

பாகல்பூர்: 2014, 2019, 2024 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் பாஜகவுக்கு வெற்றியை வழங்கியது நாட்டு மக்களே என்றும், ஞானேஷ் குமார் போன்ற தனிநபர்கள் அல்ல என்றும் பாஜக தலைவர் நிதின் நவீன் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்கள் வழங்கிய தேர்தல் முடிவுகளை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம் எதிர்க்கட்சிகள் மக்களை அவமதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணி தொடர் போாரட்டங்களை நடத்தி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக ‘ஜனநாயகத்தைக் காப்போம்; அராஜகத்தை ஒழிப்போம்’ என்ற பெயரில் பாஜக பேரணிகளை நடத்தி வருகிறது.
பிஹார் மாநிலம் பாகல்பூரில் நடைபெற்ற பேரணிக்கு தலைமை தாங்கிய நிதின் நவீன், பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், “ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக பாஜகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் நாடு முழுவதும் பாத யாத்திரைகளை மேற்கொண்டு வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் நேற்று (நவ.1) டெல்லி ராம்லீலா மைதானத்தில் பொய்களை விதைப்பதில் தீவிரமாக இருந்தனர்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) பிஹாரில்தான் தொடங்கியது. இதற்கு ஒரு முறையான நடைமுறை உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்ப்பது அல்து நீக்குவது தொடர்பான கோரிக்கைகளையும் ஆட்சேபனைகளையும் சமர்ப்பிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. ஆனால், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் போதிய அளவு தொண்டர்கள் இல்லாததால், புகார் அளிக்க யாரும் முன்வரவில்லை.
ஒவ்வொரு நிலையிலும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி கவலைகளைத் தெரிவிப்பதற்குப் பதிலாக, அவர்கள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றனர். முழு செயல்முறையும் முடிவடைந்த பிறகு, இப்போது அவர்களிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை.
பிஹாரில் தேஜஸ்வி யாதவ், உத்தரப் பிரதேசத்தில் அகிலேஷ் யாதவ், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிறகு, அவர்கள் நாட்டின் அரசியலமைப்பு நிறுவனங்களையே கேள்விக்குள்ளாக்கத் தொடங்கி உள்ளனர்.
காங்கிரஸ் கட்சி 2014-ல் தோல்வி அடைந்தபோதே அது தனது தோல்வியில் இருந்து பாடம் கற்றிருக்க வேண்டும். அவ்வாறு பாடம் கற்றிருந்தால், 2019-ல் மோசமான தோல்வியை அக்கட்சி சந்தித்திருக்காது. 2019, 2024 ஆண்டுகளிலும் நாங்கள் பெற்ற வெற்றி ஞானேஷ் குமார் போன்ற தனிநபர்களால் கிடைத்ததல்ல; இந்த நாட்டு மக்களே எங்களுக்கு வெற்றியை வழங்கினர்.
மக்கள் ஏன் எங்களைத் தேர்ந்தெடுத்தார்கள்? ஏனென்றால், நாங்கள் வளர்ச்சியை எங்கள் செயல் திட்டமாக மாற்றினோம். பொது நலனை எங்கள் செயல்திட்டமாக மாற்றினோம். தேசிய பாதுகாப்பை எங்கள் செயல்திட்டமாக மாற்றினோம். மக்கள் வங்கிய தேர்தல் முடிவுகளை கேள்விக்குள்ளாக்குவது என்பது மக்களையே அவமதிப்பதற்குச் சமம்.
பிஹாரின் இந்த புனிதமான ஜனநாயக மண்ணில் இருந்து வெளிப்படும் செய்தி என்னவென்றால், இந்த எதிர்க்கட்சித் தலைவர்களை தீர்க்கமாகத் தோற்கடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்பதுதான். காங்கிரஸ் கட்சி இன்னும் பாடம் கற்றுக்கொள்ள மறுத்தால், மக்கள் அவர்களுக்கு ஒரு பாடத்தைக் கற்பிப்பார்கள். அது அவர்களின் முழுமையான தோல்விக்கு வழிவகுக்கும். எதிர்காலத்தில் காங்கிரஸ் என்ற பெயரை சொல்லக்கூட யாரும் இருக்க மாட்டர்கள்” என தெரிவித்தார்.