‘ஹார்முஸ் ஜலசந்தியை 2 நாட்களில் திறக்க தயார். ஆனால்...’ - அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை

‘ஹார்முஸ் ஜலசந்தியை 2 நாட்களில் திறக்க தயார். ஆனால்...’ - அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை
Updated on: 
1 min read

தெஹ்ரான்: தங்களின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால், ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு நாட்களில் திறக்க தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி கூறுகையில், “ஈரானின் நிபந்தனைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு நாட்களில் திறக்க முடியம். இது ஈரானின் நேர்மையான அணுகுமுறையைக் காட்டுகிறது. ஈரானின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், ஹார்முஸ் ஜலசந்தியின் பாதுகாப்பை மீட்டெடுக்கவும், குறுகிய காலத்துக்குள் பேச்சுவார்த்தை செயல்முறையை மீண்டும் தொடங்கவும் முடியும் என்று நாங்கள் கூறியுள்ளோம்.

ஈரான் தரப்பு செய்திகள் மத்தியஸ்தர்கள் மூலமாக அமெரிக்காவுடன் பரிமாறப்பட்டு வருகிறது. ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொள்வதைப் பொறுத்தே அனைத்தும் அமையும். அதன்பிறகுதான் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து நாம் விவாதிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாத இறுதியில் மேற்கு ஆசியாவில் போர் தொடங்கியதில் இருந்து எரிசக்தி போக்குவரத்துக்கு மிக முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தி மீது தங்களுக்கு கட்டுப்பாடு இருப்பதாக ஈரான் கூறி வருகிறது. தங்கள் அனுமதியின்றி ஜலசந்தியைக் கடக்க முயலும் கப்பல்களை ஈரான் அவ்வப்போது குறிவைக்கிறது. இதற்கு பதிலடியாக, ஈரானிய துறைமுகங்கள் மீது அமெரிக்கா கடற்படை முற்றுகையை விதித்துள்ளது.

ஈரானின் கோரிக்கைகள்:

கடந்த செப்டம்பர் மாதம் கத்தார் வழியாக அமெரிக்காவுக்கு ஈரான் 7 நாள் செயல்திட்டம் ஒன்றை முன்மொழிந்தது. அதன்படி, ஈரானின் கோரிக்கைகளை அமெரிக்கா நிறைவேற்றிய ஆறாவது நாளில், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பாகக் கூறி இருந்தது.

ஈரானின் கோரிக்கைகளில், மேற்கு ஆசியாவில் அனைத்து முனைகளில் இருந்தும் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும், வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் சொத்துகளை விடுவிக்க வேண்டும், ஈரானின் எண்ணெய் துறை மீதான தடைகளை நீக்க வேண்டும், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் ஆகியவை அடங்கும்.

அமெரிக்க நாடாளுமன்றத்துக்கான இடைத்தேர்தல் நாளை (நவ.3) நடைபெற உள்ளது. தேர்தலுக்குப் பிறகு அமெரிக்கா, இஸ்ரேலுடன் இணைந்து மீண்டும் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தவிர்ப்பதற்கான முயற்சியில் தற்போது ஈரான் தீவிரம் காட்டி வருகிறது

‘ஹார்முஸ் ஜலசந்தியை 2 நாட்களில் திறக்க தயார். ஆனால்...’ - அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை
“பாஜகவுக்கு வெற்றியை தந்தது மக்கள்தான்... ஞானேஷ் குமார் அல்ல” - நிதின் நவீன்

X