10,000 கோடி டாலர் அளவுக்கு எரிசக்தி, சுத்திகரிப்பு, உள்கட்டமைப்பு, விவசாயம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது. இந்தியாவில் நேரடி அந்நிய முதலீடு செய்யும் நாடுகளில், அமீரகம் 10-வது முக்கிய இடத்தில் உள்ளது.

வளைகுடா நாடுகளில் வசிக்கும் 85 லட்சம் இந்திய வம்சாவளியினர் இருதரப்பு உறவுகளுக்கு இணைப்பு பாலமாக திகழ்கிறார்கள். 2018-ம் ஆண்டில் அவர்கள் ஈட்டி அனுப்பிய 5,000 கோடி டாலர் அந்நியச் செலாவணி நாட்டுக்குப் பெரிய பயனை தந்தது; அதே நேரத்தில் திறன்மிக்க இந்தியப் பணியாளர்களின் உழைப்பால் வளைகுடா நாடுகளும் பயனடைந்தன. இத்தகைய பரிமாற்றங்களால், இந்திய வம்சாவளியினரின் சமூக, கலாச்சார தேவைகள் பற்றிய வளைகுடா நாடுகளின் அணுகுமுறையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்துக் கோவில் கட்ட அனுமதி வழங்கி இருப்பதை இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.

ஆனாலும், எரிசக்தித் துறையே இருதரப்பு வணிக உறவுகளின் முதுகெலும்பாகத் திகழ்கிறது. 2019-20-ம் ஆண்டில், வளைகுடா நாடுகளுடனான இந்தியாவின் ஹைட்ரோ கார்பன் வர்த்தகம் 6,200 கோடி டாலர்.

பிரதமரின் அமீரகப் பயனத்தின் போது, முதல் முறையாக இந்திய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்புக்கு அந்நாட்டின் முக்கிய எண்ணெய் நிறுவனம் வரலாற்று சிறப்புமிக்க 10 சதவீத முதலீட்டுச் சலுகையை வழங்கியது.

கடந்த 2015 ஆகஸ்ட் மாத பயணத்தால், ஐக்கிய அரபு அமீரகம் சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற சிறப்பை பெற்ற நரேந்திர மோடி, 2018, 2019-ம் ஆண்டுகளிலும் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்தியதற்காக, அமீரகத்தின் மிக உயரிய விருதான ஆர்டர் ஆப் சையது விருது, சவுதி அரேபிய மன்னர் அப்துல் அஸீஸ் சாஷ் விருது, பஹ்ரைன் நாட்டின் “மன்னர் ஹமத் ஆர்டர் ஆப் ரெனைசன்ஸ்” விருது ஆகியவை பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டன. சவுதி, கத்தார், ஓமன், ஈரான் மற்றும் பஹ்ரைன் நாடுகளுக்கு பிரதமர் மேற்கொண்ட பயணங்களும், அந்த நாடுகளின் தலைவர்களின் டெல்லி பயணங்களும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தின.

குவைத் அமீர் ஷேக் சபா அல் அகமது அல்-ஜாபர் அல்-சபா, கடந்த செப்டம்பர் மாதம் காலமான போது, நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்க இந்தியா எடுத்த முடிவை குவைத் போற்றியது.

தலைவர்களிடையே நிலவிய இத்தகைய நேரடி தொடர்புகள், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. வளைகுடா நாடுகளில் மருந்துப் பொருட்கள், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ததோடு, ஊரடங்கு காலத்தில் சுமார் 6,000 மருத்துவ நிபுணர்களையும் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பியது இந்தியா. 15 பேர் கொண்ட அதிவிரைவு நடவடிக்கை குழுவை குவைத்துக்கு அனுப்பி அந்தநாடு பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் திறனை மேம்படுத்தி கொள்ளவும் இந்தியா உதவியது. உலகின் மருந்தகமாக வளர்ந்துள்ள இந்தியா, வளைகுடா நாடுகளின் தேவைகளை பெருமளவு நிறைவேற்றி வருகிறது.

இதற்கு கைமாறாக, பெருந்தொற்று பாதிப்பு காலத்தில், வறுமை கோட்டுக்கு கீழுள்ள மக்களுக்கு, இலவசமாக 3 எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் பிரதமரின் அறிவிப்பை செயல்படுத்தவும், நமது எரிவாயு தேவைகளை பூர்த்தி செய்யவும் ஐக்கிய அரபு அமீரகம் உதவியது. வளைகுடா நாடுகள் அங்கு வசிக்கும் இந்தியர்களின் நலனில் சிறப்பான அக்கறை காட்டியதோடு, நாடு திரும்ப விரும்பியவர்களுக்கு தேவையான வசதிகளையும் செய்து கொடுத்தன.

ஆக, வளைகுடா நாடுகள் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பில் நம்பத்தகுந்த பங்குதாரர்களாக திகழும் வேளையில், அவற்றின் உணவுப் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்கிறது. அதைவிட முக்கியமாக, வணிக பரிமாற்றங்களைக் கடந்து, பல காலமாக புரையோடிப் போயிருந்த இருதரப்பு உறவுகளை பிரதமர் நரேந்திர மோடியும் வளைகுடா நாடுகளின் தலைவர்களும் புதுப்பித்துள்ளனர்.

- கட்டுரையாளர்

இந்திய அரசின் எண்ணெய், எரிவாயுத் துறை அமைச்சர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்