ஜெயலலிதா ஜாமீன் மனுவை முதலாவதாக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு

By செய்திப்பிரிவு

ஜெயலலிதா ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்க கர்நாடக உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடைசித் தகவல்: ஜெயலலிதாவின் தண்டனைக்கு ரத்துக் கோரும் மனுவையும் கர்நாடக உயர் நீதிமன்றம் நிராகரித்தது. | விரிவாகப் படிக்க ->ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து பெங்களூரின் சில முக்கியப் பகுதி களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை முதல் மனுவாக விசாரிக்கக் கோரப்பட்டது. ஆனால், ஜெயலலிதா மனுவை முதலில் விசாரிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜரானார். ஜெயலலிதா மனுவை அவசர மனுவாக கருதி முதல் மனுவாக விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் ராம் ஜெத்மலானி கோரிக்கை விடுத்தார். ஆனால், மனுவை வரிசைப்படியே விசாரிக்க முடியும் என நீதிபதி சந்திரசேகர் மறுப்பு தெரிவித்துவிட்டார்.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனு வரிசை எண் படி 73-வது வழக்காக விசாரணைக்கு வந்தது.

பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணை:

ஜெயலலிதா ஜாமீன் மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் விசாரணை பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா தரப்பில் ஆஜரான ராம் ஜெத்மலானி வாதம் ஒரு மணி நேரம் வாதிட்டார். வழக்கறிஞர் பவானி சிங்கும் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என தனது வாதத்தை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களும் எழுத்துப்பூர்வமாகவும் அளிக்கப்பட்டன.

தொடர்ந்து சசிகலா, இளவரசி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டு வந்தனர். உணவு இடைவேளைக்காக நீதிமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.30 மணிக்கு ஜாமீன் மனு மீதான வாதம் மீண்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராம் ஜெத்மலானி வாதம்:

ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி ராம் ஜெத்மலானி வாதிட்டு வருகிறார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்கு எதிராக ஜெயலலிதா தரப்பில் தாக்கல் செய்த அப்பீல் மனு நிலுவையில் உள்ள நிலையில், அவருக்கு ஜாமீன் வழங்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள சில தீர்ப்புகளை ஜெத்மலானி மேற்கோள்காட்டி வாதிட்டார்.

பவானி சிங் வாதம்:

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து எதிர் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் பவானி சிங், ஜாமீன் வழங்கினால் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடும் என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என வாதிட்டார்.

"ஜெயலலிதா மிகவும் சக்தி வாய்ந்த பிரபலர். அவருக்கு, ஜாமீன் வழங்கினால் ஜெயலலிதா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லக்கூடும். அதனால் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. ஜாமீன் வழங்கினால் தண்டனையில் இருந்து தப்பிக்கவும் அவர் முயற்சிக்கலாம்" என அவர் தெரிவித்தார்.

ஜெத்மலானி பதில்:

அதற்கு பதிலளித்த ராம் ஜெத்மலானி, "ஜெயலலிதா எப்போதும் சட்டத்தை மதித்து நடப்பவர், எனவே அவர் நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்க மாட்டார்" என்றார்.

ஜாமீன் மனு:

கடந்த 29-ம் தேதி ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை கடந்த 1-ம் தேதி விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதி ரத்னகலா, இவ்வழக்கை வழக்கமான நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

ஜெ.வின் உடல்நிலை கருத்தில் கொள்ளப்படுமா?

''ஜெயலலிதாவுக்கு 66 வயதாகிறது. நீரிழிவு, இதயக் கோளாறு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவரது உடல்நிலை குன்றியுள்ளது. ஒரு பெண் என்ற வகையில் தொடர்ந்து சிறையில் இருந்தால் அவருக்கு தீவிர மன அழுத்தமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, அவரை உடனடியாக ஜாமீனில் விடுவிக்க வேண்டும். அவ்வாறு விடுவிக்கப்பட்டால் ஜெயலலிதா சட்டத்திற்கு விரோதமாக செயல்பட மாட்டார்'' என்ற வாதத்தை முன்வைக்க இருப்பதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

அரசு தரப்பு வழக்கறிஞர் பவானிசிங், ''ஜெயலலிதா தமிழக அரசியலில் மிகவும் செல்வாக்கு மிக்கவராக‌ இருக்கிறார்.அவரை ஜாமீனில் விடுவித்தால் இவ்வழக்கின் போக்கை மாற்றவும், தண்டனையில் இருந்து தப்பிக்கவும் முயற்சி செய்வார். மேலும், அவர் தலைமறைவாகி விடவோ, வேறு நாடுகளுக்கு தப்பி செல்லவோ வாய்ப்பு இருக்கிறது. எனவே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது''என வாதிடப் போவதாக தெரிவித்தார்.

144 தடை உத்தரவு:

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறு வதால் பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய பகுதிகளில் போராட்டங்கள் நடத்தவும், ஊர்வலம் செல்வதற் கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பெங்களூர் மாநகர காவல் ஆணையர் எம்.என்.ரெட்டி, 'தி இந்து'விடம் கூறும்போது, ''ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு வரவிருப்பதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட‌ அதிமுகவினர் பெங்களூருக்கு வரத் தொடங்கியுள்ளனர். எனவே, தமிழக எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தவும், அசம் பாவிதங்களை தடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்ற வளாகத்தில் அனைவரும் தீவிர பரிசோத னைக்குப் பிறகே அனுமதிக்கப் படுவர். வ‌ழக்கறிஞர்கள் மற்றும் அதிமுகவினரின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக கர்நாடக உயர் நீதிமன்ற வளாகம், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வளாகம்,விதான சவுதா வளாகம் மற்றும் சிறை அமைந்திருக்கும் பரப்பன அக்ரஹாரா ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்றார்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பவானி சிங், மேல் முறையீட்டு வழக்கிலும் அரசு வழக்கறிஞராக நீட்டிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை கர்நாடக அரசும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினரும் பிறப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையால் நியமிக்கப்பட்ட பவானி சிங் நியாயமாக நடந்து கொள்வாரா என்ற சந்தேகம் திமுக வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. எனவே அரசு வழக்கறிஞராக பவானிசிங் தொடர்வதற்கு திமுக எதிர்ப்பு தெரிவிக்கும் என தெரிகிறது. அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தால் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பது மேலும் தாமதமாகலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 mins ago

சினிமா

27 mins ago

தமிழகம்

34 mins ago

வலைஞர் பக்கம்

37 mins ago

தமிழகம்

50 mins ago

சினிமா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்