14 ஆண்டுகளுக்குப் பின் 'டாக்டர்' படத்தால் வரவேற்பு: கராத்தே கார்த்தி உற்சாகம்

By செய்திப்பிரிவு

14 ஆண்டுகளுக்குப் பின் 'டாக்டர்' பட நடிப்புக்குக் கிடைத்த வரவேற்பால் கராத்தே கார்த்தி உற்சாகம் அடைந்துள்ளார்.

'சிங்கம் 3', 'தபாங் 3', 'என்னை அறிந்தால்', 'பிகில்', 'பேட்ட', 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'கைதி', 'சங்கத்தலைவன்' உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்தவர் கராத்தே கார்த்தி. திரையுலகிற்கு வருவதற்கு முன்பு மத்திய ரிசர்வ் போலீஸில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

அப்போதே அகில இந்திய காவல்துறை பாக்ஸிங் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதுமட்டுமன்றி, கராத்தேவிலும் பிளாக் பெல்ட் வாங்கியுள்ளார். அகில இந்திய கராத்தே போட்டிகளில் 13 முறை சாம்பியனாகத் தேர்வாகியுள்ளார். மேலும் ஜிம்னாஸ்டிக், சிலம்பம், ஜூடோ, கிக் பாக்ஸிங் உள்ளிட்ட கலைகளையும் கற்றவர் கராத்தே கார்த்தி.

சினிமா மீதான ஆர்வத்தால் காவல்துறை பணியைத் துறந்துவிட்டு நடிக்கத் தொடங்கினார். 'தசாவதாரம்' படத்தின் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கினார். சமீபத்தில் வெளியான 'டாக்டர்' படத்தில் கராத்தே கார்த்தியின் நடிப்புக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

தனது நடிப்புப் பயணம் குறித்து கராத்தே கார்த்தி கூறியிருப்பதாவது:

"மத்திய ரிசர்வ் போலீஸில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது நடிப்பு மீது இருந்த ஆசையால் வேலையை ராஜினாமா செய்துவிட்டேன். அப்போது என் வீட்டில் மற்றும் என் உறவினர்கள் அனைவரும் என்னை பயங்கரமாகத் திட்டினார்கள். அரசு வேலையை யாராவது விட்டுவிட்டு சினிமாவிற்குப் போவார்களா என்று அனைவரும் அறிவுரையும் சொன்னார்கள். ஆனால், நான் நடிப்புதான் எனக்கு வேண்டும் என்று வாய்ப்பு தேடத் தொடங்கிவிட்டேன்.

யாரிடம் போய் வாய்ப்பு கேட்பது என்று தெரியாமல் நேராக நடிகர் சங்கத்திற்குப் போய் வாய்ப்பு கேட்டேன். அங்கே இருந்த சிலர் போட்டோ கொடுங்கள். விஜய் படம், கமல் படம் இரண்டிலும் நடிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார்கள். மறுநாள் கமல் சார் நடித்த 'தசாவதாரம்' படத்திற்குக் கூப்பிட்டார்கள். "நான் என்னடா எடுத்த உடனையே கமல் சார் படமா சூப்பர்" என்று அடுத்த நாள் ஷூட்டிங் போனேன். அங்கே போய் பார்த்த பிறகுதான் தெரிந்தது கூட்டத்தோடு கூட்டமாக நிற்க வைத்தார்கள். கேமரா எங்கே இருக்கு என்று கூட தெரியவில்லை ஏமாற்றம்தான். தொடர்ந்து ஜிம் பாய்ஸ் பணிக்குப் போனேன். அதன்பின் சீரியலில் நடிக்கத் தொடங்கினேன்.

பிறகு 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்தேன். இரண்டு பேருந்துகளுக்கு இடையே தலைகீழாகத் தொங்கி கார்த்திக் சாருடன் சேர்ந்து வில்லனுடன் சண்டைக் காட்சியில் நடித்தேன். அப்போது பஸ் இன்ஜின் சத்தத்தில் ஆக்‌ஷன், கட் கேட்காது, மூச்சு கூட விட முடியாது. அப்போது ஏற்பட்ட அடியின் தழும்பு உள்ளது.

பின்பு கார்த்தி சாருடன் 'கைதி' படத்தில் நடித்தேன். அதைப் பார்த்த நெல்சன் சார் எனக்கு 'டாக்டர்' படத்தில் வாய்ப்பளித்தார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். சிவகார்த்திகேயன், யோகி பாபு, வினய் போன்றோருடன் நடித்தது என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம். எனது 14 வருட சினிமா முயற்சியில் என் திறமையைப் பார்த்து வந்த முதல் கால் அதுதான். அதை என்னால் இன்றும் மறக்க முடியாது.

'டாக்டர்' படத்தில் கோவாவில் வரும் காட்சிகளில் வட இந்தியர் போல் நடித்திருப்பேன். அதனால் என்னை நிறைய பேர் வட இந்தியர் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நான் பச்சைத் தமிழன். எனது சொந்த ஊர் மதுரைதான். தொடர்ந்து நிறைய இயக்குநர்களிடமிருந்து அழைப்பு வருகிறது. அந்த அழைப்பும், பாராட்டும் இதுவரை பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் மறக்கடிக்கச் செய்துவிட்டது. என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக் கூடிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன்".

இவ்வாறு கராத்தே கார்த்தி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

44 mins ago

உலகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்