குதிராம் போஸ் 10

By செய்திப்பிரிவு

விடுதலைப் போராட்ட வீரர்

இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் மிகவும் இளம் வயதில் நாட்டு விடுதலைக்காகத் தூக்கு மேடையில் உயிர் நீத்த தியாகியுமான குதிராம் போஸ் (Kudhiram Bose) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 3). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l வங்காளத்தின் மிதினாப்பூர் மாவட்டம் ஹபிப்பூர் கிராமத்தில் பிறந்தார் (1889). நாட்டுப்பற்றுடைய குடும்பத்தில் பிறந்ததால் சிறு வயது முதலே நாட்டுப் பற்றுடன் வளர்ந்தார். விடுதலை இயக்கத்தின் ஆசானாக விளங்கிய அரவிந்தர், சகோதரி நிவேதிதை ஆகியோரின் சொற்பொழிவுகள் 13-ம் வயதில் இந்த சிறுவனை மிகவும் ஈர்த்தது.

l சிறு வயதிலேயே கீதையைப் படித்த சிறுவன் அதில் கண்ட வாழ்க்கை முறையில் வாழ வேண்டும் என ஆசைப்பட்டான். நாட்டு விடுதலைக்காகத் தானும் ஏதாவது செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டான். 1904-ம் ஆண்டில் மிதினாப்பூரில் உள்ள கல்லூரியில் சேர்ந்தார்.

l அங்கு சத்தியேந்திரநாத் போஸ் வழிகாட்டுதல் கிடைத்தது. பல புரட்சி வீரர்களுடைய தொடர்பும் கிடைத்தது. 16-வது வயதில் யுகாந்தர் என்ற விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்தார். ஆங்கிலேய ஆட்சியை எதிர்த்தார். காலரா, மலேரியா நோய் கண்ட மக்களுக்கும் இந்த அமைப்பு சேவை செய்தது.

l குதிராமும் இரவு பகல் பாராது, பசி தூக்கத்தைப் பொருட்படுத்தாமல் இந்தச் சேவையில் ஈடுபடுட்டார். ஒரு முறை ஆங்கில அரசுக்கு எதிரான துண்டு பிரசுரம் விநியோகித்துக்கொண்டிருந்த இவரைக் காவலர் ஒருவர் பிடிக்க வந்தார். அவரிடம் தைரியம் இருந்தால் வாரண்ட் இல்லாமல் என்னைக் கைது செய்து பாருங்கள் என்று துணிச்சலுடன் சவால் விட்டுச் சென்றாராம் இந்த வீர இளைஞர்.

l 1905-ல் வங்கப் பிரிவினை ஏற்பட்டபோது நாடே கொந்தளித்து எழுந்தது. இவரும் அந்தப் போராட்டத்தில் குதித்தார். பல காவல் நிலையங்களை குதிராமின் குழுவினர் குண்டுகளால் தாக்கினர். ஆங்கிலேயே அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வண்ணம் நாட்டின் பல்வேறு இடங்களில் பிரிட்டிஷ் அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடந்தன.

l 1908-ம் ஆண்டு விடுதலை வீரர்களுக்குக்கு கொடூரமான தண்டனைகளை வழங்கி வந்த மாஜிஸ்திரேட் கிங்ஸ்போர்டை வஞ்சம் தீர்க்க முடிவுசெய்யப்பட்டது. அவரது வாகனம் மீது குதிராம் போசும் அவரது நண்பர் சாஹியும் குண்டு வீசினர். அந்த வாகனத்தில் மாஜிஸ்திரேட் வரவில்லை. ஆனால் அதில் பயணம் செய்த அவரது மனைவியும் மகளும் கொல்லப்பட்டனர்.

l இந்த அதிரடித் தாக்குதல் ஆங்கிலேயரை உலுக்கிவிட்டது. மிகப் பெரிய அளவில் தேடுதல் வேட்டை தொடங்கியது. இவர்கள் குறித்த தகவல் தெரிவிப்போருக்கு பெரும் தொகை சன்மானமாக அறிவிக்கப்பட்டது.

l இறுதியில் குதிராம் போஸ் பிடிபட்டார். அதிகாரிகளிடம் தான் குண்டு வீசிய காரணத்தைக் கூறியதோடு கிங்ஸ்போர்டின் குடும்பத்தினர் இறந்தது குறித்து வருத்தமும் தெரிவித்தார். விசாரணை நடைபெற்றது. தேச துரோக குற்றத்துக்காக இவருக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது.

l அதைக் கேட்டதும் இந்த இளைஞர் சிரித்தார். நீ எதையாவது சொல்ல விரும்புகிறாயா என்று நீதிபதி கேட்டதற்கு, வேண்டுமானால் உங்களுக்கு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்று சொல்லித் தருகிறேன் என்று கூறினாராம். 1908-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவருக்கு வயது 18தான். கையில் பகவத் கீதையுடனும் வந்தே மாதரம் முழக்கத்துடனும் இந்த மாவீரனின் உயிர் பிரிந்தது.

l இந்த மாவீரனின் அஸ்தியை எடுத்துச் சென்ற வங்கத் தாய்மார்கள். தங்கள் குழந்தைகளுக்குக் கொடுக்கும் பாலில் கலந்து புகட்டினார்களாம், எம்பயர் என்ற ஆங்கிலேயர்களின் பத்திரிகை, குதிராம் போஸ் இன்று காலையில் தூக்கிலிடப்பட்டான். அவன் மிகவும் விறைப்பாகவும் மகிழ்ச்சியோடும் சிரித்தவாறே தூக்கு மேடை ஏறினான் என்று செய்தி வெளியிட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்