

வாஷிங்டன்: கடந்தாண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணம் காட்டி உலக நாடுகள் மீது அதிகப்படியான வரியை விதித்தார். இதற்கு அந்நாட்டு உச்சநீதி மன்றம் தடை விதித்தது. இதைத் தொடர்ந்து, வர்த்தக சட்டம் 1974 பிரிவு 301ன் கீழ் புதிய வரிகளை விதிக்க முடிவு செய்தார்.
அதன்படி கட்டாய உழைப்பு தடுப்பு சட்டங்களை சரியாக நடைமுறைப்படுத்தாத நாடுகள் குறித்தும், சர்வதேச நாடுகளின் தொழில்துறை மானியங்கள் குறித்தும் இரண்டு தனித்தனி விசாரணைகளை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. இதில் வெளிநாட்டு விநியோகச் சங்கிலிகளில் நிலவும் கட்டாய உழைப்பு குறித்த விசாரணையை கடந்த ஜூலையில் நிறைவு செய்தது. அந்த விசாரணையின் அடிப்படையில் இந்தியா உள்பட 60 நாடுகள் மீது 10% முதல் 12% வரை வரி விதித்து ட்ரம்ப் உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்தியா, சீனா உள்பட 14 முக்கிய வர்த்தகக் கூட்டாளி நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10% முதல் 25% வரை கூடுதல் வரி விதிக்க ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. சர்வதேச நாடுகளின் தொழில்துறை மானியங்கள் குறித்த அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகத்தின் விசாரணை நிறைவடைந்ததை அடுத்து, இந்த புதிய வரி விதிப்பு குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.
விசாரணையின் முடிவுகளை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டால், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் குறைந்தபட்சம் 17% வரி விதிக்கவும், ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் 25% வரி விதிக்கவும் ட்ரம்ப் நிர்வாகம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.