

சான் ஜுவான்: போர்ட்டோ ரிகோவின் ஜெனிஃபர் பரேட்டோ 75-வது மிஸ் யுனிவர்ஸ் 2026 பட்டத்தை வென்றார்.
போர்ட்டோ ரிகோ தலைநகர் சான் ஜுவானில் உள்ள ஜோஸ் மிகுவல் அக்ரெலாட் உள்விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 24-ம் தேதி இரவு 75-வது மிஸ் யுனிவர்ஸ் இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் போர்ட்டோ ரிகோவின் ஜெனிஃபர் பரேட்டோ பட்டம் வென்றார். தற்போதைய மிஸ் யுனிவர்ஸான மெக்சிகோவின் பாத்திமா போஷ், ஜெனிஃபர் பரேட்டோவுக்கு மகுடம் சூட்டினார்.
டொமினிகன் குடியரசின் மெலிசா நுனேஸ் இரண்டாம் இடத்தையும், வெனிசுலாவின் கிளாரா வேகா கோயட்ஸ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
இறுதிப் போட்டியில் பிலிப்பைன்ஸ், நியூசிலாந்து, வெனிசுலா, டொமினிகன் குடியரசு, போர்ட்டோ ரிகோ ஆகிய 5 நாடுகளின் போட்டியாளர்கள் தேர்வாகினர். இவர்களிடம் “தற்போதைய சூழலில் உலகுக்கு தனது தலைவர்களிடமிருந்து மிக அதிகமாக தேவைப்படுவது என்ன?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இக்கேள்விக்கு ஜெனிஃபர் பரேட்டோ அளித்த பதிலே அவரது வெற்றியை உறுதி செய்தது. “தொழில்முறை அடிப்படையிலான பரிவு கொண்ட தலைவர்களே உலகுக்குத் தேவை. நாம் வாழும் உலகில் பிறரை அடிக்கடி மதிப்பிடுகிறோம், கேள்வி கேட்கிறோம். ஆனால் ஒரு தலைவர் தமது மதிப்பீடுகளுக்காக உறுதியுடன் நிற்க வேண்டும், முன்னுதாரணமாக விளங்க வேண்டும், தரத்தை உயர்த்த வேண்டும்” என்று அவர் கூறினார்.
இந்த வெற்றியின் மூலம் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை போர்ட்டோ ரிகோ 6-வது முறையாகக் கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்பு, மரிசோல் மலாரெட் (1970), டெபோரா கார்த்தி-டியூ (1985), தயனாரா டோரஸ் (1993), டெனிஸ் குவினோனெஸ் (2001), சுலெய்கா ரிவேரா (2006) ஆகியோர் பட்டம் வென்றுள்ளனர்.